ஆகாசத்தூது

1980-களில் எழுதத் தொடங்கியவர் வித்யா சுப்பிரமணியம். பல விருதுகளை வென்ற பெண் எழுத்தாளர்.கற்பனையோடு நிஜத்தைச் சொல்வதில் வல்லவர்.இவரது ‘உப்புக் கணக்கு’, ‘அம்மாவுக்கு ஒரு வீடு’ நாவல்கள் நெஞ்சை கொள்ளை கொள்ளும் படைப்புகள். ‘ஆகாசத்தூது’ நாவலுக்காக ‘சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை’-யின் இந்த ஆண்டின் அக்ஷர விருது வித்யா சுப்பிரமணியத்துக்கு கிடைத்துள்ளது. விருது ரூ.2 லட்சம் பரிசுத்தொகை, நினைவுப் பரிசு, பாராட்டுப் பத்திரம் அடங்கியது.
இருபதுகளில் பிறந்து வளர்ந்த வேணுகோபாலய்யரின் வாழ்க்கையையும் அவருக்கு வழிகாட்டிய மாரிஸ் ஃப்ரீட்மன் (பரதானந்தா) என்ற போலந்து நாட்டுக்காரரையும் அவரது குருவான ரமண மகரிஷியையும் ஒருங்கிணைத்து எழுதப்பட்ட நாவல். வேணுவின் மனைவி குஞ்சம்மாவின் மரணத்தில் தொடங்குகிறது கதை. வேணு குடும்பப் பிரச்னையில் குழம்பித் தவிக்கும் நிலையில் அவருக்கு தெளிவைத் தருபவராக வரும் நீல கண்ட சாஸ்திரி தரும் விளக்கம் (கஷ்டங்கள் ஒவ்வொன்றும் நம்மை இன்னும் உயர்விக்கத்தான்) வேணுவை மட்டுமல்ல நம்மையும் தெளிவிக்கும். பிராமணார்த்தம் செல்வதிலேயே திருப்தி கண்டு வாழ்க்கையின் பெரும் பகுதியைப் போக்கி வயதான காலத்தில்.வேலைதேடி நாடோடியாய் அலையும் வேணு,எண்கண் முருகன் கோயிலுக்கு வருகிறார். அங்கு அவர் சந்திக்கும் முதியவர் ஒருவர், ‘திருவண்ணாமலைக்குப் போ! அங்கே பகவான் ரமணர் ஆசிரமம் இருக்கிறது. அங்கு சென்றால் உனது வயிறு மட்டுமல்ல மனமும் நிறையும்’ என்று வழிகாட்டுகிறார்.
ரமணர் ஆசிரம் சென்ற அவருக்கு ரமணரின் சீடர் ஃப்ரீட்மன் நட்புடன் ரமணரை தரிசிக்கும பாக்கியமும் கிடைக்கிறது. ‘ஆகாசமென்றால் அழிவற்றது. ஆகாசம் கூட குருவின் வடிவம்தான். ரமண ஒளிதான் எனக்கும் வேணுவுக்கும் இடையில் மெளனமாய் தூது சென்று எங்களைச் சந்திக்க வைத்தது’ எனகிறார் ஃப்ரீட்மன். ஃப்ரீட்மன் மூலம் வேணுவுக்கும் அவரது மகன்களுக்கும் பெங்களூரில் வேலை கிடைக்கிறது.வேணுவின் குடும்பத்தில் வசந்தம் மலர்கிறது. ரமணர் மதுரையில் இருந்தபோது சற்று நேரம் மூச்சை நிறுத்தி கட்டையாய் கிடந்திருக்கிறார்.அவரது ஆன்மா ஒரு சில விநாடிகள் உடலை விட்டகன்று தன் தேகத்தை கண்டிருக்கிறது. மரணம் என்றால் என்ன என்பதை அறிந்த பிறகுதான் அவர் திருவண்ணாமலை வந்துள்ளார்.
நாவல் மூலம் கிடைக்கும் இத் தகவல் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. ரமணரின் அருமை பெருமைகளை பறைசாற்றுகிறது நூல். தங்கம் சவரன் இன்று லட்ச ரூபாயை நெருங்கிக் கொண்டிருக்கிறது. இந்த நாவலில் வரும் வேணு, ‘சவரன் பதினஞ்சு ரூவா இன்னிக்கி விக்கறது’ என்று கூறுவதாக வருகிறது. ஆகா அந்தக் காலம் அல்லவோ பொற்காலம்!
36 அத்தியாயங்கள் கொண்ட ‘ஆகாசத்தூது’ ஒரு கதையல்ல, வாழ்க்கை.இந்த நாவல் படைப்பு நூலாசிரியருக்கு ஒரு வேள்வியே என்பதில் ஐயமில்லை. ‘மனிதம்’ என்ற சொல்லுக்கும் ‘நன்றி’ என்ற சொல்லுக்கும் இந்த நாவலில் வித்யா சுப்பிரமணியம் விடை கண்டுள்ளார் என்று அணிந்துரையில் கீழாம்பூர் சங்கரசுப்பிரமணியன் குறிப்பிட்டுள்ளது மிகையல்ல.
