பராரி (ஏழு கடல் ஏழு மலை) – நரன்
புத்தக பெயர் – பராரி (ஏழு கடல் ஏழு மலை)
ஆசிரியர் பெயர் – நரன்
பதிப்பகம் – சால்ட் பதிப்பகம்
வெளியான வருடம் – 2021
பக்கங்கள் – 478
விலை – ரூ.500/-
2020 – 2021இல் ஆனந்த விகடனில் ஏழு கடல் ஏழு மலை என்ற பெயரில் தொடராக வெளிவந்தது.
இந்தியாவின் கடைசி ஊரின் கடைசி வீட்டிலிருந்து வெவ்வேறு காலகட்டத்தில் ஒரே திசையில் பயணம் மேற்கொள்ளும் தந்தை மற்றும் மகன்வழி கதைகள் பின்னிப் பிணைந்து நகர்வதுதான் பராரி.
1950களில் குடும்பம் சிதைந்து வறுமை கவ்வும் யாருமற்ற சூழலில் தந்தையும், 1970களின் பிற்பாதியில் தமையன் உயர்சாதி பெண்ணை மணந்து வேறூரில் புகலிடம் தேடி ஓடியதால் தன்னுயிரைக் காப்பாற்றிக் கொள்ள மகனும் ஒரே சாலையில் ஒரே திசையில் பயணத்தை மேற்கொள்கின்றனர்.
அந்த தந்தையின் பயணத்தில் ஒரு காட்பாதராக அவனை வழிநடத்தும் கொம்பையாவும், சகோதரனாக மலையரசனும், மூக்கையா, முருகராசா, கிணறுபூதத்தான் இன்னும் பலரும் அறிமுகமாகின்றனர்.
மகனது பயணத்தில் வேம்பு, மாடசாமி, காயம்பூ, பரமசுந்தரி, லேயா அறிமுகமாகின்றனர்.
தந்தை கரியன் பயணம் விருதுநகர் மாட்டுச்சந்தையில் தொடங்கி மேலப்பாளையம் மாட்டுச் சந்தை, ஈரோடு கம்பம் கழுதைச் சந்தை பிறகு ஆந்திரா நெல்லூர்ச் சந்தை, தொடர்ந்து எங்கெங்கோ சுற்றி கங்காவரம் சந்தை மற்றும் ஜெய்சால்மரில் குதிரைச் சந்தையில் தனக்கானத் துணையை கண்டறிந்து நாடோடி வாழ்க்கைக்கு முழுக்குப் போடுகிறார்.
மகன் சூரவேல் கன்னியாகுமரியிலிருந்து தப்பியோட ஆரம்பித்து இருளிவிடும் கங்கையனுக்கு சொந்தமான செங்கல் சூளையில் வேலைக்குச் சேர்ந்து அங்கிருந்து வெளியேறி செங்கல்சூளை கோட்டையில் ஒரு அடிமைச்சந்தை நடத்தும் கும்பலிடம் சிக்கிக்கொண்டு அங்கிருந்து தப்பித்து நெல்லூர், காவாலி, ஓங்கோல் , இந்தூர் வழியாக இந்தியா நிலப்பரப்பின் முதல் ஊரான மாணாவில் முதல் வீட்டில் உள்ள பெண் லேயாவை சந்தித்து உரையாடுவதோடு நாடோடி பயணத்துக்கு முடிவு வருகிறது.
மகன் சூரவேல் பயணத்தைக் காட்டிலும் தந்தை கரியனது பயணமனைத்திலும் ஒவ்வொரு கிளைக் கதைகள் முளைத்து சுவாரசியம் கூட்டுவதாக எனக்குத் தோன்றியது.
எனக்கு மிகவும் பிடித்த கதாப்பாத்திரங்களில் முக்கியமானவர்கள் கொம்பையா, மூக்கய்யா மற்றும் வேம்பு. காளைகள் முன்னே ஆகிருதியாக தலைவன்போல நடந்து செல்லும் கொம்பையாவாகட்டும், அவருடைய பிரம்மச்சாரி வாழ்க்கை பின்னணியும், எவராலும் வெல்ல முடியாத கொம்பையா நட்புக்காக அவரே மரணத்தை விரும்பி ஏற்றுக் கொள்ளும் காட்சிகளிலும் மொத்தமாக நெஞ்சை அள்ளுகிறார்.
வேம்பு காலங்காலமாக பெருமைக்காக பெண்கள்மீது திணிக்கப்படும் குடும்பவன்முறைக்காக பழியாகும் கதாபாத்திரம். வயதில் மிகவும் மூத்தவருக்கு வாக்கப்பட்டு அவரால் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும் வேம்பு, சூரவேலிடம் கடைசியாகப் பேசும் காட்சிகள் கனத்தைக் கூட்டுகிறது.
இந்தத் தொடர்கதையின் ஒவ்வொரு அத்தியாயமும் வாசிக்கையில் கண்முன்னே காட்சிகளாக விரிவது கூடுதல் சிறப்பு. ஒவ்வொரு சந்தையிலும் கொம்பையா, பீமராசா போன்ற ஆளுமைகள் நமது கண்களில் படுவது தவறுவதில்லை.
பராரி என்றால் பிழைப்பைத் தேடி வேறொரு இடத்திற்கு புலம் பெயர்ந்த மக்களை குறிக்கும் சொல். பயணத்தை விரும்பும் எவருக்கும் நிச்சயமாக இந்த நாவல் பிடிக்கும் என்று நினைக்கிறேன்.
நாவலின் ஒவ்வொரு அத்தியாயத்தின் ஆரம்பத்திலும் எழுத்தாளர் காட்டும் மேற்கோள்கள் ஒவ்வொரு தனிக்கதைக்கான கருவாக பயன்படுத்தலாம். எத்தனை தடவை வாசித்தாலும் சலிப்பு தட்டாத ஒரு நாவல்.
வாசிப்பை தொடங்க வேண்டும் என்று விருப்பப்படும் ஒருவர் தாராளமாக பராரியில் இருந்து வாசிப்பு பயணத்தைத் தொடங்கலாம்.

