அடுத்த வீடு ஐம்பது மைல் (ஆஸ்திரேலியப் பயணக் கட்டுரை) 

தி.ஜானகிராமன் (காலச்சுவடு பதிப்பகம் முதல் பதிப்பு டிசம்பர் 2023)

 

 

 

 

 

 

 

 

 

 

 

தி.ஜா.வின் பயணக் கட்டுரைகள், அவரது சிறுகதைகள், நாவல்கள் போலவே சுவாரஸ்யமானவை. நடந்தாய் வாழி காவேரி (காவேரி நதிக்கரை நாகரீகத்தைக் கூறும் பயணக்கட்டுரைகள்), கருங்கடலும் கலைக்கடலும் (ரொமானியா, செக்கோஸ்லாவாக்கியா பயணக் கட்டுரைகள்), உதய சூரியன் (ஜப்பான் பயணக்கட்டுரைகள்) வகையில் எழுதப்பட்டுள்ள ஆஸ்திரேலியப் பயணக்கட்டுரை ‘அடுத்த வீடு ஐம்பது மைல்’. 

கல்வி ஒலிபரப்பு குறித்த அலுவலகப் பயணம் – தன் அனுபவங்களை மிக நுணுக்கமான பார்வையில் எழுதியுள்ளார். அங்கிருக்கும் சூழ்நிலைகளையும், பழக்க வழக்கங்களையும் நம் நாட்டுடன் ஒப்பிட்டு எழுதுவதில் அவரது ஆதங்கம் தெரிகிறது. மற்றவர்களின் பயணக்கட்டுரைகளிலிருந்து, நடையிலும், சொல்லும் வகையிலும் மிகவும் மாறுபட்டு உள்ள இந்த நூல், அவரது நாவலை வாசிக்கும் அனுபவத்தைக் கொடுக்கிறது. 

ஏழாவது கட்டுரைதான் முதலில் எழுதியதோ எனத் தோன்றுகிறது! முந்திரிக் கொட்டையை வரைந்து அதையே ஆஸ்திரேலியாவாக மாற்றிவிடும் பூகோள வாத்தியார், உப்புச் சத்தியாக்கிரகம் நடந்துகொண்டிருந்த காலம், வெள்ளை ஆஸ்திரேலியக் கொள்கை என பால்ய நினைவுகளை அசைபோடுகிறார். “வயிற்றில் இயற்கையாக ஒரு பை. அதில் ஒரு குட்டியை வைத்துத் தூக்கிச் செல்கிற பிராணி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, பிறகு அதற்குப் பாலூட்டி வளர்க்கும் பிராணி, சிரிக்கின்ற பறவை – இந்த அதிசயங்கள் நிறைந்த ஒரு அமானுஷ்யப் பிரதேசம் என்ற பிரமை” – அப்படிப்பட்ட ஆஸ்திரேலியாவுக்குச் செல்லும் நாளும் வந்தது. அது, உலகத்தில் விருந்தோம்பலும், செல்வமும், வசதிகளும் பெருத்த நாடுகளில் ஒன்று என்று அறிந்து வியக்கிறார்.

பொதுவாக வெள்ளை நாடுகளில் ஜனங்கள் வாழுகின்ற இடத்தில் ஒரு துப்புரவு, நறு விசு, பளிச்சென்ற ஒரு தோற்றம் இருப்பதாகச் சொல்லுகிறவர் கூடவே, கும்பகோணம் போன்ற ஊர்களின் சாக்கடைகளையும் நினைவு கூர்கிறார். 

மனைவி கட்டிக்கொடுத்த பருப்புப்பொடி, கருவேப்பிலைப் பொடி, காய்ந்த நார்த்தங்காய், பாக்குப்பொடி, கொஞ்சம் கோதுமை அல்வா, கரகரவென்று நொறுக்குத் தீனி இவைகளுடன் சுங்க அதிகாரிகளிடமிருந்து தப்பிப்பது பற்றி நகைச்சுவையாக் எழுதுபவர், “கூடிய வரை இதெல்லாம் கொண்டு போகாமல் இருப்பதுதான் நல்லது; கெளரவம், யாருக்கும் தொந்தரவும் இல்லை” என்று முடிக்கிறார்!

அங்கெல்லாம், குழந்தைகளுக்காக மிகவும் பாடுபடுகிறார்கள், தினமும் சர்வதேசக் குழந்தைகள் தினம்போலக் கொண்டாடுகிறார்கள் என்கிறார். சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு முடிந்தவுடன், நம் நாட்டில் நிலைமை எதுவும் மாறவில்லை என்பதை, “இனி குழந்தைகள் சுதந்திரமாகத் தீப்பெட்டித் தொழிற்சாலைகளில் சுகந்தங்களை நுகர்ந்து, பதினாறு மணி நேரம் வேலை செய்யலாம்; ஹோட்டல்களில் கழுவலாம். டிக்கட் இல்லாமல் ரயில்களில் பூட்பாலிஷ் போடலாம்; பேருந்துகளில் மல்லாக்கொட்டை விற்கலாம்” என்று எழுதுகிறார். 

இந்தியாவை விட மூன்று பங்கு பெரிய நாடு ஆஸ்திரேலியா. பம்பாய், கல்கத்தா இந்த இரண்டு நகரங்களின் மக்களுக்கும் குறைவான ஜனத்தொகை. சிட்னி நகரில், டவுன் பஸ்ஸில் ஒரு சமயத்தில் இருபது பேரைப் பார்த்தாலே, நெரிகிற கூட்டம் என்று சொல்லவேண்டும் என்கிறார். 

செல்லும் வழியில், இரவு நேரத்தில் பஸ்ஸில் டீசல் தீர்ந்துவிட, விரைந்து செல்லும் காரிலிருந்த இரண்டு இளைஞர்கள் ஏழெட்டு மைலில் உள்ள சிற்றூரிலிருந்து போதுமான எண்ணை வாங்கிக் கொடுத்ததை வியப்புடன் சொல்லி, ‘நடுவழியில் இப்படித் தவிப்பவர்களுக்குக் கை கொடுப்பதிலும், விருந்தோம்பலிலும், கலகலவென்று பேசிப் பழகுவதிலும் சளைத்தவர்கள் அல்ல ஆஸ்திரேலியர்கள்’ என்று பதிவு செய்கிறார்.

சார்லிவீல் நகரில் உள்ள மருத்துவ ரேடியோ நிலையம், சுமார் நூற்றுக்கணக்கான மைல்களில் தனித்துக் கிடக்கும் வீட்டுக் குழந்தைகளுக்குப் பாடம் சொல்லிக்கொடுக்கும் விசேஷ ரேடியோ நிலையங்களாவதைப் பற்றி விவரிக்கிறார். மருத்துவ ரேடியோ நிலையங்கள் எவ்வாறு ஓர் அவசர சிகிச்சைப் பிரிவாக இயங்குகின்றன என்பதை மிக சுவாரஸ்யமாகச் சொல்கிறார். மருத்துவத்திற்கும், கல்விக்கும் ஆஸ்திரேலிய அரசு கொடுக்கும் முக்கியத்துவம் வியக்கவைக்கிறது. ரேடியோ ‘ட்ரான்சீவர்’ , அதாவது டிரான்ஸ்மீட்டர், ரிஸீவர் இரண்டும் பொருந்திய ரேடியோ கருவி – அதிக தூரத்தில் உள்ள, குறைவான எண்ணிக்கையில் உள்ள குழந்தைகளுக்குக் கல்வி புகட்டப் பயன்படுகிறது. தி.ஜா. வின் வார்த்தைகளில், “அதாவது ஒரு வகுப்பு அறை, பல நூறு மைல்களில் இறைந்து கிடக்கிறது”.

அங்கு, மரத்தால் கட்டப்பட்ட, மங்களூர் ஓடு போட்ட கூரைகள், மொட்டை மாடிகளே இல்லாத வீடுகள் – சுற்றிலும் சிறு சிறு தோட்டங்கள் என விவரித்துவிட்டு, இங்கிருக்கும் வீட்டு வசதி வாரியங்கள் கட்டும் அழகில்லாத வீடுகளைப் பற்றி வருத்தப்படுகிறார்! ‘Dirty Half Mile’ தெருவைப்பற்றியும் (அழகு அரை மைல், அலங்கோல அரை மைல், ஆடம்பர அரை மைல் என்றெல்லாம் அர்த்தம் பண்ணலாம்!) அங்கு நடக்கும் ‘அடல்ட் மூவிகள்’, விலை மாதர்கள் பற்றியும் பட்டும் படாமலும் எழுதுகிறார். “தங்களையே கடைகளாக விரித்த பெண்களின் முகங்கள்”, “….. அனாதி அனந்த பச்சைச் சித்திரங்கள். ஆங்கிலத்தில் சொன்னால் ப்ளூ மூவீஸ்!”

ஆஸ்திரேலியாவின் பால் வளத்தைப் பற்றி மிக விரிவாகச் சொல்கிறார். பின்னர், “ஆஸ்திரேலியா பாலை அளவோடு சாப்பிடுங்கள். இந்தப் பாலுக்குக் கொழுப்புச் சத்து எல்லாம் அதிகம். நம்மால் ஜரிக்க முடியாது. இது மெட்ராஸ் பால் இல்லை” என்றாராம் அங்கிருக்கும் நம்ம ஊர் மருத்துவர் ஒருவர்!

‘திடீர் காபி’ பற்றி சொல்வது: “ஹோட்டல்களிலும் அதற்கு இரட்டை விலை. கலக்கிறபடி கலந்தால்தான் இது கொஞ்சமாவது காபி மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் அலசின தண்ணீர் வாடை வீசும். இப்போது திடீர் காபி கேட்டால், பல கடைகளில் இப்படித்தான் கொடுக்கிறார்கள்!”

ஆஸ்திரேலியாவின் வார இறுதி நாட்களைப் பற்றி வியக்கும் அவர், நமது ஊர்களில் அது சாத்தியப்படாததற்குக் காரணமாக மக்கள் பெருக்கத்தைச் சொல்கிறார். இன்று தி.ஜா. இருந்திருந்தால், இங்கும் அந்த ‘வீக் எண்ட்’ கலாச்சாரம் வந்துவிட்டதைப் பார்த்திருக்கலாம்!

ஜகராண்டா மரங்கள், குக்கா புர்ரா பறவை (மனிதர்கள் சிரிக்கிறார்போல சிரிக்கும் பறவை) எனப் புதிய செய்திகளை ஆங்காங்கே தூவிச் செல்வது சிறப்பு.

நண்பர்களுடன் எல்லா தேசத்து இசைகளையும் – நைஜீரியா, கென்யா, சாம்பியா, செனகல் – பாடல்களையும் கேட்டு மகிழ்கிறார். கூடவே மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் சமரசக் கீர்த்தனைகள் பற்றியும், தஞ்சாவூர் ஆப்ரகாம் பண்டிதர் நம்முடைய சங்கீதத்தைப் பற்றி விமர்சையாக ஆராய்ந்திருப்பதையும் சொல்கிறார்!

முத்தாய்ப்பாக, நமது பள்ளிகளில் குறைவான குழந்தைகள் வாசிப்பதற்குக் காரணமாக, ஏழ்மையைக் குறிப்பிடுகிறார். “..ஆனால் பாதி காரணம் தொடக்கப்பள்ளி வேண்டாத பாடமும் இசையும் இன்பமற்ற சிறையுமாக இருப்பதுதான்” என்று முடிக்கிறார்.

வித்தியாசமான பயணக்கட்டுரைகள், தி.ஜா. வின் அழகியல் வடிவில், சுவாரஸ்யமான தகவல்களைத் தருகின்றன. இன்று பல துறைகளிலும் அன்று அவர் கண்ட முன்னேற்றங்களை நாமும் எட்டியிருக்கின்றோம் என்பது மகிழ்ச்சியான ஒரு விஷயம். 

வாசிக்க வேண்டிய பயணக்கட்டுரை!