நாம் செய்யும் அனைத்து செயல்களும், அந்தச் செயல்களுக்கு வரும் பயன்களும், ஒரு வரம்புக்குட்பட்டவை; வரையறுக்கப்பட்டவை; எல்லை உடையவை. வரையறுக்கப்பட்ட எல்லாச் செயல்களும் துக்கத்தையும், அதிருப்தியையும், பந்தத்தையும் தருபவை. இதனாலேயே ஸ்ரீகிருஷ்ணர் கர்ம யோகம் மனத்தூய்மையைத் தரும் ஆனால் ஞானத்தைத் தராது என்கிறார். ஞானத்தைத் தரவல்லது ஞான மார்க்கம் மட்டுமே. இதையே நித்திய ஃபலம் அல்லது எல்லையற்ற ஆனந்தம் என்கிறார் கிருஷ்ணர்.
ஆன்மீகமும் பொருண்மயவாதமும் எதிர்மறையானவை. ஆன்மிகம் ஒருவர் தன் மீதே சார்ந்திருக்கச் செய்யும்; பந்தங்களிலிருந்தும் பற்றுகளிலிருந்தும் மீட்டு உண்மையான சுதந்திரத்திற்கு வழிகாட்டும். ஆனால் பொருட்களின் மேல் சார்ந்திருக்கும் பொருண்மயவாதம் ஆனந்தத்தை புற உலகில் தேடச்செய்யும்; பற்றுக்களை வளர்க்கும்; தன் மேல் சார்ந்திருப்பதை மாற்றி, புற உலகில் உள்ள பொருட்களின் மேல் சார்ந்திருக்கச் செய்யும். ஸ்ரீகிருஷ்ணர் ஒரு சாதாரண மனிதன் ஆன்மீகத்திற்கு உடனே வந்து விட முடியாது என்பதை உணர்ந்திருர்ந்த காரணத்தினால், அந்த மனிதனின் ஆன்மீக வளர்ச்சிக்கும், பொருண்மயமான வாழ்க்கைக்கும் உதவவே வருணாஷ்ராம முறையை நமக்கு அருளி இருக்கிறார்.
ஒருவர் தனது பொருள்சார் ஆசைகளை நியாயமான முறையில் பூர்த்திசெய்து, ஒழுக்கத்துடன் படிப்படியாக அந்த ஆசைகளில் இருந்து விடுபட்டு, உயரிய நிலையை அடைதலையே இந்த வருணாஷ்ரம முறை குறிக்கும். ஆன்மீக வாழ்க்கை நெறிக்கு பொருள்சார் ஆசைகள் தடையாக இராது.
அர்ஜுனன் யுத்தம் புரிவதிலிருந்து தப்பித்துப் போக நினைக்கிறான்; அதாவது அவனுக்குரிய கர்மத்திலிருந்து விலக நினைக்கிறான். இதன் காரணமாகவே ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் உள்ளத்தில் அவன் செய்ய வேண்டிய செயல் பற்றிய பயத்தைப் போக்க செயல்பாட்டின் முக்கியத்துவத்தைக் கூறுகிறார். ஒரு அணுவிலிருந்து அண்டம் வரை அனைத்துமே தொடர்ந்து செயல்பட்டு வருகின்றன. கர்மா என்பது தவிர்க்க முடியாதது. ஸ்தூல அளவு அல்லது macro நிலையில் கர்மா என்பது நாடுகள் மற்றும் உலகம் முழுக்க இருக்கும் கூட்டு கர்மாவைக் குறிக்கும். சூட்சும கர்மா அல்லது micro நிலையில் கர்மா என்பது என்பது ஒரு தனி நபரின் தனிப்பட்ட செயல்களின் பயனைக் குறிக்கும். மற்றும் கர்மா என்பது ஒரு மனிதனுக்கு பொறுப்பை மட்டும் கொடுப்பதில்லை; கவலை மற்றும் மன உளைச்சலையும் கொடுக்கும். ஒரு செயல் செய்யும் முன்பு, அது சரியாக நடக்க வேண்டுமே என்ற கவலை, அது நடக்கும்போது மன உளைச்சல், எதிர்பார்த்த பலன் கிடைக்காவிட்டால் மறுபடியும், துக்கம் மற்றும் மன உளைச்சல் உண்டாகும். ஆனால் செயலிலிருந்து நாம் முழுமையாக தப்பிக்கவும் முடியாது. ஸ்ரீகிருஷ்ணர் ஞானம் ஒன்றே வினைப்பயனைச் சமாளிக்க உதவும் என்கிறார். அதன் விளைவுகளைப் புரிந்துகொண்டு நல்ல செயல்களைப் பலன் கருதாது செய்தல் அவசியம் என்கிறார்.. எவ்வாறு பலாப் பழத்தை கையில் எண்ணெய் தடவி வெட்டுகிறோமோ, அதேபோல், ஞானம் என்ற எண்ணெய் கொண்டு கர்மம் என்ற பசியை வெல்ல வேண்டும்.
ஸ்ரீகிருஷ்ணர் ஞானத்தை பெறுவதைப் பற்றியும், பெற்ற ஞானத்துடன் இந்த உலகில் பொறுப்புகளுடனும் வினைப் பயன்களையும் எதிர்கொண்டும் வாழும் விதத்தை விவரிக்கிறார்.
கிருஷ்ணர் தனது வாழ்க்கையையே ஒரு உதாரணமாக வைக்கிறார். குழந்தையாக இருந்ததிலிருந்து அவர் எதிர்கொண்ட சவால்களும் பிரச்னைகளும் ஒன்றல்ல இரண்டல்ல. ஆனாலும், அனைத்தையும் எவ்வித விருப்புவெறுப்புமின்றி எதிர்கொண்டு, செய்யும் கர்மமும், அதன் பயனும் தன்னை ஒன்றும் செய்யாமல் இருக்க வைத்தார். அவர் அவதார புருஷராக இப்பூவுலகில் படைப்பின் இணக்கத்தைப் பேணுவதற்காக மனிதர்களுக்கு ஒரு வாழ்க்கை முறையை வடிவமைத்துத் தந்ததாகக் கூறுகிறார். இந்த வடிவமைப்பில் தனிமனிதனுக்கு ஆசிரமும் சமூகத்திற்கு நான்கு விதமான பிரிவுகளையும் ஏற்படுத்தியதாகக் கூறுகிறார்.
ஒரு மனிதனின் வாழ்க்கையில் ஆசிரமம் என்பது பிரும்மசரியம், கிருகஸ்தன், வானப்பிரஸ்தம் மற்றும் சந்யாசம் ஆகும். மாணவனாக கல்வி கற்று, தர்ம அர்த்த காமத்தைப் பற்றிய புரிதலைப் பெற்று, மோக்ஷத்திற்காக தன்னைத் தயார்படுத்திக்கொள்ளும் ஒரு நிலை பிரும்மச்சரியம் ஆகும். கர்மயோக வழியில், ஆசைகளை சரியான வழியில் இறை சிந்தனையின் உதவியுடனும் மதவழிமுறைகளின் உதவியுடனும் தூய்மைப்படுத்தி மனத்தை ஒருநிலைப்படுத்தி தர்ம சிந்தனையுடன் மோக்ஷம் பெற வழிவகுக்கும் ஆசிரமம் கிருஹஸ்தாஷ்ரமம் ஆகும். இந்த ஆசிரமத்தில் தான் பஞ்ச மஹா யக்னங்கள்கள் மற்றும் உபாசனைகள் மூலம் இறைத் தத்துவத்தை அறிந்து, தன்னலமற்ற வாழ்க்கையை வாழும் நிலை ஒரு மனிதனுக்குக் கிடைக்கிறது. வானபிரஸ்த ஆசிரமத்தில் எண்ணங்களை உள்முகமாக்கி, ஜப தியானங்கள் மூலம் இறைவனை உள்ளேயும் வெளியேயும் அறிந்து கொள்ள முயல்வது ஆகும். சன்யாச ஆசிரமத்தில், மனத்தளவில் துறவு பூண்டு, குடும்பத்தில் இருந்தாலும், மனத்தளவில் துறவியாக, எல்லா செயல்களையும் இறைவனுக்கு அர்ப்பணித்து, அவன் அருளும் வினைப்பயனை அவன் தந்த பிரசாதமாக ஏற்று வாழும் நிலை.
தனி மனித வளர்ச்சிக்கு உதவுவது ஆசிரம தருமம். சமூக வளர்ச்சிக்கும் நல்லிணக்கத்திற்கும் வழி செய்வது வர்ண பாகுபாடு. நான்கு பாகங்களாக வர்ண பாகுபாடு பார்க்கப்படும். இந்தப் பாகுபாட்டினை மூன்று நிலைகளிலிருந்து பார்க்கலாம். அவையாவன:
- குணத்தின் அடிப்படியில் வரும் பாகுபாடு: குண பிராம்மணன், குண க்ஷத்திரியன், குண வைசியன் மற்றும் குண சூத்திரன் ஆகும். குணத்தின் அடிப்படியில் இவை நான்கும் மீண்டும் சத்வ, ராஜச மற்றும் தமோ குணங்கள் கொண்டவர் என்று பகுக்கப்படும். ஒரு மனிதனுக்குள் சத்வ குணம் பிரதானமாக இருக்கலாம்; அல்லது ராஜச குணம் பிரதானமாக இருக்கலாம் அல்லது தமோ குணம் பிரதானமாக இருக்கலாம். சத்வ குணம் மேலோங்கியிருந்தால், சாந்தமும், அறிவாற்றல் திறனும், மனநிலையில் ஆழ்ந்த சிந்தனையும் மேலோங்கி இருக்கும். ராஜச குணம் மேலோங்கி இருந்தால் உடல் நலத்தை மேம்படுத்தும் இயக்கங்கள் இந்த மனிதனிடம் மேலோங்கி இருக்கும். தாமச குணம் பிரதானமாக இருந்தால், அறிவு சார்ந்தோ உடல் சார்ந்தோ எந்தச் செயல்பாடும் இல்லாத மந்த நிலை மேலோங்கி இருக்கும்.
- குண பிராம்மணனிடம் சத்வ குணம் மிகுந்து, ராஜசும் தமோ குணமும் குறைவாகக் காணப்படும்.
- அடுத்து குண க்ஷத்திரியநிடத்தில் ராஜச குணம் மேலோங்கி நின்று சத்வ குணம் இதற்கு அடுத்தபடியாகவும் தமோ குணம் கடைசியிலும் இருக்கும்.
- குண வைசியனிடத்தில் ரஜோ குணம் மேலோங்கி நிற்க, அடுத்தது தமோ குணமும் கடைசியாக சிறிது சத்வ குணமும் இருக்கும்.
- குண சூத்திரனிடத்தில் தமோ குணமே பிரதானமாக இருக்கும், சிறிது ரஜோ குணமும் கடைசியில் சிறிது சத்வ குணமும் இருக்கும்.
- அடுத்து ஸ்ரீகிருஷ்ணர் காட்டுவது தொழில் அடிப்படியிலான பாகுபாடு.
- முதலில் கர்ம பிராமணர்கள்: இவர்கள் அறிவுசார் நடவடிக்கைகள், ஆன்மீக மற்றும் ஆன்மீகமற்ற செயல்பாடுகள் இரண்டிலும் சிறந்து விளங்குவர். இதில் சிந்தனைக் குழுவும் அடங்கும். அனைத்து ஆசிரியர்களும் இதன் கீழ் வருவார்கள்.
- கர்ம க்ஷத்திரியர்கள் மக்களின் சமூகத் தேவைகள், சமுதாயத்தில் ஒழுங்கு மற்றும் ஒத்துழைப்பை பேணுதல், சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகத்தின் செயல்பாடுகள் இவற்றைச் செவ்வனே செய்து முடிப்பர்.
- அடுத்து கர்ம வைசியர்கள் சமூகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் பராமரிப்பிற்கும் வழிவகுக்கும் நடவடிக்கைகளில், குறிப்பாக முக்கியமாக செல்வத்தை உருவாக்கும் செயல்களில் ஈடுபடுவர். இதில் வர்த்தகர்கள் மற்றும் வணிகர்கள் அடங்குவர்.
- அடுத்து கர்ம சூத்திரர்கள் மேற்கூறிய அடிப்படை மூன்று விஷயங்களுக்கு ஆதரவாக உள்ள செயல்கள் செய்பவர். இவர்களது செயல்பாடு பெரும்பாலும் திறனற்ற உழைப்பு மற்றும் மனிதவளம் தேவைப்படும் பணிகள்,: கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்கள், விவசாயம், கட்டுமானம், சாலை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பான வேலைகள் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம் – இவை எல்லாவற்றிலும் இவர்கள் பங்கு கொள்வர்.
- அடுத்து ஸ்ரீகிருஷ்ணர் காட்டுவது பிறப்பு அடிப்படையில் ஆன பாகுபாடு. பிராம்மணனுக்குப் பிறந்தவன் ஜாதிப் பிராம்மணன் என்றும். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஜாதி சத்திரியன் எனவும், வைசியனுக்குப் பிறந்தவன் ஜாதி வைசியன் எனவும், சூத்திரனுக்குப் பிறந்தவன் ஜாதி சூத்திரன் எனவும் அழைக்கப் பட்டான்
- ஒரு மனிதன் ஜாதி பிராம்மணனாக இருந்து, கர்ம சத்திரியனாகவும், குண வைசியனாகவும் இருக்கலாம்.
- இந்த நான்கு பிரிவுகளிலும் படித்தர வரிசை உண்டா என்று கேட்டால், ஸ்ரீகிருஷ்ணர் அப்படி ஒரு தரவரிசையும் கிடையாது என்கிறார். ஆனாலும் குணத்தின் அடிப்படையில் செய்யப்படும் தரவரிசையே சமூகத்திற்கு உதவும் என்கிறார்.
இவற்றை எல்லாம் விவரித்த ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனிடம் அவனது மூதாதையர் இவற்றைப் பின்பற்றி தங்களுக்கு வகுக்கப்பட்ட செயல்பாடுகளைச் செய்தே வாழ்க்கையை நடத்தினர் என்கிறார். இதற்குப் பின்னரே கீழே கொடுக்கப்பட்டுள்ள கேள்விகளை எழுப்புகிறார்:
- செயல் என்றால் என்ன?
- செயலின் தன்மை என்ன/
- செயல் எங்கு தோன்றுகிறது?
- செயல் யாருக்கு சொந்தம்?
இவற்றுக்கான விடைகளை அடுத்த அத்தியாயத்தில் பார்ப்போம்.
********************
