தலைப்பு மாறிய நாவல்கள்
1. தினமணி கதிரில் 1969-70-ஆம் ஆண்டுகளில் மறைந்த எழுத்தாளர் ஜெயகாந்தன் எழுதிய நாவல் ‘ சில நேரங்களில் சில மனிதர்கள்’. சாகித்ய அகாதெமி விருது பெற்ற இந்த நாவலுக்கு முதலில் வைக்கப்பட்ட பெயர் ‘காலங்கள் மாறும்’.இதுபற்றிய விளக்கம் ஜெயகாந்தன் வரிகளில்.. ‘காலங்கள் மாறும் என்ற தலைப்பில் தொடர் கதை எழுதிக் கொண்டிருக்கையில்-இடையில் ஒரு சிறுகதை எழுதினேன். அந்த சிறு கதைக்கு ‘சில நேரங்களில் சில மனிதர்கள்’ என்று பெயரிட்டேன். திடீரென தோன்றியது.ஆ ! இந்தத் தலைப்பு அந்தத் தொடர்கதைக்கு அல்லவா ஏற்ற, பொருந்திய அதற்காகவே வாய்த்த தலைப்பு என்று.மாற்றத்தின் மூலம் சிறப்பு ஏற்படுகிறது; வளர்ச்சி மிகுகிறது என்பதனாலேயே தவிர்க்க முடியாதவை ஆகின்றன; வரவேற்கவும் படுகின்றன.காலங்கள் மட்டும்தான் மாறுமா ஒரு கதையின் தலைப்பு மாறாதா? மாறும் !மாறியிருக்கிறது.
2. குமுதத்தில் .கறுப்பு, சிவப்பு, வெளுப்பு’ என்ற பெயரில் மறைந்த எழுத்தாளர் சுஜாதா ஒரு தொடரை எழுதத் தொடங்கினார்.சில அத்தியாயங்கள் வெளியான அந்த நாவல் கடும் சர்ச்சைக்குள்ளாகி நிறுத்தப்பட்டது. பின்னர் ‘ரத்தம் ஒரே நிறம்’ என்ற தலைப்பில் இந்த படைப்பு மீண்டும் வெளியானது. சிப்பாய்க் கலகம் என்று அழைக்கப் படும் முதல் இந்திய சுதந்திரப் போரின் பின்புலத்தில் எழுதப்பட்டது இந்த நாவல். மேடையை வசப்படுத்தும் வழி பிரபல மேடை பேச்சாளர் பாரதி பாஸ்கர்.
சாண்டில்யன் மிரண்ட திருப்பாவை!
எழுத்தாளர் மறைந்த சாண்டில்யன் சரித்திரக் கதைகளுக்கு இன்றைக்கும் மவுசு குறையவில்லை.’கடல் புறா’, ‘கடல் ராணி’, ‘ஜலதீபம்’, ‘யவன ராணி’ என்று சரித்திர நாவல்களை எழுதிக் குவித்துள்ள அவர் ‘மனமோகம்’ உள்ளிட்ட சமூக நாவல்களும் எழுதியுள்ளார். இப்படி எழுத்தில் கோலாச்சிய அவர் ‘ஆழத்தில் காலிட்டுக் கொண்டோம்’ என்று மிரண்ட எழுத்தும் உண்டு. அந்த அனுபவம் அவரது வரிகளில்… ‘பரந்தாமனுக்கு பூமாலை சூடிக் கொடுத்ததன்றி பாமாலையும் பாடிக் கொடுத்தவர் அன்னவயல் புதுவை ஸ்ரீ ஆண்டாள். அவர் அருளிச் செய்த திருப்பாவைத் திருநூலுக்கு பதவுரையும் விளக்கவரையும் எழுத வேண்டுமென் ஆசை நீண்டநாளாக இருந்து வந்தது.முப்பது பாட்டுகள்தானே எழுதிவிடலாம் என்று துணிவு கொண்டேன். எழுத முற்பட்ட பின்புதான் எத்தனை ஆழத்தில் காலிட்டுக் கொண்டோம் என்பது புரிந்தது.இருப்பினும் எப்படியும் எடுத்த காரியத்தை முடித்துவிட வேண்டும் என்ற உறுதியில் விடாப்பிடியாக எழுதி முடித்தேன்.’ விரைவில் மார்கழி மாதம் பிறக்க இருக்கிறது. திருப்பாவை பாடலைப் பாடியும் சாண்டில்யனின் சிறந்த விளக்கவுரையை வாசித்தும் ஆண்டாள் அருளைப் பெறுங்கள்! கள ஆய்வு எழுத்தாளர்
யார் அந்த மாயாவி?
1960-70-களில் வெகுஜன எழுத்தாளர்களில் ஒருவராக கலைமகள், கல்கி இதழ்களில் சிறுகதைகள், நாவல்கள் எழுதியவர் மாயாவி. இளைஞராய் இருந்த காலத்தில் சிறுவர்களுக்கு கூறிய மாயாஜாலக் கதைகளில் வந்த பாத்திரமான மாயாவியை புனை பெயராக்கிக் கொண்டவர். செய்தி ஒலிபரப்புத் துறையில் பம்பாய் கிளையில் 15 ஆண்டுகள் பணி புரிந்த இவரது இயற்பெயர் எஸ்.கே.ராமன்.கலைமகள் இதழில் 1969-இல் இவர் எழுதிய ‘கண்கள் உறங்காவோ’ நாவல் ஆகச் சிறந்த படைப்பு. விதவை மறுமணம் கடந்த நூற்றாண்டில் எத்தகைய கொந்தளிப்பை உருவாக்கியது என்பதை இந்நாவல் மூலம் அறிய முடியும். ‘வாடாமலர்’, ‘பனிநிலவு’, ‘மக்கள் செல்வம்’, ‘சலனம்’, ‘ஒன்றே வாழ்வு’ உள்ளிட்டவை அவரது பிற நாவல்கள். மாயாவி 150 சிறுகதைகளும் 9 நாவல்களும், பல மேடை நாடகங்களும் எழுதியுள்ளார். ஒரு நாவல் பிறந்த கதை
லட்சுமியின் 2-வது இன்னிங்ஸ்!
எழுத்தாளர் மறைந்த டாக்டர் லட்சுமி தகுந்த தண்டனையா? என்ற சிறுகதை மூலம் எழுத்துலகப் பயணத்தைத் தொடங்கினார். இயற்பெயர் திரிபுரசுந்தரி. முதல் தொடர்கதை பவானி. குடும்பப் பாங்கு, ஆபாசமின்மை, பெண்கள் பிரச்னையை மையப்படுத்தி எழுதுவது இவரது தனிச் சிறப்பு. தென்னாப்பிரிக்காவில் குடியுரிமை பெற்ற பத்திரிகையாளர் கண்ணபிரானுடன் 1955-இல் காதல் திருமணம். 22 ஆண்டுகால தென்னாப்பிரிக்க வாழ்க்கையை கணவர் மரணத்துக்குப் பின் முடித்துக் கொண்டு 1977இல் தமிழகம் திரும்பினார். எழுத்துலகில் இரண்டாவது இன்னிங்ஸ் வந்து வெற்றி பெறுவது அபூர்வம்.அந்த அரிய வாய்ப்பு லட்சுமிக்கு கிடைத்தது. முழு நேர எழுத்தாளராகி பல்வேறு முன்னணி இதழ்களில் ‘அத்தை’, ‘பூக்குழி’, ‘வானம்பாடிக்கு ஒரு விலங்கு’, ‘ஒரு காவிரியைப் போல’,’ புதைமணல்’, ‘மங்களாவின் டைரி’ என சிறந்த நாவல்களை எழுதிக் குவித்தார் லட்சுமியின் ‘ஒரு காவியைப் போல’ நாவல் 1984-ம் ஆண்டுக்கான சாகித்ய அகாதெமி விருது பெற்றது. எதிர்பாரா முடிவு!
ஸ்டெல்லா புரூஸ் 1990-களில் பிரபலமான எழுத்தாளராக வலம் வந்தவர்.இளமை கொப்பளிக்கும் எழுத்துக்குச் சொந்தக்காரர். இயற் பெயர் ராம் மோகன். காளிதாஸ் என்ற பெயரில் சிற்றிதழ்களில் கவிதைகள் எழுதியுள்ளார். அசாத்திய எழுத்தாளுமை இருந்தபோதும் எழுத வந்தபோதே இலக்கிய வணிகச் சூழலுடன் தவறான புரிதலில் சமரசம் செய்து கொண்டார். வாசகர்களின் ரசனைக்கு ஏற்ப தன்னை மாற்றிக் கொள்ள வேண்டிய நிர்பந்தம் இவரது வாழ்க்கைப் பாதையை திருப்பிப் போட்டுவிட்டது. ஆவிகள், பேய்கள் மீது நம்பிக்கை உள்ளவர் இவரது ஆரூயிர் நண்பர் கவிஞர் ஆத்மாநாம். ஸ்டெல்லா புரூஸின் ‘மாய நதிகள்’, ‘ஒருமுறைதான் பூக்கும்’, ‘அது ஒரு கனாக்காலம்’, ‘எல்லாச் சாலைகளும் குற்றங்களை நோக்கி’ உள்ளிட்ட நாவல்கள் ஆயிரக்கணக்கான வாசகர்களைப் பெற்றுத் தந்தன.ஆற்றல் இருந்த போதும் காலத்தை வெல்லும் படைப்பை இலக்கிய உலகத்துக்கு அளிக்கத் தவறிவிட்டார் என்பது இவர் மீதான விமர்சனம். வசதிமிக்க குடும்பத்தில் பிறந்தும் நிரந்தர வருவாய் தரும் வேலை இல்லாததாலும் கையிருப்பு சேமிப்பும் கரைந்து போக முதுமையில் வறுமையின் பிடியில் சிக்கினார். மனைவியின் திடீர் இழப்பு , தொடர் வறுமை தாளாது தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
யானை டாக்டர்
புனைவின் ஆற்றல் யானைகளுக்காக தன் வாழ்நாளையே அர்ப்பணித்துக் கொண்டவர் மறைந்த டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி.’யானை டாக்டர்’ என்றும் ‘டாக்டர் கே’ என்றும் அழைக்கப்படும் அவருக்கு 2000-ஆம் ஆண்டில் வனப்பேணுநர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான ‘வேணுமேனன் ஏலீஸ்’ விருது வழங்கப்பட்டது. தமிழக கோயில் யானைகளுக்கு வனப்புத்துணர்ச்சித் திட்டம் அவர் முன்வைத்து முன்னின்று நடத்தியதே. சங்க இலக்கியத்திலும் ஆர்வம் கொண்டவர்.எழுத்தாளர் ஜெயமோகனின் அறம் கதைகளில் குறிப்பிடப்படும் உண்மை ஆளுமைகளில் யானை டாக்டரும் ஒருவர். ‘நான் எழுத வருவதற்கு முன்பு ஓர் எளிய அஞ்சலிக் கட்டுரையில் ஹிந்து பத்திரிக்கையில் முடிந்து விட்டிருந்த யானை டாக்டரின் வரலாறு இன்று பள்ளிப் பாடங்களில் பல்லாயிரம் மாணவர்களால் படிக்கப்படுகிறது. ஒருதலை முறைக்கே அவர் அறிமுகமாயிருக்கிறார். ஒரு வரலாற்று ஆளுமையாக மாறிவிட்டிருக்கிறார். புனைவின் ஆற்றல் என்பதற்கான சான்று அது. பாரியைப் பாடிய கபிலனைப் போல நாயகர்களை வரலாற்றில் நிறுத்துவதும் கலைஞனின் பணியே என்று நினைக்கிறேன்’- இது எழுத்தாளர் ஜெயமோகனின் பதிவு.
நாவலாசிரியர் தாகூர்
இந்தியாவின் தேசிய கீதமான ‘ஜன கண மன’ என்ற பாடலை எழுதியவர் ரவீந்திரநாத் தாகூர்.’கீதாஞ்சலி’ கவிதைத் தொகுப்பிற்காக நோபல் பரிசும் பெற்றவர். இதெல்லாம் எங்களுக்குத் தெரியாதா என்கிறீர்களா சிறுகதைகள், நாடகங்கள், நாவல்களையும் தாகூர் எழுதியுள்ளார். ‘கோரா’ இவரது புகழ்பெற்ற புதினம். தாகூர் படைத்துள்ள பெண் குணச்சித்திரங்களில் விநோதினி பாத்திரம் உயிர்துடிப்புடையது. 52 அத்தியாயங்கள் கொண்ட ‘விநோதினி’ நாவலை த.நா.குமாராமஸ்வாமி தமிழாக்கம் செய்துள்ளார். வங்க மொழியில் ‘சோகேர் பாலி’ என்ற பெயரில் 1902-இல் முதன்முதலில் வெளியாகியது. தற்கால பாணியான நவீனங்களில் முதலாவதென்ற தனிப் பெருமை இதற்கு உண்டு. தாகூர் பல சுவைமிகு நவீனங்களை புனைந்திருப்பினும் இதில்தான் அவருக்குள்ள கதை சொல்லும் ஆற்றல் முழுமையாக வெளிப்பட்டுள்ளது என்பது விமர்சர்களின் கருத்து. ஆணாதிக்கக் கொடுமைகளைத் துணிவோடு எதிர்த்த லட்சியப் பெண்களுக்கும் தம் படைப்புகளில் உருக்கொடுத்து இன்றைக்கு சுமார்120 ஆண்டுகளுக்கு முன்பே புதுமைப் பெண்களைப் படைத்தவர் தாகூர்.’இந்தியச் சிறுகதைகளின் தந்தை’ என்றும் போற்றப்படுகிறார். ‘நஷ் நீட்’ என்ற பெயரில் வங்க மொழியில் அவர் எழுதிய நெடுங்கதை தமிழில் ‘சிதைந்த கூடு’ என்ற பெயரில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.’சாருலதா’ என்ற பெயரில் திரைப்படமாகவும் வந்துள்ளது.தாகூரின் அதீத எழுத்தாளுமை வியக்க வைக்கிறது.
