கோரி முகம்மது

பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை? - BBC News தமிழ்

 

முகமது கோரி... ராஜ்புத்திர வீரன் பிருத்விராஜ் முகமது கோரியை 1191ம் ஆண்டு டெல்லி அருகே நடந்த யுத்தத்தில் ராஜ்புத்திரர்களின் வீரர்களின் ...சரித்திரப்பாடத்தில், கஜினிக்கு அப்புறம் யார் என்றால், கோரஸாக எல்லோரும் சொல்வது ‘கோரி முகம்மது’. நாமும் அதைத்தான் இன்று பார்க்கப் போகிறோம்.

கோர் நாடு இன்றைய மத்திய ஆப்கானிஸ்தானின் ஒரு பகுதி. கோரி முகம்மது, 1173 முதல் 1206 வரை ஆட்சி புரிந்தான். இந்தக் காலக்கட்டத்தில் தமிழ்நாட்டில், சோழர்களின் கடைசிப்பேரரசன் மூன்றாம் குலோத்துங்கன் ஆட்சி கொடி கட்டிப் பறந்துகொண்டிருந்தது.

கோரியில், முகம்மதுவும், அவன் அண்ணன் கியாசுதீன் இருவரும் சேர்ந்து இரட்டை ஆட்சி நடத்தினர். 1175இல் கோரி முகம்மது, சிந்து ஆற்றைக் கடந்து கோமல் கணவாய் வழியாகப் படையெடுத்து  முல்தான் மற்றும் ஊச் நகரங்களைக் கைப்பற்றினான். பிறகு 1178இல் தற்போதைய குஜராத்தை அடைந்தான். கோரியின் படைகள் தெற்கு ஆரவல்லி மலைத்தொடரின் அபு மலையின் அடிவாரத்தில், பதானின் முலராஜா சோலாங்கியால் தோற்கடிக்கப்பட்டன. இதனால் முகம்மது எதிர்காலத்தில் இந்தியாவுக்கு வரும் வழியை மாற்ற வேண்டியதாயிற்று. 1186ஆம் ஆண்டில் பெரும்பாலான பஞ்சாப் பகுதியுடன் மேல் சிந்து சமவெளியை கைப்பற்றினான். வட இந்தியாவுக்கான பாரம்பரிய வழியான கைபர் கணவாய் வழியாக நுழைந்தான்.

இந்திய சமவெளிகளுக்குள்ளான ஊடுருவல்கள் மற்றும் சிந்து-கங்கைச் சமவெளியில் இருந்த செல்வச்செழிப்பு மிக்க இந்து கோயில்களை சூறையாடியதன் மூலம் பெரும் செல்வம் கிடைத்தது. அன்று அவனிடம் 60,000 கிலோ எடையுள்ள தங்க நகைகள் உள்ளிட்ட செல்வங்கள் இருந்தனவாம்.

காத்து வாக்கில் ஒரு குட்டிக் காதல் கதை:

பிருத்திவிராஜ் – தில்லி பேரரசின் ராஜபுத்திர மன்னன். சம்யுக்தா -கன்னோசி மன்னன் ஜெயச்சந்திரனின் மகள். பிருதிவிராஜனும் சம்யுக்தாவும் ஒருவரையொருவர் பார்க்காமலேயே, ஓவியங்கள் மூலமாகக் காதல் கொண்டனர். பிருதிவிராஜனின் வளர்ந்து வரும் புகழும், வலிமையும் ஜெயச்சந்திரனுக்குப் பிடிக்கவில்லை. ஜெயச்சந்திரன், பிருதிவிராஜனை வெறுத்ததால், தன் மகள் சம்யுக்தைக்கு சுயம்வரம் ஏற்பாடு செய்தபோது, வேண்டுமென்றே பிருதிவிராஜனை அழைக்கவில்லை. பிருதிவிராஜனை அவமதிக்கும் விதமாக மண்டபத்தின் வாயிலில் அவன் சிலையைக் காவலாளி போல் வைத்தான். சம்யுக்தா, சுயம்வர மண்டபத்திற்கு வந்தபோது, மற்ற மன்னர்களை நிராகரித்துவிட்டு, வாயிலில் வைக்கப்பட்டிருந்த பிருதிவிராஜனின் சிலைக்கு மாலை அணிவித்தாள். அப்போது, மறைந்திருந்த பிருதிவிராஜன் அவளைத் தன் குதிரையில் ஏற்றிக்கொண்டு அங்கிருந்து கடத்திச் சென்று திருமணம் செய்து கொண்டான்.

நிற்க.

1190இல் சிந்து சமவெளியிலிருந்த கோரியின் படைகள் கிழக்கு பஞ்சாப் பகுதிக்குள் ஊடுருவல்களை நடத்த தொடங்கினர். பிருதிவிராஜனின் இராச்சியத்தின் வடமேற்கு எல்லையில் தற்போதைய பஞ்சாப் மாநிலத்தின் பட்டிண்டா கோட்டையை கைப்பற்றினர். தற்போதைய அரியானாவின் தானேசரிலிருந்து 22 கிலோ மீட்டர் தொலைவிலிருக்கும் ‘தரைன்’ என்ற இடத்தில் இரு படைகளும் சந்தித்தன. பிருதிவிராஜன் மூன்று புறமும் இருந்து முகம்மதுவின் படைகளைத் தாக்கினான். முகம்மது போரில் காயமடைந்தான். அவன் படைகள் பின்வாங்கின. பிருத்திவிராஜ் படைகள் வெற்றி பெற்றது.

யுத்த களத்தில் காயமடைந்த முகம்மது, சுய நினைவின்றி விழுந்தான். அவன் இறந்ததாக எண்ணிய அவரது படைகள் கலைந்து பின் வாங்கின. அவனது படை வீரர்கள் இரவில் யுத்த களத்தில் முகம்மதுவின் உடலை தேடினர். காயமடைந்திருந்த முகம்மதுவை உயிருடன் கண்ட படைவீரர்கள், யுத்தகளத்தில் இருந்து காசுனிக்கு அவனைத் தூக்கி சென்றனர்.

மெல்ல, முகம்மது, ஒரு வலிமையான படையைச் சேர்த்தான். தரைன் தோல்விக்கு பிறகு, தான் தோல்வி அடைந்த அவமானத்திற்கு பழி தீர்க்கும் வரை யுத்தத்தில் அடைந்த காயத்தை ஆற்ற மாட்டேன் என்று சபதம் எடுத்தான். கோரிநாட்டு அரசமரபின் ஒரு முக்கியமான ஈரானிய தளபதியான உசைன் கர்மில் காசுனியிலிருந்து அழைக்கப்பட்டான். பிற அனுபவம் வாய்ந்த போர் பிரபுக்களான முகல்பா, கர்பக் மற்றும் இல்லா போன்றோரும் ஒரு பெரிய படையுடன் அழைக்கப்பட்டனர். 1192இல் யுத்தத்திற்கு முழுவதும் கவசங்களை உடைய லட்சம் வீரர்களை முகம்மது கொண்டு வந்தான். அதே இடம் – ‘தரைன்’. போர் மூண்டது.

பிருதிவிராஜ் தன்னுடைய இராசபுத்திரக் கூட்டாளிகள் இன்னும் வராமல் இருந்த காரணத்தால் யுத்தத்தை தாமதப்படுத்த எண்ணினான். ஆனால், விடியும் முன்னரே கோரியின் படைகள் அவன் படைகளைத் தாக்கின. திடீர் தாக்குதலால், இராசபுத்திரப் படைகள் தோல்வி அடைந்தது. பிருத்திவிராஜ் கைது செய்யப்பட்டு மரண தண்டனைக்கு உட்படுத்தப்பட்டான். இந்தியாவின் நடுக்கால வரலாற்றில் ஒரு திருப்பு முனையாக கோரி அடைந்த வெற்றி அமைந்தது. இந்த வெற்றிக்குப் பிறகு கோரியின் படைகள் அஜ்மீரை சூறையாடினர். பிறகு கோரி முகம்மது, அதிகப்படியான திறையை செலுத்த வேண்டும் என்ற நிபந்தனையுடன் பிருத்திவிராஜின் மகனான சிறுவன் நான்காம் கோவிந்தராஜனை கைப்பாவை ஆட்சியாளனாக பதவியில் அமர்த்தினான். இதற்குப் பிறகு இந்தியாவில் தனது இருப்பை கோரி குறைத்துக் கொண்டான்.

இப்பகுதியில் மேற்கொண்ட படையெடுப்புகளைத் தனது குத்புதீன் போன்ற அடிமைத் தளபதிகளின் கீழ் கொடுத்தான். அவர்கள் கிழக்கே வங்காளம் வரை கோரி அரசமரபின் செல்வாக்கை விரிவாக்கினர்.

கங்கை சமவெளியை நோக்கி மேற்கொண்டு விரிவாக்கம் செய்வதற்காக முகம்மது தானே இந்தியாவிற்கு திரும்பி வந்தான். இவ்வாறாக, 1194இல் 50,000 குதிரை வீரர்களைக் கொண்ட ஒரு படையுடன், யமுனை ஆற்றைக் கடந்தான். அங்கு சந்தவார் போரில் இராசபுத்திர மன்னன் ஜெயச்சந்திரனின் படைகளை எதிர்கொண்டான். கோரியின் படைகள் வெற்றியடைந்தது. யுத்தத்தில் ஜெயச்சந்திரன் கொல்லப்பட்டான். ஜெயச்சந்திரனின் பெரும்பாலான படைகள் படுகொலை செய்யப்பட்டது. அரசு கருவூலத்தை அங்கு இவர்கள் சூறையாடினர். பிறகு வாரணாசி சூறையாடப்பட்டது. அதன் கோயில்கள் அழிக்கப்பட்டன. கன்னோசி 1198இல் இணைத்துக்கொள்ளப்பட்டது. புத்த நகரமான சாரநாத்தும் சூறையாடப்பட்டது.

13 மார்ச் 1203 அன்று ஹெறாத்தில் மாதக் கணக்கிலான உடல் நலக்குறைவிற்கு பிறகு அண்ணன் கியாதல்தீன் முகம்மது இறந்தான். அண்ணனின் இறப்பிற்குப் பிறகு கோரி முகம்மது, பிரோசுகோக்கின் அரியணையிலும் ஏறினான். ஓர் ஆண்டில் குவாரசமியப் பேரரசுடனான சண்டையில் குவாரசமியப் பேரரசுக்கு உதவி செய்ய வந்த காரா கிதையின் படைகளுக்கு எதிராக அந்த யுத்தத்தில் கடுமையான தோல்வியைச் சந்தித்தான். தனது கடைசிப் படையெடுப்பின் போது கோகர் புரட்சியை மிருகத்தனமாக ஒடுக்கினான்.

தற்போதைய பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தின் ஜீலம் நகருக்கு அருகில் சோகவா உள்ளது. கோகர்களை தோற்கடித்த பிறகு தனது தலை நகரம் காசுனிக்கு திரும்பும் வழியில் முகம்மதுவின் வண்டியானது சோகவாவுக்கு அருகில் தாமியக் என்ற இடத்தில் ஓய்வுக்காக நிறுத்தப்பட்டது. மாலை வழிபாட்டில் ஈடுபட்டிருந்த போது, எதிரி இஸ்மாயிலி பிரிவைச் சேர்ந்த அரசியல் கொலை செய்பவர்களின் ஒரு குழு “கத்தியால்” குத்திக் கொன்றது. முகம்மதுவின் சவப்பெட்டியானது தமியக்கில் இருந்து காசுனிக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இவனது மகளின் கல்லறைக்கு அருகில் காசுனியில் புதைக்கப்பட்டான்.

கோரியின் அடிமைத் தளபதி குத்புத்தீன் ஐபக்கால் நிறுவப்பட்ட அடிமை அரசு இந்தியாவில் மேம்பாட்டுடன் நடைபெற்றது. இந்தியத் துணைக் கண்டத்தில் முஸ்லிம் ஆட்சிக்கு அடித்தளம் அமைத்த கோரிக்குப் பின்னும் கிட்டத்தட்ட 500 ஆண்டுகளுக்கு முஸ்லிம் அரசமரபுகளின் ஆட்சி தொடர்ந்தது.

சரித்திரம் சொல்லும் கதைகளும் தொடர்கின்றது.