ஏனீட் – புத்தகம் 5 : ஏனியஸின் தந்தையின் நினைவுநாள் 

The Trojan Women Set Fire to their Flee.jpg

ஆருயிர்க்காதலி டிடோ தன் பிரிவைப் பொறுக்கமாட்டாமல்  தீயில் உயிரை விட்டாள் என்பதை அறிந்தும் கண்ணில் கண்ணீரோடு நெஞ்சில் காதலோடு  மனதில் மட்டும் கடமை என்னும் உணர்ச்சி உந்த  ஏனியஸ்   தன் மரக்கலங்களை   சிசிலியை நோக்கிச்  செல்லுமாறு பணித்தான். கப்பல்கள் அவன் துயரத்தைப் புரிந்துகொண்டு மெதுவாக நகர்ந்தன.

கடலோரத்தில் மங்கலாகத் தோன்றிய மலைத்தொடரில், ஏனியஸ்  தனது தந்தை  இறுதியாக அடக்கம் செய்யப்பட்ட  இடத்தைக்  கண்டான்.  அவன் மனதில்  அவர் தன் மீது கொண்ட பாசம் நினைவில் வந்தது உடனே அந்த இடத்திற்குச்  சென்று அவருக்காக வழிபாடு செய்ய முடிவு செய்தான்.

அவனுடைய ஆணையை ஏற்று  மாலுமிகளும் கப்பல்களை சிசிலியின் அந்த மலைத் தொடரருக்குச் செலுத்தினார்கள்.

கப்பல்கள் கரையைத் தொட்டன. அந்தக் கடற்கரை முழுவதிலும்  புதுமையான அமைதி நிலவியது.  ஏனியஸின் தந்தை மறைந்து சரியாக ஒரு வருடம் ஆகியிருந்தது.  அதை முன்னிட்டு ஒரு பெரிய விழாவை நடத்த முடிவு செய்தான்.

அனைத்து ட்ரோஜன் வீரர்களும்  ஒரு வட்டத்தில்  கூடியபோது ஏனீயஸ் கூறினான்:
“நண்பர்களே! இன்று நம் பெருமதிப்பிற்குரிய தந்தையாரின்  ஆண்டு நினைவு நாள். அவருக்காக நாம் கடவுளர்களுக்குப்  பலி செலுத்தி, விளையாட்டுப் போட்டிகளை நடத்துவோம். கடல் பந்தயம், ஓட்டப்பந்தயம், வில்வித்தை, குத்துச்சண்டை, குதிரைப் பயிற்சி — அனைத்தும் நடக்கட்டும்! வெற்றி பெறுவோருக்குப்   பரிசுகள் வழங்க எண்ணியுள்ளேன்” என்று அறிவித்தான்.

டிரோஜன் வீரர்கள் ஆரவாரத்துடன் ஒப்புக்கொண்டனர். சிசிலிய மன்னனும்  ஏனியசின் திறமையையும்   அவனது தந்தையின் பெருமையையும் அறிந்தவன். தன் நாட்டு மக்களையும் அந்தப் போட்டிகளில் கலந்துகொள்ளுமாறு உத்தரவிட்டான்.

முதலில் கடலில் கப்பல் விடும் போட்டி ! நான்கு அழகான கப்பல்கள் தயாராயின.  ஏனியசின்  உப தலைவர்கள் நால்வர்  ஒவ்வொன்றுக்கும்  தலைவர்.  ஏனீயஸ் தன் கரத்தை உயர்த்தி, “தொடங்குங்கள்!” எனக் கூறியதும், கப்பல்கள் பாய்ந்தன.

அலைகள்  சலசலக்க, மாலுமிகள்  வேகமாகத் துடுப்புகளை இயக்கினர். அலைகள் எதிர்த்து வந்தன. அதனால் அனைவரும் பின்வாங்க வேண்டியதாயிற்று .  ஏனியஸின் நண்பன் கடைசி நிமிடத்தில் கடல் அரசன் நெப்டியூனிடம் மனதார வேண்டிக்கொண்டான். அவனது பிரார்த்தனை பலித்தது. கடல் அமைதியாகி, அவன் முதலிடம் பிடித்தான். ஏனீயஸ் வெற்றியாளர்களுக்குத்  தங்கக் கோப்பைகள், கவசங்களைப்  பரிசாக அளித்தான்.

அடுத்து நிலத்தில் ஓட்டப் போட்டி. இளைஞர்கள் வரிசையில் நின்றனர், ஏனீயஸ் துவக்கி வைக்க ஓட்டப்போட்டி துவங்கியது. ஏனியஸின் உயிர் நண்பன் நிசுஸ் முதலில் வந்துகொண்டிருந்தான். ஆனால் அவன் மூன்றாவதாக வந்த தன் நண்பன் எயூரியாலஸ் வெற்றி பெறவேண்டும் என்று விரும்பினான். அதனால் கடைசிச்   சுற்றில் வேண்டுமென்றே கீழே விழ, இரண்டாவது வந்தவன் இவன் மேல் விழுந்து அவனும் தரையில் விழ,  மூன்றாவதாக வந்த  எயூரியாலஸ் முதலில் வந்தான்!அனைவர் சிரித்தனர். ஏனீயஸ் மனம் மகிழ்ந்தான். “வெற்றி எயூரியாலஸுக்கே, ஆனால் நிசுஸுக்கும் நட்புக்காகப்   பரிசு இருக்கட்டும்,” எனக் கூறி இருவருக்கும் தங்கச் சங்கிலிகள் அளித்தான்.

பின்னர் குத்துச்சண்டைப் போட்டி துவங்கியது. இதில் சிசிலியைச் சேர்ந்த வயதான  வீரன்  போரிட வந்தான். அவனை எதிர்த்துச்   சண்டையிட டிரோஜன் வீரன்  முன்வந்தான். இருவரும்  சுழன்றும்,  அடித்தும் போராடினர்.    டிரோஜன்  வீரன் உற்சாகத்தோடு சண்டையிட்டு முன்னணியில் இருந்தான். ஆனால் சிசிலி நாட்டுக் கிழவன்  ஒரு அதிரடியான அடியில் அவனை வீழ்த்தினான். அதுமட்டுமல்லாமல் இளைஞனை அபாயகரமாகத் தாக்கவும் முயன்றான்.

ஏனீயஸ் விரைந்து வந்து  ‘இது போட்டிதான்,  போர் அல்ல’ என்று கூறி சண்டையை  நிறுத்தினான்.

அடுத்ததாக வில்வித்தை. ஒரு கப்பலின் மேற்புறம் பறவை ஒன்று கூட்டில் கட்டப்பட்டு, அதைக் குறிவைத்து அம்பு எய்தி  திறமையைக் காட்டும்படி ஏனியஸ் கேட்டுக்கொண்டான்.  மற்றவர் விட்ட அம்பு பறவை இருந்த கூட்டிற்குக் கீழேயே விழுந்தன. சிசிலி நாட்டு மன்னன்  அசீஸ்டிஸ் வில் இழுத்தவுடன், பறவையைத் தாண்டி வான் நோக்கிச்  சென்ற அம்பு திடீரெனத்  தீப்பற்றி எரிந்தது.

அனைவரும் அதிசயித்தனர். ஏனீயஸ் அதைக் கடவுளின் அடையாளம் என உணர்ந்து தன் தந்தை தன்னை  ஆசீர்வதிக்கிறார் எனச் சொன்னான்.

போட்டிகள் நடைபெற்ற அன்று மாலை  சிறுவர்கள் தங்கள் குதிரைகளுடன் வந்து, அழகான அணிவகுப்பை நிகழ்த்தினர். ஏனீயஸின் மகன் அஸ்கானியஸ் அதில் கலந்து கொள்ள,   பார்வையாளர்கள் உற்சாகத்துடன் ஆரவாரம் செய்தனர்.

ஏனியஸ் தன் தந்தைக்காக நடத்திய விழாவைப் பற்றி மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தான். ஆனால் அவனது மகிழ்ச்சியை நீடிக்க விடவில்லை ஜூனோ தேவதை.  தன் பிரியமான நாடான கார்த்தேஜ் அழிவதற்கு ஏனியஸ் காரணமாகப் போகிறானே என்ற கோபம் அவளை வதைத்தது. அதனால் அவனை அழிக்க சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்தாள்.

ஏனியஸ் மகிழ்ச்சியுடன்  இருப்பதைக் கண்டதும் அதனைக் குலைக்க ஒரு திட்டம் தீட்டினாள்.  அவள் கார்தேஜிலிருந்து வந்த ட்ரோஜன் பெண்களின் மனதில் துயரத்தை ஊட்டினாள், நாம் ஏன் ஏனியசுடன் இத்தாலி செல்ல வேண்டும். இங்கேயே சுகமாக இருக்கலாமே என்ற எண்ணத்தை விதைத்தாள். அதைச் செயலாற்ற அந்தப் பெண்களைக் கொண்டு ஏனியஸின் கப்பல்களுக்கு தீ வைக்கும்படித் தூண்டினாள்.

அவர்கள் கப்பல்களுக்கு தீ வைத்தனர்!

ஏனீயஸ் வானத்தை நோக்கிக் கும்பிட்டுத்  தன் தாயை வேண்டிக் கொண்டான். உடனே வானம் வெடித்தாற் போல மழை பெய்து தீயை  அணைந்தது.

அந்த இரவு ஏனீயஸ் விதியின் சோதனையைப் பற்றி தன்னுள் சிந்தித்தான்.  எது எப்படியிருந்தாலும் தன் நம்பிக்கை தளரப் போவதில்லை என்று தீர்மானித்துக்கொண்டான். 

அப்போது சிசிலியின் மன்னர் அசீஸ்டிஸ் முன்வந்து, ஏனியஸிடம்,  வயதானவர்கள் மற்றும் பெண்கள் இத்தாலிக்குச் செல்லும் கடுமையான கடற்பயணத்தைத் தாங்க மாட்டார்கள். அதனால் அவர்களை சிசிலியிலேயே  விட்டுவிட்டுச் செல்வதுதான் சரி என்று கூறினான். 

ஏனீயஸ் அதை ஏற்றுக் கொண்டான். சிலர் சிசிலியிலே குடியேறினர்; மற்றவர்கள், கப்பல்களை ப் பழுது பார்த்து, இத்தாலிக்கான பயணத்திற்குத் தயாரானர்.

அந்த இரவில் ஏனீயஸின் கனவில் அவனது தந்தை  தோன்றினார். அவரது முகம் தெய்வீக ஒளியுடன் பிரகாசித்தது. அவர், “மகனே,” இத்தாலி அருகிலே உள்ளது. அங்கே இறங்கி நீ உன் கடமையைச் செய்  நான் உனக்குத்  துணையிருக்கிறேன் ” என்றார். 

மறுநாள் காலை ஏனியஸ்  ” வீரர்களே! வாருங்கள்! நாம் இத்தாலிக்குச் செல்வோம்.  தந்தையாரின் ஆசி  எனக்குக் கிடைத்துவிட்டது” என்று கத்தினான். 

கப்பல்கள் பாய்ந்தன. பின்புறம் சிசிலியின் மலை நிழல் மெல்ல மறைந்தது. முன்னே — விதியின் தேசம், இத்தாலி, அவர்களை எதிர்கொண்டது.

(தொடரும்)