மன்னார் கண்ணீர்க்கடல் (இராமேஸ்வரத்தீவு மீனவர்கள்)
நூலின் பெயர் – மன்னார் கண்ணீர்க்கடல் (இராமேஸ்வரத்தீவு மீனவர்கள்)
ஆசிரியர் – வறீதையா கான்ஸ்தந்தின்
பதிப்பகம் – தடாகம்
வகை – ஆய்வு மற்றும் பயணக் கட்டுரைகள்
முதல் பதிப்பு – 2015
பக்கங்கள் – 144
விலை – ரூ.120/-
மன்னார்க் கடலில் சோற்றுக்கும் இரத்தத்துக்கும் இடையில் ஒரு சமன்பாடு திணிக்கப்பட்டுள்ளது. பூர்வக்குடி மீனவர்களின் வாழ்வாதாரம் கடலோடு தொடர்பில்லாத பெருமுதலாளிகளிடம் சிக்கிக்கொண்டது. அரசியல் கட்சிகளும் ஊடகங்களும் மீனவ தலைமைகளும் இம்முதலாளிகளின் தரகர்களாய் குறுகிப்போன இச்சூழலில் திட்டமிட்டப் பரப்புரைகள் எளிதாய் கட்டழ்வித்துவிடப்படுகின்றன. நடுக்கடலில் பலியிடப்படும் இந்த ஏழை மீனவர்கள் தங்களுக்கான அரசியலைக் கண்டறிவது எப்போது?
மேற்கண்ட முன்னுரை மற்றும் தமிழக ஈழப் பாரம்பரிய மீனவர்களுக்கு சமர்ப்பணம் என்று வாசிக்கும்போது, இந்நூல் பேசப்போகும் விடயங்கள் பற்றி எனக்கு அவ்வளவாக புரிதல் இல்லை. ஆனால் அரிச்சல்முனை மீதான ஆர்வத்தில் இந்நூலை வாசிப்பதற்கு தேர்ந்தெடுத்ததாலும் ஒரு எதிர்பார்ப்பு இருந்தது.
தொடரும் துயரம், சிக்கல்களின் பெரு முடிச்சு, மன்னார் கண்ணீர்க் கடல், அரிச்சல் முனை முதல் ஆத்திக்காடு வரை, கொம்பன் சுறாக்களும் மந்திரக்கோலும், மரண வியாபாரிகளின் தீவு ஆகிய ஆறு கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன. மேற்படி கட்டுரைகள் முறையே காலச்சுவடு (2007, 2008, 2009), உயிர் எழுத்து (2014), தீராநதி (2014) ஆகிய இதழ்களில் வெளிவந்தவை.
தொடரும் துயரம் கட்டுரையில் தென்தமிழக கடற்கரை மீனவர்களுக்கு நடுக்கடலில் நேர்ந்த கொடுமைகள், மரணங்கள் வன்கொடுமை, கொள்ளைகள், இந்திய இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட கைது நடவடிக்கைகள் இப்படி ஏராளமான விஷயங்களைத் தொட்டு, ஆழ்கடல் மீன்பிடி கொள்கை, தமிழக துறைமுகங்கள், சேது கால்வாய், மாநிலந்தோறும் முரண்படும் கடல் மீன்பிடி ஒழுங்காற்று சட்டம் என்று முதல் கட்டுரையை வாசிக்கும் போதே ஒரு அலைப்புறுதல் ஏற்பட்டது.
சிக்கல்களின் பெருமுடிச்சு கட்டுரையில் எல்லை தாண்டுதல் மூலம் தமிழக மீனவர்கள் மீது புனையப்பட்ட கசடுகள் எந்த அளவுக்கு போலித்தனம் கொண்டவை, எல்லைத்தாண்டுதலுக்கு தீர்வு எல்லையை ஒழித்தல் என்பதை விரிவாக பேசுகிறது.
மன்னார் கண்ணீர்க் கடல் கட்டுரையில் விடியாப் பொழுதுகள், இந்திய கடல்பாசிகள் அழிக்கும் கப்பாஃபைகஸ், கடலில் உலவும் அட்டைகள், இலங்கைப் படையின் கடல் கொலைகள், இரட்டை மடி, சேது கால்வாய் திட்ட சார்பும் எதிர்ப்பும் என்று நீள்கிறது பேசப்படும் பட்டியல்.
அரிச்சல்முனை முதல் ஆத்திகாடு வரை கட்டுரையில் பழவேற்காடு, தனுஷ்கோடி மற்றும் இரையுமன்துறை ஆகிய மூன்று கடற்கரை ஊர்களுக்கும் இடையே உள்ள வலுவான முடிச்சைப் பற்றி பேசுகிறது. அதிலும் இராமேஸ்வரத்தீவின் ஆதித்தமிழ்க்குடி மீனவச்சாதிகளாக இடையர், வலையர் மற்றும் கரையார் ஆகியோரைப் பற்றி கூறுகிறது.
கொம்பன் சுறாக்களும் மந்திரக்கோலும் கட்டுரையில் தமிழ்நாட்டுக் கடற்கரை மீனவர்களான மூன்று பிரிவுகளாக வகுத்து அவர்களுக்கு இடையே உள்ள தொழில்முறை மற்றும் பொருளாதார வேறுபாடுகள் குறித்தும் பேசுகிறது.
மரண வியாபாரிகளின் தீவு கட்டுரையில் மண்ணின் குடிகள் குடியேறியவர்களால் எவ்வாறு அந்நியப்படுத்தப்பட்டனர், அதற்கு ஆயுதங்களாக மதம், இனம், மொழி மற்றும் நவீன மயம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பதைப் பற்றியும், காணாமல்போகும் மீனவப் பழங்குடியினர் வாழ்விடங்களைப் பற்றியும் விரிவாக அறிய உதவுகிறது.
வெறுமனே தன்னுடைய கருத்துகளை மட்டும் எழுதாமல் அந்தந்த நெய்தல் நில மக்களிடம் பேச்சு கொடுத்து உரையாடல் பாணியில் சில விவரணைகளை பதிவு செய்திருப்பதும் சிறப்பு. இந்நூல் நிச்சயமாக அனைவரும் வாசித்து அறிந்து கொள்ளவேண்டியது.
– உதகமண்டலம்
மின்னஞ்சல் முகவரி – mathiolidge@gmail.com

