ஆகாசத்தூது! 

சிவசங்கரி சந்திரசேகரன் அறக்கட்டளை வழங்கும் 2025 ஆம் ஆண்டுக்கான அக்ஷர விருது  (நினைவுப் பரிசு, பாராட்டுப் பத்திரம், ரூ 2 லட்சம் பரிசுத் தொகை  உள்ளடக்கியது அக்‌ஷர விருது) எழுத்தாளர் வித்யா சுப்ரமணியம் அவர்கள் எழுதிய ‘ஆகாசத்தூது’ நாவலுக்க வழங்கப்பட்டது. 

ஆகாசத் தூது சாதாரண மனிதர்களின் வாழ்க்கைப் போராட்டங்களையும் நெருக்கடிகளையும் சித்தரிப்பதோடு மனித வாழ்வின் தவிர்க்க முடியாத அம்சங்களான, துக்கம், கடமை, நம்பிக்கை போன்றவற்றின் மீதான சிந்தனைகளையும் தூண்டுகிறது. .

நாற்பதாண்டுகளுக்கும் மேலாக எழுதி வரும் வித்யா சுப்ரமணியம் தமிழக அரசின் பரிசு உட்படப் பல பரிசுகளாலும் விருதுகளாலும் சிறப்பிக்கப்பட்டவர்.

1930 களில் நடக்கும் கதை. ஹிந்து மதம் எனும் சுதந்திரமான, அற்புதமான மதத்தின் வழியில் ஒழுகி, ஹிந்துவாகவே வாழ்ந்து மறைந்த ‘சுவாமி பரதானந்தா’ என்று பெயர் மாற்றமும் செய்து கொண்ட திரு மாரிஸ் ஃப்ரீட்மன் எனும் போலந்து நாட்டுக்காரர், ஒரு தென்னிந்தியக் குடும்பத்திற்குச் செய்துள்ள உதவிகள் வியக்க வைப்பவை. பகவான் ரமண மகரிஷியின் ஆசிரமத்தில் அவரைச் சந்திக்கும் ஏழைப் பிராம்மணர் வேணுகோபால், தனது குடும்பத்துடன் அதுவரை பட்ட துக்கங்கள், துயரங்களிலிருந்து பகவான் ஆசியுடன் விடுதலை பெற்று நல்வாழ்க்கை வாழ்வது பற்றிய நாவல். உண்மை நிகழ்வுகளுடன், தனது கற்பனையையும் கலந்து, வித்யா சுப்ரமணியம் புனைந்துள்ள நாவல் ‘ஆகாசத்தூது’.

நிரந்தர வேலை எதுவுமின்றி, பிராம்மணார்த்தம், சங்கர மடத்தில் எடுபிடி வேலை என்று வாழும் வேணுகோபால், தன் மனைவியின் இறப்பிற்குப் பின், தன் மூன்று குழந்தைகளுடன் வறுமையில் படும் துன்பங்கள் முன் பாதிக்கதை. அன்றைய அக்ரகாரங்களின் பழக்க வழக்கங்கள், பேசும் மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை சிறப்பாக வாசகனின் கண்முன் வந்து நிறுத்துகிறார் வித்யா சுப்ரமணியம். அன்பும், பாசமும் நிறைந்த மனைவி, அனுசரனையான மாமனார்,  இவரின் இரண்டாவது மனைவி, இரக்கமில்லா கனகம், பொம்மனாட்டி இல்லாத குடும்பம் என வீட்டைவிட்டு துரத்தும் வீட்டுக்காரர் சம்புவைய்யர், உடனுக்குடன் உதவும் அடுத்த வீட்டு யக்ஞம் பாட்டி, அருளும் கருணையும் கொண்ட நீலகண்ட சாஸ்திரிகள் எனக் கண்முன் விரியும் அக்ரகார விவரனைகள்!

அரசமரத்தடி முதியவரின் அனுபவப் பகிர்வு, வேணுகோபாலை திருவண்ணாமலை சென்று பகவான் ரமண மகரிஷியை தரிசிக்க வைக்கிறது. அங்குதான் சுவாமி பரதானந்தா எனும் மாரிஸ் ஃப்ரீட்மனை சந்திக்கிறார். அவரது வழிகாட்டுதலில், கிராமத்தில் விட்டு வந்திருந்த குழந்தைகளுடன் பங்களூர் வந்து, வாழ்க்கையில் எப்படி முன்னேறுகிறார் என்பது பின் பாதிக் கதை. 

ரமணரின் உபதேசங்கள், பால் பிரண்டனுடன் ஆன விவாதங்கள் எல்லாம் ஆங்காங்கே உரையாடல்களாகச் சேர்த்து, நாவலை வாசிப்பவர்களுக்கு ஒரு நம்பகத்தன்மையை ஏற்படுத்தியிருப்பது சிறப்பு. கிருஸ்துவாகப் பிறந்தாலும், ஒரு நல்ல இந்துவாக வாழ ஆசைப்படும் ஃப்ரீட்மனின் வாழ்க்கை வித்தியாசமானது மட்டுமல்ல, சுவாரஸ்யமானதும் கூட. இறுதியில் ஃப்ரீட்மன் இறந்துவிட, இந்து முறைப்படி அவர் எரியூட்டப்படுவதும், அவரது அஸ்தி இந்தியாவின் புண்ணிய நதிகளில் கரைக்கப்படுவதும், கயாவில் வேணு அவருக்கு சிராத்தம் செய்து, பிண்டம் போடுவதும் நெகிழ்ச்சியானவை.

எளிமையான நடையில், 1930 முதல் 1970 வரையிலான சமூக, கலாச்சார, வாழ்க்கை மாற்றங்களைச் சொல்லிச் செல்கிறார் வித்யா சுப்ரமணியம். ஆகாசம் கூட குருவின் வடிவம்தான், மெளன குரு. மெளனமாய் அது மனிதருக்குச் சொல்லும் உபதேசங்கள் எத்தனையோ..! என்று விளக்கம் கூறுகிறார் ஆசிரியர். 

வாசிக்க வேண்டிய நாவல் – அக்ரகாரமும், ஆன்மீகமும், மனிதநேயமும், பகவான் ரமண மகரிஷியும் மனதை ஆக்கிரமித்து, அன்புப் பிரவாகமாய் மனதில் பொங்கி வழியும்!