தோழி –  புனைவில் சமகால சரித்திரம் – ஆசிரியர் மாலன்  —   புத்தக விமர்சனம்

                   சமகால சரித்திரமெழுதுவது கம்பி மேல் நடப்பதற்குச் சமம்.

நாவலின் கதாபாத்திரங்கள் யாரைப் பிரதிபலிக்கின்றன என்பது

வாசகனுக்குத் தெரியவேண்டும். அதே சமயம் அவை கற்பனைப்

பாத்திரங்களாகவும் அமையவேண்டும். மாலன் அதைக் கச்சிதமாகச்

செய்திருக்கிறார்.

       இந்த நாவல் கடந்த நாற்பதாண்டு கால நாற்பதாண்டு அரசியலில்

தலைவர்கள், கட்சிகள் தேர்தல்கள், அரசு யந்திரம் ஊடகங்கள் எப்படி

இயங்குவந்திருக்கின்றன என்பதின் பதிவு இந்த நாவலென்று மாலன்

குறிப்பிடுகிறார். எதிர்க்குரலைத் தவிர்த்திருக்கிறார். இன்றைய சூழலில்

எதிர்க்குரல்களுக்கு என்ன நேருமென்பது எல்லாருக்கும் தெரியும்.

       நாவலுக்குள் நுழைவோம்…

தோழி என்று தலைப்பிடப்பட்டிருந்தாலும் இந்த நாவலின் கதாநாயகி

வித்யாதான். வித்யா என்ற Assertive Ladyயின் அரசியல் நுழைவு தற்செயலானது.

வித்யாவின் குணாம்சங்களை கதாசிரியர் பெரும்பாலும் உரையாடல்களிலேயே

வெளிக்கொணர்கிறார்..

‘மதிய உணவுத் திட்டமல்ல. சத்துணவுத் திட்டம்’ – வித்யா

‘என்ன வித்தியாசம்?’ – பெரியவர்

‘மதிய உணவு கொடுப்பதாகச் சொன்னால் மக்களைப்

பிச்சைக்காரர்கள் ஆக்கிவிட்டோம்’ என்று உங்கள் நண்பர் அருட்செல்வன்

போர்முழக்கத்தில் எழுதுவார். நாம் கொடுக்கப் போவது மதிய உணவு அல்ல.

சத்துணவு’’ பெரியவர் புன்னகைக்கிறார்.   

       ‘‘கெட்டிக்கார ஆளா இருந்தா போதுமா? விசுவாசியாக இருக்க

வேண்டாமா?’ – வித்யா

       ‘இதோ பார் வித்யா. விசுவாசியை வாங்கமுடியாது. உருவாக்கணும்.

கெட்டிக்காரனை வாங்க முடியும்’   – பெரியவர்.

       கூட்டணி அமைப்பது தொடர்பாக–;

‘கட்சியிலே ஒத்துப்பாங்களா?’ வித்யா

‘கட்சின்னு தனியா ஒண்ணு இருக்கா? நாமதான் கட்சி’ என்கிறார்

பெரியவர். நாவலில் இது ஒரு அற்புதமான உரையாடல்.

இந்த ஒற்றை உரையாடலில் உட்கட்சி ஜனநாயகத்தை மாலன்

வெளிப்படுத்துகிறார்.

       சித்ரா என்கிற பெரியநாயகி வித்யாவின் வீட்டுக்கு ஒரு

Care taker ஆகத்தான் வருகிறாள். வித்யா துவக்கத்தில் அவளிடம்

கறாராகத்தான் நடந்து கொள்கிறாள். காலப் போக்கில் சித்ரா வித்யாவின்

நம்பிக்கைக்குப் பாத்திரமாகிறாள்.. சித்ரா கேர் டேக்கரிலிருந்து தோழியாக மாறுகிறாள்.

வித்யாவின் வீட்டுப் பணியாளர்களாக தன் ஊர்க்கார்ர்களை நியமிப்பதில் சித்ராவின்

ஆதிக்கம் துவங்குகிறது.. வித்யாவின் பலவீனங்களைக் கண்டறிகிறாள்.

வித்யா அதைப் புரிந்துகொள்ளாமல் சித்ராவை நம்பிவிடுகிறாள். வித்யா

தன்னை ஒரு முறை கன்னத்தில் அறைந்ததற்காக சித்ரா பழிவாங்குகிறாள்..

       Assertive Lady’ வித்யாவின் தற்செயலான அரசியல் நுழைவிலிருந்து

அவளுடைய மரணம் வரை நாவல் நீள்கிறது.

       பெரியவரும் வித்யாவும் அரசியல் தலைவர்கள். ஒரே ஒரு மூத்த இரண்டாம்

மட்டத் தலைவர் பிரதமர் மட்டுமே நாவலில் இடம் பெறுகிறார்கள். இது தவிர வேறு

தலைவர்களுடன், தொண்டர்களுடன் அதிகாரிகளுடன்  இருவரும் interact செய்யும்

பதிவுகள் இந்த நாவலில் இல்லை. அது ஒரு குறை.

‘தோழி’ யை ஒரு புதினமாகவும் படிக்கலாம். சமகாலச் சரித்திரமாகவும் புரிந்து

கொள்ளலாம்..தொய்வில்லாமல் எழுதப்பட்டிருக்கும் நாவல். மூத்த எழுத்தாளர்

மாலன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

இந்த நாவலை எழுத்து பிரசுரம் 2023ல் வெளியிட்டுள்ளது. விலை ரூ 308