பூவுலகின் கடைசிக் காலம் – கிருஷ்ணா டாவின்சி

வகை – கட்டுரைகள்
பதிப்பகம் – BOOKS FOR CHILDREN
முதல் வெளியீடு – டிசம்பர் 2007
விற்பனை உரிமை – பாரதி புத்தகாலயம்
மொத்த பக்கங்கள் – 108
விலை – ரூ.50/-

இங்கு தமிழ்நாட்டில் ஒரு நதி வறண்டு போவதற்கும், எங்கோ ஒரு நாட்டில் டெல்டா எண்ணெய் வயல்களில் வெளியிடப்படும் இயற்கை எரிவாயுவுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்? டெல்டா வயல் பகுதிகளில் பெரிய எண்ணெய் கம்பெனிகள் வருகைக்கும் காடுகளில் இருந்து ஆதி குடிகள் ஆன பழங்குடிகள் துரத்தப்படுவதற்கும் உள்ள தொடர்பு என்ன?

காடுகளை அழித்து விவசாய பண்ணைகள் அமைப்பதற்கும், பனிப்பாளங்கள் உருகுவதற்கும் பனிச்சிகரங்கள் மறைவதற்கும் உலக வெப்பமயமாதலுக்கும் என்ன தொடர்பு? பசுமை புரட்சியின் பேரிலும் அறிமுகப்படுத்தப்பட்ட வீரியமிக்க விதைகளுக்கும், பெருகப்பட்ட தானியங்களின் வளர்ச்சிக்கு பிறகும் பெரும்பாலான மக்கள் வறுமைக்கோட்டிற்கு கீழ் தொடர்வதும், விவசாயிகளின் தொடர் போராட்டங்களும் எதனால் விளைகிறது?

நீலப்புரட்சியின் பெயரில் செயற்கை தீவனங்கள் மூலம் கடல் பண்ணைகளில் மீன்கள் வளர்த்தலுக்கும், காணாமல் போன மீன் இனங்களுக்கும், கடலில் அமைக்கப்படும் கடல் தொழிற்சாலைகளுக்கும் என்ன தொடர்பு இருக்க முடியும்?

ஈரநிலங்கள் அதாவது மார்ஷ் நிலம் எனப்படும் சதுப்பு நிலங்கள், கடலில் காணப்படும் பவளப்பாறைகள், பனிப் பிரதேசங்களில் உள்ள பனிச்சிகரங்கள், பனிமலைகள், முக்கியத்துவம் என்ன?

விலங்கு பண்ணைகள், விவசாய பண்ணைகள், கடற்பண்ணைகள், பசுமை புரட்சி, நீலப் புரட்சி, தாராளமயமாக்கல், தனியார் மயமாக்கல் போன்ற ஒற்றை சொல்லுக்கு பின்னால் இருக்கும் நுண்ணரசியல்கள் என்ன? அறிவியல் வளர்ச்சிக்கும் இயற்கையின் அழிவுக்கான தொடர்பு என்ன?

இப்படி ஏராளமான கேள்விகளை நம்முள் விதைத்து அதற்கான விடைகளுக்கு குறிப்புகளும் அடங்கிய 24 அத்தியாயங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பு இந்த பூவுலகின் கடைசிக் காலம்.

நைஜீரிய டெல்டாவில் நிகழ்ந்த ஷெல் எண்ணெய் கம்பெனி ஊடுருவலில் ஆரம்பித்து கென்சரோ விவாவை அறிமுகம் செய்து பின்னர் தென் அமெரிக்காவின் அமேசான் காடுகள் அழிப்பு குறித்து கட்டுரை நகர்கிறது.

சோயா உற்பத்திக்காகவும், மாட்டிறைச்சி ஏற்றுமதிக்காகவும் அழிக்கப்படும் அமேசான் காடுகள், அமேசான் காடுகளில் உள்ள பழங்குடி மக்கள் பாதுகாப்பு அமைப்பு தலைவர் சிட்னி பொஸல்லோவை பற்றியும் அவர் போராட்டம் பற்றியும் விரிவாக பேசுகிறது நூல். காடுகளின் அழிப்பால் காற்றில் அதிகரிக்கும் கார்பன்டை ஆக்சைடு, புவி வெப்பமயமாதல் உருகும் பனிப்பாறைகள், உயரும் கடல் நீர்மட்டம் இப்படி ஒன்றுக்கொன்று எப்படி இயற்கை தொடர்பில் அமைந்துள்ளது என்பதையும் எளிமையாக பேசுகின்றன கட்டுரைகள்.

தமிழகத்தில் நீடிக்கும் மணற்கொள்ளை, தாராளமயமாக்கல் மற்றும் தனியார் மயமாக்கல் மூலம் நதிகள் தனியார் கம்பெனிகளுக்கு தாரைவார்க்கப்பட்டதால் நிலத்தடிநீர் குறைதல், நீர்நிலைகளில் ஆக்கிரமிப்பு ஏற்படுத்தும் அழிவுகள், தொழிற்சாலைகளின் சாயக்கழிவுகளால் நஞ்சாகிப்போன நிலங்களும் பெருகிய அமில மழை இப்படி ஏராளமான தகவல்கள் உள்ளன.

நூலுக்கு அணிந்துரை எழுதியவர் கோ.நம்மாழ்வார். அணிந்துரையிலேயே இப்புத்தகம் பேசப்போகும் பிரச்சினைகளைப் பற்றி எளிதாக புரியவைத்து விடுகிறார்.

கிருஷ்ணா டாவின்சியின் இயற்பெயர் வெங்கடகிருஷ்ணன். லியோனார்டோ டாவின்சியின் பெயரில் கொண்ட அபிமானம் காரணமாக கிருஷ்ணா டாவின்சி என்று தனது பெயரை மாற்றிக்கொண்டாராம். ஒரு பிரபல வார இதழில் பத்திரிக்கையாளர், நடிகர் மற்றும் எழுத்தாளர் என்று பன்முக திறமை வாய்ந்தவர் என்பது கூடுதல் தகவல். குழந்தைகள் மட்டுமின்றி, பெரியவர்களும் அவசியமாக வாசித்து அறிந்து கொள்ள வேண்டிய நூல் பூவுலகின் கடைசிக் காலம்.