Writing, Author, Writer, Book, Document, Poetry, Novelist, Web Design transparent background PNG clipart | HiClipart

பரமன் கத்துக்குட்டி எழுத்தாளர். அறுபதுக்குப்  பிறகு தான் எழுத்தாளர் வாழ்க்கை ஆரம்பம். கணினியில் டைப் ஆரம்பிக்கும் முன் மனைவி பார்வதியிடம் காஃபி கேட்பார்.

ஆமாம். இதுக்கு ஒண்ணும் குறைச்சலில்ல. பேசாம ரிடையர் லைப் என்ஜாய் பண்ணாமா ? . நாள் முழுக்க இப்படி கம்ப்யூட்டர் முன்னாடி இருந்தா கண்ணு வலி, கழுத்து வலி , கால் வலி , முதுகு வலி எல்லாம் சேர்ந்திடும். டாக்டருக்கு பீஸ் குடுத்து அழணும் .’

பரமன் அதையெல்லாம் தன வாழ்க்கையின் அங்கமாக எடுத்துக் கொண்டு அலட்டிக்கொள்ளாமல் விட்டு விடுவார்.

இருநூறு, முந்நூறு ஜோக்என்ற பெயரில் ஏதோதோ எழுதி பல இதழ்களுக்கு அனுப்பியும் ஒன்றும் தேறவில்லை. பெரும்பாலும்  யாரும் பிரசுரத்திற்கு ஒப்புதலா இல்லையா என்று ரிப்ளை கூடப்  போடக் காணோம். இந்த டிஜிட்டல் உலகில் எல்லோரும் ரொம்பவும் பிசி ஆகி விட்டார்கள் போலும்,   பரமனைத் தவிர. ஓர் இதழாசிரியர் மட்டும்உங்கள் ஜோக் படித்து சிரிப்பு வரவில்லை. கண்ணீர் தான் வருகிறது. நீங்கள் அதை விரிவுப் படுத்தி ஏன் கண்ணீர் கதையாக அல்லது கண்ணீர் கட்டுரையாக எழுதக்  கூடாதுஎன்று அறிவுறுத்தினார்.

அவருடைய மைக்ரோ கதைக்கு ஓர் ஆசிரியர் பதில் அழுத்தினார் :  “உங்கள் மைக்ரோ கதை, மைக்ரோ அளவில் கூட ஒரு உணர்வை ஏற்படுத்தவில்லை. இது ஒரு நல்ல சுவரொட்டி வாசகமாக இருந்தால் நன்றாக இருக்கும்.”.

சிறுவர் இதழுக்கு ஒரு முறை அனுப்பினார் நீதிக்கதை ஒன்றை. அந்த இதழின் எடிட்டர்இது பெரியவர்களுக்கான நீதிக்கதை போல் உள்ளதுஎன்று காமெண்ட் அடித்தார்.

கண் குருடான ஒருவர் எப்படி உள்ளூர குருடான சிந்தனைக் கொண்ட நிறுவனத்தில் சேர்ந்து அந்த நிறுவன முதலாளி மகளைக் காதலித்து பின்னர் அந்த நிறுவனத்தின் கண்களைத் திறந்தார்என்பது தான் பரமன் எழுதிய கதையின் ஒரு வரி சாராம்சம். அதையே மைக்ரோ கதை, ஒரு பக்கக் கதை என்று எழுதினார். அதற்கும் யாரும் மசியவில்லை. சரியென்று, ஒரு 4 பக்கங்கள் வருகிற மாதிரி ஒன்றை எழுதி அனுப்பினார்நாள் கணக்கில் அமைதி காத்தார். ஓர்  ஆசிரியர்உங்கள் கதை கதையாக இல்லை. ரொம்பவும் நீதி போதனை கட்டுரை மாதிரி இருக்கிறதுஎன்றார்அதில் ரொம்ப தூக்கலாக நீதி நியாயம்  நேர்மை கடமை கண்ணியம் கட்டுப்பாடு போன்ற கோட்பாடுகளின் வாசனை நெடி அடிக்கிறது என்பதாக விமர்சனம் வெளிப்பட, ஏன் அதை கட்டுரை வடிவில் எழுத முற்படக் கூடாது என்று விழைந்தார். அந்தக் கதையை வேறுவிதமாக மாற்றி அமைத்து ஒரு 20 பக்க அளவில் கட்டுரை எழுதினார். ஒரு பத்திரிகை இரண்டு மாதத்திற்குப் பிறகு திருப்பி பதில் அனுப்பியது. ‘இந்த மாதிரியான கட்டுரைகளுக்கு வாசகர்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு இருப்பதில்லை. நீங்கள் இதையே ஒரு ஐந்து வாரத்திற்கான குறுநாவலாக எழுதலாம்என்று அவர்களின் விருப்பத்தை வெளிப்படுத்தியது.

அவர் வெறுத்துப் போனார். தலையை பிய்த்துக் கொண்டார். . ரௌலிங் (ஹாரி பாட்டர் புகழ்முன்பு 12 பதிப்பகங்களால் நிராகரிக்கப்பட்டது மற்றும் ஜாக் லண்டன் என்ற ஆங்கில எழுத்தாளர் தனது முதல் கதையை வெளியிடுவதற்கு முன்பு 600 நிராகரிப்புகளை எதிர் கொண்டதாக எப்போதோ எங்கேயோ இணையத்தில் படித்தாக நினைவு வந்தது

கடைசியில், ஒரு யோசனை அவர் மனதில் மின்னலடித்தது. அந்த ஒரே மேட்டரை மையமாக வைத்து மைக்ரோ கதை, ஒரு பக்க கதை, சிறு கதை (5 பக்கம்), 50 பக்கம் நெடுங்கதை, 150 பக்க நாவல் மற்றும் அதே தகவல்கள் வைத்து நீதி போதனை –  சிறு மற்றும் பெரு கட்டுரைகளாக வெளிக்கொணர்ந்தார். சிறு இதழ்கள் முதல் பிரபல இதழ்கள் வரை அனுப்பி வைத்தார். அவர்கள் இஷ்டப்பட்டதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம் என்றும் வேண்டிக்கொண்டார். திரைக்கதை ஆசிரியர்களுக்கும் அனுப்பி வைத்தார். பரமன் தினமும் நான்கைந்து முறையாவது ஈமெயில் பதில் வருமென்று காத்துக்கொண்டிருந்தார்.

ஆறு மாதங்களுக்குப் பிறகுஒரு திரைக்கதை ஆசிரியர் ஈமெயில் எழுதினார்: நீங்கள் இணைத்து அனுப்பிய நீண்ட நாவல் வடிவம் ஒரு அருமையான திரைக்கதையாக இருக்கும். அதன் கருவை மட்டும் திருட ஒப்புதல் அளிக்க வேண்டும் . “40 வயது நாயகன் 14 வயது பள்ளி மாணவியை ஓடிப்பிடித்து காதலிப்பதாக இருக்கும் . பட்டாக்கத்தி , அரிவாள் சகிதம் ரத்தக்களறியா இரண்டு  ஃபைட் , பாடல் வரிகள் எதுவும் புரியாம 4 டப்பாங்குத்து சாங்ஸ். காதல் வெற்றி பெற்றதா என்பது தான் சஸ்பென்ஸ்ஒரு தயாரிப்பாளருக்கு பரிந்துரைக்கும் எண்ணமுள்ளது. படம் நல்ல சக்கைப் போடும் வாய்ப்புள்ளது. தற்போதைய ஹீரோ உலக நாயகன் ராக்கெட் ராகேஷ் தான் மெயின் ஆக்டர் . உங்களுக்கு நல்ல சன்மானம் வழங்க நான் ரெடி”.

பரமன் ரொம்பவும் அதிர்ந்துப் போய் பின்னர் தெளிவடைந்தார். நல்லவேளை, தலையைப் பி ய்த்துக் கொள்ளவில்லை. மனைவி பார்வதியை நிதானமாக அழைத்தார்.

‘பார்வதி, நாம இனிமே டெயிலி வாக் போறோம். ஷாப்பிங் கூடப்   போலாம். கம்ப்யூட்டரை வித்திடுலாம்னு இருக்கேன்’. அவர் குரலில் சோகத்தின் தொணி தென்பட்டது.

‘இந்த ஆளுக்கு திடீர்ன்னு என்ன ஆச்சி. ?’ என்று பார்வதி குழம்பினாலும் ‘எப்படியோ எதாவது நல்லது நடந்தா சரி ‘ என்று சமாதானமடைந்தாள் .