கடந்த டிசம்பர் 2ஆம் தேதியன்று தனது தாயார் ஸ்வர்ணாம்பாள் நினைவாக திரு. இராய செல்லப்பா நடத்திய சிறுகதை போட்டியின் பரிசளிப்பு விழா சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் இனிதே நடந்தேறியது.
முதல் பரிசாக ரூ.ஐந்தாயிரம் 10 கதாசிரியர்களுக்கும், இரண்டாம் பரிசாக ரூ.இரண்டாயிரம் 10 கதாசிரியர்களுக்கும், மூன்றாம் பரிசாக ரூ.ஆயிரம் 15 கதாசிரியர்களுக்கும் வழங்கி மொத்தம் ரூ. எண்பத்தி ஐந்தாயிரம் பரிசுத்தொகையாக வழங்கியுள்ளார். இதைத் தவிர்த்து இளமை போனஸ் என்று ரூ.ஐநூறு 31 வயதிற்கு கீழ் உள்ள பரிசு பெற்ற எழுத்தாளர்களுக்கு வழங்கி சிறுகதை போட்டிகளில் ஒரு புதிய தரநிலையை நிர்ணயித்து விட்டார் அவர்.
விழாவுக்கு தலைமை தாங்கிய ‘லேடீஸ் ஸ்பெஷல்’ இதழின் ஆசிரியர் திருமதி. கிரிஜா ராகவன் அவர்கள் “தங்கத்தை கூட ஒருவர் மேலும் அழகு படுத்திவிடலாம், ஆனால் பெற்ற தாயாரை எப்படி ஒருவரால் அழகாக்க முடியும்?” என்ற மகாத்மா காந்தியின் வரிகளை மேற்கோள் காட்டி, செல்லப்பா அவர்கள் வாசிப்பில் தீவிர ஈடுபாடு இருந்த தனது அம்மாவின் நினைவாக, அவரை அழகு படுத்தும் வகையில் மிகவும் சிறப்பாக இரண்டாவது வருடமாக இப்போட்டியை நடத்துகிறார் என்று செல்லப்பா அவர்களுக்கு மகுடம் சூட்டினார். அன்னை ஸ்வர்ணாம்பாள் இரண்டு கண்களை இழந்த நிலையில், அறுவை சிகிச்சை மூலம் பார்வை கிடைத்தவுடன் எவ்வாறு தான் வாசிக்கத் தவறிய விஷயங்களை படித்தார் என்று கூறி அந்த அன்னையை அரங்கில் கூடியிருந்த அனைவரின் மனதிலும் தனது உரையின் மூலம் பதிய வைத்துவிட்டார். தலைமையோடு நில்லாமல் நிகழ்ச்சியின் தொகுப்பாளராகவும் பரிணாமம் எடுத்து அவர் விழாவை சிறப்படைய செய்த விதம் குறிப்பிடத்தக்கது.
போட்டிக்கு வந்த முந்நூறுக்கும் மேற்பட்ட கதைகளை மூன்று முறை படித்து, தரவரிசை படுத்தி, அதில் எழுபது கதைகளை இரண்டாம் சுற்றுக்கு தேர்ந்தெடுத்து, அடுத்தக்கட்ட நடுவர்களான எழுத்தாளர், டாக்டர்.ஜெ.பாஸ்கரன் அவர்களுக்கும், மற்றொரு நடுவருக்கும் பிரித்துக் கொடுத்து, அவர்கள் தந்த மதிப்பீட்டின் பெயரில் 35 கதைகளை தேர்ந்தெடுத்து அவற்றை முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பரிசுக்கு தரவரிசை படுத்தியதாக செல்லப்பா அவர்கள் முன்னுரையில் எழுதியதை படித்தபோது இப்போட்டிக்காக அவரது மெனக்கெடல் புரிந்தது.
பரிசு பெற்ற 35 கதைகளையும் ஒரே புத்தகமாக குவிகம் பதிப்பகம் மூலம் தொகுத்து, நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவரது இலக்கிய உலக நண்பர்களுக்கும், ஆளுமைகளுக்கும் அந்தப் புத்தகத்தை சபையில் ஒரு பிரதி அளித்து அவர் கௌரவித்த விதம் மிகவும் தனித்துவமாக அமைந்திருந்தது. பரிசுபெற்ற ஒவ்வொருவருக்கும் விழா அன்று காலையிலேயே பரிசுத்தொகையை அனுப்பி, சான்றிதழோடு, ஒன்றல்ல புத்தகத்தின் மூன்று பிரதிகளை பரிசளித்த விதம் சிறப்பு என்றால், நேரில் கலந்து கொண்ட வெற்றிபெற்ற எழுத்தாளர்களை அமரச்செய்து, செல்லப்பா உட்பட அணைத்து சிறப்பு விருந்தினர்களும் நின்றபடி அவர்களை சிறப்பித்த விதத்தை என்னவென்று சொல்வது?
“கால மாற்றத்திற்கு ஏற்ப மாறிவரும் இலக்கியம் சிறுகதை இலக்கியம்,” என்று தனது நடுவர் உரையை தொடங்கிய திரு. பாஸ்கரன் அவர்கள் சிறுகதை மதிப்பீட்டுக்கான தனது அளவுகோலை சொல்லாமல் புகழ்பெற்ற எழுத்தாளர்களான தி. ஜானகிராமன், க.நா. சுப்பிரமணியன், மற்றும் சுஜாதாவின் படைப்பு இலக்கியம், மற்றும் படைப்பாளிகளின் தரம் பற்றிய கருத்துகளின் மூலம் அவரது அபிப்பிராயத்தை சொன்ன விதம் சிறப்பாக இருந்தது. அதுவும் குறிப்பாக தேவகோட்டை வா. மூர்த்தி அவர்களை மேற்கோள் காட்டி “அய்யோ, இந்தக் கதையை நான் எழுதியிருக்கக் கூடாதா!” என்று தோன்றும்படி இருந்த கதைகளையே தான் தேர்வு செய்ததாக அவர் கூறிய விதம், தேர்வுக்கு பின்னணியில் இருந்த நேர்மையையும் அவருள் இருக்கும் படைப்பாளியையும் அடையாளம் காட்டியது.
சிறப்பு விருந்தினர்களில் ஒருவரான ‘வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம்’ முகநூல் இலக்கிய குழுமத்தின் நிறுவனர் திரு. மந்திரமூர்த்தி அழகு அவர்கள் பரிசுபெற்ற சிறுகதைகள் குறித்து தனது மதிப்புரையை சிறப்பாக வழங்கினார். அவரைத் தொடர்ந்து சிறப்பு விமர்சகர்களாக திருமதி. என். எஸ். பிரேமா, திருமதி. இராஜலட்சுமி மற்றும் திருமதி. மஞ்சுளா சுவாமிநாதன் சில கதைகளை எடுத்து விமர்சனம் செய்தனர். பரிசளிப்பு விழாவாக மட்டும் நடத்தாமல் கதைகள் குறித்த விமர்சனத்தையும் வரவேற்கும் வண்ணம் செல்லப்பா அவர்கள் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த விதம் மேலும் இந்நிகழ்ச்சிக்கு மதிப்பு கூட்டியது.
டிசம்பர் 2ஆம் தேதி சென்னையில் மழை காரணமாக சிகப்பு எச்சரிக்கை கொடுக்கப்பட்ட நிலையில், விழாவில் கலந்து கொண்ட எழுத்தாளர்கள் சீக்கிரம் வீட்டிற்கு செல்லும் வண்ணம் தலைமை உரை முடித்த கையுடன் பரிசுகளை வழங்கி, குழு புகைப்படம் எடுக்க ஏற்பாடு செய்த ஒருங்கிணைப்பாளரின் யுத்தி அவர் எழுத்தாளர்கள் மீது வைத்திருந்த அக்கறையை காட்டியது.
“எல்லாம் வல்ல இறைவன் திருவருளாலும், எமது அன்னை ஸ்வர்ணாம்பாள் ஆசிகளாலும், எமது குடும்ப உறுப்பினர்களின் ஆதரவாலும் இந்த இலக்கிய விருதுகள் வழங்கும் முயற்சி இனிவரும் ஆண்டுகளில் தடையின்றித் தொடர உங்கள் அனைவரின் வாழ்த்துகளைக் கோருகின்றோம்,” என்கிறார் திரு. இராய செல்லப்பா அவர்கள். நாமும் அவரை இந்தப் போட்டி வருடாவருடம் சிறப்போடு நடந்து பல எழுத்தாளர்களை எழுத ஊக்குவிக்க வேண்டும் என்று வாழ்த்துவோம்.



இணைந்து வாழ்த்துவோம்.
ஸ்ரீராம்
LikeLike
மிக அருமையாக நடத்தப் பட்ட விழா. பரிசு பெற்றவர்களை நாற்காலியில் அமர வைத்து, பரிசு கொடுத்தவர்கள் நின்றுக் கொண்டு கொடுத்தனர். இதி விட சிறந்த கௌரவம் எழுத்தாளர்களுக்கு என்ன வேண்டும்? உயரிய மனம் படைத்தவர் திரு. இராய செல்லப்பா அவர்கள். இறைவன் அருள் அவருக்கும் அவர் குடும்பத்தாருக்கும் என்றென்றும் தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கட்டும் என்று பிரார்த்திக்கிறேன்.
LikeLike