புத்தகம் : சித்தர் பாடல்கள்
பதிப்பாசிரியர் : டாக்டர் ச. மெய்யப்பன்
மணிவாசக பதிப்பகம் : 1991 பதிப்பு
பக்கங்கள் : 371
விலை : ரூ. 25
நான் புதிது புதிதாக படிப்பதைக் காட்டிலும் பழைய புத்தகங்களை மறு வாசிப்பு செய்வதையே பெரிதும் விரும்புகிறேன். இன்னும் சொல்லப்போனால் சில நூல்கள் எவ்வளவு பழமையானவையாக இருந்தாலும் எனக்கு என்றும் புதுமையானவையாகவே தோற்றமளிக்கின்றன. சித்தர் பாடல்கள் அந்த வகையைச் சேர்ந்தவை.
இந்த நூலைக் கையிலெடுத்து குறிப்பினைப் பார்த்தபோது 12. 1 .1992 என்று தேதியிட்டு இருந்தது. இது முதன்முதலில் என்னுடைய 33வது வயதில் சித்தர் பாடல்களில் ஈடுபட்டு மகிழ்ந்ததின் நினைவுச் சின்னமாக இன்று வரை என்னுடன் இணைந்துள்ள நூல். எவ்வளவோ நூல்களை “இனி தேவையில்லை” என்று நான் என்னுடைய சேகரிப்பிலிருந்து கழித்து விட்டாலும் எஞ்சிய சில புத்தகங்களில் இதுவும் ஒன்று.
கைக்கு அடக்கமான நூலின் தொடக்கத்தில் “சித்தர் பரம்பரையும் சிந்தனை வளமும்” என்ற தலைப்பில் டாக்டர் ச.மெய்யப்பன் அவர்கள் அழகான, சுருக்கமான முன்னுரை ஒன்றை வழங்கியிருக்கிறார். இதிலிருந்து ஒரு பகுதியை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன் :
“தமிழில் காலந்தோறும் ஏற்பட்ட பதிவுகளில் சித்தர்களின் சிந்தனைப் பதிவும் குறிப்பிடத்தக்கது. சித்தர் இனம் நீண்ட நெடுங்காலமாக இந்த நிலத்தில் வேரூன்றி விழுது பரப்பி வருகிறது. “மூலன் மரபில் வந்த நான் ஒரு சித்தன்” என்று பாரதி தன்னை சித்தர் பரம்பரையில் இணைத்துக் கொண்டு பெருமைப்படுத்துகிறார். பட்டினத்தாரும் தாயுமானவரும் வள்ளலாரும் சித்தர் தத்துவங்களை கோட்பாடுகளாக்கிக் கொடுத்தவர்கள் என்பதனை இலக்கிய வரலாறு இயம்பும். உள்ளொளி பெற்ற சித்தர்கள் உண்மையை உணர்ந்து ஊருக்கு உபதேசம் செய்தனர்…. புரியும் மொழி, புரியாத கருத்துக்கள்; பேச்சுவாக்குத் தமிழில் பேருண்மைகளை பொதித்து வைத்துள்ளனர்.”
இந்த முன்னுரை தவிர “சித்தர் இலக்கியம்” என்ற தலைப்பில் பேராசிரியர் மு.வை.அரவிந்தன் அவர்களும் சீரிய கருத்துக்களைப் பதிவு செய்துள்ளார்.
இந்த முன்னுரைகளை உள்வாங்கி, நூலின் உள்ளே பயணிக்கும் போது சிவவாக்கியர், பட்டினத்தார், பத்திரகிரியார், பாம்பாட்டிச் சித்தர், இடைக்காட்டுச் சித்தர், அகப்பேய்ச் சித்தர், கடுவெளிச் சித்தர், அழுகணிச் சித்தர், கொங்கண நாயனார், சட்டைமுனி, திருவள்ளுவர், அகத்தியர், திருமூல நாயனார், சுப்பிரமணியர், இராமதேவர், கருவூரார் ஆகியோரின் ஆழமான கருத்துக்கள் கொண்ட அகவொளி பெருக்கும் பாடல்கள் நாம் படித்து மகிழக் காத்திருக்கின்றன.
இந்த நூல் இல்லாவிட்டாலும் ஏதாவது ஒரு சித்தர் பாடல் நூலைக் கையிலெடுங்கள். முழுதும் புரியாவிட்டாலும், ஏதோ புரிந்தது போல் இருக்கும். அதுவே போதும் இப்பிறவிக்கு.

