A Child Widow’s story- Monica Felton

          தமிழாக்கம் – சேவைக்கு ஒரு சகோதரி – அநுத்தமா

அநுத்தமா ராஜேஸ்வரி பத்மநாபன் #Anuthama #Writer #அனுத்தமா #எழுத்தாளர் - YouTube  Routemybook - Buy Sevaikku Oru Sagothari [சேவைக்கு ஒரு சகோதரி] by Anuthama [ அநுத்தமா ] Online at Lowest Price in India                 

   

 

 

 

 

 

 

     

சில புத்தகங்களைப் பற்றிய பிரமிப்பு அந்த எழுத்து யாரைப் பற்றியதாக உள்ளதோ அவர்களைப் பற்றி அறிந்து கொள்வதனால் இருக்கும். ஆனால் அவர்களைப் பற்றி எழுதுவோரும் தம் எழுத்து வலிமையால் அவர்கள் வரலாற்றையோ கதையையோ சுவாரசியமாகச் சித்தரிப்பதனால்தான் நாம் அறிந்து கொள்ளும் நபர் பிரமிப்புக்கு உரியவராக மாறுகிறார் என்பது என் தாழ்மையான கருத்து. கதையும் அப்படிப்பட்டதுதான்.

          இந்த வகையைச் சேர்ந்ததுதான் நான் இப்போது உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகும்  சகோதரி சுப்புலட்சுமி அவர்களைப் பற்றிய வாழ்க்கை வரலாறும். மோனிகா ஃபெல்டன் என்பவரால் A Child Widow’s Story என ஆங்கிலத்தில் எழுதப்பட்டு, பிரபல எழுத்தாளர் அநுத்தமா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு ‘சேவைக்கு ஒரு சகோதரி’ எனும் தலைப்பில் தொடராகக் கல்கியில் நீண்ட நாட்கள் வெளிவந்தது. என் தாயாரும் நானும் பக்கங்களை சேமித்து ‘பைண்ட்’ பண்ணி வைத்துக் கொண்டோம். அதிசயமாக, இதனை யாருமே இன்றுவரை புத்தகமாக வெளியிடவில்லை. காரணம் ஏன் எனத் தெரியவில்லை. இது ஒரு ஆங்கில நூலின் (அனுமதி பெற்றுச் செய்யப்பட்ட) மொழியாக்கம் என்பதாலா? கட்டாயம் இது காரணமாக இருக்க முடியாது. இருப்பினும் பலர் அறிந்திராத அதிசயமானதொரு பெண்மணியைப் பற்றி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ள எண்ணினேன். ஒரு பத்துப்பேராவது அறிந்து கொண்டால் இதனை எழுதியதன் பயனை அடைந்தேன் எனலாம்!

          சமகாலத்தில் நம்மிடையே வாழ்ந்த ஒரு பெண்மணியைப் பற்றிய இந்த நூல் சிறுவயதில் (பதின் பருவத்தில்) இதைப்படித்த என்னைப் பெருவியப்பில் ஆழ்த்தியிருந்தது. நம் நாட்டின், ஆசாரமான பிராமணக் குடும்பங்களின் சில பழக்க வழக்கங்கள் அதிர்ச்சியை அளித்தன. இந்த நூல் சகோதரி சுப்புலட்சுமி எனும் அம்மையாரைப் பற்றியது. இளம் வயதிலேயே விதவையாகிவிட்ட இவர் தம் பெற்றோர், குடும்பத்தின் ஆதரவுடன் மேற்படிப்புப் படித்து, ஆசிரியையாகப் பணியாற்றி, தன்னைப்போன்ற இளம் விதவைகளின் வாழ்க்கையின் மேம்பாட்டுக்காக எவ்வாறு உழைத்தார் என்பதைப் பற்றியதே இந்த நூல். மோனிகா ஃபெல்டன் அவர்கள் அம்மையாரை அவருடைய முதிய பிராயத்தில் நேர்காணல் கண்டு எழுதியது. சகோதரியின் உரையாடல்களாகப் பெரும்பகுதி அமைந்திருப்பதனால் படிக்க சுவாரசியமாக உள்ளது.

          வாருங்கள், புத்தகத்தினுள் நுழையலாம்.

          சிவில் பொறியாளராக இருந்த சுப்பிரமணிய ஐயர் – விசாலாட்சி தம்பதிகளின் முதல் குழந்தை தான் சுப்புலக்ஷ்மி. மயிலாப்பூரில் பிறந்த அவரைத் தொடர்ந்து மேலும் நான்கு பெண்குழந்தைகள் அவர்களுக்கு இருந்தன . ஆண்குழந்தைகள் பிறந்தவை இறந்து போயினராம். அவர்களுடையது ஆசாரமான பிராமணக் குடும்பம். மூன்று வயதில் சுப்புலக்ஷ்மி பள்ளிக்கூடம் செல்ல ஆரம்பித்தாள். பெரும்பாலான எல்லாக் குழந்தைகளுடையதையும் போன்ற அழகான சிறுமிப்பருவம். ஆனால் அவ்வப்போது நிகழ்ந்த சில நிகழ்வுகள் அவளுடைய இதயத்தையே உலுக்கி விட்டன என்கிறார். அவற்றுள் ஒன்று, தங்கள் குடும்பத்துடன் வாழ்ந்த சித்தி ஏன் நார்மடிப் புடவையே உடுத்துகிறார், தலைமயிர் மழிக்கப்பட்டு, முக்காடிட்டுக் கொண்டுள்ளார் என்பது புரியாத புதிராய் இருந்தது. அதனைப் பற்றித் தன் தாயிடம் கேட்டதும், அவர் உடனே உடைந்து அழுததும் சுப்புலக்ஷ்மிக்கு ஒரு பெரும்புதிராகவே இருந்ததாம். 

          ஒரு உறவினர் வீட்டிற்கு விடுமுறைக்குச் சென்றது, அங்கு குழந்தைகள் எல்லாருக்கும் விளக்கெண்ணெய் கொடுத்து வயிற்றைச் சுத்தம் செய்தது ஆகியவற்றை எல்லாம் போகிறபோக்கில் விவரித்திருப்பார். நல்ல நகைச்சுவையாக இருக்கும் பகுதிகள் அவை.

          அங்கும் ஒரு சமயம் பக்கத்து வீட்டில் இரண்டு வயதுகூட நிரம்பாத ஜானகி எனும் ஒரு பெண்குழந்தை தெருவில் விளையாட வந்ததும், மற்ற ஏழெட்டு வயதுச் சிறுமிகள் அப்பெண் குழந்தையை, “கழுத்தில் தாலி இல்லை, துக்கிரி, விதவை,” எனக் கேலிசெய்து அவளைச் சுற்றி நின்று ஆரவாரித்தனர். அக்குழந்தை செய்வதறியாது அழுது தீர்த்தது. அதன் தாய் விரைந்துவந்து அச்சிறு குழந்தையை எடுத்துக்கொண்டு போனாள். மற்ற பெண்குழந்தைகள் (ஏழெட்டு வயதே நிரம்பியவர்கள்) அனைவரும் கழுத்தில் தாலி அணிந்திருந்தனர்; அதாவது அவர்களுக்குத் திருமணமாகி விட்டது. இதைப் பார்த்துக் கொண்டிருந்த சுப்புலக்ஷ்மிக்கு இந்நிகழ்ச்சி அழியாத ஒன்றாக உள்ளத்தில் பதிந்து விட்டது எனக் கூறியுள்ளார்.

          இது என்ன வழக்கம்? இரண்டு வயதுக் குழந்தைக்குத் திருமணம் செய்வித்து, அவள் விதவையும் ஆகிவிடுவது எதில் சேர்த்தி? விதி எனக் கூறி விடுவது சுலபம். படிக்கும் நமக்கும் உள்ளத்தில் துயரம் எல்லை மீறுகிறது. கண்களில் நீர் துளிர்க்கின்றது. சகோதரி சுப்புலக்ஷ்மி இதனைத் தம் வாழ்க்கை முழுதும் அடிக்கடி நினைவு கூர்வாராம்.

          சுப்புலக்ஷ்மிக்குப் பதினோரு வயது முடிந்து பன்னிரண்டு துவங்கும்போது திருமணம் நிச்சயிக்கப்பட்டு, திருமணமும் நடைபெறுகிறது. தன் கணவனான அந்தப் பையனைப் பற்றிய எதுவுமே அவளுக்கு நினைவில் நிற்கவில்லை. மாறாகத் தான் உடுத்திக் கொண்டிருந்த தனக்கே தனக்கான ஜரிகை நிறைந்த அழகான பட்டுப்புடவை மீதே அவளுடைய கருத்தெல்லாம் இருந்தது. திருமணத்தின்பின், தாய்வீடு திரும்பி விடுகிறாள். ஏனெனில், அவள் வயதுக்கு வந்த பின்னரே கணவன் வீட்டிற்கு அனுப்பப் படுவாள். ஆனால் விரைவில் அந்தப் பையன் இறந்துவிட்ட துக்கச்செய்தி வருகிறது. அவளுக்கு ஒன்றுமே புரியவில்லை. வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வருவோரும் போவோரும், அவளை அனுதாபத்துடன் பார்க்கும்போதும் பேசும்போதும் அவளால் ஒன்றும் செய்ய இயலவில்லை. ஆசிரியர் எழுதுகிறார்: ‘பெண்ணாய்ப் பிறந்ததன் நற்பலன்களை மனையாட்சி, தாய்மைப்பேறு போன்றவற்றை அவள் இனி அனுபவிக்கவே முடியாது. இன்றிலிருந்து வாழ்க்கையின் சின்னஞ்சிறு இன்பங்கள் கூட அவளுக்குக் கிட்டாது. கல்யாணங்களுக்கோ, வேறு விதமான கேளிக்கைகளுக்கோ செல்ல அவள் அனுமதிக்கப்பட மாட்டாள். வயது வந்தவுடனேயே அவள் உரு மாற்றப்பட்டுவிடும். தலை மொட்டை அடிக்கப்படும். ரவிக்கைகள் போட்டுக் கொள்ளக்கூடாது. தன் உடலை மறைத்துக்கொள்ள அவளுக்கு வெள்ளை நூல் புடவை (நார்மடி) தான் கிடைக்கும். நாளைக்கு ஒருமுறை எளிமையான உணவுதான் கிடைக்கும். ஊறுகாய்கள், வெற்றிலைபாக்கு போன்றவைகளை அவள் உண்ண அனுமதி இல்லை.’

          இவற்றையெல்லாம் சுப்புலக்ஷ்மி அறியாமல், உணராமல் வளர அவளைத் தாய், தந்தை, சித்தி ஆகியோர் அரவணைத்துக் காத்தனர். தந்தை அவளுக்குக் கல்வியைத் தொடர்ந்து கற்பிக்கப் போவதாகக் கூறியபோது அவளால் அதனை நம்பவே இயலவில்லை. ஆங்கிலம் கற்பிக்கப்பட்டது. உடன் பூகோளம், சரித்திரம், கணிதம், சம்ஸ்கிருதம் ஆகியவற்றையும் கற்றாள். மற்ற விதவைகளுக்குச் செய்வதுபோல் மேற்காணும் அலங்கோலங்களை அவளுடைய பெற்றோர் அவளுக்குச் செய்யவில்லை. மாறாக, மேற்கல்வியும் படிக்க வைத்தார்கள். ஏப்ரல் 1911-ல் மாநிலத்திலேயே முதல் பெண்ணாக முதல் வகுப்பில் (ஹானர்ஸ்) அவள் மதராஸ் பிரஸிடென்சி கல்லூரியில் தேர்ச்சி பெற்றாள்.

          இவற்றை எல்லாம் சுலபமாகச் செய்துவிட இயலவில்லை. பல போராட்டங்களின் பின், எதிர்ப்புகளைத் தாண்டி, அன்பான பெற்றோரின் துணையுடன் சாதித்தார்.

          1912ல், சாரதா பெண்கள் அமைப்பு என ஒன்றினைத் துவக்கினார். இது வீட்டுப் பெண்கள் பெண்கள் சந்தித்துக் கொள்ளவும், குழந்தை விதவைகள் புனர்வாழ்வு, மறுமணம், விதவைகள் மறுவாழ்வு, அவர்களை அடக்கும் முறைகளை ஒழிப்பது, அவர்களின் கல்வி, வாழ்க்கைக்கான வழிகள் ஆகிய பிரச்சினைகளைப் பற்றி விவாதிக்கும் ஒரு அமைப்பாக இருந்தது. அந்தக் காலத்தில் இவர்களுக்கான வேலை வாய்ப்புகள் மிகவும் குறைவாகவே இருந்தன. பின்பு தனது பிரிட்டிஷ் ஆசிரியைகளின் உதவியோடும் ஒத்துழைப்போடும் சாரதா இல்லம் எனும் விதவைகள் மறுவாழ்வு இல்லத்தை அந்தக்காலத்து ஐஸ்ஹவுஸ் சமீபத்தில் அமைத்தார்.

          இதைப் பற்றியசுவாரசியமான ஒரு நிகழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறார்: கடற்கரைப் பக்கமாக இருந்தது ஐஸ் ஹவுஸ். சகோதரி சுப்புலக்ஷ்மியின் விதவைகள் மறுவாழ்வு இல்லம் எண்ணிக்கையில் பெருகி வந்ததனால் பெரிய வேறொரு இடத்திற்குக் குடிபோகக் கருதி ஐஸ் ஹவுஸ் கட்டிடத்திற்கே குடிபோகின்றனர். பெண்கள் தங்கள் சாமான்களை எல்லாம் எடுத்து வைத்துக்கொண்டு விட்டு, மாலை நேரத்தில் பார்த்தால் இரு சிறுமிகளைக் காணவில்லை. யாராவது கெட்ட நோக்கத்துடன் கடத்திக்கொண்டு போயிருப்பார்களோ என்று அனைவரும் பயந்து தேடலானார்கள். நீண்ட நேரத் தேடலின் பின்பு ஒரு இருண்ட அறையில் இருவரையும் கண்டுபிடிக்கிறார்கள். இருவரும் சிறிதும் பயப்படாமல் இருந்தனராம். ஏனென்றால் அது ஐஸ் ஹவுஸ் ஆனதனால் இரு சிறுமிகளும் ஐஸ் எனப்படும் பனிக்கட்டியைத் தேடிக் கொண்டு இருந்தார்களாம். நமக்கு இதைப் படிக்கும்போது சிரிப்பு வந்தாலும், இத்தனை வெகுளியாக இருக்கும் சிறுமிகளை  குழந்தைமை கழியாத பருவத்திலேயே திருமணம் எனும் பந்தத்தில் புகவைத்துப் பின் அவர்கள் விதவையானதும், செய்யக்கூடாத அலங்கோலங்களைச் செய்துவந்த நமது சமூகத்தை நினைத்தால் மிகவும் வருத்தமாக ஆயாசமாக இருக்கிறது.

          சகோதரியின் செய்கைகளுக்கெல்லாம் ஆசாரமான குடும்பங்களிலிருந்தும் மனிதர்களிடமிருந்தும் பெருத்த எதிர்ப்பும், கண்டனங்களும் எழுந்தவண்ணமே இருந்தன. இவை அனைத்தையும் பொறுத்துக் கொண்டு திடமாக நின்று போராடியவர் சகோதரி சுப்புலக்ஷ்மி. புத்தகத்தைப் படித்தால் அதிலேயே ஆழ்ந்து விடுவோம்.      

          பின்பு சாரதா வித்யாலயா எனும் கல்வி நிறுவனத்தையும் அமைத்தார். லேடி விலிங்டன் பயிற்சிக் கல்லூரியை அமைத்து அதன் முதல் பிரின்சிபாலாகவும் இருந்தார். பெண்களின் புனர்வாழ்வுக்காகப் பல அமைப்புகளை அமைத்தவர் அவற்றின் தலைமைப் பொறுப்பையும் வகித்தார்.

          முக்கியமாக குழந்தை விவாகங்களை எதிர்த்துக் குரல் கொடுத்தார். குழந்தைத் திருமணம் தடுப்பு மசோதாவை 1930-ல் தீவிரமாக ஆதரித்துக் குரல் கொடுத்தார். பெண்களின் திருமண வயதை உயர்த்த முயற்சிகளைக் கைக்கொண்டார். இளம் விதவைகளின் மறுமணத்தையும் ஆதரித்தார்.

          இவற்றையெல்லாம் போற்றும் விதத்தில் முற்போக்கான சிந்தனையாளரான இவருக்கு பிரிட்டிஷ் அரசால்1920-ல் கைசர்-எ-ஹிந்த் எனும் தங்கப்பதக்கமும். 1958-ல் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டன.

                                                  —————–

          ஒரு சூழ்நிலையின் கொடூரத்தை நமக்கு உணர்த்தி, அதன் அருகாமையில் சென்றுவிட்ட ஒரு சிறுமியின் மூலமாகவே, அவளுடைய அன்பான குடும்பத்தார் அவளுக்குப் பக்கபலமாகத் துணைநின்று அரிய பெரிய செயல்களை ஊரையும் நாட்டையும் எதிர்த்துக்கொண்டு செய்யவைக்க எது இத்தகைய துணிச்சலைத் தந்தது?

          இதுவே பிரமிப்பாக உள்ளது. சகோதரி சுப்புலக்ஷ்மி எனும் பெண்மணி எங்கோ வானளாவ உயர்ந்து நிற்கிறார்.

          இவற்றையெல்லாம் இப்படி வெறும் கட்டுரையாகப் படித்தால் சுவாரசியமாக இருக்காதுதான். இவற்றை அன்றாட வாழ்க்கை நிகழ்வுகளுடன் நினைவுகூர்ந்து, சுவையான செய்திகளாக சுப்புலக்ஷ்மி அம்மையார் மோனிகா ஃபெல்டன் அவர்களுடன் அழகாகக் கோர்வையாகப் பகிர்ந்துகொண்ட விதம் சுவைகுன்றாத ஒரு நாவலைப் படிப்பது போலுள்ளது என்றால் மிகையேயல்ல. ஆனால் வாசகர்கள் எவ்வாறு இதனைப் படிப்பார்கள் என்று ஆயாசம் ஏற்படுகிறது. இதனை அனுமதி பெற்று புத்தகமாக யாரேனும் வெளியிட வேண்டும். நம்மிடையே வாழ்ந்த ஒரு அமைதியான ஆனால் உள்ளம் தளராது உயர்ந்த புரட்சிகரமான செயல்களைச் செய்த பெண்மணியை நாம் போற்றுவதற்கு இதுவே வழியாகும்.

                                                                                [மீண்டும் சந்திப்போம்]

                              ———————————————————