
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கல்வி பெறும் மாணவர்களுக்கான வகுப்புகளில் குழந்தைகளைக் கவனிப்பது (observation) என்று ஒரு பெரிய பங்குண்டு. இதிலிருந்து தம் பாடத்திட்டங்களில் சொல்வதை நடைமுறையில் பார்த்து அறிவதால் ஆர்வம் கூடும், மாணவர்கள் ஆசிரியர் கல்விப் படிப்பை ஆழ்ந்து கற்றுக் கொள்வார்கள். பல ஆராய்ச்சியாளர்கள் இதை நிரூபித்திருக்கிறார்கள்.
ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கல்வியின் பாடத்தின்படி குழந்தை வளர்ச்சி, வளர்ப்பு, சூழல், கூட இருப்பவர்களின் தாக்கம் என்ற பல பாடங்களை நான் கற்றுத் தந்து வந்தேன். ஒரு மணிநேர வகுப்பின் கடைசி பதினைந்து நிமிடங்களை என் மாணவர்கள் குழந்தைகளின் வகுப்புகளில் தாம் கவனித்ததை, அன்றைய பாடத்திட்டத்தைப் பற்றிய பின்னோட்டத்துடன் சேர்த்துப் பகிர்வதற்காகவும், தம் சந்தேகங்களை முன் வைப்பதற்காகவும் அமைத்திருந்தேன்.
மும்தாஜ் குழுவினர் நான்கு வயதான ராமனைப் பற்றிப் பகிர்ந்தார்கள். முட்டைப் படம் ஏதேனும் பார்த்தால் உடனே, “கமலா பாட்டி” எனக் கூச்சலிட்டு ஓடுவான் என்றார்கள். வகுப்பாசிரியர் எவ்வளவு சமாதானம் செய்தாலும் பயனில்லை என்றார்கள்.
அவர்கள் விவரித்ததிலிருந்து ராமனின் வளர்ச்சியைக் கணிக்க முடிந்தது. வயதிற்கு ஏற்றவாறு இருந்தது, மாடிப்படி ஏறி இறங்குவது, உடைகள் அணிவிப்பில் உதவுவது, தானாக உண்பது, கதை சொல்வது, மற்றவர்களுடன் விளையாடுவது, உணர்வுகளைக் கூறுவது என.
இதைத் தொடர்ந்து, நான் ரமணன்-ரமா என்ற ராமனின் பெற்றோரைச் சந்தித்தேன். ராமனுடைய அக்கா ராகவியும் வந்திருந்தாள்.
நான் கேட்பதற்கு முன்பே ராகவி, இந்த வருட ஆரம்பத்திலிருந்து ராமன், முட்டை சாப்பிடும் படங்கள் பார்த்ததுமே வாந்தி எடுப்பது போலப் பாவனைக் காட்டுவதாகக் கூறினாள். பெற்றோர், விளையாட்டாகச் செய்கிறான் என எண்ணி விட்டு விட்டார்கள். உறவினர்கள் இந்த நடத்தை முட்டைக்கு நிராகரிப்பாக இருக்கும் என்றதை ஏற்றுக்கொண்டார்கள்.
“கமலா பாட்டி” (ரமாவின் தாயார்) எனக் கூச்சலிடுவது ஏன் என்று புரியவில்லை என்றார்கள். பாட்டியின் வீட்டிற்குப் போக மறுக்கிறான், அடம் பிடிக்கிறான் என்ற தகவல்களைப் பகிர்ந்தார்கள். ராமனுடன் செஷன்கள் தேவை என்று பெற்றோரிடம் விளக்கியதுமே ஒப்புக்கொண்டார்கள்.
ஸெஷன்களிலிருந்து ராமன் குடும்பத்தினரிடம் பாசமாக இருப்பவன், பெரியவர்கள் சொற்படி நடந்து கொள்பவன், சொல்வதை மறுபேச்சு பேசாமல் ஏற்றுக்கொள்பவன் என்றவை தெளிவானது. முட்டை விஷயத்தில் எதிர்மறையாகச் செயல்பட்டான்.
ராமனுக்கு ப்ளே தெரபீ உதவும் என எண்ணி ஆரம்பித்தேன். பிரச்சினைகளை விவரமாகச் சொல்ல முடியாத (சுமார் 6-8 வயதிற்கு உட்பட்ட) பச்சிளங்குழந்தைகளுக்கு இதை உபயோகிப்போம். இந்த யுக்தி என்பது குழந்தைகள் வயதிற்கு ஏற்றவாறு குறிப்பிட்ட பொருட்களை வைத்து அதை அவர்கள் உபயோகிக்கும் அல்லது விளையாடும் விதங்களிலிருந்து அவர்களின் திணறல்கள், சங்கடங்களை அறிந்து கொள்ளும் விதமாகும், கூடவே நலன், மனநலனை மேம்படுத்தும் கருவியாகவும் பயன்படுத்தலாம்.
ரமாவின் தந்தை கமல் தாத்தா மற்றும் கமலா பாட்டி, தங்களின் வீடு அருகிலேயே இருந்ததால், அடிக்கடி குழந்தைகளைப் பார்த்துக் கொள்வார்கள். சமீபத்தில் கமலா பாட்டியின் வீட்டிற்கு ராமன் போக மறுத்தான். ப்ளே தெரபீயின் மூலம் இது பாட்டியிடம் பயம், அச்சம் உருவானதால் என்பது தெளிவானது. குறிப்பாகக் கமல் தாத்தாவும் அந்த வீட்டிலிருந்து சென்று விட்டதாலும்.
என்றைக்குமே கமலா பாட்டிக்கு “நோ” என்ற சொல் பிடிக்காது. சொல்வதைச் செய்யாவிட்டால் ராமனிடம் பேச மாட்டாள். இதைத் தவிர்க்கவே அவர்கள் சொல்வதையெல்லாம் கடைப் பிடிக்க முயன்றான். செய்தால் ராமனுக்கு சபாஷ் என்று சொல்வாள். அவனும் சொற்படி செய்வான்.
சபாஷ்! “இது செய்தால், அது கிடைக்கும்” என்பது பாட்டி ராமனுக்குத் தரும் லஞ்சம். இதைக் கேட்க வேண்டும் என்ற ஏக்கத்தைத் தூண்டுகிறது. இதைப் பெற்றுக்கொள்ளவே குழந்தைகள் செய்வார்கள். இதன் மூலம் குழந்தைகள் மனதில் தவறான புரிதலை உருவாக்குகிறோம். உறவை உருவாக்க, அமைக்க, லஞ்சம் உபயோகிக்கலாம் என.
மேலும் கமலா பாட்டி அசைவ உணவு பார்த்தாலே வாந்தி வருவதைப் போலச் செய்வாளாம். ராமன் முட்டை சாப்பிட்டால் அவனுடன் பேச மாட்டாள். அவன் சாப்பிட்டால் தன்னைப் பிடிக்காது என அர்த்தம் என்றதைப் பயமுறுத்தும் சொற்கள் மூலம் தெரிவிப்பாள். இதுபோன்ற பராமரிப்பு ஏக்கத்தை விளைவிக்கும்.
கமலா பாட்டியின் சபாஷைப் பெறவே, முட்டையைப் பார்த்ததும் ராமன் பாட்டி செய்வதைப் போலவே செய்து வந்தான். கமலா பாட்டி இதைப் பார்க்கும் போதும் சபாஷ் சொல்வாள்!
கமலா பாட்டிக்கு நோ என்ற வார்த்தை பிடிக்காததால் ராமன் அந்த சொல்லைத் தவிர்த்தான். கமல் தாத்தாவும் பெரும்பாலும் அவ்வாறு சொல்லமாட்டார்.
ராமனிடம் பாட்டி பேசாமல் இருக்கும்போதும், தாத்தா மறுபேச்சு சொன்னால், கமலா பாட்டி பலத்த குரலில் அவரிடம் பேசுவாள். இந்நேரங்களில் ராமன் தான் பயந்து விடுவதாகக் கூறினான்.
குழந்தைகள் சூழலிருந்தும் தன்னைச் சுற்றி உள்ளவர்களிடமிருந்தும் கற்றுக்கொள்வது ஏராளம் என்பதால் பெற்றோருடன் ஸெஷன்கள் அமைத்தேன்.
ரமணன், ரமா இருவருமே திறமையாக ரெக்ரூட்மெண்ட் செய்வதிலும் ட்ரைனிங் கொடுப்பதிலும் வல்லமை பெற்றிருந்த பிரபலமானவர்கள். சமீபத்தில் கைவினைப் பொருட்கள் விற்பனையையும் ஆரம்பித்திருந்தார்கள், நன்றாக அமைந்தது. வேலையில் ஈடுபட, கவனம் அதிகரிக்க, வேலையில் பல மணி நேரம் கழிந்தது!
ராமன் ஏன் முட்டையைப் பார்த்ததும் இவ்வாறு செய்கிறான், திடீரென கமலா பாட்டியிடம் போக மறுக்கிறான் என்ற கேள்விக்குக் குழந்தை வளர்ச்சியைப் பற்றி வலையொளியில் (Internetல்) பார்த்தார்கள். பதில் இல்லை. இதைப் பல்வேறு கோணங்களில் ஸெஷனில் பார்க்கச் செய்தேன்.
ரமணன் ரமா பிசினஸ் வளரத் திட்டமிடும் பல கூட்டங்களில் கலந்து கொள்வதுண்டு. வரும் சந்தர்ப்பங்களை நழுவிப் போகவிடாமல் எல்லோரிடமும் ஒப்புப் போவதைக் கடைப்பிடித்தனர். இவற்றில் ஒன்றே, அசைவம் சாப்பிடுவதும் என்று ரமணன்-ரமா சொன்னார்கள்.
ரமணன்-ரமா,“வேண்டாம்” எனச் சொல்லத் தயங்கினார்கள்! அசைவ உணவைச் சாப்பிட்டார்கள்.
கமலா-கமலுக்கு இது பிடிக்காது. பெற்றோர் வீட்டில் இல்லாத போது சாப்பிட்டார்கள்.
ரமணன் தாம் மது அருந்துவதும் வேலை சம்பந்தப்பட்ட கூட்டங்களில் அளித்த போது ஏற்றுக்கொண்டதால் என்றார்.
குழந்தை ராமனின் வேதனை, பெற்றோருக்குப் பிடித்ததைத் தான் சாப்பிடாமல் போவதே. பாட்டிக்குப் பயந்து இதைக் செய்தான் எனினும் கையாளத் தடுமாறினான். தத்தளிப்பில் கமலா பாட்டியிடமிருந்து விலகிப் போக முயன்றான். கமலாவுக்குப் புரியவில்லை.
பல ஸெஷனுக்கு பின்னரே ரமணன்-ரமா தங்களுடைய குறைபாட்டின் விளைவுகளை அடையாளம் கண்டு கொண்டார்கள். மாற்றத் தொடங்கினார்கள்.
கண்மூடித்தனமாகப் பிடிக்காததை ஏற்றுக் கொண்டதால் ஏற்பட்ட அவர்களுடைய சுய உரைக் குழப்பம் ராமனைப் பாதித்தது. கமல் தாத்தாவிற்கோ மனைவியின் செயல்பாடு பிடிக்கவில்லை. அதை எடுத்துச் சொல்லத் துணிவில்லை. கடைசியில் கமல் தாத்தா தம் வீட்டை விட்டுச் சென்று விட்டதாகக் கூறினாள் ரமா. ஆகமொத்தம் பிரச்சினையை நேர்மறை முறையில் சந்தித்துச் செயல்படவில்லை.
ரமணன்-ரமாவிற்கு தம்முடைய பிரச்சினைகளுக்கு விடை காணும் திறனை மேம்படுத்துவது அவசியம் எனப் புரிந்தது. பல்வேறு வழிகளை விடுத்தோம்.
ஸெஷனில் பல உரையாடல்கள் பயிற்சி செய்த பின்னர் ரமணன் தன்னுடைய மறுபேச்சுப் பேசாமல் செய்யும் குணம் ராமனிடமும் உள்ளது எனக் கண்டார். வேதனைப் பட்டார். தன் சுய மரியாதைக் குறைபாடு மனதை உறுத்துவதாகக் கூறினார். மாமியார் பேச்சை மீற முடியவில்லை. குழந்தை ராமன் கமலா வீட்டிற்குச் செல்ல மறுத்ததும் விழித்துக் கொண்டார். சுதாரித்துக் கொண்டு, பல உதாரணங்கள், நிகழ்வுகளை ஆராய்வதின் மூலம் குழந்தையுடன் உறவாடுவதற்குப் பல வழிமுறைகள் வகுத்துச் செயல்படுத்த, ராமனின் நிலை மாற்றம் அடைந்தது.
மற்றவர் ஆமோதிப்பு இருக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு ரமணனுக்கு உண்டு. ஆமோதிப்பு இல்லை என்றால் பரிகாசம் செய்வார்களோ, தனிமை விளைந்திடுமோ என்ற அச்சம். கமல் தாத்தாவும் இது போலவே இருந்ததால் அதையே கடைப்பிடித்தார். பயனுள்ளதா இல்லையா என்று சிந்திக்காமல்!
கமலா-கமல் சண்டை, முட்டை சாப்பிடாமல் இருப்பது இவை ராமனின் மனதில் அழுத்தம் ஏற்படுத்த, சுய பாதுகாப்பு (self- preservation) மார்க்கத்தில் குழந்தை அவளிடம் போக மறுத்தது.
ரமணனின் தாயார் சொளதா ராமனுக்குப் புரியும் வகையில் கதைகள் மற்றும் தன் வாழ்வின் உதாரணங்களைச் சொல்லிப் புரியவைப்பாள். ராமன் முட்டையைப் பற்றிச் சரியாகப் புரிந்து கொள்ளப் பல வழிமுறைகளை அவர்களுடன் அமைத்து வைத்தேன். அதை அவர்கள் கடைப்பிடிக்க, மும்தாஜின் வகுப்பில் ராமனின் நடத்தையில் மாற்றத்தைப் பார்த்தார்கள். ரமணனின் தந்தை ரகுவீர் சமஸ்கிருத பண்டிதர். அவர் சின்னஞ்சிறு கதைகள் ஸ்லோகங்களைச் செய்கைகளுடன் சொல்லித் தர, நேர்மறையை ராமன் கற்றுக்கொண்டான்.
இதற்கிடையில், கமலா-கமல் இவர்களின் கருத்து வேறுபாடு அதிகரித்தது. கமல் விவாகரத்துக் கோரினார். ரமா தடுமாறி விட்டாள். கமல்-கமலாவைப் பிரபலமான ஜோடி சிகிச்சையாளர் ஒருவரை ஆலோசிக்கப் பரிந்துரைத்தேன்.
குழந்தைகள் ஏங்குவது
பழகிய லஞ்சத்திற்கே!
புகழ்ந்து பேசி
வேலை வாங்குவதும்
லஞ்சமே!
உறவில் லஞ்சம் உறவைத் தடுமாற வைக்கும்!
*************************************

சிக்கலான உளவியல்.
குழந்தைகள் கீழே விழுந்தாலோ, தடுக்கிக் கொண்டாலோ குழந்தை அழுகையை நிறுத்த, அல்லது சமாதானப்படுத்த தரையை அடி அடி என்று அடிப்பதும், சொல்லித் தருவதும் பழிவாங்கும் உணர்ச்சியை குழந்தைகள் மனதில் உண்டாக்கும் என்று என் அம்மா சொல்வார். அதை ஊக்குவிக்க மாட்டார்.
ஸ்ரீராம்.
LikeLike