சித்தர் என்பவர் யார்? - 18 சித்தர்களின் அருளை பெற எளிய மந்திரம் இதோ!

மாபெரும் செல்வத்துக்கு அதிபதியாக இருக்கும் ஒருவன் பரம ஏழையாக தன் வாழ்நாளை கழித்துக் கொண்டிருக்கிறான் என்று சொன்னால் நம்ப முடிவதில்லை.ஆனால் அதுதான் உண்மை. தமிழ்ச் சமுதாயத்தின் இன்றைய நிலை இதுதான். பொதுவாக தமிழ் இலக்கியங்களில், குறிப்பாக தமிழ் சித்தர் இலக்கியங்களில், அன்றாட வாழ்வியலுக்குத் தேவையான நன்னெறிக்  கருத்துக்கள் குவிந்து கிடக்கின்றன.  வாழ்க்கையை சீரிய முறையில் அமைத்துக் கொள்ள உதவும் அரிய கருத்துக்கள் சித்தர்கள் பாடல்களில் பொதிந்து கிடக்கின்றன. தன் வீட்டு நிலவறையில் இருக்கின்ற தங்கப் புதையலை அறியாமல் அன்றாடம் காய்ச்சியாக, பசி,  பட்டினியோடு வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு வறிய குடும்பத்தைப் போல், நமது முன்னோர் விட்டுச் சென்ற வாழ்வியல் கோட்பாடுகளை அறிந்து கொள்ளாமல் நிம்மதியற்ற வாழ்க்கை சூழலில் தவித்துக் கொண்டிருக்கிறோம். இன்றைய சமுதாய இழிநிலைக்கு இந்த அறியாமையே காரணம் என்பதை நாம் உணர வேண்டும்.

சித்தர்கள் பாடல்கள் என்றாலே அவை சாதாரண மக்களுக்கானது அல்ல. கடினமான தத்துவங்களையும் கோட்பாடுகளையும் எடுத்து இயம்புவை என்னும் தவறான கருத்து ஆழமாக பதிந்திருக்கிறது. சித்தர்கள், பித்தர்களைப் போன்றவர்கள். சராசரி வாழ்வியல் நடைமுறையில் அவர்களுக்கு இடமில்லை என்று எண்ணுவோரும் உண்டு. இது மிகவும் தவறு.  புலன்களை அடக்கி மன ஒருமைப்பாட்டுடன் மூச்சு நிலை அறிந்து, உடம்பை ஆலயமாக மாற்றும் ஞானம் பெற்றவர்கள் சித்தர்கள். சாகாக்கலைஅறிந்தவர்கள். பசிப்பிணியையும் உடற்பிணியையும் போக்குவதையே மக்கள் தொண்டாக எண்ணி செயல்படுபவர்கள்.

“யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்” எனும் குறிக்கோள் உடையவர்கள். அவர்கள் பல்துறை வித்தகர்கள்.  உடல் கூறு தத்துவம், மருத்துவம், ஜோதிடம், ரசவாதம், வானியல் மற்றும் பல துறைகளில் அறிவும் ஆற்றலும் பெற்றிருந்தனர். புறவழிபாடுகளையும் சமய சடங்குகளையும் புறந்தள்ளினர். அட்டமா சித்திகளைக் கொண்டிருந்தாலும் எளியரோடு எளியராய் இருந்தனர். “ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்” என்பதை மாறாத கொள்கையாகக் கொண்டிருந்தனர்.  சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் பொய்மைகளை விரட்டி மெய்ம்மையை நிலை நிறுத்தும் அறிவு ஜீவிகள்.

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே தமிழ்நாட்டில் பல சித்தர்கள் தோன்றி தங்கள் உடம்பை பரிசோதனை கூடமாக கொண்டு பல அரிய கருத்துக்களை தங்கள் பாடல்களில் பதிந்து, பொதிந்து சென்றுள்ளனர். அவர்களின் பாடல்கள் அமைப்பு முறையிலும் செறிவிலும் பல்வேறு மாறுபட்ட தன்மைகளைக் காண முடிகிறது.ஆனால், அவை யாவற்றிலும் ஊடாடும் அடிநாதம் ஒன்றுதான்.  தமிழ்நாடு, இந்தியா முழுவதும் மட்டுமின்றி உலகம் பூராவும் சித்தர்கள் செயல்பாடு இருந்திருக்கிறது; இருக்கிறது. உலகம் முழுவதும் சித்தர்களின் கோட்பாடுகள், கருத்துக்கள் ஒரே நிலையில் செயலாற்றி வந்துள்ளதாக சித்தர் இலக்கியத்தை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்த தமிழறிஞர் மீ. பா.  சோமசுந்தரம் அவர்கள் ஆய்ந்து தெளிந்து உள்ளார்.

தொல்காப்பியரின் வாக்கு:  “நிறைமொழி மாந்தர் ஆணையின் கிளந்த மறைமொழி தானே மந்திரம் என்ப”.               “மறுவில் செய்தி மூவகைக் காலமும் நெறியின் ஆற்றிய அறிவன்”.  நச்சினார்க்கினியரின்  உரைக் கூற்றுப்படி சித்தர்கள், நிறைமொழி மாந்தர் என்றும்,அறிவன் என்றும் அறியப்படுகிறார்கள். அரூபமாகத் திகழும் இறைவன் அப்பழுக்கற்ற பூரண அறிவின் ரூபமாகவே அறியப்படுகிறான்.  இறைவனை முழுமையாக உணர்ந்து, அறிந்து,  கலந்து நிற்பவர்களை அறிவன் என்று அழைப்பது முற்றிலும் பொருத்தமே. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பிருந்தே சித்தர்கள் வாழ்ந்துள்ளனர் என்பதற்கு தக்க சான்றுகள் உள்ளன. அவர்கள் ஒரு மலைத்தொடரைப் போல நீண்டு, நெடிது வந்த மரபாகக் காணப்படுகிறார்கள், .

தமிழ் சித்தர்கள் மரபில் “பதினெண் சித்தர்கள்”என்னும் 18 சித்தர்கள் முக்கிய சித்தர்களாக அறியப்படுகிறார்கள் பதினெண் சித்தர்கள் என்பது ஒரு மரபு வழி சொற்றொடர் ஆகும்.  நந்தீசர், அகத்தியர்,  திருமூலர், புண்ணாக்கீசர், புலத்தியர்,பூனைக்கண்ணர்,போகர்,
கருவூரார், கொங்கணவர், காலாங்கிநாதர், பாம்பாட்டிச் சித்தர் தேரையர், குதம்பைச் சித்தர், இடைக்காடர், சட்டைமுனி, அழுகண் சித்தர், அகப்பேய்ச் சித்தர், தன்வந்திரி முதலியோர். சில நூல்களில் இந்த 18 சித்தர்கள் வரிசையில் சிறு மாற்றம் காணப்படுகிறது. எனவே, “பதினெண் சித்தர்” என்பது மரபுச் சொற்றொடர் என்பது தெளிவு. 

தொன்மையான காலந்தொட்டு, பல நூறு சித்தர்கள் வந்துள்ளனர். இன்று கூட, நம்மிடைய வாழும் சித்தர்கள் உண்டு. சிலர் அறியப்பட்டுள்ளனர்; பலர் அறியப்படாமல், மறைந்து தொண்டாற்றிக் கொண்டுள்ளனர். தமிழ் சித்தர்களின் பெருமை சொல்லி மாளாது. அணுவுக்குள் அணுவாய் அப்பாலுக்கு அப்பாலாகயுள்ள பரம்பொருளை உணர்ந்து, அறிந்த அறிவர்கள் தங்களுக்குள்ளே உற்று நோக்கி, இறை ஒளியை உணர்ந்து தெளிந்தவர்கள். தெளிந்ததை  மனித குல மேம்பாட்டிற்கு வேண்டி, அரிய கருத்துக்களை தங்கள் பாடல்கள் வாயிலாக குறித்து சென்றுள்ளார்கள்.

மெய்ஞ்ஞானத்தில் திளைத்து, விஞ்ஞான கருத்துக்களை எடுத்து இயம்பியுள்ளார்கள். நமது பருஉடல் அதாவது தூல உடலைச் சுற்றி தொம்பைக் கோடு போன்ற ஒளியுடல் அதாவது சூட்சும உடல் இருக்கிறது என்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்னரே சித்தர்கள் சொல்லியுள்ளனர். நவீன விஞ்ஞானத்தில், தற்போது இது கண்டறியப்பட்டு இதனை Etheric Body அல்லது Etheric Double என்று அழைக்கப்படுகிறது. இத்துறையில் மேலும் ஆராய்ச்சிகள் தொடரப்படுகிறது. ஆராய்ச்சிகளின் முடிவில் பருஉடலில் நோய் வருவதற்கு முன்னரே அறியப்பட்டு நோய் வராமல் தவிர்க்கப்படும்  என்று எதிர்பார்க்கப்படுகிறது.

நமது மூளையின் நடுப்பகுதியில் அமைந்துள்ள கூம்புச்சுரப்பி அதாவது Pineal Glandன் ஆற்றலும் மூளையின் அடிப்பகுதியில் அமைந்துள்ள கபச்சுரப்பி அதாவது Pituitary Glandன் ஆற்றலும் பொருந்தும் பொழுது நீல ஒளி தோன்றுகிறது.இந்த நீல ஒளியின் பரிணாமத்தோடு ஒளி உடம்பாகிய ஈத்ரிக் டபுள் இயங்குகிறது என்று அறிவியல் அறிஞர்கள் இன்று கண்டுபிடித்துள்ளனர்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்பாக ஔவை பிராட்டி,  “நெஞ்சில் குடிகொண்ட நீல மேனியும்”  என்று தனது விநாயகர் அகவல் நூலில் விவரித்துள்ளார்.

 சித்தர்கள் தன்னிகரற்ற ஆன்மீக அருளாளர்கள். அவர்கள் முழுமையான துறவறத்தில் நின்றவர்கள் இல்லை. மாறாக, பல சித்தர்கள், அகத்தியர், காகபுசுண்டர் போன்றவர்கள் இல்லறத்திலிருந்து கொண்டு தங்கள் பணிகளை தொடர்ந்து வந்தனர்.  போகர், மச்சமுனி போன்ற சித்தர்களும் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தது தெரிய வருகிறது.

இந்து மதத்தில் சிவன்- பார்வதி, மகாவிஷ்ணு-மகாலட்சுமி பிரம்மா-சரஸ்வதி, இவர்களை தம்பதி சமேதகர்களாகத் தான் வழிபடுகிறார்கள்.  கோரக்கர் சித்தர் தனது “சந்திரரேகை 200″ என்னும் நூலில் இல்லறம் தான் இகபரத்தின் மோட்சவீடே” என்று வலியுறுத்துகிறார். வள்ளுவர் காட்டிய இல்லறமே நல்லறம் எனும் கருத்தையே சித்தர்களும் வழி மொழிகிறார்கள். எனவே சித்தர்களின் அறிவுரைகள் மற்றும் நடைமுறைக் கருத்துக்கள் இல்லறத்தோர்க்கு மிகவும் பொருத்தமானவை என்பதை நாம் உணர முடியும்.

அகத்தியர் தொடங்கி திருமூலர் தொட்டு பல்வேறு சித்தர்கள் இயற்றியுள்ள செந்தமிழ் பாடல்கள் அரியதொரு கருவூலம். திருவனந்தபுரம் அருள்மிகு பத்மநாபசுவாமி கோவிலில் அண்மையில் கண்டெடுக்கப்பட்டது போன்ற அளப்பரிய பொற்குவியல் அவை. சில சித்தர்கள் நேர் பொருளாக சொல்கிறார்கள்; பலர் மறைபொருளாக சொல்கிறார்கள். மறைபொருளாக சொன்னதின் உட்பொருளை புரிந்து கொள்ள இயலாததால் பல பாடல்கள் வழக்கத்தில் இல்லை என்பது எனது கருத்து.  ஆனால் சற்று முயன்று கருவூலத்தைத் திறந்து பொற்குவியலைப் பயன்படுத்த வேண்டிய காலம் இது; இதுவே.முயற்சியுடையார் இகழ்ச்சி அடையார். 

சஞ்சலத்திலும் சிரமத்திலும் உழன்று கொண்டு வாழ்க்கையின் பயனை முழுமையாக அடைய முடியாத பரிதாப நிலையில் சமுதாயம் சென்று கொண்டிருக்கிறது. விதியை மாற்றுகின்ற வலிமையையும் ஊழின் உட்பக்கம் காண்கின்ற ஆற்றலையும் நம் சித்தர்கள் வகுத்துக் கொடுத்திருக்கிறார்கள். அதை அறிய மாட்டாமல் கண்கள் இருந்தும் பார்வையற்றோர்களாக, செவிகள் இருந்தும் கேட்க இயலாதவர்களாக, வீணே காலத்தைக் கழித்துக் கொண்டிருக்கிறோம். 

 மெய்ஞ்ஞான திறவுகோல் கொண்டு விஞ்ஞான உண்மைகளை வெளியிட்ட சித்தர்களின் அறிவாற்றல் மெய்சிலிர்க்க வைக்கிறது. அவர்களது உடற்கூறு தத்துவம் வியக்க வைக்கிறது. அண்டத்தில் உள்ளதே பிண்டத்திலும் உள்ளது என்னும் நுண்ணிய ஆராய்ச்சி திகைக்க வைக்கிறது.  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.  உடம்பு நலமாக இருந்தால் தான் உயிர் நிலைத்து நிற்கும். உயிராற்றல் நிலைத்து நின்றால் தான் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். பிறவிப் பயனை அடைய முடியும். இது பற்றி சித்தர்கள் காட்டும் வழி தான் என்ன? அடுத்த இதழில் சிந்திப்போம்.    ஓம் சத்குருவே சரணம். சத்குருவே சரணம். வைக்கிறது.  சுவர் இருந்தால் தான் சித்திரம் வரைய முடியும்.  உடம்பு நலமாக இருந்தால் தான் உயிர் நிலைத்து நிற்கும். உயிராற்றல் நிலைத்து நின்றால்தான் வாழ்க்கைப் பயணம் இனிதாக அமையும். பிறவிப் பயனை அடைய முடியும். இது பற்றி சித்தர்கள் காட்டும் வழி தான் என்ன?

அடுத்த இதழில் சிந்திப்போம்.   

 ஓம் சத்குருவே சரணம்.