பத்துக் கட்டளைகள்
![]()
படத்தில் ‘க்’ மிஸ்ஸிங்
ஒரு திருமணத்திற்கு சென்றிருந்தேன். பெண்ணின் தந்தை செல்வந்தர். பெரிய கல்யாண மண்டபம். அப்போது முகூர்த்த நேரம். பிரும்மண்டமான டிவியில் மேடைக் காட்சிகள் குளோசப்பில் காட்டப்பட்டுக் கொண்டிருந்தன. அனைவரின் முகத்திலும் ஏராள மகிழ்ச்சி. மணப்பெண் அணிந்திருந்த ரவிக்கை அழகில் மிளிர்ந்தது. அதன் வேலைப்பாடுகளே சுமார் 25 ஆயிரம் ரூபாய் இருக்கலாம். மணமகனின் வாட்ச் மட்டும் என்ன? சில லட்சங்கள் இருக்கும்! சுற்றி இருக்கும் பெற்றவர்கள் உற்றவர்கள் என்று எல்லோர் தோற்றமும் நகைகளும் செல்வ செழிப்பைப் பறை சாற்றிக் கொண்டிருந்தன.
பெண்ணைப் பெற்றவர், அந்த செல்வந்தர், ஆனந்தக் களிப்பில் சாதித்து விட்ட பெரு மகிழ்ச்சியில் தன் பெண்ணையும் மாப்பிள்ளையையும் கண்குளிரப் பார்த்தபடி அமர்ந்திருந்தார்.
நம் நாட்டில் பெண்ணைப் பெற்றவர்களின் அதீத இலக்கே அவளை வளர்த்து, படிக்க வைத்து, ஒருவன் கையில் பிடித்துக் கொடுக்க வேண்டும் என்பதுதான்.பணம் இருக்கிறதோ இல்லையோ எல்லாப் பெற்றோரின் கனவும் ஆசையும் இதுதான்!
இப்படி எல்லாம் முனைந்து அவளை ஒருவனிடம் கரம் பிடித்துத் தருவதோடு தன் கடமை முடிந்தது என்று அவர்கள் ஓய்ந்து உட்கார முடிகிறதா? இவர்கள் நல்லபடியாக குடித்தனம் நடத்த வேண்டுமே, சேர்ந்து வாழ வேண்டுமே, சண்டை வராமல் இருக்க வேண்டுமே என்கிற கவலையும் பயமும் தான் பெற்றோரிடையே தொடர்கிறது.
இப்போதெல்லாம் திருமணம் செய்து கொள்ளும் பெண்ணும் பிள்ளையும் தங்களுடைய கல்யாண ஏற்பாடுகளில் மிகவும் சிரத்தை எடுத்துக் கொள்கிறார்கள். அதை நடத்த பலவித சிறப்புகள், பிரம்மாண்டம், செலவுகள், தனித்தன்மை இவற்றில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆனால் எல்லாவற்றிலும் முக்கியம் இந்த தம்பதியர் நீண்ட மனம் ஒத்த வாழ்க்கை வாழ வேண்டும் என்பதே! இருவரிடையே சண்டை சச்சரவும், கோப தாபங்களும் பிரிந்து விடலாமா என்கிற எண்ணமும் வரும் போது,
பார்த்துப் பார்த்து தாங்கள் செய்து கொண்ட கல்யாண நிகழ்வுகளை அவர்கள் நினைத்துக் கொள்ள வேண்டும்.
திருமணம் செய்து கொள்ளும் பெண்ணோ பிள்ளையோ அவர்களுக்கு இப்போதெல்லாம் கவுன்சிலிங் வகுப்புகள் கூட நடக்கின்றன. பலர் அந்த மாதிரி கோச்சிங் கூட எடுத்துக் கொள்கிறார்கள்.
ஆனால் பெற்றவர்கள், அல்லது பாட்டி தாத்தாக்கள் இந்த மாதிரி பெண்ணையும் பிள்ளையோ உட்கார வைத்து திருமண பந்தத்தைப் பற்றிக் கொஞ்சம் சொல்லிக் கொடுக்கலாம் என்பது என்னுடைய அபிப்பிராயம்.
சொன்னால் யார் கேட்கிறார்கள் என்கிற மனோபாவம் கூடாது.முயன்று பார்க்க வேண்டும்.
பெரும்பாலான இளைஞர்கள் மனநிலை திருமணத்தைப் பற்றி எப்படி இருக்கிறது என்றால், “சரி வந்தால் பார்க்கலாம். இல்லாவிட்டால் இருக்கவே இருக்கிறது டைவர்ஸ்” என்கிற தைரியம் அதிகமாக இருப்பதைப் பார்க்கிறேன். இந்த மாதிரி எண்ணமே கூடாது. ஒரு கதவு திறந்து இருக்கிறது என்கிற நினைப்பு இருந்தால், உள்ளே நடப்பவைகளை சரி செய்து கொள்ளும் பக்குவம் வராது.
திருமணத்திற்கு முன்னால் மணம் புரிந்து கொள்ளும் இருவரும் இந்தப் பத்துக் கட்டளைகளைப் புரிந்து கொள்வது நலம்.
1. திறந்த மனத்தோடு பேசும் பழக்கம்.
தினமும் சில நிமிடங்கள் ஒன்றாக அமர்ந்து பேசுங்கள். மாற்றுக் கருத்து இருக்கும் போதும் எதுவும் அவமானமாகப் பேச வேண்டாம்.
2. சிறிய விஷயங்களைப் பெரிதாக்காமல் கையாளுங்கள்.
“இது நம்முடைய பிரச்சினை, நாமே தீர்ப்போம்” என்ற அணுகுமுறை உறவை பாதுகாக்கும்.
3. அவரவருக்கான தனி நேரத்தை(space) மதிக்கவும்.அதனை அவரவர்களுக்குக் கொடுக்கவும்.
மிகுந்த கட்டுப்பாடும், மிகுந்த கண்காணிப்பும் திருமணத்தை பாதிக்கும்.
4. பரஸ்பர மதிப்பும் பாராட்டும் மிக முக்கியம்.
மதிப்பு கிடைக்கிறது என்று உணரும்போது உறவு வலுவாக இருக்கும்.
5. நம்பிக்கையைக் கூட்டவும், சந்தேகத்தைக் குறைக்கவும்.
வெளிப்படையான நடப்பு நம்பிக்கையை உருவாக்கும். சந்தேகத்தைத் தவிர்க்கும்.
6. பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
ஒருவர் மட்டும் சுமை ஏற்றால் மன அழுத்தம் வளர்ந்து சண்டைகள் கூடும்.
7. கோபத்தைக் கட்டுப்படுத்துவது ஒரு கலை.
எதையும் உடனே தீர்ப்பதற்குப் பதிலாக 10 நிமிடம் கழித்து அமைதியாகப் பேசுங்கள்.
8. காதலை, அன்பைத் தொடர்ந்து வெளிப்படுத்துங்கள்.
திருமணம் ஆன பிறகும் “அன்பு” வெளிப்பாடு தொடர வேண்டும்.
9. பண விஷயங்களில் வெளிப்படைத்தன்மை தேவை.
வருவாய், செலவுகள், சேமிப்பு போன்ற எல்லாவற்றிலுமே
மறைவைத் தவிர்க்கவும்.
10. மற்றவரின் குடும்பத்தை மதியுங்கள். தலையீடுகளைத் தவிருங்கள்.
குடும்பத் தலையீடுகளைக் கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ளுங்கள்.
இந்த திருமணம் சரியே வராது மனம் முறிவு தான் தீர்வு என்கிற மாதிரியான முடிவு ஏதோ சில தம்பதியருக்கு பொருந்தலாம் பெரும்பாலும் சேர்ந்து சந்தோஷமாக வாழ என்ன செய்ய முடியும் என்பதுதான் யோசிக்க வேண்டிய விஷயம், இளைஞர்களுக்கு மட்டுமல்ல,பெரியவர்களுக்கும் தான்!!!
