‘வாங்க வாங்க என்ன செருப்பு பாக்கறீங்க?’
‘கார்த்திக், சாரோட கால் அளவு எடு, 7 தானே, சாருக்கு அந்த புது மாடல் ஷூ காண்பி, நிச்சயம் பிடிக்கும்’
‘வாங்க அம்மா வாங்க, எந்த மாதிரியான செருப்பு வேணும்? உங்க காலுக்கு அதோ அங்கே தெரிகிற செருப்பு அழகாக, எடுப்பாக, சரியாக இருக்கும்’
‘கார்த்திக் இந்த அம்மாவிற்கு ஹீல்ஸ் செருப்பைக் காட்டு’
ஒரே சந்தோஷம் புவனாவிற்கு. தனக்குப் பிடித்த எம் ஏ சோசியாலஜி படித்துவிட்டு, வேறு வேலை எதுக்கும் செல்லாமல், தனக்குப் பிடித்தமான காலணி கடையை திறந்து விட்டாள். அதுமட்டுமல்ல, என்னமோ இதில் மிகவும் தேர்ச்சி பெற்றவள் மாதிரி காலைப் பார்த்தே அவர்களுக்குத் தேவையான செருப்புகளைத் தேர்ந்தெடுத்து கொடுத்து அவர்கள் மகிழ்வதைப் பார்த்து ரசிப்பாள்.
ஒருநாள் மதியம் இரண்டு மணி இருக்கும். கடைப்பையன் கார்த்திக் சாப்பிடச் சென்றிருந்தான். கடையில் புவனா புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள். அப்பொழுது ஒரு சின்னப் பெண் தன்னுடைய செருப்பு அறுந்து விட்டது என்று பக்கத்திலேயே இந்த செருப்பு கடையைப் பார்த்தவுடன் பெற்றோருடன் இந்த கடைக்கு வந்தாள். வித விதமான செருப்புக்களைப் பார்த்து சந்தோஷம் தாங்கவில்லை.
கடையைச் சுற்றி சுற்றி வந்து கடைசியில் ஒரு ரோஸ் நிற செருப்பை தேர்ந்தெடுத்தாள். ஆனால் அதனுடைய ஜோடி செருப்பு சிறிது மேலே வைக்கப்பட்டிருந்தது. அந்த குழந்தை அந்த செருப்பை கையில் வைத்துக் கொண்டு இதனுடைய மற்ற செருப்பையும் எடுத்து தருமாறு கூறினாள்.
‘கடைப்பையன் சாப்பிட சென்றுள்ளதால் அரை மணி நேரம் கழித்து வர முடியுமா?’
‘மேடம், வெளியில் வெயில் கொளுத்துகிறது, இந்த குழந்தையால் நடக்க முடியவில்லை, எங்களுக்கு உடனே செருப்பு வேண்டும், அதை கொஞ்சம் எடுத்து தர முடியுமா?’
வேறு வழி இல்லை, இந்தப்புறம் அந்தப்புறம் பார்த்துவிட்டு மெதுவாக தாங்குக் கட்டைகளை எடுத்துக்கொண்டு காலை ஊன்றி நடந்து அந்த செருப்பை எடுத்து தந்து அந்த குழந்தையின் முகத்தில் சிரிப்பையும் அந்த பெற்றோர்கள் முகத்தில் ஆச்சரியத்தையும் பார்த்தாள்!
(இந்தக் கடை இன்றும் படியாலாவில் உள்ளது)

கடவுளே… கடைசி வரிகள்..
ஸ்ரீராம்
LikeLike