அவரது தன்னம்பிக்கை 

நான் முனைவர் திருமதி மோகனா சுகதேவ். எனக்கு தமிழ் நாவல்களின் மேல் பள்ளிப் பருவத்திலேயே அளவு கடந்த மோகம் ஆரம்பித்து விட்டது. புத்தக வாசிப்பை என் உயிராய் நினைத்தாலும் கடந்த ஐந்து ஆண்டுகளாகத்தான் முழுநேர எழுத்துப் பணியில் ஈடுபட்டுள்ளேன். இதுவரை 25 க்கும் மேல் நாவல்கள் அமேசான் கிண்டிலில் வெளியிட்டுள்ளேன்… 

சந்திரமதியின் காதல் (Tamil Edition)நிலவே நீ சாட்சி (Tamil Edition)மதுரை மாதரசி மங்கம்மாள் (Tamil Edition)என்னை மறந்ததேன் தென்றலே? (Tamil Edition)

 

அவரது சமீபத்திய புத்தக வெளியீடு 

உதயநிலா 

பேனாக்கள் பேரவை பேனர்

  எழுத்தாளர்கள் லட்சுமி, ரமணி சந்திரன் வரிசையில்……

நவம்பர் 1, 2025ம் தேதி மாலை.. ..

அண்ணா நூற்றாண்டு நூலக வளாகம், கோட்டூர்புரம்  ……..

முனைவர் மோகனா சுகதேவ் எழுதிய மதுராந்தகியின் சபதம், பூஜைக்கு வந்த மலர், நிலவே நீ சாட்சி, உதய நிலா ஆகிய நான்கு நாவல்கள் வானதி பதிப்பகம் மூலம் அச்சிடப்பட்டு இன்று வெளியிடப்பட்டன. அவற்றை   காலச்சக்கரம் நரசிம்மா வெளியிட, பேனாக்கள் பேரவை நிறுவனர் எழுத்தாளர் என். சி. மோகன்தாஸ் பெற்றுக் கொண்டார்.

முனைவர் மோகனா சுகதேவ் இந்திய தேசிய ஆராய்ச்சி கழகத்தின் (Indian Council of Medical Research) கீழ் உள்ள தேசிய காசநோய் ஆராய்ச்சி மையத்தில் சமூக விஞ்ஞானியாக 30 வருடங்களுக்கு மேல் பணியாற்றியவர். பணி ஓய்வு பெற்ற பின்பு ஓய்வு நேரத்தில் சமூக நாவல், சரித்திர நாவல், சிறுகதைகள் என்று எழுத்துப் பணியில் ஈடுபட்ட இவரின் 32 வது நாவல் “மதுராந்தகியின் சபதம்” என்ற சரித்திர நாவல்.

டி. என். ராதாகிருஷ்ணனின் வரவேற்புரையைத் தொடர்ந்து கீத்மாலா ராகவன் தொகுப்புரையுடன் விழா துவங்கியது.

எழுத்தாளர் நண்பர்கள் நிறைந்த கூட்டத்தில் மதுரந்தகியின் சபதம் என்ற சரித்திர நாவலை காலச்சக்கரம் நரசிம்மா திறனாய்வு செய்ய, மற்ற மூன்று சமூக நாவல்களைக் குறித்து “உங்கள் ரசிகன்” ரவிபிரகாஷ், குங்குமம் ஆசிரியர் கே. என். சிவராமன், எழுத்தாளர் லதா சரவணன் ஆகியோர்    உரையாற்றினார்கள்.

“உங்கள் ரசிகன்” ரவிபிரகாஷ் தான் சக்தி விகடனில் பொறுப்பாசிரியராக பணிபுரிந்த சமயத்தில்தான்  2020 ம் ஆண்டில் “வந்தியத்தேவன் வழியிலே வரலாற்றுப் பயணம்” சுற்றுலாவை விகடன் நிறுவனத்தார் ஏற்பாடு செய்தனர்; அதில் கலந்து கொண்டதால் சரித்திர நாவல்கள் எழுதும் ஆர்வம் ஏற்பட்டதாக எழுத்தாளர் மோகனா சுகதேவ் கூறுவதற்கு தானும் ஒரு காரணம் என்றுக் குறிப்பிட்டார்.

“குங்குமம் ஆசிரியர் கே. என். சிவராமன்” 42 நூலகங்களில் நடத்திய ஒரு ஆய்வு முடிவு, முந்தைய தலைமுறை எழுத்தாளர்களான லட்சுமி, ரமணி சந்திரன் நாவல்களே இளைய தலைமுறையினரால் அதிகப்படியாக விரும்பி வாசிக்கப்படுகின்றன என்று தெரிவிப்பதாகவும், அந்த வரிசையில் முனைவர் மோகனா சுகதேவ் நாவல்களும் பிரபலமாகி விடும் என்று நம்புவதாகவும் தெரிவித்தார்.

கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியன் ராஜராஜசோழனின் சதய நாளன்று “மதுராந்தகியின் சபதம்” என்ற சரித்திர நாவல் வெளியிடப்படுவது சிறப்பு என்றுப் பாராட்டி விட்டு ஒரு முக்கியமான சரித்திரக் குறிப்பையும் அளித்தார். தஞ்சாவூர் பெரிய கோயிலைக் கட்டுவதற்கு முன்பே முதலாம் ராஜராஜசோழன் திருநெல்வேலி மாவட்டம், கடனா நதிக்கரையில் திருவாலீஸ்வரத்தில்தான் தன் முதல் கோயிலைக் கட்டினான் என்ற தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் மூழ்கடித்தது.     

“மதுராந்தகியின் சபதம்” சரித்திர நாவலை விமர்சித்த காலச்சக்கரம் நரசிம்மா நம் பண்டைய வரலாற்றைத் தெரிந்துக் கொள்ள வரலாற்று ஆதாரங்களுடன் கூடிய சரித்திர நாவல்களைப் பெருமளவில் எழுத்தாளர்கள் எழுத வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அத்துடன் சரித்திர ஆசிரியர்கள் எப்படி ஆராய்ச்சி மேற்கொள்ள வேண்டும்  என்பதை சாளுக்கிய மன்னன் இரண்டாம் புலிகேசி 610 ம் ஆண்டு ஏப்ரல் 17 ம் தேதியன்று அரசனாக முடிசூடிக் கொண்டான் என்பதைத் தான் எவ்வாறு உறுதிப்படுத்தியதாக விளக்கி பலத்த கைத்தட்டலைப் பெற்றார்.  

எழுத்தாளர் லதா சரவணன் “உதயநிலா” நாவல் எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வாழ்க்கைத் துயரங்கள் அனைவரையும் நெகிழ வைக்கும் முறையில் எழுதப்பட்டிருப்பதாகக் கூறினார்.

எழுத்து, சேவை இரண்டையும் இரண்டு கண்களாகப் பாவிக்கும் பேனாக்கள் பேரவை மோகன்தாஸ் எழுத்தாளரைப் பாராட்டியதோடு,  தமது நிறுவனம் சமூக  சேவையிலும் நேரடியாக ஈடுபட்டு நல உதவிகளைச் செய்து வருவதாகக் கூறினார்.

சிறுகதையாளரும், எழுத்தாளருமான திரு. அனந்த் ரவி அவர்கள் மோகனா சுகதேவ் தனது நாவலில் கூட்டுக் குடும்ப உறவுகளை மிக அழகாகக் கையாண்டு இருப்பதை பாராட்டிப் பேசினார். எழுத்தாளர் சியாமளா கோபு அவர்கள் தேசிய காசநோய் மையத்தில் எழுத்தாளருடன் தான் பணி புரிந்த அனுபவத்தைப்  பகிர்ந்துக் கொண்டார்.    

முனைவர் மோகனா சுகதேவ் தனது ஏற்புரையில் ஆரம்பத்தில் சமூக நாவல்களை எழுதி வந்ததாகவும், 2020 ல் தான் பங்கு கொண்ட சக்தி விகடனின் “வந்தியத்தேவன் வழியிலே ஒரு வரலாற்றுப் பயணம்” சுற்றுலா சரித்திர நாவல்கள் எழுதும் ஆர்வத்தை ஏற்படுத்தியது என்றும்  கூறினார். சக்தி விகடன் ஆசிரியர் திரு. தெய்வநாயகம், கங்கை கொண்ட சோழபுரம் கோமகன், வானதி பதிப்பகத்தைச் சேர்ந்த மறைந்த சுந்தர் கிருஷ்ணன், பதிப்பாளர் வானதி ராமநாதன்,   முதுபெரும் வரலாற்று ஆசிரியர் உதயணன் மற்றும் பேனாக்கள் பேரவைக்கு நன்றி கூறினார்.  

நிகழ்ச்சியை கீத்மாலா ராகவன் தொகுத்து வழங்க, குடந்தை அனிதாவின் நன்றி உரையுடன் இந்தப் புத்தக வெளியீட்டு விழா இனிதாக நிறைவுற்றது.

நவம்பர் 1 ம் தேதி 4 புத்தகங்கள் வெளியிட்ட கையோடு  எழுத்தாளரின் பிறந்த நாளும் சேர்ந்து கொண்டதால் கேக் வெட்டி வாழ்த்துக்கள், பரிசுகள் என்று அரங்கம் அமர்க்களப்பட்டது.