மலர்கள் - Malarkal | வாரமலர் | சிறுவர் மலர் | அறிவியல் மலர் | வேலை வாய்ப்பு மலர் | விவசாய மலர் | வருடமலர் -malargal - Dinamalar

 

“ஹல்லோ அப்பா எப்படி இருக்கே?” பூமா தன் தந்தையைக் கைப்பேசியில் அழைத்து குசலம் விசாரித்தாள்.

தஞ்சை மாவட்டத்தின் ஒரு குக்கிராமத்தில் விவசாயம் செய்து கொண்டிருந்த சிவநேசனின் ஐந்து மக்களில் கடைக்குட்டி தான் இந்த பூமா. பேரன் பேத்தி எடுத்த பின்பும் இன்னும் செல்லம் தான் அவருக்கு. பூமாவின் உடன்பிறப்புகள் தந்தையிடம் பக்தியும் மரியாதையுமாக  பழகிய போதும் பூமா மட்டும் இன்னும் சிறுபிள்ளைத்தனமான அவரிடம் வம்பு வளர்ப்பதில் அவருக்குமே மகிழ்ச்சி.

திருமணம் முடிந்து ரெண்டு பிள்ளைகளைப் பெற்று வெளிநாட்டில் வேலைக்கு அனுப்பியவள். ஒரு பெரிய மத்திய அரசு அலுவலகத்தில் உயர்பதவியில் இருப்பவள். கை நிறைய சம்பாதிப்பவள். அவள் கணவர் கோபாலனோ சுயதொழில் செய்து பணத்தை மூட்டையில் வாரிக் கட்டிக் கொண்டிருப்பவர்.

“ஹல்லோ, சொல்லும்மா. எப்படி இருக்கே? மாப்பிள்ளை எப்படி இருக்காங்க? பேரனுங்க சுகமா?” சிவநேசனின் கேள்விகள் ஒரு மைல் நீளத்திற்கு நீண்டு செல்ல,

ஒரு பிரேக் போட்டாள் பூமா.“நான் கூப்பிட்டா இத்தனை கேள்வி கேட்கப்டாது நைனா. நீயா போன் பண்ணி கேக்கணும் இத்தனை கேள்வியை”

சிரித்தார். “என்னம்மா எப்படி இருக்கே?” என்றார் வாஞ்சையுடன்.

“நல்லாயிருக்கேன்ப்பா” என்று அந்த ஒரு பதிலில் தான் அவருடைய நிம்மதியும் மகிழ்ச்சியும் இருக்கிறது என்பதை அறிந்தவளாக பொறுப்புடனும் அன்புடனும் பதில் சொன்னாள்.

“என்னம்மா வேலைக்கு போகலையா? இந்நேரம் கூப்பிடறே?”

“போன வாரம் சொன்னேனே ஒரு இடம் விலைக்கு வருதுன்னு. கொஞ்சம் பணம் குறையுதுப்பா”

“எங்கிட்டே பணம் இருக்கும்மா” என்றவரை இடைமறித்து அவளுடைய தாய் “என் நகைகளும் இருக்குங்க” என்றது காதில் விழுந்தது. “நான் வேணும்னா கொண்டுட்டு வரட்டுமா தங்கம்?” என்று கேட்டார்.

“இல்லைப்பா. வேண்டாம்.  நகைகளை அடகு வைக்கத் தான் வங்கி வரை போயிட்டு வந்தோம். அதனால் தான் வேலைக்கு போகலை. அடுத்த வாரம் ரெஜிஸ்டர் பண்றோம்”

“வெளியே தெருவுல போறவ. நித்தியப்படி ஆபீசுக்கு போவணும். என் நகையை அடகு வைக்கலாம் இல்லையா?” என்று தாய் கேட்டது காதில் விழுந்தது

ஸ்பீக்கரில் போட்டிருக்கிறார் போலும் என்று நினைத்து “அடுத்தவன் கண்ணை உறுத்துற மாதிரி நகையை பூட்டிக்கிறது பாதுகாப்பானது இல்லம்மா”என்றாள் பூமா.

“என்னவோ போ பூமா, அந்த காலத்துல கூட்டுக்குடும்பத்தில மாட்டிக்கிட்டு அல்லல் பட்டோம். பெத்த பிள்ளைங்களுக்கு ஒன்னு வாங்கித் தரனும்னா மீன மேஷம் பார்த்துக்கிட்டு, பிள்ளைங்க ஆசைப்பட்டுக் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியலையேன்னு வருத்தப்பட்டு கிடந்திருக்கோம். இப்போ நம்மை கேட்க ஆளில்லை. நீங்க எல்லோரும் இன்னைக்கு நல்லாயிருக்கீங்க என்ற சந்தோஷம் இருந்தாலும் உங்களுக்கோ எதுவுமே என்னிடம் தேவையில்லாமல் போச்சு” என்றார் சிவநேசன் உண்மையான வருத்தத்துடன்.

பூமாவிற்கும் ஊராட்சி தொடக்கப்பள்ளிக்கு போய்க் கொண்டிருந்த பருவத்தில்  நிகழ்ந்த சம்பவம் இன்று நினைவிற்கு வந்தது. வசதியான வீட்டுப் பிள்ளைகள் அலுமினியத்தால் ஆன பெட்டியில் புத்தகங்கள் கொண்டு வருவார்கள். சிலர் அடியில் குஞ்சம் வைத்த ஜோல்னா பையில் கொண்டு வருவார்கள். பூமாவிற்கு அவளுடைய தாய்மாமன் தில்லியிலிருந்து வாங்கி வந்திருந்த அலுமினிய பெட்டியில் அவ்வளவு விருப்பமில்லை. மாறாக குஞ்சம் வைத்த புத்தக பை வேண்டும் என்று அடம். இவள் ஒருத்திக்கு மட்டும் குஞ்சம் வைத்த பை வாங்கிக் கொடுத்தால் வீட்டில் மீதமுள்ள சிறுவர்களுக்கும் வாங்கித் தர வேண்டும். ஒரு சராசரி விவசாய குடும்பத்தில் அவ்வளவு பணத்திற்கு எங்கு போவது?

இறுதியில் “இத்தனை குழந்தைகள் இருக்கும் குடும்பத்தில் உன் அக்கா மகளுக்கு மட்டும் தனியாக எப்படி வாங்கிக் கொண்டு வரலாம்” என்று பூமாவின் தாய்மாமன் திட்டு வாங்கிக் கொண்டு போனது தான் மிச்சம். “உங்க கூட்டுக் குடும்பத்தில் இனி கால் வைக்க மாட்டேன்” என்று மாமாவின் சபதம் வேறு தனிக்கதை.

“யாருமே எங்கள்ட்ட எதுவும் கேட்கிறதில்ல. போதாததுக்கு நீங்க தான் எங்களுக்கு படியளந்திட்டு இருக்கீங்க. அதிலும் நீ தான் மாசமானா எங்களுக்கு பென்சன் தர்றே” என்றார் சிவநேசன்.

“நான் ரொம்ப நாளா உன்ட்ட ஒன்னு கேட்டுட்டு இருக்கேன். நீ வாங்கித் தர மாட்டேங்கிறே” என்றாள் பூமா சிணுங்கலுடன்.

சிறு பிள்ளையாய் தன்னிடம் சிணுங்கிக் கொண்டிருக்கும் மகளின் குரல் பெற்றோர் இருவருக்கும் உற்சாகத்தைக் கொடுக்கவே அதே சிரிப்புடன் “என்னவாம்?” என்றார்கள் ஒரு சேர.

“எனக்கு ஒரு புடவை எடுத்துக் கொடுன்னு எத்தனை வருஷமா கேட்கறேன்” என்றாள் பூமா.

“உனக்கு இல்லாத புடவையா? அப்பாவிடம் கேட்கறே?” என்று சிரித்தாள் அவள் தாய் கனகம்.

“எனக்கு எவ்வளவு இருந்தா என்ன? நீ வாங்கி தருவியா மாட்டியா?”

“நீ பொங்கலுக்கு எங்களுக்கு காசு அனுப்புவேல்ல. இந்த வருஷம் அனுப்பாதே. அந்த பணத்தில உனக்கு புடவை வாங்கிக்கோ” என்றாள் கனகம்.

“ம்..போங்கா இருக்கே. அதெல்லாம் கிடையாது. நீ உன் சொந்த பணத்தில் எனக்கு புடவை வாங்கி தரணும்”
“அவர்ட்ட எது காசு?” என்றாள் கனகம்  கவலையுடன்.

“உனக்கு கிடைக்கும் காசில் சேர்த்து வெச்சி வாங்கி தா” என்றாள் பூமா.

“நிஜமாவா கன்னுக்குட்டி கேட்கறே?” என்றார் சிவநேசன்.

“ஆமாம்ப்பா” என்றாள் பூமா உறுதியுடன்.

“வாங்கித் தரேன்” என்றார் தீர்மானத்துடன்.

தந்தைக்கு எம்ப்ளது வயசாவுது. சதாபிஷேகம் செய்யணும்னு பூமாவின் அண்ணன்களும் சித்தப்பாக்களும் அத்தைகளும் தீர்மானித்து கிராமத்து வீட்டில் நடத்துவதற்கு ஏற்பாடாகி எல்லாரும் குடும்பத்துடன் ஒரு வாரம் முன்னே போய் அந்த ஓட்டு வீட்டில் அடைந்து விட்டார்கள். பூமாவின் இரு மகன்களும் மருமகள்களும் பேரன் பேத்திளுடன் வந்து விட்டிருந்தனர். மூன்று தலைமுறைகள் கூடியிருந்தது. கிராமமே திருவிழா கோலம் பூண்டிருந்தது. சிவநேசனும் மிக உற்சாகமாக இருந்தார்.

ஒருநாள் இரவு எல்லோரும் வீட்டின் முன் இருக்கும் களத்து மேட்டில் அமர்ந்து கனகம் கையில் சோறு உருட்டிப் போட, நிலா சாப்பாடு சாப்பிட்டவாறு  பேசிக் கொண்டிருந்தார்கள். பேச்சு எங்கெங்கோ சுற்றி வந்து இறுதியாக பூமாவின் புடவையில் வந்து நின்றது.

“நான் இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கேன். நாளைக்கு நீ போய் புடவை எடுத்துக்கோ” என்றார் சிவநேசன்.

“இருநூறு ரூபாய்க்கு என்ன புடவை எடுக்க முடியும்?” என்று கேட்டாள் பூமாவின் அண்ணி.

“ஷ்” என்று கண்ணால் அவளை அடக்கி விட்டாள் பூமா. “இரு….நூ..று ரூபாயா? பேஷ். பேஷ். எதுப்பா உனக்கு இவ்வளவு ரூபா?”

“என்னம்மா கிண்டல் பண்றே? உன்னிடம் இல்லாத பணமா?” என்றார் சிவநேசன்.

“என்ட்ட எவ்வளவு இருந்தா என்ன? நீ வாங்கிக் கொடு”

“சரி. இந்தா” என்று தன் இடுப்பில் கட்டியியிருந்த அகலமான பெல்ட்டில் இருந்து பணத்தை எடுத்துக் கொடுத்தார் அவர்.

“ஊஹூம். வேண்டாம்.  நீ தான் எடுத்து தரணும்”

“நானா?”
“ஆமாம். நீ தான்”

“நீ புது மோஸ்தரில் புடவை கட்டுவே. எனக்கு எடுக்கத் தெரியாதே”

“உனக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவு எடுத்தா போதும்” என்றவள் “நீ வாங்கி தரும் புடவையைத் தான் சதாபிஷேகத்துக்கு கட்டிப்பேன்” என்றாள் பூமா.

“சாக்கு மாதிரி எதையாவது வாங்கிக் கொடுத்துடப் போறேன்” என்றார் கவலையுடன்.

“சாக்கு மாதிரி இல்லைப்பா. சாக்கே வாங்கிக் குடுத்தாலும் அதைக் கட்டிக்கிட்டு தான் விஷேசத்திற்கு வருவேன்” என்றாள் இன்னும் முனைப்புடன்

“அண்ணியோட போய் வாங்கிக்கோ”

“ஊஹூம். நீ தான் கடைக்கு போய் வாங்கித் தரணும்”

“ஏய் பூமா, எதுக்கு நீ அவரை இந்த பாடுபடத்தறே?” என்று கோபப்பட்டார் இவ்வளவு நேரமும் பூமா தந்தையிடம் வம்பு செய்து கொண்டிருந்ததைப் பார்த்துக் கொண்டிருந்த அவள்
கணவன் கோபாலன்.

“என்னோட அப்பா, நான் கேட்கறேன். அப்படித் தானேப்பா” என்று அவர் கழுத்தைக் கட்டிக் கொண்டாள் பூமா.

“ஆமாம் மாப்பிள்ளை. கொளந்தை கேட்கறா. அவளை ஒன்னும் சொல்லாதீங்க. என்னால கடைக்கு போய் வாங்கித் தர முடியலை”

விசேஷம் சிறப்பாக நடந்தேறிய பின்பு அவரவர் கிளம்பி சென்று விடவே பூமாவும் பெற்றோரிடம் விடைப் பெற்றுக் கொண்டாள். “அடுத்த வாட்டி வரும்போ எனக்கு புடவை எடுத்து வெச்சிருக்கணும். சரியா” என்று தலையை முட்டினாள்.

“ஆகட்டும்” என்று பொக்கை வாய் காட்டி சிரித்தார் சிவநேசன்.

வீட்டிற்கு வந்த பின்பு கோபாலன் அவளிடம் மிகவும் வருத்தப்பட்டார். ”நீ ரொம்பத் தான் பண்றே. அந்த வயசான மனுஷன் கடைக்கு போய் புடவை வாங்கித் தரணும்னு என்ன ஒரு அடம் உனக்கு?”

“அது ஒரு கணக்குங்க” என்றாள் பூமா.

“உன் கூட பிறந்தவங்களும் இங்க தானே இருக்காங்க. அவுங்களுக்கு இல்லாத கணக்கு உனக்கு மட்டும் என்ன இருக்கு? கருமம். எல்லார் எதிரிலும் என் மானம் போவுது”

“என் கூடப் பிறந்தவங்க அவரிடம் பயபகதியுடன் எட்டி நின்னு வளர்ந்தவர்கள். அவங்களுடைய தேவைக்கு கூட அவரிடம் கேட்டு அறியாதவங்க. ஆனால் நான்? அவருடைய தோளில் அமர்ந்து ஊரை சுற்றி வந்தவள். வானத்தையும் பூமியையும் இயற்கையும் விவசாயத்தையும் ரசிக்க கற்றுக் கொடுத்தவர் அவர். அவர் கையைப் பிடித்து இழுத்து இது  வேண்டும் அது வேண்டும் என்று அழுது அடம் பிடித்துக் கேட்டது நான் மட்டும் தான். ஒரு பெரிய கூட்டுக் குடும்பத்தில் அவ்வளவாக பணப்புழக்கம் இல்லாத காலத்தில் நான் கேட்டதை வாங்கிக் கொடுக்க முடியாமல் என்னை விட அதிகம் கவலைப்பட்டவர் அவர். அப்படி எதையாவது வாங்கிக் கொடுத்து விட்டால் என்னை விட அதிகம் மகிழ்ந்தவரும் அவர் தான்”

“சரி. அது சின்ன வயசுல எல்லார் வீட்டிலும் நடப்பது தானே. அன்னைக்கு வாங்கிக் கொடுக்கலைன்னு இன்னைக்கு குத்திக் காட்டுவது  போலிருக்கு”

“ஊஹூம்”
“என்ன ஊஹூம்?” என்றார் அப்போதும் எரிச்சலை மறைக்க மாட்டாமல்.

“அன்னைக்கு நாங்க கேட்டதை எல்லாம் வாங்கி கொடுக்க முடிவில்லை என்பதை விட இன்றைக்கு நம்ம பிள்ளைங்க கிட்ட வாங்கிக் கொண்டிருக்கிறோமே என்ற எண்ணம் தான் அவுங்களுக்கு”

“அதுனால என்ன? பிள்ளைங்க பெத்தவங்களுக்கு செய்யறது தப்பா என்ன?” என்றார் கோபாலன்.

“நிச்சயம் இல்லை. ஆனால் நம்மால் அவர்களுக்கு ஒரு பிரயோசனமும் இல்லை என்ற
எண்ணத்தை விட  பிள்ளைங்க வளர்ந்துட்டாங்க. நம்ம கையை விட்டுப் போய்ட்டாங்க என்ற எண்ணம் தான் அவர்களுக்கு தாங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்காது”

“அது உண்மை தான்” என்று ஒப்புக் கொண்டார் கோபாலன்.

“அதனால் தான், நான் இன்னும் வளரலை. உங்க கிட்ட கேக்கற அளவுக்கு இன்னும் நான் உங்க கைக்குள்ள தான் இருக்கேன் என்று அவருக்கு உணர்த்த தான் இந்த நாடகம்” என்று சிரித்தாள் பூமா.
“ஓஹோ” என்றார் அவளைப் புரிந்து கொண்டவராக.

“இது ஒரு விதமான பந்தம். அதை உணரவும் மற்றவர்களுக்கு உணர்த்தவும் தான் இந்த புடவை கேட்கும் நாடகம். ஆனால் அதிலும் ஒரு விஷயம் பாருங்கள். அப்பா இருநூறு ரூபாய் சேர்த்து வெச்சிருக்கிறாரே. ஒவ்வொரு ரூபாயையும் எடுத்து வைக்கும் போது அவருக்கு என் ஞாபகம் வருமில்ல” என்றாள் கண்கள் கசிய.

“அது சரி” என்றார் அவர்.

“இன்னும் எவ்வளவு நாள் இருக்கப் போறாங்க ரெண்டு பேரும். இருக்குற நாள் வரைக்கும் அவுங்க நினைத்துக் கிடக்க ஏதேனும் ஒரு கதை வேணுமில்ல” என்றாள் பூமா.

சிவநேசன் சாப்பிட்டு விட்டு வந்து கட்டிலில் அமர்ந்தார். பின்னால் வந்து கனகம் அருகில் கிடந்த மேசை மீது தண்ணி சொம்பை வைத்து விட்டு சதாபிஷேகத்தில் நடந்த கதைகளை பேசிக் கொண்டிருந்தாள். கடைசியாக பூமா புடவை கேட்ட கதை வந்தது. கணவனிடம் கேட்டாள்.”இந்த குட்டிக்கு மட்டும் வம்பு போக மாட்டேங்கிது” என்றாள். “பேரன் பேத்தி எடுத்து பாட்டியாகவும் ஆயிட்டா”

‘யாரை சொல்றே? கடைக்குட்டியையா?”

“புடவை வாங்கி தரணுமாம். அதுவும் நீங்களே கடைக்கு போய் வாங்கித் தரணுமாம். இந்த குழந்தைக்குத் தான் எவ்வளவு வம்பு பாருங்க” என்றாள்.

“அவள் இன்னும் நம்ம குழந்தையாக இருக்கறதால தான் இத்தனை வம்பு பண்ணுறா” என்றார் அவர்.
இருவரும் சேர்ந்து சிரித்தனர். அவளைத் திருமணம் முடித்து வந்த நாளிலிருந்து ஒவ்வொரு பிள்ளைகளும் பிறந்த நாளையும் பொழுதையும் அவர்கள் வளர்ந்த காலத்தையும் அவர்களை வளர்க்க இவர்கள் பட்ட பாட்டையும் இன்று பிள்ளைகளின் வளர்ச்சியைக் கண்ட நிறைவையும் மாறி மாறி பேசி பேசி நீண்டது அந்த இரவு. அவர்களும் பிள்ளைகளை நினைத்துக் கிடக்க காரணம் வேண்டுமல்லவா! பிள்ளைகளுக்கும் பெற்றோரிடம் பந்தம் வேண்டுமல்லவா! அதற்கு எல்லார் வீட்டிலும் நெனச்சிக் கெடக்க இதைப் போன்ற ஒரு புடவைக்  கதை இருக்குமல்லவா!.