கற்கை நன்றே

“கற்கை நன்றே “ ஆசிரியர்: சுரேஷ் ராம்

 ஜுரோ டிகிரி பதிப்பகம் வெளியீடு, விலை RS 220 பக்கங்கள் 232

 வெளியீடு : 2023 

எழுத்தாளர் ராம்சுரேஷ் அவர்களின் கற்கை நன்றே என்ற நாவல் ஜீரோ டிகிரி பதிப்பகத்தாரின் 2023க்காவன நாவல் போட்டியில் முதல் பரிசு பெற்ற நாவல்,,

 நாவலின் மையக்கரு நமது கல்வி அமைப்புக்கும், கற்பிக்கும் முறைக்கும் , மேலை நாடுகளின் கல்வி அமைப்புக்கும் உள்ள வேறுபாடு . இது அழகாக சொல்லப்பட்டுள்ளது.. இங்கு இளங்கலைப் பட்டப் படிப்பை முடித்துவிட்டு , உயர்கல்வி கற்பதற்காக ஜெர்மனி செல்லும் ராஜேஷ் என்ற இளைஞன்.எதிர்கொள்ளும் சவால்கள் , பிரச்சனைகள் , அவன் கற்றுணர்ந்த விஷயங்கள்  என்பதை சொல்வதின் மூலமாக ,நமது நாட்டு கல்வி மற்றும் கல்வி கற்கும் சூழலையும் விவாத பொருளாக்கி இருக்கிறார்.

ராஜேஷ் சந்திக்கும் அத்தனை பிரச்சினைகளுக்கும்  மூல காரணம் , அவன் இங்கு கல்வி கற்ற விதமும் , வளர்ந்த விதமும்தான்.  இங்கு மதிப்பெண்கள் பெறுவதும் , ஏதாவது ஒரு வேலையில் சேர்வதும்தான் கல்வியின் நோக்கமாக இருக்கிறது . (உதாரணத்திற்கு  இயற்பியல் ,  பொறியியல்,,,,, போன்ற துறைகளில் பட்டம் பெற்று வங்கியில்  வேலை பார்ப்பவர்கள் ஏராளம்).நமது நாட்டில் கல்வியறிவு கருவியாகவும், பிரதான சக்தியாகவும் பார்க்கப்படுகிறது  (knowledge  is power).. ஆனால் ஜெர்மனிக்கு சென்ற பிறகு (Applied knowledge is power) கல்வியறிவு என்பது துறை சார்ந்த செயல்பாடுகளில் பயன்படுத்திச்  செழுமைப் படுத்துவதுதான் என்பது புரிய வருகிறது .MS முடித்துவிட்டு மேற்கொண்டு P.hd  ஐ த் தொடர முடியாத ஒரு சூழ்நிலையில்  தாயகம் திரும்பி , ஒரு கல்லூரியில் வேலை பார்க்க நேரிடுகிறது. இங்கு கல்வி கற்பிக்கும் முறை , கல்லூரிகளை நடத்துபவர்களின் நோக்கம் , மாணவர்களது மனநிலை , சமூகப் பொறுப்பற்ற நிர்வாகம் , அதிகாரமற்ற கல்லூரி முதல்வர்கள் , அரசியல் தலையீடு,,,,,,, ,இப்படி பல விஷயங்களை பேசுபொருளாக்கி இருக்கிறார் .    

 இன்னும் பல செய்திகள் இந்த நாவலில் இருக்கின்றன . உதாரணத்திற்கு காதலும் உண்டு . ஆனால் ஆணும் பெண்ணும் பழகுவதும் , நட்பாகவும் , காதலாகவும் , இருப்பது அங்கு எப்படி பார்க்கப்படுகிறது  என்பதை நாம் அறியலாம் .  செலவுகளை ஈடுகெட்ட  பல  பணிகளை  பகுதி நேரமாக பார்க்கிறார்கள் . ஆனால் அதே மாணவர்கள் இங்கு அந்த வேலைகளை செய்வார்களா ? அப்படிச் செய்தால் சமூகம் அவர்களை எப்படி பார்க்கும் ? இங்கு தொழில் என்பது தொழிலாக மட்டும் பார்க்கப் படுவதில்லை என்பதை நாம் அறியலாம்.

இது போன்று ,வங்கியில் கடன் பெறுவது , பெற்றோர்களின் குடும்ப சூழல் பல்வேறு விஷயங்களை பற்றி எல்லாம் உரையாடுவதற்கான  செய்திகள்  இருக்கின்றன .

.இந்த நாவல் படித்த பிறகு எனக்குத் தோன்றிய விஷயங்கள்                  

  1. அடிப்படை கல்வியை இலவசமாக அல்லது மிகக் குறைந்த கட்டணத்தில் அனைவருக்கும் கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் பொறுப்பு தானே?
  2. ஒரே மாநிலத்தில் பல பாடத்திட்டங்கள் இருந்தால். தரமான ஒரே சீரான திறன் மிக்க மாணவர்களை உருவாக்குமா?

 மேலை நாடுகளில் தாய்மொழி மூலமாகத்தான் படிக்கிறார்கள் .  கல்வி என்பது ஒரு வியாபார பொருளா ? இது போன்ற பல விஷயங்களை மேலும் விவாதிப்பதற்கான  களம் அமைத்துக் கொடுத்துள்ளது .