நாதஸ்வர மேதை டி என் ராஜரத்தினம் பிள்ளை

Naathasura Chakravarthi...! | நாதசுர சக்கரவர்த்தி...!

நாதஸ்வரம் அல்லது நாகஸ்வரம் என்பது மங்கல வாத்தியம் என்று அழைக்கப்படுகின்றது கோவில் திருவிழா, மண நிகழ்வு, புதுமனைபுகு விழா என்று அனைத்து நிகழ்வுகளிலும் நாதஸ்வரம் தான் இடம் பிடிக்கின்றது இசை விழாவின் தொடக்க நாள் நாதஸ்வரக்  கச்சேரியில் தான் தொடங்குகிறது.  நாதஸ்வர மேதைகள் பலரைத் தந்திருக்கிறது இந்தத் தமிழகம்.  

ஈடுஇணையற்ற வயலின் மேதை திருக்கோடிக்காவல் ‘பிடில்’ கிருஷ்ணய்யர் ,கோனேரி ராஜபுரம் ஸ்ரீ வைத்தியநாதைய்யரிடம் சிக்ஷை பெற்றார். ஒன்பதாவது வயதில், நன்னிலத்தில் இவரது பாட்டுக் கச்சேரி அரங்கேறியது. பாடும்போது, தொண்டை புண்ணானதால், சன்னிதானம் இவரை நாதஸ்வரம் கற்கச் சொன்னார்.

முதலில் மடத்து நாதஸ்வரக்காரர் மர்க்கண்டேயம் பிள்ளையிடமும் பின்னர், அம்பாசமுத்திரம் கண்ணுசாமி பிள்ளையிடமும் கீரனூர் முத்துப்பிள்ளை நாயனக்காரரிடமும் வாசிப்பு முறையைக் கற்றார். ‘டி.என்.ஆர்’க்குத் கீர்த்தனைகளை வாசிக்கச் சொல்லிக் கொடுத்தவர்களுள் குறிப்பிடத்தக்கவர்,  மு.கருணாநிதி அவர்களின் தந்தையார் முத்துவேலரும் உண்டு என்ற தகவலும் இருக்கிறது.

நெல்லை மாவட்டத்தில் ஒரு கோவில் திருவிழாவில் கச்சேரி ஆரம்பிக்கும் நேரத்தில் வேட்டுச் சத்தம் வந்தவுடன் தில்லானா மோகனாம்பாள்  படம் போலவே , நாதஸ்வரம் வாசிப்பதை நிறுத்திவிட்டார். கி ரா, அழகிரிசாமி போய் வேட்டுப் போடுவதை நிறுத்திய பிறகே , தொடர்ந்து வாசித்தார்.

சங்கீதக் கலைஞர்களில் முதலில் வெளிநாட்டுக் கார் வாங்கியவர் அதேபோல மயில் புறா மான் நாய் போன்ற செல்லப் பிராணிகளை வளர்த்தார். நாதஸ்வரக் கலைஞர்களுள் முதன்முதலில் ‘கிராப்’ வைத்துக் கொண்டவர்

1954ல் இவருக்கு குடியரசுத் தலைவர் விருது கிடைத்தது. தங்கியிருந்த   ஹோட்டலுக்கு வேன் ஒன்றை அனுப்பி இருந்தார்கள். மாடியில் இருந்து பார்த்த இவர் வேன் வேண்டாம் பிளஷர் கார் வந்தால் போவேன் என்று சொல்லிவிட, அதற்கு பிறகு  கார் வந்தது.

இவர் விருது பெற்றதை காருக்குறிச்சி அருணாச்சலம் மிகப்பெரிய விழாவாக காருக்குறிச்சியில் நடத்திப் பெருமை சேர்த்து, விழா முடிந்தபின், இரண்டு  பேரும் இணைந்து மூன்று மணி நேரம் நாதஸ்வர இசையை  வழங்கினார்கள்

1947 ஆம் வருடம் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திரம் கிடைத்த அன்று டில்லியில் சுதந்திர பிரகடனத்திற்கு முன் மங்கல வாத்தியத்தால் இவரின் நாதஸ்வர இசை ஒலிக்கப்பட்டது. இவரின் ராஜா உடையை பார்த்து அங்கிருந்து நேரு இவரும் சமஸ்தான அதிபதி என்று நினைத்து விட்டார். பின்னால் இவர் நாதஸ்வரக் கலைஞர் என்று தெரிந்த போது , நான் நினைத்தது தவறு இல்லை நீங்கள் தான் சங்கீத உலகத்தின் சக்கரவர்த்தி ஆச்சே என்று  பரிசுகள் கொடுத்த அனுப்பி வைத்தார்

இவருக்கு திருமணம் ஆகி குழந்தை பிறக்கவில்லை என்றவுடன் தொடர்ந்து 5 மனைவிகள் எனத் திருமணம்..ஆனால் யாருக்குமே குழந்தை இல்லாததால் சிவாஜி என்ற பையனை தத்தெடுத்து மகனாய்க் கொண்டார்.

குடிப் பழக்கத்தினால் பல வாய்ப்புகள் போனதுடன், கல்லடி உட்பட பல அவமானங்களையும் சந்தித்து இருக்கிறார்.

கவி காளமேகம் என்ற படம் இவர கதாநாயகனாக நடித்து வெளிவந்தது ஆனால் படமும் வெற்றி பெற முடியவில்லை .இவரும்  தொடர்ந்து நடிக்கவில்லை.

ஆனால் பாடல்கள் இசைத்தட்டாக வெளி வந்தது .பிள்ளையின் குரல் வளம் சங்கிலிருந்து வெளிவரும் நாதம்போல் ஒலிக்கிறது என்று எழுத்தாளர் கு அழகிரிசாமி எழுதி உள்ளார்.

விளாத்திகுளம் சுவாமிகள் ராஜரத்தினம் பிள்ளை காருக்குறிச்சி அருணாச்சலம் புல்லாங்குழல் மாலி  இவர்களைப் பற்றி கி ரா அவர்கள்  நிறையக் கட்டுரைகள் எழுதி இருக்கிறார்.

நடிகர் திலகம் சிவாஜிகணேசன்  அவர்கள் டி என் ஆர் மீது மிகுந்த மரியாதை வைத்திருந்தார்.  தில்லானா மோகனாம்பாள் திரைப்படத்தில் வரும் சண்முகசுந்தரம் என்ற நாதஸ்வரர்  பாத்திரத்தில் நடிக்கும் போது அவரை மனதில் வைத்து தான் நடித்தேன் என்று கூறினார். அதேபோல நடிகர் திலகத்தின் நடிப்பை பாராட்டி இருந்த டி என் ஆர் அவர்கள்  ராணி லலிதாங்கி என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது நேரில் சென்று பாராட்டினார்.

தில்லானா  மோகனாம்பாள் படத்தில் சிவாஜி கணேசன் , ஓரக்கண்ணால் தவில் வாசிக்கும் பாலையாவிடம் சைகை கூறுவது, வில் வண்டியில் இருந்து நாயகி இறங்கி வருவதை சாலைகளில் சங்கீத மொழியிலேயே பேசுவது இவையெல்லாம் ராஜரத்தினம் கச்சேரிகளில் நடந்த தாக்கங்கள் என்பார்கள்.

இப்படி அபாரமாக நாதஸ்வரம் வாசிக்கிறவர்கள் வாசிக்கும் பொழுதே கண்களால் அற்புத விஷயங்களை பரிமாறிக் கொள்வார்கள் .பக்க வாத்தியக்காரர்கள் அனைவருக்கும் இந்த நாயன மொழி புரியும்.  தாமதமாக வருவது யார்,  விமர்சகர்கள் யார் என்றெல்லாம் இந்த கண் ஜாடையில் தெரியும்.

1954 ஆம் ஆண்டு, பணம் மற்றும் வாய்ப்புக்களை இழந்தபோது,  சென்னையில் தாசப்ரகாஷ் ஹோட்டல் உரிமையாளர் சீதாராமராவ் அவருக்கு இலவசமாக தங்கிக் கொள்ள வசதிகள் செய்து கொடுத்தார். அப்பொழுது ஒரு நாள் பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர் படேல் குலாம் அலிகான்  அதே ஓட்டலில் தங்கி இருந்தார் ராஜரத்தினம் பிள்ளையை சந்திக்கும் ஆசையில் அவர் சங்கீத விற்பன்னர் ஜிஎன்பி யை அழைத்துக் கொண்டு டிஎன்ஆர் அறைக்கு சென்றாராம். நலம் விசாரிப்புகள் முடிந்தவுடன் கான்சாகிப்பைப் பாடச் சொல்ல அவர் மாண்டு ராகத்தில் அரை மணி  பாடி முடித்தவுடன்,  பிள்ளை அவர்கள் அதே ராகத்தை நாதஸ்வரத்தில் இரண்டு மணி நேரம் வாசிக்க கான்சாகிப் மற்றும் ஜி என் பி இருவரும்  அசந்து போனார்களாம்.

டி என் ஆர் க்கு தாமும் கே பி சுந்தராம்பாள் போல மேல்சபை உறுப்பினராக வேண்டும் என்ற ஆசை. ராஜாஜியைச் சந்தித்து தமது விருப்பத்தை தெரிவித்திருக்கிறார். அவரும் இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்டு எம்எல்சி ஆக்கவிருந்த நேரத்தில், டிஎன்ஆர்  மறைந்து விட்டார்.

மைசூர் தசராவுக்கு மன்னர் யானை மீது பவனி வருவார் நாதஸ்வர காரர்கள் நின்று கொண்டு நடந்து வாசித்து தர வேண்டும் இதற்காகவே பலமுறை அளித்தும் மைசூர் செல்லாமல் இருந்தார் பின் வலிந்து அழைக்கப்பட்ட போது ராஜாவை போல மடிப்பு தலைப்பாகை,  ஷெர்வாணி உடை என  மகாராஜாவுக்கு இணையாக மேடையில் அமர்ந்து தர்பாரை  வாசித்தார்

சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரி ஒரு முறை பேசும் போது பிள்ளையின் நாதஸ்வர திறமையை பாராட்டியதுடன் இந்த வாத்தியத்தை ஒரு சில ஒரு சாரார் மட்டுமே வாசிக்கிறார்கள் என்பது சரியல்ல இந்த வாத்தியம் எல்லா வகுப்பினருக்கும் கற்றுத் தர வேண்டும் என்றும் இந்த ராஜரத்தினம்  போல் பல ராஜரத்தினங்கள் தோன்ற வேண்டும் என்பது என் ஆசை என்றாராம்.

தமிழ் திரை உலகில் முதலில் வந்த  நாதஸ்வரக் கலைஞர் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இவர் நடித்த படம் இதை தொடர்ந்து தான் திருவெண்காடு சுப்பிரமணிய பிள்ளை ,கள்ளக்குறிச்சி அருணாச்சலம், இஞ்சிகுடி பிச்சை கண்ணு, எம் பி என் சேதுராமன் பொன்னுச்சாமி, திருவிழா ஜெய்சங்கர் மற்றும் திருமெய் ஞானம் நடராஜர் சுந்தரம் பிள்ளை போன்றவர்களின் நாதஸ்வரம் திரையில் வெளிவந்தது.

எட்டயபுரம் அரண்மனையில் கச்சேரிக்குச் சென்றபோது, தன் மாமாவும் ஸ்வீகார தகப்பனாருமாகிய நடேச நாதஸ்வரக்காரரின் ரிக்கார்டு பிளேட்டைக் கேட்க நேர்ந்தது. அதனைக் கேட்டவுடன் மனமும் உடலும் ஆனந்த பரவசமானது. அந்த ராகத்தை அழகாய், இனிமையாய், கொஞ்சிக் குலாவுவது போல் இதுவரை யாரும் வாசித்தது  கிடையாது. அந்த ராகம் தோடி! பின்னர் இவர் வாசித்த ராகங்களில் வித்தியாசமாக முதன்மை பெற்றது இந்தத் தோடி!   

என் அப்பாவிற்கு மிகவும் பிடித்த கலைஞர்களில் ஒருவர் திரு ராஜரத்தினம்பிள்ளை. ஶ்ரீவைகுண்டம் கோயில் பிரமோற்ஸவத்தில், காருகுறிச்சி அருணாச்சலத்துடன் நான்கு வீதிகளையும்  சுற்றிவந்து அவர் தந்த  6  மணி நேர நாதசுவர விருந்தை ரசித்து இருக்கிறேன் என்று கூறி இருக்கிறார்.

நாதஸ்வரத்துக்குத் ‘தம்புரா’வைச் சுருதியாகக் கொண்டு, மிருதங்கம், வீணை, கஞ்சிரா இவற்றுடன் புதுமையாகக் கச்சேரிகள் செய்தார்.

ஏவிஎம் செட்டியார் அவர்கள், பல மணி நேரம் வாசிக்கும் புகழ்பெற்ற ‘தோடி’ ராகத்தைப் பதிவு செய்து ஆறரை நிமிடத்தில் இசைக்கும் ரிக்கார்டு பிளேட்டை வெளியிட்டார். அது உலகெங்கும் விற்றுச் சாதனை படைத்தது. இவர் மதிப்பும் ‘ரேட்’டும் உயர்ந்தது!

1955 ஜனவரி 21இல் ஆவடியில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் சோஷலிசப் பிரகடன மாநாட்டின்போது, முதல் நாளன்று காங்கிரஸ் தலைவரை வரவேற்க நடந்த ஊர்வலத்தின் முன்னே, நடந்தவாறு நாதஸ்வரம் வாசித்துச் சென்றவர்களுள் குறிப்பிடத்தக்கவராகத் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை இருந்தார்.

கவிஞர் கண்ணதாசன் இரங்கற்பா எழுதினார். தமது நண்பரின் மறைவினால் கலங்கிப் போயிருந்த கலைவாணர், கண்ணதாசனின் இந்தக் கையறுநிலைக் கவிதையைப் படித்துவிட்டுக் கதறினார். கவிஞரைத் தொலைபேசியில் அழைத்தார்.

‘கண்ணதாசா! நான் செத்துப்போனா, என்னைப் பற்றியும் இப்படி எழுதி வைப்பாயா?’ என்று கேட்டார். அந்தக் கவிதை –

செவிதனில் ஓடி எங்கள் சிந்தையில் ஓடி

இந்த புவியெல்லாம் ஓடி நின்பால் பொங்கிய தோடி

வேறு இங்கே எவரிடம் போகும் ஐய !

இனி அதைக் காப்பார் யாவர்?

என்றும்,

சின்னதோர் குழலுக்குள்

ஜகத்தையே உருட்டும் பாடம்

மன்னவன் இவனே – நாத மண்டலத்தரசு

என்றும் பாடினான்.

தான்சேன் என்ற இசைக் கலைஞரைப் பற்றி வரலாற்று ஆசிரியன் அபுல் பாஸில் எழுதும் போது இவனுக்கு முன்னேயும் சரி, இனி வரப்போகும் சரி, தான்சேனுக்கு  ஈடாக மாட்டார்கள் என்ற கூற்று டிஎன்ஆருக்கும் பொருந்தும்

நாதஸ்வர சக்ரவர்த்தி ராஜரத்தினம் பிள்ளை மறைந்தாலும். தமிழ், தமிழிசை உள்ளவரை அவர் நாதஸ்வரம் ஒலித்துக் கொண்டே இருக்கும்.