பெரியாழ்வார் மலர்பறித்து மாலை சாற்றுதல்
புலர்கின்ற பொழுதெழுந்து பொய்கையிலே நீராடி
மலர்கின்ற பூப்பறித்து வண்ணவண்ண மாலைகட்டி
நலம்நல்கும் நாரணனின் நாமங்கள் நாநவிலத்
தலமுறையும் மாலுக்குச் சாற்றியவர் மனம்மகிழ்ந்தார்
(தலமுறையும் மால்- வில்லிபுத்தூர் என்னும் தலத்தில் உறையும் வடபத்திர சாயி)
துளசிச் செடியருகில் குழந்தையைக் காணுதல்
கருத்தமுகில் நிறத்தழகுக் கண்ணனவன் புகழ்பாடிப்
பொருத்தமுறு மலர்பறிக்கும் போதினிலே நந்தவனத்
திருத்துளபச் செடிமருங்கில் சிறியவொரு பெண்குழந்தை
சிரித்தமலர்ச் செண்டெனவே திகழ்வனப்பைத் தாம்கண்டார்.
(துளபம்- துளசி)
குழந்தையைக் கண்ட பெரியாழ்வார் கூற்று
வானத்து முழுமதியம் மண்ணிறங்கி வந்ததுவோ?
கானத்துக களிமயிலோ? கற்கண்டோ? காவியமோ?
தேனைத்தன் இதழ்சொரியும் தெய்வீகத் திருமலரோ?
மோனத்தில் முகிழ்த்தெழுந்த மோகனமோ? முத்தமிழோ?
பொற்புறு விளக்கே என்கோ?
பொன்னெழில் பொலிவே என்கோ?
கற்பக மலரே என்கோ?
கனித்தமிழ்க் கவியே என்கோ?
சிற்பமே உயிர்கொண் டிங்குத்
திகழ்சிறு மதலை என்கோ?
அற்புதப் பள்ளி கொண்ட
அரங்கனின் அருளே என்கோ?
(என்கோ – என்பேனோ)
கோதை எனப் பெயர் சூட்டுதல்
குழலை இசைக்கும் கோபாலன்
கொடுத்த வரமாய்க் கொள்கின்றேன்
சுழலும் திகிரிப் பெருமானின்
தூயப் பரிசாய் ஏற்கின்றேன்
மழலை மிழற்றும் மாணிக்கம்
மனைக்குக் கிடைத்த காணிக்கை
எழிலுக் கெழில்செய் கோதையிவள்
இறைசெய் நூலின் காதையிவள்.
பிள்ளைத் தமிழெனக் கோதை வளர்தல்
செங்கீரைப் பருவத்தில் தலையைத் தூக்கிச்
சிறுமுகத்தை அழகாக அசைத்து, நாவில்
பொங்கிவரும் தாலாட்டில் துயின்று, கையைப்
பொலிவுடனே சப்பாணி கொட்டி, வானில்
தங்குநிலா விளையாட அழைத்துக் காய்கள்
தானெறிந்து அம்மானை ஆடி, ஊசல்
தங்கமகள் கோதையவள் மகிழ்ந்து. பிள்ளைத்
தமிழெனவே வண்ணமுற வளர்ந்து வந்தாள்
கண்ணன் மேல் அன்பு
அஞ்சன வண்ண ஐயன்
ஆயனின் மீது பிஞ்சு
நெஞ்சிலே அன்பு பூண்டு
நினைப்பிலும் அவனே என்று
கொஞ்சிடும் சிறுமி அந்தக்
கோதையின் செய்கை தோறும்
விஞ்சிடும் பொருளாய் என்றும்
விளங்கினான் மாயக் கண்ணன்
கொண்டல்நிறக் கண்ணனெனும் கோவலன்மேல் பற்றுவைத்தாள்
கண்டபொருள் எலாமவனைக் கண்டுகண்டு மெய்சிலிர்த்தாள்
மண்டுமவள் விளையாட்டில் மாயவனின் பொம்மைகளைக்
கொண்டுமிகக் களிப்பெய்திக் கோதையவள் வளர்ந்துவந்தாள்.
கலைகளும் தமிழும் பயிலுதல்
குளந்தான்விளை செழுந்தாமரைக் குளிரார்மலர் முகத்தாள்
அளந்தானடி புவியோடுவிண் அவன்மேவிய அகத்தாள்
வளர்ந்தாள்தமிழ் பயின்றாள்மனம் மகிழ்ந்தாள்கலை அறிந்தாள்
தெளிந்தாள்பல நூலோதியே திறனாய்விலும் சிறந்தாள்!
(தொடரும்)
