
மானுடப் பிறப்பிற்கும், கடவுள் அவதாரத்திற்கும் இடையே இருக்கும் வேறுபாடுகளை சென்ற அத்தியாயத்தில் பார்த்தோம். ஞானம் இல்லாமல் வரும் அறியாமையினால் மானுடப் பிறவி அமையும்; ஆனால் என்றுமே ஞான நிலையில் இருக்கும் கடவுள், ஞானத்தைப் போற்றி பாதுகாக்கவும், அதர்மத்தை அழிக்கவும் மனிதர்கள் மேல் இருக்கும் கருணையினால் அவதாரம் எடுக்கிறார். கடவுள் நித்திய முக்தனாய் சத்திய நிலையில், தர்மத்தின் பாதுகாவலனாய் இருக்கிறார்;, மனிதன் தான் செய்த செயல்களினால் ஏற்படும் கர்மவினைகளில் சிக்குண்டு, புண்ணிய பாப கர்மங்களினால் சுகமும் துக்கமும் அனுபவித்து, பிறப்பு, இறப்பு என்ற பெரிய காலச் சக்கரத்தில் மாட்டிக் கொண்டு உழல்கிறான். பக்தனுக்கு அனுக்கிரகம் செய்ய வருவது கடவுள் அவதாரம். மனிதன் பூவுலகில் பிறந்து வினைப்பயனால் கட்டுண்டு சம்சாரியாகி அவதிப்படுகிறான்; கடவுளோ இந்த வினைப்பயனிலிருந்தும், சம்சார பந்தங்களிலிருந்தும் மனிதனை விடுவிக்க வரும் கருணா மூர்த்தியாக இருக்கிறார்.
நாட்டை ஆளும் ஒரு க்ஷத்திரியனது கடமை அறவழியில் நடப்பவர்களைப் பாதுகாத்து அவர்களுக்கு இயன்ற அளவு அவர்களது வாழ்வு நலமாக இருக்க ஆவன செய்ய வேண்டும். பிராம்மணனாய்ப் பிறந்த எவனுக்கும் இந்த அதிகாரம் கிடையாது. ஒரு பிராம்மணன் தான் கற்றறிந்ததை பிறருக்கு உரைத்து தர்மத்தை பரிபாலிக்க வேண்டும். இதுவே அவன் கடமை. சமூக நல்லிணக்கத்திற்கு இது முகவும் அவசியமான ஒன்று.
சரி. இப்பொழுது இன்னொரு கேள்வி எழுகிறது. நாம் ஏன் தர்மத்தை பின்பற்ற வேண்டும்? ஏன் அதனை பரிபாலிக்க வேண்டும்? ராம அவதாரத்திலும், ஸ்ரீகிருஷ்ண அவதாரத்திலும், கடவுள் நமக்குத் தெரிவிக்கும் பாடம் ஒன்று உண்டு. அதர்மத்தை அழிப்பது ஒரு குறுகிய கால இலக்காகும். அந்த தர்மத்தை நிலைநாட்டுவது என்பது நீண்ட கால இலக்கு. தர்மத்தைப் பற்றிய நூல்களை போதித்து, கற்றுக்கொள்பவரிடம் தர்ம சிந்தனையை ஏற்படுத்துவது ஒவ்வொரு பிராம்மணனுக்கும் விதிக்கப்பட்ட கடமை. ராமாவதாரத்தில் ராமர் வாழ்ந்து காட்டி தர்மத்தைப் போதித்தார்; ஸ்ரீகிருஷ்ணரோ பகவத் கீதையில் உபநிடதங்களின் சாராம்சத்தைத் தந்து அர்ஜூனன் மூலமாக மானுடர் அனைவருக்கும் தர்மத்தைப் போதித்தார். இதனாலேயே தர்மம் பற்றிய நீண்ட கால இலக்கு மிகவும் முக்கியம்.
எல்லா உடல்களும் ஐம்பூதங்களினால் ஆனபோதிலும், மானுட உடலுக்கும், அவதாரம் செய்யும் கடவுளின் உடலுக்கும் ஒரு வேற்றுமை உண்டு. பிரக்ரிதி என்று சொல்லப்படும் மாயா சக்தி, ஐம்பூதங்களாக மாறி, ஒரு மனிதனில் பூத உடலாக மாறும். அவதார உடலில் இந்த மாய சக்தி ஐம்பூதங்களாக மாறாது, மாய சக்தி நிலையிலிருந்து கடவுளின் அவதார உடலாக மாறும். இதனால் மானுட சரீரம் à மாய சக்தி à ஐம் புலன்கள் à தூல உடல்; அவதார உடல் à மாய சக்தி à தூல உடல். இதனாலேயே அவதார சரீரம் புண்ய பாப வினைப்பயன்களால் ஆனது அல்ல என்பது கீதை படிக்கும் ஒவ்வொருவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம். அவதார சரீரம் இந்த பூவுலகில் ஜனிப்பது தர்ம பரிபாலனத்திற்காகவும் அறவழி நடப்போரின் பாதுகாப்புக்காகவும் தான்.
அவதாரத்திற்கு அறியாமை என்ற கட்டுப்பாடு கிடையாது. ஞானத்திலிருந்து எழுந்து வருதலால் முக்காலமும் உணரும் சக்தி இந்த அவதார புருஷருக்கு உண்டு. கடந்த காலம், நிகழ் காலம் மற்றும் எதிர் காலமும் இவர்களுக்கு இயல்பாகப் புரியும் ஒன்று. இந்தக் கட்டத்தில் நாம் ஒன்றை நினைவு கூற வேண்டும். அசாதாரண சித்திகள் கொண்டிருப்பது அவதாரமல்ல. நிறைய அரக்கர்கள் பல அசாதாரண சக்திகள் கொண்டிருந்தார்கள். இராவணனின் மகனான இந்திரஜித் ஒரே நேரத்தில் பத்து அல்லது பன்னிரண்டு உடல்களில் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளக் கூடிய சக்தியைப் பெற்றிருந்தான். இதனாலேயே அவனால் அவதாரமாக முடியுமா? முடியாது. ஏனென்றால் இந்திரஜித் அறவழியில் நிற்கவில்லை. ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மனத்தூய்மை மிக அவசியம். மனத்தூய்மை பெற கர்மயோகத்தில் கூறிய படி, செய்யும் அனைத்து செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிப்பது அவசியம். அனைத்து உருவங்களிலும் இறைவனைக் கண்டு, செய்யும் அனைத்துச் செயல்களையும் அவனுக்கே அர்ப்பணித்து, அந்தச் செயல்களின் பயனை கடவுள் அருளிய பிரசாதமாக ஏற்பது கர்ம யோகம் அன்பதை கீதையின் மூன்றாவது அத்தியாயத்தில் பார்த்தோம். ஒரு மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கு மிகவும் இன்றியமையாதது செய்யும் அனைத்துச் செயல்களையும் இறைவனுக்கே அர்ப்பணிக்கும் அர்ப்பண புத்தியும், செயல்கள் தரும் பயன்களை இறைவன் பிரசாதமாக ஏற்கும் அர்ப்பண புத்தியும் தான். இதோடு, பகவத் கீதை, உபநிடதங்கள் போன்ற மறை நூல்களை ஒரு குருவின் உதவியுடன் கற்று அவை கூறும் உண்மையை உணர்தலும் ஆன்மீக வளர்ச்சிக்கு வழி காட்டும்.
அவதாரத்தைப் பற்றியும், கடவுளைப் பற்றியும் இத்தனை விஸ்தாரமாக நாம் பார்க்க வேண்டியதன் காரணம் என்ன? இந்த நான்காவது அத்தியாயத்தில் கடவுள் தத்துவத்தை உணர்ந்து கொள்வது மோக்ஷத்திற்கான வழியைத் தெரிந்து கொள்வது என்று ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார். கீதையின் இரண்டாவது அத்தியாயத்தில் தன்னைப் பற்றிய உண்மையை உணர்வது ஆத்ம ஞானம் என்றானது. இங்கோ கடவுளை உணர்வது மோக்ஷத்திற்கான வழி என்று கூறப்பட்டது. அதாவது, ஆத்ம ஞானம் பெறுவதும் கடவுளை உணர்வதும் ஒன்றே. எவ்வாறு ஒரு அலை தானும் அந்தக் கடலும் ஒரே நீரினால் ஆனது என்பதை உணர்ந்தவுடன், தானும் கடலும் ஒன்றே என்று உணர்கிறதோ, அதைப் போல, ஆத்ம ஞானம் வந்த உடனேயே, ‘அஹம் பிரும்ம அஸ்மி’, அதாவது, நானும் கடவுளும் வேறு வேறு இல்லை என்பது புரிந்து விடும்.
இந்தப் புரிதல் எப்போது நடக்கும்? ஸ்ரீகிருஷ்ணர் கூறுகிறார்:
वीतरागभयक्रोध मन्मया मामुपाश्रिताः ॥
बहवो ज्ञानतपसा पूता यद्भावमागताः ॥४.१०॥
வீதராக பயக்ரோத மன்மயா மாமுபாஷ்ரிதா:
பகவோ ஞானதபசா பூதா யத்பாவமாகதா:
ஏக்கம், பயம் மற்றும் கோபத்திலிருந்து விடுபட்டு, என்னில் முழுமையாக நிலைபெற்று, என்னில் அடைக்கலம் புகுந்து, ஞான ஒழுக்கத்தால் தூய்மையடைந்து, பலர் என் இயல்புக்குத் திரும்பிவிட்டனர்.
இறைவனை உணர்தல் இரண்டு நிலைகளில் நடக்கிறது. முதல் நிலையில், ஒரு மனிதனுக்குப் பிடித்தமான இறைவன் – அதாவது இறைவனது ஒரு குறிப்பிட்ட உருவத்தை வழிபடுவது; இந்த நிலையிலேயே, இஷ்ட தெய்வமாக, எனக்கு ராமர் பிடிக்கும், கிருஷ்ணர் பிடிக்கும், ஆஞ்சநேயர் பிடிக்கும், தேவி பிடிக்கும், சிவன் பிடிக்கும் என்று அவரவர் குணாதிசயங்களுக்கு ஏற்ப கடவுளையும் கொண்டாடுகிறோம். இரண்டாவது நிலையில், இறைவனை விஷ்வ ரூபனாக, அதாவது, பிரபஞ்சம் முழுக்க இறைவனே வியாபித்திருப்பதாக, எல்லா இடத்திலும், அவனைப் பார்ப்பதே விஸ்வரூப தரிசனம்,. இந்த இரண்டு நிலைகளிலும், இறைவனை சகுண ஈஸ்வரனாகப் பார்ப்பது, அதாவது, உருவம் கொண்ட இறைவனாகப் பார்ப்பது என்பதாகும். மூன்றாவது நிலையில், இறைவனை எந்த உருவமும் இல்லாத அரூப ஈஸ்வரனாகப் பார்ப்பது – அதாவது எல்லா உருவத்திற்கும் எல்லை என்ற ஒரு பரிமாணம் உண்டு. இதோடு, உருவத்திற்கு மட்டுமே பிறப்பும் இறப்பும் பிறப்பும் உண்டு.. அரூப இறைவன் எந்தப் பரிமாணங்களுக்கும் உட்படாதவன்; உருவத்திற்கு குணமும் உண்டு; அரூப இறைவன் அனைத்து குணங்களுக்கும் அப்பாற்பட்டவன்.
கடவுள் தத்துவத்தை உணரும்போது உலகத்தின் மேல் இதுவரை சார்ந்திருந்த மனது இறைவன் மேல் சார்ந்து நிற்கத் துவங்கும். அதோடு, தனக்குள் இருக்கும் இறைவனை உணரும்போது, இறைவன் மேல் சார்ந்திருக்கும் நிலையுடன், தன்னுள் இருக்கும் அந்த இறைப் பொருளைச் சார்ந்திருக்க நினைக்கும். அதாவது, தன மேலேயே சார்ந்திருக்கும் நிலை உருவாகும். இந்தப் பிரபஞ்சமே இறைவனாக உணரும்போது, அந்த இறைவனே என்னுள்ளும் இருந்து என்னை இயக்குகிறான் என்பதை உணரும்போது, உலகாயத அனுபவங்கள் தரும் பயம் என்ற உணர்வு, குறிப்பாக, இறப்பு பற்றிய பயம் மறையும்.
இந்த உணர்வுகள் எப்படி ஒரு மனிதனுக்கு வரும்? இறைவனைப் பற்றியும் தன்னைப் பற்றிய உண்மையையும் அறிய, எப்படி நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதன் காற்றுக்காக வெறியுடன் தேடுவானோ, அப்படித் தேட வேண்டும். இறைவனே எனக்கு மூச்சாகவும் ஒரே குறிக்கோளாகவும் இருப்பான். வேறு சிந்தனைகள் என் மனத்தை நெருங்கா. இதுவே முதல் கட்ட நிலையான ‘.मन्मया’ என்பது. இப்படி இறைவனுக்கான தீவிர ஏக்கத்திலிருந்து வரும் அந்த ஆவேசம் ஒரு மனிதனை., தன் இயல்பை உணரவும், ஆன்மீகப் பயணத்தில் முழு வளர்ச்சி அடையவும் வழிவகுக்கும்.
இரண்டாவது நிலையில், (मम उपाश्रिताः) எத்தனை தடைகள் வந்தாலும், அதை திடமனத்துடன், இறைவனது அருளுடன் அவனை உணர்ந்து, அவனுடன் ஐக்கியமாவேன் என்று இருத்தல்.
மூன்றாவது நிலையில், (वीतराग भयक्रोधः) நம் மனத்திற்குள் இருக்கும் அசுத்தங்களான விருப்பு, வெறுப்பு, சினம், அசூயை, பயம் போன்ற எதிர்மறை உணர்ச்சிகளை வென்று, நிர்மலமான உள்ளத்துடன் ஞானத்தை ஏற்பது.
நான்காவது நிலை, (ज्ञानतपस) அதாவது, ஞான யோகத்தின் மூலம் அறியாமையை அகற்றி, ஞானம் பெறுவது. ஞான யோகம் நீக்கும் கடைசி மலம் அறியாமையாம். அப்படியென்றால் மற்ற மலங்கள் எப்படி நீக்கப்படுகின்றன? விருப்பு வெறுப்பு என்பது மிகப் பெரிய அடுக்காக நிற்கும் மாசு; இதை கர்ம யோகத்தின் மூலம் நீக்கலாம். அடுத்தது, புறமுகத் தன்மையுடன் அலைந்து திரியும் மனத்தை ஒரு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவது – இதற்கு ஸ்ரீ கிருஷ்ணர் சொல்லும் வழி, பூசை, ஜபம், கடவுள் பாட்டுகளைப் பாடுதல், மறை நூல்களைப் படிப்பது போன்ற உபாசனைகளாம்.. அதாவது, ஞான யோகத்தின் வழி நடந்து, மனத்தின் அறியாமையை, ஞானத்தால் நிரப்பி, இறைவனை உணர்வது.
இறுதியாக, ( यद्भावमागताः) ஜீவாத்மாவிடமிருந்து அனைத்து மாசுக்களையும் நீக்கி விட்டால், அங்கு பரமாத்மா தெரிவார் என்பதை உணர்வது. மனிதர்களில் பெரும்பாலானோர் பொருள் சேர்ப்பதிலும், ஆசைகளைப் பூர்த்தி செய்வதிலும், தர்மம் செய்வதிலும் மட்டுமே தங்கள் கவனத்தை செலுத்துகின்றனர். ஆத்ம ஞானத்திற்கும், கடவுளை உணர்வதற்கும் வருபவர் மிகச்சிலரே என்கிறார் ஸ்ரீ கிருஷ்ணர். இதன் மூலம், ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு உணர்த்துவது என்னவென்றால், ‘ஒரு நபர் எப்படித் தேடுகிறாரோ, அப்படியே நான் அவரை ஆசீர்வதிப்பேன்,’ என்பதாகும்.
