
சரி! ஒத்துக் கொள்கிறேன். சென்னையில் பிறந்து வளர்ந்து அங்கேயே வசித்துவரும் என்னைப் போன்றோர், அடைமழை பற்றிய வியாயஸங்கள் எழுதுவதற்கு அடிப்படைத் தகுதி இல்லாதவர்கள்தான். வெளியே மழை பெய்யும் போது “பால்கனியில்”அமர்ந்து கொண்டு “காப்பி” குடித்தால் நன்றாய் இருக்கும் என்று நினைக்கும் போதே மழை நின்றுவிடும். அதுதான் மெட்ராஸ் மழை. இருட்டிக் கொண்டு வந்து உலகமே அழிந்துவிடும் போல ஐந்து நிமிடம் பேயாட்டம் ஆடிவிட்டு அப்புறம் காணாமல் போய்விடும்.
ஆனால் சென்னை மழை பற்றி ஒன்று சொல்லவேண்டும். ஐந்து பத்து நிமிடங்கள் பெய்தாலும் தெருக்களை அடியோடு நாசம் செய்யும் திறம் அதற்கு உண்டு. ஒரு மணிநேரம் மழை; ஊரெல்லாம் வெள்ளக்காடு என்று செய்தி வந்துவிடும். ( ஏய் “ப்ரோ நிறுத்து ! இதுல என் தப்பு ஒண்ணுமில்ல .. ஒங்க சிங்காரச் சென்னை மேயரைக் கேளு என்று மழை குறுக்கிட்டுக் குரல் கொடுத்தது.)
பயணங்களில் சில “மழை வகைகளைப்” பார்த்துள்ளேன். குறிப்பாக ஒரு ரிசார்ட் புக் செய்து விட்டு “வயநாடு” சென்ற போது ஒரு வாரம் முழுதும் நத்தைகளைப் போல ஈரத்திலேதான் இருந்தோம். மழையென்று அடித்துப் பெய்யாது ஆனால் உலர்ந்த ஒரு இடம் கூட ஊரில் கிடையாது . இதன் பெயர் “மச மச மழை”.
கேரளாவிற்குப் பல முறைகள் சென்றுள்ளேன். எனது தாய்வழிப் பாட்டியின் ஊர் “திருச்சூர்”. அங்கே பல ஊர்களுக்குச் சென்றதுண்டு. புனலூர் திருவனந்தபுரம்,அம்பலப்புழா ,ஆலப்புழா, கோட்டயம், ஏட்டுமானுர், கொச்சி, எர்ணாகுளம், பாலக்காடு, திரூர், இன்னும் பல ஊர்கள். கிட்டத்தட்ட எல்லா இடங்களிலும் மழை அடித்துப் பெய்யும் ; அது நின்ற அடுத்த நிமிடம் வீதியெல்லாம் கழுவி விட்டது போல சேறு சகதி இல்லாமல் பளிச் என்று இருக்கும். மழை மட்டுமல்ல அதன் நீர்த் தடங்களும் எங்கு போனதென்றே தெரியாமல் போய்விடும். எப்பொழுது பெய்யும் ,எப்பொழுது நிற்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. ஆண்டு முழுக்க இந்த ஒரு பருவம்தான். அதனால்தான் கையில் குடையில்லா சேட்டன்மார்களையோ சேச்சிகளையோ மலையாள மண்ணில் காண முடியாது. இதனை “கண்ணாமூச்சி மழை” என்று வகைப்படுத்தலாம்.
மும்பையில் ஒரு மீட்டிங்கில் பேச மழை சீஸனில் சென்ற போது, காலையில் விமானத்திலிருந்து இறங்கி, இரவில் சென்னை திரும்ப விமான நிலையத்திற்கு வரும்வரை அதிரும்படிப் பெய்த அடை மழையை மறக்க முடியாது. குடைக்கு அடங்காத அடைமழை. இதனை “அடங்கா மழை” என்று சொல்லலாம்.
எனது துணைவியாரின் ஊரான செங்கோட்டையிலிருந்து கூப்பிடு தூரம்தான் குற்றாலம் ! சீஸனில் சென்றால் அங்கே ஊரே ஏர்கண்டிஷன் செய்தது போலிருக்கும்; மழை தான் இருப்பதைக் காட்டிக் கொள்ளாமல் மெல்லப் பன்னீர் போலத் தூவிப் படரும். இதனை “சாரல் மழை” என்பார்கள்.
அடை மழைக்கென்றே ஒரு தனி சவுண்ட் உண்டு. “ஜோ” என்ற ஒலிக் குமுறலோடு பெய்யும். வானம் “பொத்துக்கொண்டு” பெய்கிறது என்பார்கள். பல முறைகள் வெவ்வேறு ஊர்களில் இதை அனுபவித்து உள்ளேன். ஒரு முறை நாகர்கோவிலில் இருந்து மதுரைக்கு தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்யும் போது, ஒதுங்க இடம் இல்லாமல் நடு வழியில் அரைமணி நேரம் அடித்துப் பெய்தது மழை. “வைப்பர்” வேலை செய்யவில்லை. சாலை ஓரத்தில் வண்டியை அப்படியே நிறுத்திவிட்டோம். பின்னால் உள்ள சிவப்பு விளக்கை “ஆன்” செய்துவிட்டு, அப்படியே காருக்கு உள்ளே அமர்ந்திருந்தோம். நல்ல வேளை; அரை மணிக்குப் பிறகு மழை நின்றது. மழைச் சுவடே இன்றி வெய்யில் வெளுக்க ஆரம்பித்துவிட்டது.
குற்றாலத்தில் ஒருமுறை அடித்துப் பெய்யும் மழையின் ஊடே அருவியில் குளித்துக் கொண்டிருந்தோம். அருவியிலும் தலைமேல் நீர், வெளியிலும் நீர். வித்தியாசமான அனுபவம்.
பள்ளிப் பருவத்தில் ஒரே குடைக்குள் நான்கு பேர் நடந்து செல்வோம். அந்தக் குடை மழையிலிருந்து எங்களைக் காப்பாற்றிக் கொள்ள அல்ல, அது ஒரு விளையாட்டு ஒரு நூறு அடிகள் கடப்பதற்குள் நான்கு பேருமே நனைந்திருப்போம்.
மகாகவி பாரதியார் புதுச்சேரியில் மூன்று நண்பர்களோடு சென்ற தனது மழை அனுபவத்தை எழுதுவதைப் படிக்க மிக சுவாரசியமாய் இருக்கும்.
“ மழை வர்ஷமாகச் சொரிந்தது. ராமராயரும், பிரமராய ஐயரும் மற்றோரும் குடல் தெறிக்க ஓடிவந்து சேர்ந்தார்கள். நானும் வேணு முதலியும் கொஞ்சம் நனைந்து போயிருந்தோம். மற்றவர்கள் “ஊறுகாய்” ஸ்திதியில் இருந்தார்கள்.” என்ற எழுதியிருப்பார்.
இந்த அடை மழையும் காற்றும் நின்ற பிறகு நண்பர் “வேணு முதலி “பாடுவதாக பாரதி எழுதியதே “மழை” எனும் தலைப்பைக் கொண்ட “திக்குகள் எட்டும் சிதறி” என்ற பாடல்.
பள்ளி, கல்லூரி இரண்டிலும், படிக்கும் காலத்தில் மழை பெய்தால் லீவு கிடைக்கும். எங்கள் இளவயதில் இப்போது போல டிவி, ரேடியோ கவரேஜ் கிடையாது. பள்ளிக்கு லீவு விட்டு விட்டார்களா இல்லையா என்பது அங்கு போய்ப் பார்த்தால்தான் தெரியும்.
“நாங்களே போய்ப் பார்த்துக் கொள்கிறோம்” என்று சொல்லிவிட்டுக் கிளம்பி விடுவோம். பிறகென்ன ? மழை நீரில் விளையாட்டுதான். வீதியில் ஆறு போல ஓடும் நீரில் காகிதக் கப்பல் விட்ட காலத்திலிருந்து, கொட்டும் மழையில் விடாது கிரிக்கெட் ஆடிய நாட்கள் வரை எல்லாமே இனிப்பான அனுபவம்தான்.
பள்ளி கல்லூரி நாட்களில் நூற்றுக்குத் தொண்ணூறு விழுக்காடு மழைக்காக லீவு விட்டால், அடுத்த அரைமணி நேரத்துக்குள் வெய்யில் வந்துவிடும். சென்னை மயிலையில் இருந்த எங்கள் கல்லூரிக்கு அருகே நிறைய தியேட்டர்கள் உண்டு. லஸ் கார்னரில் காமதேனு, மந்தைவெளியில் கபாலி, ராயப்பேட்டை பக்கம் போனால் பைலட், அதையும்தாண்டி மவுண்ட் ரோடு ( இப்போது அண்ணா சாலை) சென்றுவிட்டால், குளோப். ஓடியன், வெல்லிங்க்டன், கெயிட்டி, கஸினோ , சித்ரா என்று பல உண்டு. பீச் பக்கம் திரும்பினால் வருவது “பாரகன்” ஒன்றா இரண்டா எடுத்துச் சொல்ல ?
இவற்றில் சில ஆங்கிலப் படங்கள் போடுபவை; சில புதிய தமிழ்ப் படங்கள் போடுபவை.. கபாலி போன்றவற்றில் அரதப் பழைய படங்கள் காணக் கிடைக்கும். கும்பலே இருக்காது. (அதிலும் சில பிளஸ் பாயிண்ட் உண்டு)
அப்போது கல்லூரியில் எங்களுக்கு இருந்த பிரின்சிபால் எங்கள் துறைத் தலைவரும் கூட ; எங்க டிபார்ட்மெண்ட், அட்டெண்டர்தான் அவருடைய பெர்சனல் பியூன். தாண்டவராயன் என்பது அவர் பெயர்; அவர் சொல்வதை அப்படியே பிரின்சிபால் ஒத்துக் கொண்டு விடுவார்.
கல்லூரி காலை ஒன்பது மணிக்குத தொடங்கும். மந்தைவெளியில் வசித்த பிரின்சிபால் காலை எட்டு மணிக்கே வந்துவிடும் அவரது பியூனிடம் அன்றைய குசலோபரி கேட்டறிந்த பிறகே வீட்டை விட்டுக் கிளம்புவார். மழைக் காலங்களில் இது இன்னும் மோசமாகிவிடும்.
இரண்டு துளி மழை மந்தைவெளியில் அவர் வீட்டுக்கு எதிரில் விழுந்தால் போதும் “பசங்க கஷ்டப் படுவாங்க .. தாண்டவா ! அந்த போர்ட் ஐ எடுத்து காலேஜ் ஆபீஸ் வாசலில் வச்சிடு” என்று ஆர்டர் கொடுத்துவிடுவார்.
“ Due to inclement weather the college is closed for the day” என்பதே அந்தப் பலகையில் இருக்கும் வாசகம்.
மழைச் சாரலில் இலேசாகத் தலை சிலுப்பி கைக்குட்டையால் கன்னங்களைத் துடைத்துக் கொண்டு போர்ட் ஐப் படித்துவிட்டுத் திரும்பினால் பளிச் என்று சூரியனார் தரிசனம் தருவார். மழை மாதங்களில் ஆண்டுதோறும் இதைப் போல ஆறேழு முறைகள் நடப்பதுண்டு.
அதன் பிறகு எல்லாமே மாறிவிட்டது. நான் முதல்வராக இருக்கும் போது பட்டியலில் இல்லாமல் இது போன்ற விடுமுறைகளை அரசே அறிவித்தாலும், பிறகு இன்னொரு நாள் அதற்கு ஈடு செய்ய வேண்டும் என்ற ரூல் வந்துவிட்டது. அதனால் மழை நாள் விடுமுறை கவர்ச்சியை இழந்துவிட்டது. ( அந்தப் பழைய தியேட்டர்களில் பல இன்று இல்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்)
அடைமழையையும் தூக்கிச் சாய்க்கும் இயற்கையின் இன்னொரு கோரமான முகத்தையும் நான் பார்க்கும் அனுபவம் எனக்குக் கிட்டியது.
2004- ஆம் ஆண்டு டிசம்பர் 24-ம் நாள் காலை மணி பத்திருக்கும்; கல்லூரிப் பணிகள் நிகழ்ந்து கொண்டுள்ளன; வகுப்புகள் நடந்துகொண்டு இருக்கின்றன. சுனாமி எனும் ஆழிப் பேரலை சென்னைக் கடற்கரையைத் தாக்கி வெள்ளம் கடற்கரை சாலையில் நுழைந்துவிட்டது. அங்கிருந்து நான்கு கிலோ மீட்டர் தொலைவிலுள்ள எங்கள் கல்லூரி பாதிப்புக்கு உள்ளாகுமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனாலும் விடுமுறை என்று அறிவித்துவிட்டால் அத்தனை மாணவர்களும் உடனே கூட்டமாக வெளியே சென்று அக்கம் பக்கத்திலேயே வேடிக்கை பார்க்க நின்றுவிடுவார் அல்லது பீதியில் குழப்பம் ஏற்படுத்தி விடுவர்.
எனவே கொஞ்சம் கொஞ்சமாக விஷயத்தைச் சொல்லி மாணவர்களை வெளியேற்ற ஆரம்பித்தோம். பதட்டம் இல்லாமல் இது நிகழ்ந்து கொண்டிருந்தது,
என் அறையில் எனக்கு ஒரு ஃபோன் கால் வந்தது. “ யாரு பிரின்சிபாலா? ஸ்டூடண்ட் சேஃப்டி மேல அக்கறையே கிடையாதா? எல்லா ஸ்கூல் காலேஜ் பூரா லீவ் அன்னவுன்ஸ் பண்ணிருக்காங்க .. நீங்க ஏன் அறிவிப்பு கொடுக்கல.. என் பையன் எங்கே? “ என்றது ஒரு பெண் குரல்
“ பேர் கிளாஸ் சொல்லுங்க”
“ தர்ட் பி காம் ஜெயந்த்”
நான் ஆசிரியர்களோடு தொடர்பு கொண்டு அந்தப் பையனை வரவழித்து அவன் அம்மாவோடு பேச வைத்தேன்.
“ மேடம் ஒவ்வொரு வகுப்பாக வெளியே அனுப்பி வருவதாலும் ஒங்க பையன் சீனியர் வகுப்பு என்பதாலும் இன்னும் வகுப்பிலேயே இருக்கிறான். இன்னும் சிறிது நேரத்தில் அவர்களும் வெளியே வந்துவிடுவார்கள். நீங்கள் சொன்னது போல அறிவிப்பு செய்திருந்தால் எல்லாரும் போனாங்களா கல்லூரிக்குள்ளேயே இருக்காங்களா என்றே தெரியாது போயிருக்கும். பதட்டம்தான் அதிகரித்திருக்கும் ” என்றேன்.
அன்று கல்லூரியிலிருந்து அனைவரும் போய் விட்டார்களா என்று உறுதி செய்து கொண்ட பிறகு, நான் கிளம்பினால் வாயில் பக்கம் இடுப்பளவு வெள்ளம். பிறகு காரை கல்லூரி வளாகத்தின் பின்புற வாசல் வழியாக கல்லூரி ஹாஸ்டல் தாண்டி வெளியே வந்தேன்.
காரில் வரும் போது “ கடும் மழை காரணமாக இன்று கல்லூரி விடுமுறை” என்ற போர்ட் எழுதி வைக்கவில்லையே “ என்ற நினைப்பு வந்தது. வெளியே மழை வலுத்தது. வைப்பரை மூன்றாம் ஸ்பீட்-ல் வைத்துவிட்டு கவனமாக காரைச் செலுத்தினேன்.

1967 இல் பியூசி முடித்த உடன் பி எஸ்சி சேருவதற்காக விவேகாநந்தாவில் வந்து விண்ணப்பம் கேட்டேன். கவுண்ட்டரில் இருந்தவர் ‘எந்த ஊர்’ என்றார். ‘இராணிப்பேட்டை’ என்றேன். ‘வெளியூர் ஆட்களுக்கு இங்கு இடம் கிடைக்காது. நேரத்தை வீணாக்காதே’ என்று கடுமையாகக் கூறினார். இத்தனைக்கும் நான் ஆறாம் வகுப்பிலேயே விவேகானந்தரின் ‘ஞானதீபம்’ பல வால்யூம்களைப் படித்தவன். அதையெல்லாம் அவர் கேட்டிருக்கலாம்..
LikeLike
மழையின் பரிமாணங்கள் அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்.
ஸ்ரீராம்
LikeLike