எழுத்தாளர் ஜெயலலிதா!
‘என் தந்தை இருந்திருந்தால் சினிமாவில் நுழைந்திருக்கமாட்டேன். தாய் இருந்திருந்தால்அரசியலில் நுழைந்திருக்க மாட்டேன்’ என்று ஜெயலலிதா கூறியதாக ‘என்னருமைத் தோழி’ நூலில் காலசக்கரம் நரசிம்மா பதிவு செய்துள்ளார். வழக்கறிராக விரும்பிய அவர் விரும்பி வராமல் வந்த போதும் சினிமா, அரசியல் இரண்டிலிமே உச்சம் தொட்டார் என்றால் அது மிகையல்ல. எழுத்துத் துறையிலும் ஜெயலலிதா தடம் பதித்துள்ளார்.வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்.ஜான் மில்டன் அவருக்குப் பிடித்த எழுத்தாளர்.மில்டன் எழுதிய ‘இழந்த சொர்க்கம்’, ‘மீண்ட சொர்க்கம்’ நூல்களை அவர் அடிக்கடி வாசிப்பார்.
துக்ளக் இதழில் ‘எண்ணங்கள் சில’ என்ற தலைப்பில் 7 ஆண்டுகள் எழுதினார். ‘ஒருத்திக்கே சொந்தம்’ என்ற தலைப்பில் குமுதம் வெளியீடான மாலை மதி இதழில் நாவல் எழுதினார். ‘நெஞ்சிலே ஒரு கனல்’ நாவல் குமுதம் இதழில் 30 வாரங்களுக்கு மேல் வெளியாகி நின்று விட்டது.அந்த நாவல் அதே பெயரில் தாய் இதழில் தொடராக வந்து முடிந்தது. 1980-இல் ‘உ றவின் கைதிகள்’ நாவலை கல்கி இதழில் ஜெயலலிதா எழுதினார்.சர்ச்சைக்குள்ளான இந்த நாவல் ஆங்கில இதழுக்காக
அவர் எழுதியது.கவிதா பானு பப்ளிகேஷன்ஸ் வெளியீடாக அவரது ‘நீ இன்றி நானில்லை’ நாவல் பிரசுரமானது.
‘அணையா விளக்கு’ ஆர்வி இருபதாம் நூற்றாண்டு கண்ட மூத்த தமிழ் எழுத்தாளர்
அமரர் ஆர்வி. இயற்பெயர் ஆர்.வெங்கட்ராமன்.கண்ணன் சிறுவர் இதழின் ஆசிரியராக 22 ஆண்டுகள் பணியாற்றினார். சுதேசமித்ரன் இதழில் 1955-இல் அவர் எழுதிய ‘அணையா விளக்கு’ நாவல் ஆகச் சிறந்த படைப்பு. தஞ்சையின் பின்னணியில் கிராமியச் சூழலில் எழுதப்பட்ட காதல் கதை.நூலுக்கு தி.ஜானகிராமன் முன்னுரை எழுதியுள்ளார் என்பது கூடுதல் சிறப்பு.
‘திரைக்குப் பின்’, ‘கண்கள் உறங்காவோ’, ‘ஆதித்தன் காதலி’ உள்ளிட்ட 30 நாவல்களையும் 8 குறு நாவல்களையும் 500-க்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியுள்ளார். ‘அசட்டுப் பிச்சு’, ‘சந்திரகிரி கோட்டை’, ‘ஜக்கு துப்பறிகிறான்’ உள்ளிட்ட குழந்தை இலக்கியங்களையும் படைத்துள்ளார். சிக்கலோ சிடுக்கலோ இல்லாத தெள்ளிய நீரோட்டம் போல ஒரு சொகுசான நடைக்குச் சொந்தக்காரர். இயல்பான உரையாடல், இதமான நகைச்சுவை, அந்தந்த வட்டாரத்துப் பழக்க வழக்கங்களை அழகாக வெளிப்படுத்தும் சொல்லாக்கம் அவரது எழுத்தாளுமைக்குச் சான்று. எழுத்து இயந்திரம்!
மகரிஷி.
டி.கே.பாலசுப்ரமணியன் என்ற இயற்பெயர் கொண்டவர் எழுத்தாளர் மகரிஷி. தஞ்சை சீமையில் பிறந்து சேலத்தில் நீண்ட நாள் வசித்து வாழ்ந்து மறைந்தவர். இவர் எழுதாத பத்திரிகைகளே இல்லை என்று சொல்லத்தக்க வகையில் ஒரு கட்டத்தில் எழுதிக் குவித்தவர். இலக்கிய உலகில் எழுத்து இயந்திரம் என்று அழைக்கப்படுகிறார்.ஐந்து சிறுகதைத் தொகுப்புகள், 130 நாவல்கள் இவரது படைப்பு. கல்கி, அகிலன், ஜெயகாந்தன், சுஜாதா,புஷ்பா தங்கதுரை, அனுராதா ரமணன், சிவசங்கரி, ஜெயமோகன் நாவல்கள் திரைப்படமாக வந்துள்ளன.ஆனால் அதிகளவில் (ஆறு) மகரிஷியின் நாவல்களே திரைப்படமாக எடுக்கப்பட்டுள்ளன. மகரிஷியின் முதல் நாவல் ‘பனிமலை’ ‘என்னதான் முடிவு’ என்ற பெயரில் திரைப்படமானது. ‘புவனா ஒரு கேள்விக்குறி’ ரஜினிக்கு ஒரு திருப்புமுனை படமாக அமைந்தது.’ பத்ரகாளி’, ‘சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு’, ‘வட்டத்துக்குள் சதுரம்’ நாவல்களும் திரைப்படமாகி பெரும் வரவேற்பை பெற்றன ‘நதியைத் தேடி வந்த கடல்’ மகரிஷியின் ஆகச் சிறந்த படைப்புகளில் ஒன்று. இந்த நாவலும் திரைப்படமாக ஜெயலலிதா-சரத்பாபு நடிக்க லெனின் இயக்கத்தில் வெளியானது. ஜெயலலிதா நடித்த கடைசிப் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
நா.பா.!
இலக்கிய உலகில் நா.பா. என்று அழைக்கப்படும் நா.பார்த்தசாரதி சிறந்த எழுத்தாளர் மட்டுமல்ல சிறந்த சொற்பொழிவாளரும் ஆவார்.அவரது நாவல்களில் இடம் பெற்றுள்ள கவிதைகள் அவரது புலமைக்குச் சான்று. ‘தீபம்’ இலக்கிய இதழை 20 ஆண்டுகளுக்கு மேல் நடத்தி ‘தீபம் பார்த்தசாரதி’ என்ற அடைமொழிக்குச் சொந்தக்காரர், ‘சமுதாய வீதி’ நாவலுக்காக 1971-இல் சாகித்ய அகாதெமி விருது பெற்றார். ‘குறிஞ்சி மலர்’, ‘பொன் விலங்கு’, ‘சத்திய வெள்ளம்’, ‘துளசி மாடம்’ உள்ளிட்டவை இவரது சிறந்த சமூக நாவல்கள். ‘நித்திலவல்லி’, ‘ராணி மங்கம்மாள்’ உள்ளிட்டவை இவரது சிறந்த சரித்திர புதினங்கள். பத்திரிகை உலக அவலங்களை ‘சுந்தரக் கனவுகள்’ நாவலில் பதிவு செய்துள்ளார்.’அறத்தின் குரல்’ என்ற தலைப்பில் மகாபாரத இதிகாசத்தை உரை நடை வடிவில் தந்துள்ளார். முனைவர் பட்ட ஆய்வேட்டை சமர்ப்பித்த நிலையிலும் பட்டம் வாங்குவதற்குள் டிச.13,1987-இல் அவர் மறைந்து விட்டார். ‘அழியாத ரேகைகள்’ என்ற தலைப்பில் பத்திரிகை உலக முன்னோடிகள் குறித்த தொடர் உரை சென்னையில் மாதம் தோறும் நடைபெறுகிறது. நா.பா. பற்றி அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் தனது உரையில் ஒரு நெகிழ்வான சம்பவத்தை பதிவு செய்தார்.அதன் சாராம்சம். ‘எழுத்து வளம் இருந்தாலும் பொருளாதார வளம் குன்றியவர்களே தமிழ் எழுத்தாளர்கள். நா.பார்த்த சாரதியும் அதற்கு விதிவிலக்கல்ல. மனைவி, ஐந்து குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்துக்கு சம்பாத்தியம் அவர் ஒருவர் மட்டுமே.இதய நோய் காரணமாக மருத்துவனையில் சேர்க்கப்பட்ட நா.பா.தனது 54-ம் வயதில். மாரடைப்பால் காலமானார். அன்றைய தினம் ஒரு ஞாயிற்றுக்கிழமை.வங்கியில் சென்று பணம் எடுக்க இயலாது. ஏடிஎம் போன்ற வசதிகளும் அப்போது இல்லை.இறுதிச் சடங்கு காரியங்கள் மன இறுக்கத்துடன் நடந்து கொண்டிருந்தன. அப்போது காரில் இருவர் வந்து இறங்கி. நா.பா.வின் மனைவியிடம் ஒரு கவரை கொடுக்க வந்தனர். அதை வாங்கிக் கொள்ள நா.பா.மனைவி மிகவும் தயங்கினார். ‘என்னை நா.பா.வின் சகோதரியாக கருதி ஏற்றுக் கொள்ளுங்கள்’ என்றார் கவரை கொடுக்க வந்தவர். நான் அதை வாங்கிக் கொள்ளும் படி நா.பா-வின் மனைவி சுந்தரவள்ளியிடம் கூறினேன். அந்தக் கவரில் ரூ.10,000 ரொக்கம் இருந்தது.தந்தவர் எழுத்தாளர் சிவசங்கரி. அவருடன் வந்தவர் எழுத்தாளர் மாலன். திருப்பூர் கிருஷ்ணனின் இந்த பதிவின் போது அரங்கமே நிசப்தமாய் இருந்தது.பலர் அவர்களை அறியாமலே வழிந்த கண்ணீரை துடைத்துக் கொள்வதை நேரில் காணமுடிந்தது.
நகுலன்
தன்னை அறிய எழுதியவர் ‘இருப்பதற்கென்றுதான் வருகிறோம் .இல்லாமல் போகிறோம்’-இது நகுலனின் கவிதைகளில் ஒன்று. டி.கே.துரைசாமி என்ற இயற்பெயர் கொண்ட இவர் கவிஞர் மட்டுமல்ல. நாவலாசிரியர், விமர்சகர்,ஓவியர், மொழிபெயர்ப்பாளர், சிறுகதை எழுத்தாளர் என்று பன்முக ஆற்றல் கொண்டவர். தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தன்னை அறிந்து கொள்ள எழுதி எழுத்துலகில் புனைவில் புதிய மரபை ஏற்படுத்தியவர்.நகுலனில் கவிதைகள் மனம் சார்ந்தவைகள்.எழுத்தாளனை மைய பாத்திரமாக்கியே இவரது நாவல்கள் அமைந்திருக்கும்.வணிக வட்டத்தை தாண்டி போலி புறவாடை எதுவும் அற்ற அவரது எழுத்துக்கள் வாழ்க்கையைப் பற்றிய ஒரு வெள்ளை அறிக்கை. நகுலனின் எழுத்துக்களைப் போன்றே அவரது பேச்சும் ஒளிவு மறைவு அற்றது. இலக்கிய முயற்சி உருவாக மூன்று சக்திகள் தேவை.மூல புருஷர்கள் முறையே எழுதுபவன், வாசகன், பிரசுரிப்பவன் என்று இருக்க வேண்டும். ஆனால் எதார்த்த நிலையில் பிரசுரிப்பவன், வாசகன், எழுதுபவன் என்று மாறியிருப்பதால் இலக்கியப் படைப்புகள் தரம் தாழ்கின்றன.தரமான பிரசுரலாயமும் ஓர் ஆண்டில் அதிகபட்சம் 5 சதவீத நல்ல புத்தகங்களைத்தான் வெளியிடுகின்றன என்பது நகுலனின் வருத்தம். தமிழ்ச் சிறுகதை வரலாற்றில் அருகி வந்த அண்மைப்படுத்தும் குணத்தை எழுத்து வாழ்க்கையில் நகுலன் இழக்கவே இல்லை.கதாசிரியனே வாழ்க்கையாகவும் சேய்மைப் படுத்துதலை தூக்கியெறிந்து வாசகனை அரவணைத்துத் தன் குதூகலத்தையும் துக்கத்தையும் பகிர்ந்து கொள்வது நகுலனின் கதைகளில் ஒரு தனித்த அம்சம் என்கிறார் விமர்சகர் ப.கிருஷ்ணசாமி.
‘நினைவுப் பாதை’, ‘வாக்குமூலம்’, ‘நவீனன் டைரி’, ‘நாய்கள்’, ‘மஞ்சள் நிறப் பூனை’ உள்ளிட்ட நாவல்கள் நகுலனின் படைப்புகளில் குறிப்பிடத்தக்கவை. கடைசிப் பிரசவம்! மேலாண்மை பொன்னுசாமி விருதுநகர் மாவட்டம் மேலாண்மறை நாடு கிராமத்தில் பிறந்தவர். ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே படித்த அவர், நூலகம் மூலம் வாசித்து எழுத்தாளர் ஆனவர். இவரது மின்சாரப் பூ சிறுகதைத் தொகுப்பு சாகித்ய அகாதெமி விருது பெற்றது
மேலாண்மை பொன்னுசாமி
எழுத்தாளனுக்கு அவனது ஒவ்வொரு படைப்பும் ஒரு பிரசவம்தான். மேலாண்மை பொன்னுசாமியின் கடைசிப் படைப்பின் பிரசவ வலியை படித்துத்தான் பாருங்களேன்.உருகாத நெஞ்சும் உருகி விடும். ஓம் சக்தி இதழின் அப்போதைய பொறுப்பாசிரியர் பெ.சிதம்பரநாதன் தீபாவளி மலருக்கு மேலாண்மை பொன்னுசாமியிடம் சிறுகதை கேட்டு இருக்கிறார். மகன் வீட்டில் உடல் நலம் இல்லாமல் படுத்துள்ள தன்னால் எழுத முடியாது என்கிறார் அவர்.தமிழ் எழுதத் தெரிஞ்ச ஸ்கூல் பையன் மூலம் கதையை எழுதி வாங்கி அனுப்பச் சொல்கிறார் பத்திரிகை ஆசிரியர். கதை எழுதி வாங்கியும் அதை அனுப்ப முடியாது படுத்தப் படுக்கையில் கதாசிரியர். பத்திரிகை ஆசிரியர் கேட்டுக் கொண்டபடி மீண்டும் ஒரு பையனைப் பிடித்து கூரியரி்ல் ஒருவழியாகக் கதையை அனுப்புகிறார். ஓரிரு நாள் கழித்து பத்திரிகை ஆசிரியரை தொலைபேசியில் அழைக்கிறார் மேலாண்மை பொன்னுசாமி. ‘கதையின் பிரதியை மகன் படிச்சான். ஏம்ப்பா ஒடம்புக்கு முடியாம உங்களை வருத்திக்கிறீங்க. தவிர இந்தக் கதை உங்க கதை மாதிரியே இல்லை. இதை வெளியிடவே வேண்டாம்’ என்கிறான். அதனால கதையைப் பிரசுரிக்காதீங்க’ என்கிறார். ‘வழக்கமான உங்கள் கதை எங்களுக்கு வேண்டாம். உங்கள் பெயரில் ஒரு கதை வெளியிடுவதை தடுக்காதீங்க’ என்று அன்புக் கட்டளை பிறப்பித்து விட்டார் பத்திரிகை ஆசிரியர். கதை தீபாவளி மலரில் பிரசுரமானது. கதைக்கான சன்மானம் விரைவாக மேலாண்மை பொன்னுசாமிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ‘எதுக்கு இத்தனை தொகைன்னு’ தொலை பேசியில் பத்திரிகை ஆசிரியரை அழைத்து கேட்டார்.’அது மருந்துச் செலவுக்கும்’ என்று பதில் கிடைத்தது. மேலாண்மை பொன்னுசாமி அஞ்சலி கூட்டத்தில் இதனை நினைவு கூர்ந்தார் சிதம்பரநாதன். மேலாண்மை பொன்னுசாமியின் கடைசிக் கதையாக அது அமைந்து விட்டது மீளாத சோகத்தில் என்னை ஆழ்த்தி விட்டது என்று உரையை அவர் நிறைவு செய்தபோது அரங்கமே விம்மியது.
வெள்ளேந்தி எம் வி வெங்கட்ராம்!
பகட்டு, கர்வம், போலிப்பூச்சு, ரசிகர்களைக் கண்டதும் பிரத்யேக பாவனைகள் ஏதுமின்றி குழந்தைபோல் வெள்ளை மனதுடன் வாழ்ந்து மறைந்தவர் எழுத்துலகில் எம்.வி.வி. என்று அன்புடன் அழைக்கப்படும் எம்.வி.வெங்கட்ராம்.மணிக்கொடி எழுத்தாளர். தி.ஜானகிராமனின் ‘மோகமுள்’ நாவலின் கதாநாயகன் பாபுவின் நண்பனாக ஒரு துணைப் பாத்திரமாக தமது அனைத்து நல்லியல்புகளோடும் உலவுவார் எம்.வி.வி. ஆன்மிக அனுபவங்களையெல்லாம் எழுத்தில் கொட்டி சுயசரிதைச் சாயலுடன் ‘காதுகள்’ என்ற தலைப்பில் பாலம் இதழில் ஒரு நாவல் எழுதினார். அந்த நாவலுக்கு சாகித்ய அகாதெமி பரிசு கிடைத்தது. ‘நித்யகன்னி’, ‘வேள்வித் தீ’ உள்ளிட்ட இவரது நாவல்கள் குறிப்பிடத்தக்கவை. சிறந்த சிறுகதை எழுத்தாளருமான அவர் தி.ஜானகிராமன், க.நா.சு.,மெளனி ஆகிய மூவரைப் பற்றியும் ‘என் இலக்கிய நண்பர்கள்’ என்ற தலைப்பில் ஆகச் சிறந்த கட்டுரை நூல் எழுதியுள்ளார். 1948-இல் தேனீ என்ற இலக்கிய இதழைத் தொடங்கி நடத்தினார்.பாலம் என்ற இலக்கிய இதழின் கெளரவ ஆசிரியராக இருந்தார்.இந்தியாவின் புகழ் பெற்ற நூறு மனிதர்கள் பற்றிய வாழ்க்கை வரலாற்றை குழந்தைகளுக்காக எழுதியுள்ளார். சொந்தப் படைப்புகள் தவிர ஆங்கிலம் மற்றும் ஹிந்தியிலிருந்தும் ஏராளமான படைப்புகளை மொழிபெயர்ப்பு செய்துள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் 12 உண்மை மனிதர்களின் கதையை அறம் என்ற தலைப்பில் எழுதியுள்ளார். உரையாடல் நடையில் உ்ள்ள அதில் அறம் என்ற முதல் கதையின் நாயகன் எம்.வி.வெங்கட்ராம்.
—
With Regards,
B.MuthuKumaran.
9171382356
New Scan
.jpeg
1020.8 kB

சிறப்பான செய்திகள். இலக்கியக் கர்த்தாகக்களின் வாழ்வுத்துளிகளை வளமாகக் காட்டும் உரை..
LikeLike