ஆசிரியர்: கோபி கண்ணதாசன்
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்
பக்கங்கள்: 112
விலை: ரூ. 90/-
பதிப்பு: 2016
ஒரு நூலை படித்து முடிக்கும்பொழுது அது சிறுகதைத் தொகுப்பா, கட்டுரை நூலா, சுயசரிதையா என்ற எண்ணமெல்லாம் உருவாக வாய்ப்புண்டா? கோபி கண்ணதாசன் அவர்களின் ‘கவிஞர் அறை – சுஜா-கோபி’ நூலை படித்து முடித்தபொழுது எனக்கு அந்த உணர்வு உண்டானது. இது மிகைப்படுத்தல் அல்ல.
கண்ணதாசனின் புதல்வர், ‘கவிஞர் அறை’ என்ற தலைப்பில் எழுதுகிறார் எனில், அது அவர் பாடல்கள் எழுதிய அறை சம்பந்தப்பட்டதாக, அந்த அறையில் கவிஞர் சந்தித்த மனிதர்களைப் பற்றியதாக அல்லது பாதுகாத்த பொருட்களை சுற்றிச் சுழல்வதாக இருக்குமென்ற யூகத்துடனேதான் எவருமே படிக்கத் துவங்குவார்கள். ஆனால், அனைத்தையும் பொய்யாக்குகிறது இந்த நூல்.
எழுத்தாளரின் உரையில், ‘சிறிது கற்பனையையும் சேர்த்தே எழுதியிருக்கிறேன்’ எனக் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால், அந்தக் கற்பனை எந்த வடிவில், எங்கே கலந்திருக்கிறதென்பதை இறுதிவரை கிஞ்சித்தும் கண்டுபிடிக்கமுடியாமல் போனதுதான் நூலாசிரியரின் பெருவெற்றி.
ஒவ்வொரு தலைப்பும் ஒரு நாவலின் அத்தியாயம் போன்றோ அல்லது சிறுகதையின் தலைப்பு போன்றோ அமைந்திருப்பது கூடுதல் சிறப்பாகிவிட்டிருக்கிறது. ஒவ்வொரு கட்டுரையிலும் கவிஞரை வலம்வந்த பல்வேறு விதமான மனிதர்கள், வித்தியாசமான சம்பவங்கள் என அனைத்தையும் அழகுற காட்சிப்படுத்தியிருக்கிறார். அத்தனை மனிதர்களுடனும் நூலாசிரியர் இருக்கிறார்.
நூலாசிரியர், ‘இது ஒரு சிறிய வனவாசம்’ என சொல்லிக்கொண்டாலும் நூலின் பின்னணியில் கவிஞரே உலா வருகிறார். தனது வனவாசத்தில் கோபி அவர்கள் தனது தந்தையை அதிகமாக சம்பந்தப்படுத்தவில்லைதான். ஆனாலும், அவரது வாழ்க்கையில் தந்தையின் பாதிப்புகள், தந்தையின் குணாதிசயங்கள், தந்தைக்காக வந்த மனிதர்களுடனான இவரது அனுபவங்கள் என அனைத்துமே கவிஞர் கண்ணதாசனை மனதில் நிறுத்தியபடியே நூலை படிக்கவைக்கிறது.
இடம்பெற்றிருக்கும் கட்டுரைகளில் தொண்ணூறு சதவிகித சம்பவங்கள், நூலாசிரியரின் பள்ளிக்காலங்களில் நடந்தவை. அவற்றை அவர் கட்டுரைகளாக்கியிருக்கும்விதமே நூலை தனித்தன்மையுடன் மிளிரச் செய்கிறது. நான் ஏற்கனவே குறிப்பிட்டதுபோல் எந்தவொரு இடத்திலும் கட்டுரைக்கான நடையோ, செயற்கைத்தன்மையோ, சுய தம்பட்டங்களோ தென்படவில்லை. அத்தனையும் யதார்த்தமும் அழகுணர்ச்சியும் நிறைந்தவை.
அழகான வர்ணனைகளும் காட்சிப்படுத்தியவிதமும் நல்ல கதையொன்றை படிக்கும் உணர்வையே நமக்குள் மேலோங்கச் செய்கிறது. ஒரு நல்ல எழுத்தாளராக வலம்வரவேண்டிய நூலாசிரியர், வேறு ஏதோவொரு துறையில் தீவிரமாக கவனம் செலுத்திக்கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகவே புரிகிறது.
வெளியில் தெரியாமல் போன தந்தையின் சிறந்த குணாதிசயங்கள், உண்மைகள் போன்றவற்றை பல இடங்களில் அழகாய் தெளித்துவிட்டிருக்கிறார். அவரது தவறுகளையும் சுட்டிக்காட்டத் தயங்கவில்லை.
‘கண்ணதாசன் மதுவுக்கு அடிமையானவர், பாடல் எழுதும்பொழுதெல்லாம் குடித்திருப்பார்’ என்பதுதான் மக்களிடையே பரப்பப்பட்டிருக்கும் தகவல். அவர் வெகு குறைவாகவே குடிப்பவர் என்பதும், மது அருந்திவிட்டு அவர் எந்தவொரு பாடலையும் எழுதியதில்லை என்பதும் இந்த நூல் வாயிலாக நான் அறிந்துகொண்ட உண்மை.
‘வாழ்க்கையை வாழ்வதற்கு என் பாடல்களில் உள்ள கருத்துகள் உதவுமானால் போதையில் எழுதுவது பொறுப்பற்றது’ என்ற கவிஞரின் வார்த்தைகள் மலைக்க வைத்தன. இந்த சமூகத்தின்மீது அவருக்கு எப்பேர்ப்பட்ட பொறுப்புணர்வு இருந்திருக்கவேண்டும்?! ஒரு மாபெரும் படைப்பாளியின்மீது எத்தனை வன்மத்துடன் கேவலமானதொரு பார்வையை பதிக்கச் செய்திருக்கிறார்கள்..?
நூல் சிறிதானாலும் குறிப்பிட்டுச் சொல்ல எண்ணற்ற விஷயங்கள் நிறைந்திருக்கின்றன. ஓவியர் ஜீவாவின் எளிமையான கோட்டோவியங்களும் கட்டுரைகளுக்கேற்ப சிறப்பாக அமையப்பெற்றிருக்கின்றன.

