புத்தகம் : வேட்டையாடு விளையாடு (சிறுகதைத் தொகுப்பு)

எழுதியவர்: சுஸ்ரீ

பதிப்பகம் : புஸ்தகா

பக்கங்கள் : 166

விலை : ரூ. 190

புத்தகங்களை நாம் தேடாவிட்டாலும் வரவேண்டிய புத்தகங்கள் எப்படியோ நம்மைத் தேடி வந்து விடுகின்றன. அப்படி வந்து சேரும் புத்தகங்கள் நம்மை வாசிக்கத் தூண்டுகின்றன. இப்படி என்னிடம் சமீபத்தில் வந்து சேர்ந்த சிறுகதைத் தொகுப்புதான் சுஸ்ரீ அவர்கள் எழுதிய “வேட்டையாடு விளையாடு”. சிறகு ரவிச்சந்திரன் தனியாவர்த்தனம் வாசிக்கும் “இளக்கிய இதழ்” சிறகு என்பதை நண்பர்கள் நாம் அனைவரும் அறிந்த விஷயம்தான்.

சிறகின் ஆண்டு மலர் வெளியீட்டு விழா மிக எளிய முறையில் சுவையான சிற்றுண்டியுடன் நண்பர்கள் கூட்டம் போல் நடந்து முடிந்தது. அந்த சந்திப்பில்தான் எழுத்தாளர் சுஸ்ரீ அவர்கள் இந்நூலை எனக்கு வழங்கினார். இயற்பெயர் தெரியவில்லை. இப்போதுதான் அவரை சந்திக்கிறேன். ஏதோ கன்னி முயற்சி என்று நினைத்தால், அதுதான் இல்லை. 14 புத்தகங்களை எழுதிக் குவித்தி ருக்கிறார். (சிறகின் நண்பர் அல்லவா!) இவற்றில் பல சிறுகதைத் தொகுப்புகள், நாவல்கள் மற்றும் குறுநாவல் தொகுப்பும் அடங்கும்.

இப்படி நமக்குத் தெரியாமல் எழுதிக் குவித்த தமிழ் எழுத்தாளர்கள் எத்தனை எத்தனையோ !

“வேட்டையாடு விளையாடு” என்ற இந்த சிறுகதைத் தொகுப்பு தகதகவென்று மின்னுகிறது. பளபளப்பான முகப்புச் சித்திரம். அசல் ஓவியர், ஜெயராஜின் அசத்தலான ஓவியம் கண்ணைப் பறிக்கிறது.

உற்சாகம் தொற்றிக்கொள்ள ஆவலுடன் உள்ளே நுழைகிறோம்.

உள்ளே 9 சிறுகதைகள்தான். சமூக சேவகர் என் ஆர் சம்பத் உண்மையான, அழகான மதிப்புரை வழங்கி இருக்கிறார். அதுவும் நம்மை உற்சாகப்படுத்துகிறது.

அட்டைப் படத்தில் மட்டுமல்ல; கதைகளிலும் இளமை துள்ளுகிறது. கதாசிரியருக்கு விறுவிறுவென்று கதை சொல்லும் ரகசியம் பிடிபட்டிருக்கிறது. அதனால் கையிலெடுத்தால், நமக்கு கீழே வைக்கத் தோன்றவில்லை.

எதார்த்தமும் டிராமாவும் சேர்ந்து நடக்கும் தனிநடை சுஸ்ரீயுடையது. என் ஆர் சம்பச் சொல்வது போல் “பள்ளி கல்லூரி நாட்களில் பக்கத்து, எதிர்ப்போஷனில், வீட்டில் இருக்கும் அழகான பெண்களிடம் ஈர்க்கப்பட்டு, பல நாட்கள் தூக்கத்தைத் தொலைத்த அனுபவம் நம்மில் பலருக்கு இருந்திருக்கும். அவர்களெல்லாம் சுஸ்ரீயின் கதையைப் படித்து “அவள் பறந்து போனாளே, என்னை மறந்து போனாளே” என்று பாடி மனதைத் தேற்றிக் கொள்ளலாம்.”

“வேட்டையாடு விளையாடு !” தலைப்புக்கு ஏற்றாற்போல் நல்ல “லைட் ரீடிங்”.