ஸ்ட்ரெஸ் நல்லதாம்... எப்போ தெரியுமா?

                                                                                         (நன்றி: தினமணி) 

பூபதிக்கு ஒரு வருடத்திற்கு முன்னால் வேலை மாற்றலானது. முதலில் ஆரம்ப உத்வேகத்தினால் வேலையின் இலக்குகளை அடைய முடிந்தது.

கடந்த ஆறு மாதங்களாக மேலதிகாரி ஏதேனும் செய்து தர முடியுமா என்று கேட்டுவிட்டால் மனதில் வருடல் தொடங்கி, தன்னால் முடியுமா என்ற நச்சரிப்பே முன்னிலையில் நிற்கும். இது தொடர்ந்து நடக்க, எல்லோரும் இதை “ஸ்ட்ரெஸ்” என்றார்கள். பச்சாதாபப் பட்டார்கள். பூபதிக்குப் பதட்டம் ஏற்பட்டது, கூடவே உற்சாகம் சரிந்தது. தன்னுடைய நிலைமையைப் புரிந்துகொள்ளத் தட்டுத்தடுமாறுவதாகக் கூறினார் பூபதி, என்னை ஆலோசிக்க வந்தபோது.

பூபதி தன் வாழ்க்கையை வர்ணிக்கையில் ஒவ்வொரு பகுதிகளின் நிலவரங்களையும் “ஸ்ட்ரெஸ்” என்றார். எல்லா வயதினரும், அன்றாட அனுபவங்களை “ஸ்ட்ரெஸ்”, “டென்ஷன்” என்று குறிப்பிடுவதில் பூபதியும் சேர்த்தியே!

எதற்கெடுத்தாலும் ஸ்ட்ரெஸ் எனப் பொதுமைப்படுத்த, கேட்பவர்கள் என்ன இப்படிச் சொல்கிறார் – வேலை புரியவில்லையா, திறன் குறைபாடா‌, தன்நம்பிக்கை பூஜ்யமா எனக் குழம்பிப்போனார்கள். தவறான உபயோகத்தினால் தவறான புரிதல் ஏற்படுவதுண்டு.

அச்சம் அதிகரித்ததால் ஆலோசிக்க வந்ததாகக் கூறினார் முப்பது வயதான பூபதி. நிலைமையைச் சரியாகப் புரிந்து கொள்வதின் அவசியத்தை எடுத்துக் கூறினேன்.

எங்களது ப்ரோபெஷனலான வழிமுறையில் நாங்கள் தானாக க்ளையன்டிற்குப் பாதையை அமைக்க மாட்டோம். க்ளையன்ட் தன்னுடைய அனுபவங்களை வெவ்வேறு கண்ணோட்டத்திலிருந்து ஆராய, சூழலைப் பார்க்க, தன் திறன்களை அடையாளம் காண, நிலையைப் புரிந்து கொள்ளும் வகையில் வழிமுறைகளை அமைப்போம். “ஸ்ட்ரெஸ்”ஸின் விளக்கத்தைப் பூபதி புரிந்து கொள்ள வேண்டிய நிலையென எனக்குத் தோன்றியது.

ஸ்ட்ரெஸ் பற்றிய குறிப்பிட்ட ஆராய்ச்சித் தாள்களைப் படிக்கக் கொடுத்தேன். அவர் தன் நிலையுடன் ஒப்பிட, இதே ஸ்ட்ரெஸ் நன்மைகளும் அளிக்கலாம், அதேசமயம் எளிதாகத் தீமைகளும் ஏற்படக் கூடும் என உணர்ந்தார்.

ஸெஷன் தொடங்கியது. இரு வருடங்களாகப் பூபதி செய்துள்ள வேலையைப் பற்றி துல்லியமாக விவரிக்கப் பரிந்துரைத்தேன்.

கடுமையாக உழைத்த போதும், தீவிரமாகச் செயல்பட்ட சமயங்களிலும் நேர்ந்த மாற்றங்களை மையப்படுத்தி, நினைவூட்டலை ஒரு யுக்தியாகப் பயன் படுத்திக் கொண்டேன்.‌

பல நிகழ்வுகளை விவரிக்கையில், பூபதி தனக்கு எப்போதெல்லாம் படபடப்பு நேர்ந்தது என்றதை அடையாளம் கண்டார். உதாரணத்திற்கு, “ஸ்ட்ரெஸ்” என்ற நிலை முதலாளியிடம் ஏதேனும் விவரிக்க அவருடைய அறையை அடைவதற்கு முன் ஆரம்பிக்குமாம். “சரியாகச் செய்திருக்கிறோமா?” அறையை நெருங்க நெருங்க, மேலும் “இதைச் சொன்னார், அவ்வாறே செய்தோம்” என்று தனக்குத் தானே கூறிக் கொள்வதை நினைவூட்டல் செய்தார் பூபதி. இதனால் சமாதான நிலைக்கு வந்தேன் என்று சூழ்நிலையைப் பட்டியலிட்டார். தன்னுடைய மனப்போக்கின் பங்கேற்பு தெளிவாகப் புரிந்தது.

வெளிச்சம் பிறந்தது. இந்நேரங்களில் அழுத்தம் தமக்கு உதவியது என்பது முதன்முறையாகப் பூபதியின் பார்வையில் பட்டது. ஸ்ட்ரெஸ் இருந்தாலும் உதவக் கூடும் என்று உணர்ந்தார்.

இதுபோன்ற சூழலில் ஆவலால் பரபரப்பும் காத்திருப்பும்
உருவாகுவதைச் சொன்னார். ஆனால் உத்வேகத்தைத் தந்தது. ஆராய்ச்சியின்படி இந்த ஸ்ட்ரெஸ், விழிப்பூட்டும்! செய்வதை மேம்படுத்தும்! ஆராய்ச்சி ஆதாரப்பூர்வமாகக் காட்டியவை, நாள்தோறும் இந்நிலை சற்று நேரம் ஏற்பட்டாலும், அந்த உற்சாக நிலையினால் உடலும் மனநலமும் மேலோங்கிச் செயல்பட, நலனுக்கு மருந்துபோல் ஆகிறது!

பூபதிக்கு தாம் வேலையைச் சரியாகச் செய்யவில்லை என்ற யோசனை மனதைக் குடைந்தது. கிட்டத்தட்ட இதே சமயத்தில் தினந்தோறும் பரபரப்பினால் தாமதமும் கூடியது. “Daily hassle” (தினசரி உபாதை) நேர்ந்தது. நடைமுறையாகச் செய்ய வேண்டியதைத் தள்ளிப்போடுவதால் இது ஏற்பட்டது. தவிர்க்கக் கூடிய இன்னொரு ரூபமான ஸ்ட்ரெஸ் இது. எரிச்சல் ஏற்படுத்தியது. வேலையில் Roller coaster effect உண்டாகியதால் சில பிரச்சினைகள் தோன்றின.

இதை மாற்றப் பூபதி சில வழிகளைக் கடைப்பிடித்தார். அன்றாட வேலையை நேரத்தில் சரியாகச் செய்யாதது ஆர்வத்தைத் தளர்க்க, முன்பு குதுகலமாகச் செய்துகொண்டிருந்தது மங்கியதை உணர்ந்தார்.

அடுத்த ஸெஷன்களில் முன்பிருந்த சூழ்நிலையில், தானாகச் செயல்பட்டு வெற்றி அடைந்ததை ஞாபகத்துக் கொண்டுவரச் செய்தேன். சவாலைச் சந்திக்க முடியும் என்ற நம்பிக்கை இருந்ததை ஏற்றுக்கொண்டார். வெல்வோம் என்ற உறுதி தயார்ப் படுத்தியதில், அது நேர்மறை உணர்வுகளை எழுப்பியது. விடாமுயற்சியுடன் செய்ததைச் சந்தோஷம் பொங்க விளக்கினார்.

இந்த நிலைமைக்கு “யூஸ்ட்ரெஸ்” என்ற பெயர்!

Eustress Images – Browse 201 Stock ...

“யூஸ்ட்ரெஸ்” நிலையில், உடலில் முக்கியமான ரசாயனங்கள் (ஹார்மோன்கள்) ஆட்ரினலின், கார்டிஸால் இவை சுரக்கும். இவற்றால் பலம் அதிகமானது போலத் தோன்றும். பரபரப்பாக வேலையை முடிப்போம். வேலைகளை முடித்த பிறகுதான் அசதி, சோர்வு இருப்பதையே கவனிப்போம்.

What is Eustress? The Better Stress - Tom Ferry

அடுத்த படியாக இந்நிலையிலிருந்து மாறிய காரணிகளையும் தொகுப்பு செய்தோம். நிலையைப் பற்றி மேலும் பகிர்ந்து கொள்ள ஸெஷன்களை அமைத்தேன். கையாளும் விதத்தைப் பற்றியும் அறிந்து கொள்ள, தவிர்ப்பதைப் பற்றிய புரிதல் தேவையானது.‌

இதற்கு வெவ்வேறு அனுபவங்களைப் பூபதியை எடுத்து ஆராயச் சொன்னேன். மன அழுத்தம் தோன்றுவதற்குக் காரணிகளைக் கண்டறிந்தார்.

உதாரணத்திற்கு, தன்னுடைய வேலையை மற்றவருடன் ஒப்பிட்டபோது ஏற்றத்தாழ்வுகளை மட்டும் கவனித்தார். அதுமட்டுமின்றி தான் செய்வதையும் செய்ததையும் தாழ்வாக எடைபோட்டார். இதனால் மன உறுதி தடுமாறியதைப் புரிந்து கொண்டார்.‌

இன்னொரு அறிதலும் தெளிவானது. அச்சம் அதிகரிக்க தன்மேல் இருந்த எதிர்பார்ப்புகள் போட்டியாகவே தென்பட்டதே தவிர, வேலையின் உற்சாகம் பின்தங்கிப் போயிற்று‌ என்பது தெளிவானது.

ஸெஷனில் தன் திறமையைப் பூபதி தாழ்வாக எடை போட்டது புரிந்தது. முடியுமோ, முடியாதோ என்று தத்தளிப்பும் தவிப்பும் வந்தது. சஞ்சலப் பட்டதால் எதிர்கொள்ள முடியாது என்று தீர்மானித்து, உறைந்த நிலைக்கு வந்து விட்டதைப் பூபதி உணர்ந்தார். மனநலப் பிரிவில் இதைத்தான் “ஸ்ட்ரெஸ்”, “மன அழுத்தம்” என்போம்.

மேற்கொண்டு இந்த நிலையை அடையாளம் காண்பது எப்படி என்பதையும் பூபதி புரிந்து கொள்ள வழிகளை அமைத்தோம்.

பூபதி தான் சந்திக்கும் பல சூழலைப் பட்டியலிட்டார். அதற்குப் பொருத்தமான மன அழுத்தம் சார்ந்த ஆராய்ச்சி கட்டுரைகளைப் படிக்கத் தந்தேன்.

அவற்றில் குறிப்பிட்டது போல, நிலைமைகளைக் கையாளும் மூன்று முறைகளைப் பிரிக்கப் பரிந்துரைத்தேன்.

மூன்றில் ஒன்று, மன அழுத்தத்தைத் தரக்கூடிய சூழ்நிலையில் வெற்றிகரமான முடிவிற்காகப் போராடுவது (fight). இதைத் தாம் பல முறை செய்ததை மலர்ந்த முகத்துடன் கூறினார்.

மற்றொரு முறையான முடியாதென்று விட்டு விட்டு அதிலிருந்து ஓடியதையும் (flight) கண்டுகொண்டார். மூன்றாவதானது, என்ன செய்வதென்று புரியாமல், எந்த முடிவும் எடுக்காமல், உறைந்து நிற்பது‌ (freeze). கடந்த மாதங்களில் ஓடுவது – உறைவது (flight – freeze) இரண்டையும் அதிகமாக உபயோகிக்கிறோம் என்று அடையாளம் கண்டார்.

இவற்றால் பூபதி நம்பிக்கை இழந்தார், தோல்வி உறுதி என முடிவெடுத்து விட்டதால் கவனம் சிதறியது. ஆர்வம், ஈடுபாடு இல்லாமல் போனது. இவை ஓடிப் போய்விடுவது, உறைந்திருப்பதின் அடையாளங்களாகும்.

அதன் விளைவாகத்தான் நாள்முழுவதும் பூபதி மன அழுத்தத்தை உணர்ந்தார்.

காரணம் புரிந்ததும், பூபதி தன் பல பொறுப்புகளைப் பற்றிப் பகிர்ந்தார். தனக்கு எட்டாத குறிக்கோள்கள் வகுத்துக் கொண்டதின் விளைவே இவை எனப் புரிந்தது.

மன அழுத்தத்தின் அறிகுறிகளைத் தெரிந்து கொள்வது அவசியம் என்று பூபதி புரிந்துகொண்டார். இவருக்கு வியர்வை ஊற்றுவது, அசதி, கிடுகிடுப்பு ஏற்பட்டது, ஓரிடத்தில் இருப்பது கடினமானது. கையைப் பிசைந்து கொள்வது, காலை ஆட்டிக் கொண்டே இருப்பது இவை எல்லாம் அடையாளங்கள் என்று கண்டுகொண்டார்.

சஞ்சலம், எரிச்சல், பதட்டம், கலக்கம், தனிமையை நாடுவது, தடுமாறுவது என்ற மனோபாவங்களும் தென்படலாம்.

இந்த நிலைபாடுகளைத் தன் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களிடமும் கவனித்து வரச் சொன்னேன். எல்லோருக்கும் ஒரே மாதிரி அடையாளங்கள் இருக்காது, எப்போதும் அதே மாதிரியாக இல்லாததையும் பூபதி புரிந்து கொண்டார்.

இப்படிப் புரிந்துகொண்டு தன்னை மாற்றிக்கொள்ளும் தன்மை உள்ளது என்பதை ஆராய்ச்சி மூலம் நிரூபித்திருக்கிறார்கள். மூளையின் செயல் திறனை உருமாற்றக்கூடிய (“Plasticity”) தன்மையினால். நம்மால் தவறான மனப்போக்கிலிருந்து “மீண்டு வர முடியும்!”

பூபதிக்குப் பல பயிற்சிகளைச் செய்தபின் தன்னுடைய நிலைமையை மாற்றி அமைக்க முடியும் என்ற முழு நம்பிக்கை உண்டாகியது. ஊக்கம் அதிகரித்தது!

மீண்டு வரும் நிலையிலும் மன அழுத்தம் தோன்றலாம். பூபதி தன் உடல் மன மொழியைப் புரிந்து கொண்டார். உடல் பலவிதமாகத் தெரிவிக்கின்றது, மனநிலை அதைப் பிரதிபலிக்கின்றது என்பதையும் அறிந்து கொண்டார்.‌

உடல் மனம் ஒருங்கிணைந்து செயல் படுவதைப் புரிந்து கொண்டார். உதாரணத்திற்கு, அவர் மன அழுத்தத்தில் பயந்து விட்டதில், கை கால் நடுங்கியது, நாக்கு உலர்ந்தது, வியர்வை ஊற்றியது. மனதளவில், சந்தேகங்கள் எழுந்தன, குழப்பங்கள் வளர்ந்தன.

“யூஸ்ட்ரெஸ்” போதும் உடல் பல வகைகளில் அதைத் தெரிவித்ததைப் பூபதி கண்டார். பிடித்ததைச் செய்யப் போகும் போது மெய் சிலிர்த்து, புன்னகை தோன்ற, ஓரிடத்தில் இருக்க இருப்புக் கொள்ளவில்லை. மனதோ, மிக ஆனந்தம் அடைந்து, புத்துணர்ச்சி பூக்க, தெம்பாக உணர்ந்ததை அடையாளம் கண்டார்.

இந்த நிலை நீடித்திருக்கத் தவறாமல் உடற் பயிற்சியாக நடப்பதோ, நீச்சலோ, ஓடுவதோ, விளையாடுவதோ ஏதேனும் ஒன்றைத் தினமும் 30-40 நிமிடத்திற்குச் செய்தார். நன்மை தெரிந்தது!

இவற்றுடன் தோட்ட வேலை, படிப்பது, பாட்டு, உதவுவது என்று ஏதேனும் ஒன்றைத் தேர்வு செய்து செய்தார். நண்பர்களை, உறவினர்களைச் சந்தித்தார். பல தொண்டுகள் செய்ய, பலருடன் நேரத்தைப் பகிர்ந்து கொள்வது மன நிறைவு ஏற்படுத்தியது.

வாழ்க்கையின் அர்த்தம்
அறிவோம்!
என்னவென்று அறியாமல்
பதறவேண்டாமே!
பலருக்கு நன்மை செய்து
மனத்திருப்தியுடன் இருப்போமே!