தமிழ் நாடக மேடையை இன்னொரு தளத்துக்கு எடுத்து செல்ல இப்போது நிறையப் பேர் முண்டியடித்து முயற்சித்து வருகிறார்கள். இந்த வரிசையில் பிரதிபிம்பத்துக்கு முதலிடம்!

– இந்து தமிழ் திசை (23 செப் 2015)

‘பிரதிபிம்பம்’ என்ற நாடகத்தில், சீனாவில் எப்படிப்பட்ட பொருட்கள் வீட்டில் புழக்கத்தில் இருக்கும் என்பதை ஆராய்ந்து பார்த்து, அதேபோன்ற பொருட்கள் மேடையில் பயன்படுத்தப்பட்டன.- ஶ்ரீவத்ஸன் 

 

இந்த முறை நாம் பார்க்கப்போவது டம்மீஸ் (Dummies) குழு நடித்த ஒரு அபாரமான நாடகம். அவர்களின் பல நாடகங்களை பலர் பார்த்திருப்பீர்கள். ஆனால் இந்த நாடகத்தைப் பார்த்திருக்க மாட்டீர்கள். இது இரண்டு முறை மட்டுமே போடப்பட்டது. பிரம்மாண்டமான நாடகம். அவர்களின் பல நாடகங்கள் மிக மிக சிறப்பாக இருக்கும். எல்லா நாடகமும் ஒரு நல்ல தரத்துடன் இருக்கும். சில அபாரமாக இருக்கும். எப்பொழுதும் டிக்கெட் விற்க மாட்டார்கள். இலவசமாகத்தான் இருக்கும்.

நாம் பார்க்கப் போவது “பிரதிபிம்பம்” என்ற நாடகம். இரண்டு முறை தான் அரங்கேற்றப் பட்டது. அதுவும் நாரதகான சபாவில் ஒரே நாளில். ஒரு 70 mm படம் பார்த்த உணர்வு அற்படுத்துய நாடகம். அதிர்ஷ்டவசமாக எனக்கு அந்த நாடகம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு Political Thriller.

இப்போது பாரதப் பிரதமர் அவர்கள் சீனா செல்லப் போவதாக ஒரு பேச்சு அடிபடுகிறது. அதனால் இந்த நாடகம் நினைவுக்கு வந்தது. இப்போது நாடகத்துக்குள் போவோம்.

நாடகம் சீனாவில் நடப்பது போலத் துவங்கும்.

சீன அதிகாரி ஒருவர், அவரின் மேல் அதிகாரியிடம் சொல்வார் “அடுத்த மாதம் பாரதப் பிரதமர் இங்கே வரப் போகிறார். அப்போது அவரிடம் நமக்கு சாதகமாகவும், பாரதத்துக்குப் பாகமாகவும் சில உடன்படிக்கைகளில் கையெழுத்து வாங்குவதற்கு ஏற்பாடுகள் செய்திருக்கிறேன். ” என்றார்.

“அது எப்படி நடக்கும். வாய்ப்பே இல்லை. அவர் மிகத் தெளிவானவர். நடக்க வாய்ப்பே இல்லை”

“அவர் போட மாட்டார். ஆனால் அவரைப் போலவே ஒருவரைத் தயார் செய்துள்ளேன். ஆள்மாறாட்டம் செய்து அவரைப் போட வைப்போம். வெளி உலகுக்குத் தெரியாது. அவருக்கு மட்டும் தெரியும். எவராலும் பின்னால் மறுக்க முடியாது”

“என்ன உளறுகிறாய். அது எப்படி சாத்தியம் ஆகும். ஒரு போதும் நடக்காது.”

“நான் சொல்லும் திட்டத்தை முழுமையாகக் கேளுங்கள். ” என்று கூறி விட்டு விளக்குவார்.விளக்கங்களைக் கேட்டபின், அந்த ஆளையும் அவர் தயாரான விதத்தையும் பார்த்து அனுமதி வழங்கப் படுகிறது.

பாரதப் பிரதமர் வரும் தேதி மற்றும் ஒவ்வொரு நிகழ்வும் நேரத்தோடு தீர்மானிக்கப் படுகிறது. எப்போது எப்படி ஆள்மாறாட்டம் செய்வது என்று எல்லாம் நிமிடங்கள் வரை திட்டமிடப் படுகிறது. முதலில் ஒரு ஒப்பந்த நகல் படித்து ஒப்புதல் அளிக்கக் கொடுக்கப்படும். இந்தியா சொல்லும் எல்லா திருத்தங்களும் ஒப்புக் கொண்டு மீண்டும் நகல் கொடுத்து சம்மதம் (approval) பெற்று விடுவது. பின்னர் பொலி ஆள் கையெழுத்து போட வேறு ஒரு ஒப்பந்தத்தை கொடுத்து கையெழுத்து வாங்கி விடுவார்கள்.

பாரதப் பிரதமருக்கு சீனப் பிரதமர் அவர் அணிவதற்கான உடை நல்லெண்ண அடிப்படையில் வழங்கப்படும். இதே உடையில் சீன டூப்ளிகேட் ஆசாமி யும் ரெடியாவார்.

கையொப்பம் இடும் மீட்டிங்குக்கு போகும் முன்னர் அவர் பாத்ரூம் போய் கொஞ்சம் தயார் செய்து கொள்ள நேரம் தரப்படும். அந்த சமயத்தில் அந்த அறைக்கு செல்லும் போது இந்திய செக்யூரிட்டி வெளியிலேயே நின்று விடுவார்கள். அந்த அறையில் அவரை பூட்டி அடைத்து விட்டு அங்கே தயாராக இருக்கும் டூப்ளிகேட் ஆசாமி வெளியே வருவார். கூட்டம் முடிந்து கையெழுத்தாகும் வரை எல்லாம் வீடியோ எடுக்கப்படும். நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். பின்னர் கூட்டம் முடிந்ததும் மீண்டும் பாத்ரூம் செல்வார். நிஜமான பிரதமர் வெளியே வருவார்.
டூப்ளிகேட் ஆசாமி அதற்குப்பின் என்ன ஆவார் என்று சொல்லவே முடியாது.

வெளியே வந்த பின்னர்தான் என்ன நடந்தது என்று தெரியும். அதற்குள் கையெழுத்தான ஒப்பந்த விபரங்கள் உலகம் முழுவதும் நேரலையிலேயே ஒளிபரப்பாகிவிடும்.

இந்தியாவிலும், உலக அளவிலும் அது பற்றி பேசப்படும். பிரதமர் இந்தியாவுக்கு துரோகம் செய்து விட்டார் என்று பரவும்.

அது தெரிந்த பின்னும் பிரதமரால் ஒன்றும் செய்ய முடியாது தான் மாற்றப் பட்டு வேறு யாரையோ வைத்து கையெழுத்துப் போட்டு விட்டார்கள் என்று சொன்னால், யாரும் நம்ப மாட்டார்கள். நிரூபிக்தவும் முடியாது. நேரலையிலேயே எல்லோரும் பார்த்து விட்டார்கள். அப்படி மாற்றி விட்டார்கள் என்று சொன்னாலும் அவமானம். எதிர்ப்பு காரணமாக பிரதமர் இப்படி திசை திருப்பப் பார்க்கிறார் என்று சொல்வார்கள். நல்ல திட்டம்.

பின்னர் பாரதப் பிரதமர் வருவார். அவரோடு பல பாதுகாவலர் களோடு ஒரு மிக உயர்ந்த பதவி வகிக்கும் ஒரு ராணுவ அதிகாரியும் வருவார். சைனாவின் திட்டத்தில் அவர் வருவது பற்றி இல்லை. மறுக்கவும் முடியாது.

ஆனால் திட்டத்தில் எந்த மாற்றமும் இல்லை. அவரும் இருந்து விட்டுப் போகட்டும். அவரையும் கண்காணிப்போம் என்று தீர்மானம் செய்கிறார்கள்.

நாடகம் விரு விருப்பாகச் செல்லும். அந்த அதிகாரி பிரதமரை விட்டு விலக மாட்டார். பிரதமர் ஓய்வெடுக்கும் போதும் இவர் ஓய்வெடுக்க மாட்டார்.

அவருக்கு சீன மொழியும் தெரியும். அது சீன அதிகாரிகளுக்குத் தெரியாது. அவர்களுக்கும் ரகசியமாக பேசிக் கொள்வதிலும் செய்கையிலும் ஏதோ சந்தேகம் தட்டும். சீனாவில் இருக்கும் இந்திய உளவாளிகள் மூலம் சில விஷயங்கள் தெரியவரும். பின்னர் பல விதத்திலும் ஆராய்ந்து விஷயத்தை தெரிந்து கொள்வார். அதை வெளியில் சொன்னால், மறுப்பார்கள், நிரூபிக்கவும் முடியாது.

பின்னர் திட்டம் தீட்டுவார்கள். பிரதமரிடம் ஆலோசிப்பார்கள். அவர்கள் திட்டம் தெரியாத மாதிரியே நடிக்க வேண்டும். பாத்ரூமில் மாராட்டம் நடக்காமல் பார்த்துக் கொள்வது. நமக்கு விஷயம் தெரியாவிட்டால்தான் நம்மை உள்ளே வைத்து அடைக்க முடியும். அந்த அதிகாரியின் திட்டப்படி டூப்ளிகேட் ஆசாமி யை பூட்டி விட்டு நம் பிரதமரே வெளியே வருவார். அந்த இடத்தில் இல்லாத மற்ற சீன அதிகாரிகள் வருவது டூப்ளிகேட் என்று நினைப்பவர்கள்.

திட்டம் தீட்டப் பட்டு விட்டது. சரியாக நடைமுறை படுத்தப் பட்டதா? வெளியே வருவது நிஜமான பிரதமர் தான் என்று எப்படி உறுதி செய்வது என்று சந்தேகம் வரும். அப்போது பிரதமர் சொல்வார் வெளியே வந்ததும் நான் என் கண்ணாடியேக் கழற்றி என் கைக்குட்டையால் துடைத்துக் கொள்வேன். அப்படி இல்லை என்றால் வெளி வருவது அந்த வேறு ஆசாமி என்று புரிந்து கொண்டு அதற்கு ஏற்றபடி மாற்றிச் செயல்பட வேண்டும். அது என்ன என்றும் தீர்மானம் செய்வார்கள்.

மிக மிக நல்ல வசனங்கள், நடிப்பு, விறுவிறுப்பான காட்சிகள். நிஜமான பல சீனர்களும் நடித்திருந்தார்கள். முழு மேடையும் பயன் படுத்தப்பட்டு, ஒரு 70 mm படம் பார்த்த உணர்வு.

அரங்கத்தில் எல்லோரும் பக் பக் என்று காத்திருந்தோம். பிரதமர் ஓய்வு அறைக்குள் போவார். 5 நிமிடங்கள் கழித்து வெளியே வருவார். மெல்ல மூக்குக் கண்ணாடியேக் கழற்றுவார், கைக்குட்டையால் கண்ணாடியை துடைத்து மாற்றிக் கொள்வார்.

அரங்கமே கை தட்டலில் அதிர்ந்தது. நாடகம் முடிந்தது.

என் அதிர்ஷ்டம் இரண்டே முறை அதுவும் ஒரே இடத்தில் போடப்பட்ட நாடகத்தை நான் பார்க்க வாய்ப்பு கிடைத்தது.