அந்த வயர் கூடை மிக அழகாக இருந்தது. ரம்யா கண் கொட்டாமல் அதையே பார்த்துக் கொண்டிருந்தாள். கிட்டத்தட்ட ஒன்றைரை அடி உயரத்திற்கு சிகப்பு, இளம் பச்சை நிறங்களில் அழுத்தமாக பின்னப்பட்டிருந்தது. கூடையின் நான்கு ஓரங்களிலும் மஞ்சள் நிற வயரில் பார்டர் போன்ற வேலைப்பாடு அதை இன்னும் எடுப்பாகக் காட்டியது. பையின் இரு பக்கங்களிலும் அழகான தாமரை டிசைன் வேறு. கைப்பிடியும் சிகப்பும் மஞ்சளும் கலந்து நல்ல உறுதியாக இருந்தது.
ரம்யாவுக்கு சட்டென்று பாட்டி ஞாபகம் வந்தது.
பாட்டிக்கு எல்லா கை வேலையும் அத்துப்படி. வயர் கூடை பின்னுவது, எம்பிராய்டரி போடுவது, பூ தொடுப்பது, எல்லாம். அவர் கை பட்டு வரும் எதுவும் ஒரு கலை நயத்தோடு இருக்கும். ரம்யாவுக்கும் சொல்லிக் கொடுத்தார். ஆனால், அவளுக்குத்தான் இதற்கெல்லாம் பொறுமை இல்லை.
“போ பாட்டி, உனக்கு மட்டும் அழகா வருது. எனக்கு வரல பார்”, என்று பாட்டியோடு சண்டை பிடிப்பாள்.
எதிலோ ஆரம்பித்து எங்கோ போன நினைவோட்டத்தைத் திரும்ப நிகழ் காலத்திற்கு இழுத்து வந்தது ரமேஷின் குரல்
என்ன ரம்யா, அந்த பையையே பார்த்துட்டு இருக்கே. உள்ளே பார்த்தியா, என்னெல்லாம் இருக்குன்னு ?
அவள் கணவன் ரமேஷ் சென்னையின் ஒரு பிரபல சட்ட ஆலோசகர். ஒவ்வொரு தீபாவளிக்கும் அவன் எல்லோருக்கும் கிஃப்ட் கொடுப்பதும், அவன் கிளைண்ட்ஸ் எல்லாம் அவனுக்கு கிஃபிட் அனுப்புவதும் வருடந்தோறும் நடக்கும் ஒன்று. ஆனால், இந்த கிஃப்ட் வித்தியாசமாக இருந்தது.
எப்போதும் வரும் ஸ்வீட் பாக்ஸ் , ஸ்நாக்ஸ் , முந்திரி, திராட்சை டப்பாக்கள் என்று இல்லாமல் இது ஸ்பெஷலாக இருந்தது.
அந்த அழகான வயர் கூடையில், திருநெல்வேலி அல்வா, ஸ்ரீவில்லி புத்தூர் பால்கோவா, கோவில்பட்டி கடலை மிட்டாய், சேலம் தட்டை என ஒவ்வொரு ஊரின் பாரம்பரிய, பிரபலமான தின்பண்டங்களை அழகாக பேக் செய்து வைத்திருந்தார்கள். மிகவும் அக்கறையோடும், ரசனையோடும் இருந்த அந்த தீபாவளி பரிசு அவளை மிகவும் கவர்ந்தது.
“இது எந்த க்ளையண்ட் கொடுத்தது ரமேஷ்” என்று ஆர்வம் தாங்காமல் கேட்டாள்.
“புது க்ளையண்ட். அந்த பைலேயே அவங்க கார்ட் இருக்கு பார்”. என்று சொல்லி அவர்கள் பேர், ஊர், எப்படி தனக்கு அறிமுகம் ஆனார்கள் என்று எல்லா கதையும் சொன்னான்.
“எவ்வளவு ரசிச்சு பேக் பண்ணிருக்காங்க. யூ ஷுட் ஸ்பெஷல்லி தாங் தேம்.”
“முதல்ல சாப்படறேன் , அப்புறம் நன்றி சொல்லலாம்” என்று சிரித்தபடியே ஒவ்வொன்றாக பிரித்து ருசிக்க ஆரம்பித்தான்.
அவளின் கவனம் எல்லாம் இன்னும் அந்த கூடையிலேயே இருந்தது.
ரம்யாவுக்கு பள்ளி நாட்களில் இருந்தே பைகளின் மீது ஒரு ஒரு ஆர்வம். அந்த காலத்தில் ஒரு அழுக்கு மஞ்சள் நிறத்தில் வரும் ‘மிலிட்டரி பேக்’ ஐ தான் பெரும்பாலானோர் பள்ளிக்கு எடுத்துச் செல்வர்.
“அந்த பேக் எல்லாம் நான் கொண்டு போக மாட்டேன். எனக்கு அழகா டிசைன் போட்ட பை தான் வேணும்” என்று அப்போதே அப்பாவை கடை கடையாய் அலைய வைத்தவள். பள்ளி புத்தகங்கள் வைக்கும் பை தவிர, லஞ்ச் டப்பாவிற்கு, பாட்டு கிளாஸுக்கு, கோவிலுக்கு எல்லாம் இது போல வித விதமான கூடைகள் தான். ஷாப்பிங் செல்வதற்கு கூட , ஹாண்ட் பேக் வடிவில், மாட்டிக் கொள்ள வசதியாக சிகப்பு வயரில் பின்னப்பட்ட ஒரு பை இருந்ததாக ஞாபகம்.
இப்படி அழகான, வண்ண மயமான, கலை நயம் மிக்க பைகளை எல்லாம் விட்டுவிட்டு, அழுது வடியும் உயிரில்லாத ஒரு பிளாஸ்டிக் கவரை உபயோகிக்க எப்படி தான் தோன்றுகிறதோ? பூக்கடைகளில், கோவில் வாசல்களில் கொடுக்கப்படும் பிளாஸ்டிக் கவரைப் பார்த்தாலே அவள் மனம் பதறும்.
அரசாங்கம் இந்த பிளாஸ்டிக் பைகளை எல்லாம் தடை செய்வதற்குப் பல வருடங்கள் முன்பே அவள் அதற்குத் தடை உத்தரவு போட்டு விட்டாள்.
எங்கு சென்றாலும் எதை வாங்கினாலும், தன்னிடம் இருக்கும் துணிப் பையிலோ அல்லது ஜூட் பேக்கிலோ போட்டு தான் எடுத்து வருவாளே தவிர, என்ன ஆனாலும், பிளாஸ்டிக் கவரை உபயோகிக்க மாட்டாள். அதனால், சில சமயங்களில், பீன்ஸ், கொத்தவரங்காய், பச்சை மிளகாய் எல்லாம் ஒரே பையில் வாங்கி வந்து, அதைப் பிரித்து வைப்பதற்குள் போதும் போதும் என்று ஆகி விடும். ஆனால் அவள் பழக்கத்தை மாற்றிக் கொள்ளவில்லை.
வெளியில் செல்லும்போது எப்போதாவது பை எடுத்துக் போக மறந்து, எதாவது வாங்க நேர்ந்து விட்டால் அவ்வளவு தான். பழக்காரனை நியூஸ் பேப்பரில் கட்டித் தர சொல்லி படுத்துவதும், இல்லையென்றால், கையிலோ, துப்பட்டாவிலோ வைத்து எடுத்து வருவதும் சாதாரணமாக நடக்கும். சில சமயம், ரமேஷும் இதில் மாட்டிக் கொண்டு விடுவான். ஒரு நாள் வாக்கிங் சென்று வரும் போது , பை இல்லையென்று, அவனுடைய, ஷார்ட்ஸ் பாக்கெட்டில் ஆப்பிள்களையும், கொய்யாப் பழங்களையும் போட்டு விட்டாள். அதற்குப் பிறகு, அவன் உஷாராகி, இவளோடு வெளியில் கிளம்பினாலே ரெண்டு பை எடுத்துக் கொள்வான்.
தன் வீட்டில் வாடிக்கையாக பூ கொடுக்கும் செண்பகத்திடம் கூட துணிப் பையில்தான் பூ கொடுக்க வேண்டும் என்று கண்டிப்பாக சொல்லி, அவளிடம் சில துணிப் பைகள் கொடுத்து வைத்திருக்கிறாள். அவள் என்றாவது தவறிப் போய் பிளாஸ்டிக் கவரில் பூ வைத்து, வாசலில் மாட்டி சென்று விட்டாள் என்றால், அவ்வளவு தான். அடுத்த நாள், பிளாஸ்டிக் கவர்களின் தீய விளைவுகளைப் பற்றி அவளுக்கு வகுப்பு எடுப்பாள். செண்பகத்திற்கு ரசிக்கா விட்டாலும் வேறு வழி இல்லாமல் தலை ஆட்டிக் கேட்டுக் கொண்டிருப்பாள்.
சில மாதங்களுக்கு முன்னால் வீடு மாற்றும் போது சேர்த்து வைத்திருந்த பைகளை எல்லாம் வேண்டியது, வேண்டாதது, புதியது, பழையது, என்று தரம் பிரித்து எடுத்து வைப்பதற்கே ஒரு நாள் ஆகிற்று.”நீ இப்படி பை சேர்த்து வெச்சா , அப்புறம் அதுக்குன்னு தனியா வீடு தான் பார்க்கணும்”, என்று ரமேஷ் கிண்டல் செய்த போது ரோஷம் பொத்துக் கொண்டு வந்தது.
இனிமேல், இப்படி பைகள் சேர்த்து வைத்துக் கொள்ள கூடாது என்று அப்போது தான் முடிவு செய்தாள். ஆனால், என்ன செய்வது, பாதாம் அல்வாவைப் பார்த்ததும் டெம்ப்ட் ஆகும் சுகர் பேஷன்ட் போல , இந்த பையைப் பார்த்த உடனேயே அவளுடைய வைராக்கியம் எல்லாம் தவிடு பொடி ஆனது.
கூடையில் இருந்த தின்பண்டங்களையெல்லாம் எடுத்து வைத்து விட்டு, அதை பெட்ரூம் கதவின் பின்னால் இருந்த கொக்கியில் மாட்டி பத்திரப் படுத்தி வைத்தாள்.
அதற்குப் பிறகு அதைப் பற்றி மறந்தும் போனாள்.
அன்று வழக்கம் போல பூக்காரி ” என்ன பூ மா வேணும் ? மல்லியா ? சாமந்தியா ? என்று கேட்டபடி வாசலில் நின்ற போது , அவள் பையைப் பார்த்தாள்.
“என்ன செண்பகம், இந்த பெரிய பிளாஸ்டிக் கவர்ல எல்லா பூவையும் வெச்சிருக்கே, உன்னோட பைக்கு என்ன ஆச்சு ?”
“அது கைப்பிடி அறுந்து போச்சும்மா. நான் என்ன செய்யறது ? முன்னயெல்லாம் பூவை மூங்கில் கூடைல வெச்சி எடுத்துக் போவேன். அப்புறம் வயசாகி, இடுப்பு வலி, கழுத்து வலி எல்லாம் வந்ததுக்கு அப்புறம், கட்டை பையில தான் வச்சு தூக்கிட்டு போவேன். இப்ப அதுவும் என்ன மாதிரி பழசாகி கைப்பிடி பிஞ்சு போச்சு. அதான், பிளாஸ்டிக் கவர்ல போட்டிருக்கேன்,” என்று புலம்பி தன் வாழ்வின் வருத்தத்தைப் பகிர்ந்து கொண்டாள்.
“கொஞ்சம் இரு வரேன்,” என்று உள்ளே போன ரம்யா பெட்ரூம் கதவின் பின்னால் மாட்டியிருந்த கூடையோடு வந்தாள்.
“இந்தா, இதுல போட்டு வெச்சிக்கோ. பிளாஸ்டிக் கவர்ல எல்லாம் வைக்காத.”
“ரொம்ப அழகா இருக்குமா, புதுசா ?”, என்றபடியே கூடையை வாங்கியவளின் முகம் பிரகாசமானது.
“ரொம்ப தாங்க்ஸ்மா,” என்று மறுபடியும் நன்றி சொல்லி விட்டு, பூவைக் கூடையில் போட்டபடி அவள் நடக்க ஆரம்பித்த பிறகு தான், ரம்யாவுக்கு தன் செயலின் வீரியம் உள்ளே உரைத்தது.
எல்லாருக்கும் உதவி பண்ண வேண்டியது தான். அதுக்காக, இப்படியா ? எவ்வளவு அழகான கூடை, இப்பெல்லாம் இந்த மாதிரி வேலைப்பாடுள்ள கூடை எவ்வளவு விலை இருக்கும்? ஆயிரம் ? ஆயிரத்தி ஐநூறு?
எத்தனை கட்டை பைகள் வீட்ல இருக்கு, புதுசும், பழசும். அதுல ஒண்ணு எடுத்து குடுத்திருக்கலாமா? அவசரம் . எதுலயுமே பொறுமையும் நிதானமும் கிடையாது.
அவளின் மைன்ட் வாய்ஸ் அவளை சத்தமாகத் திட்டியது. கொஞ்ச நேரம் எந்த வேலையும் ஓட வில்லை.
மனம் நடந்த நிகழ்வை சரி, தவறு என்ற தராசில் வைத்து ஆராய ஆரம்பித்தது.
ஆறு மாசமா அந்த கூடை அங்க மாட்டி இருந்தது. ஒரு நாளாவது உபயோகப்படுத்தினோமா? இல்லை. கோவிலுக்கு, ஷாப்பிங் போக, எங்கேயும் கொண்டு போகலை, அப்புறம் என்ன ? சும்மா அங்க மாட்டி இருக்கறத யாரவது உபயோகப்படுத்தினா நல்லது தானே?
இப்ப உபயோகப்படுத்தலைனா என்ன ? அப்புறமா தேவையா இருக்கலாம். அது என்ன ஊசியா போகும் ? ரமேஷ் என்னிக்காவது அந்த கூடை எங்கன்னு கேட்ட என்ன சொல்லுவ ?
பூக்காரிக்குக் குடுத்தேன்னு உண்மையை சொல்ல வேண்டியது தான். அப்படி ஒரு கூடை வருங்காலத்துல தேவையா இருந்தா, பணம் குடுத்து புதுசு வாங்க முடியாதா என்ன?
மனம் தனது வாத பிரதி வாதங்களைத் தொடர்ந்தது.
இப்ப என்ன பண்ண முடியும். தூக்கிக் கொடுத்தாச்சு. கொடுத்ததைத் திருப்பி வாங்க முடியாது. அதனால சும்மா இரு. மனதை அதட்டி அடக்கப் பார்த்தாள்.
அது அவ்வளவு எளிதா என்ன?
அடுத்த சில நாட்கள் பூக்காரி வரவில்லை. ஏதோ காரணம் சொன்னாள். பிறகு இவள் வெளியூர் போக வேண்டி வந்து கொஞ்சம் பிஸி ஆகி விட்டாள்.
அதற்குப் பிறகு பூக்காரியைப் பார்த்த போது, அவள் பையில் தான் முதலில் அவள் பார்வை சென்றது.
அவள் கொடுத்த கூடை இல்லாமல் வேறு எதோ ஒரு பை வைத்திருந்தாள். சரி, இப்போது கூடையைப் பற்றி கேட்டு மூட் அவுட் பண்ணிக்க கொள்ள வேண்டாம் என்று விட்டு விட்டாள்.
ஆனால் ரெண்டு நாட்களுக்கு மேல் அவளால் பொறுமையாக இருக்க முடியவில்லை.
“என்ன செண்பகம், நான் கொடுத்த கூடை என்ன ஆச்சு ? வேற ஏதோ ஒரு கட்டை பை எடுத்துட்டு வர? உனக்கு எல்லா பூவும் வச்சு எடுத்து போக வசதியா இருக்கும்னு தானே அந்த வயர் கூடை கொடுத்தேன்.”
“அது வீட்ல இருக்குமா, நாலு இடம் தூக்கி போறதுக்கு, மண்ல, ரோட்ல வைக்கறதுக்கு இது போதும்மா.”
உனக்கு போதும், எனக்கு போதாதே, என்று மனதில் நினைத்துக் கொண்டவள், “நான் கொடுத்ததை நீ உபயோகப் படுத்தினா தானே எனக்கு சந்தோஷமா இருக்கும்.” சிரித்தபடியே அதை வேறு மாதிரி சொன்னாள்.
“சரி மா, கொண்டாறேன்,” என்று கொஞ்சம் சலிப்போடு சொன்னவள், ஒரே ஒரு முறை அதை அவள் கண்களில் காண்பித்தாள். பிறகு வழக்கம் போல அவளின் பழைய கட்டை பைதான்.
ரம்யாவுக்கு எரிச்சலாக இருந்தது.
அது தன் மீதா இல்லை பூக்காரியின் மீதா? தெரியவில்லை. ரெண்டும் தான் என்று தோன்றியது.
பாத்திரம் அறிந்து பிச்சை இடாதது தன்னுடைய தவறோ? பிச்சையா? அவள் ஒன்றும் வயர் கூடை கொடு என்று உன்னிடம் கேட்கவில்லையே , நீயே தானே கொடுத்தாய்? அவள் மனம் சாடியது.
ஆனாலும், கொஞ்சமாவது அவளுக்கு நன்றி வேண்டாம்?
நன்றியா? நீ அவள் என்ன செய்ய வேண்டும் என்று எதிர்பார்க்கிறாய், ரம்யா ? நீ கொடுத்த கூடைக்காக முழம் பத்து ரூபாய் கம்மியாக கொடுக்க வேண்டும் என்றா இல்லை முல்லைக்கு தேர் ஈர்ந்த பாரி போல, செண்பகத்திற்கு கூடை தந்த வள்ளல் என்று உன்னை தினம் பாராட்ட வேண்டும் என்றா?
அவள் மனம் விவாதத்தைத் தொடர்ந்தது.
எரிச்சல் இப்போது கோபமாக மாறிக் கொண்டிருந்தது. அது வெறுப்பாக உருவெடுப்பதற்குள் ஏதாவது செய்ய வேண்டும்.
இந்த டிவியையும் மொபைலையும் நோண்டிக் கொண்டிருந்தால், சரியாகாது. எங்காவது போகலாம் என்று முடிவு செய்து, “கோயிங் டு டெம்பிள்” என்று ரமேஷுக்கு ஒரு மெசேஜ் அனுப்பி விட்டு கிளம்பினாள்.
வார நாள் என்பதால் கோவிலில் அவ்வளவாக கூட்டம் இல்லை. கோவில் மண்டபத்தில் ஏதோ உபன்யாசம் வேறு நடந்து கொண்டிருந்தது. பொறுமையாக ஒவ்வொரு சந்நிதியிலும் வணங்கி விட்டு, மண்டபத்தில் வந்து அமர்ந்தாள்.
உபன்யாசகர் பேசிக் கொண்டிருந்தார்.
“தானம் கொடுப்பது என்பது ரொம்ப பெரிய விஷயம். இல்லை என்று வருபவர்ளுக்குத், தன்னிடம் உள்ளதை தானமாகக் கொடுப்பதற்கு ஒரு பெரிய மனம் வேண்டும். அப்படி நாம் கொடுக்கும் போது தன்னலம் நீங்கி, நம் உள்ளத்தில் மற்றவர்கள் மீது அன்பும் கருணையும் ஏற்படுகிறது. இது மிகவும் உயர்வான நிலை.
ஆனால், அதையும் விட சிறந்தது தர்மம். ரெண்டுக்கும் என்ன வித்தியாசம்?”
ரம்யா கூர்ந்து கேட்க ஆரம்பித்தாள்
“தானம் என்பது கேட்டுக் கொடுப்பது. தர்மம் என்பது கேளாமலே கொடுப்பது.
நீங்க இப்பவும் கிராமங்களில் பார்த்தீங்கன்னா “தர்மம் பண்ணுங்க சாமி” என்று தான் சொல்லுவார்கள்.
மற்றவர்கள் கேளாமலே அவர்கள் தேவையை அறிந்து நாம் கொடுக்கும் போது, நாம் அவர்களாகவே ஆகி விடுகிறோம். அத்தகைய அன்பு நம்மை இறைவனுக்கு அருகில் இட்டு செல்கிறது.”
ரம்யாவுக்கு சட்டென்று உள்ளே ஏதோ ஒரு முடிச்சு அவிழ்ந்தாற் போல இருந்தது.
அவரது வார்த்தைகள் அவளது உணர்வைத் தொட்டு, ஒரு அமைதியை ஏற்படுத்தியது.
அவள் மனதை சூழ்ந்திருந்த குழப்ப மேகங்கள் விலகி, சூரியன் பிரகாசித்தது. அவள் புன்சிரிப்போடு வீட்டை நோக்கி நடந்தாள்.

எங்கள் வீடு அருகில் ஒரு பெண்மணி நிறெய துணிப்பைகளை (சுமார் 1000 இருக்கும் ) தானே தயார் செய்து இலவசமாக கொடுத்துள்ளார்கள்.
LikeLike
யதார்த்தமாக நல்ல நடையில் எழுதப்பட்ட சிறப்பானசிறுகதை ! வாழ்த்துக்கள் !
LikeLike