
சிசிலியிருந்து புறப்பட்ட ஏனியஸின் மனதை அவனது தந்தையின் எண்ணங்கள் முழுவதுமாக ஆக்கிரமித்துக் கொண்டிருந்தன . அவருடைய ஆவியுடன் பேசி அவரது ஆலோசனையைப் பெறவேண்டும் என அவனது உள்மனது கூறியது. பெருமூச்சு விட்டுக்கொண்டு அவன் கப்பல் செல்லும் பாதையை உற்று நோக்கினான்.
கடல் அலைகள் பொன்னிறத்தில் மின்னியதிலிருந்து தூரத்தில் தெரிவது குமாயி கடற்கரை என்பதை அறிந்துகொண்டான். மாலுமிகளுக்கு கப்பல்களைக் கரையில் நிறுத்தும்படி உத்தரவிட்டான்.
ஏனீயஸ் கப்பலிலிருந்து இறங்கியபோது, அவனது உள்ளத்தில் அமைதியும் கலக்கமும் ஒன்றாகப் பொங்கின.
“நண்பர்களே! இந்தத் தீவு ஒரு புண்ணிய பூமி! இங்கே எனக்கு ஒரு முக்கியமான பணி இருக்கிறது. இந்தத் தீவில் நாம் நம்முடைய முன்னோர்கள்- இறந்தவர்களின் ஆவியைச் சந்திக்கலாம் – பேசலாம் – உரையாடலாம். இங்குதான் நான் என் மதிப்பிற்குரிய தந்தையுடன் பேசி அவரது ஆலோசனைகளைப் பெறப் போகிறேன். இப்போது அதற்கான தருணம் வந்துவிட்டது. நான் என் கடமையை முடித்துவிட்டு உங்களுடன் இணந்துகொள்கிறேன்” என்று கூறிவிட்டுக் கடற்கரையை ஒட்டிய அடர்ந்த காட்டுக்குள் சென்றான்.
அங்கே உயர்ந்த பாறைகளுக்கிடையே, மிக பயங்கரமான குகை ஒன்று இருந்தது. அது சிபில் என்ற தீர்க்கதரிசியின் இருப்பிடம் என்பதை அறிவான். குகையின் உள்ளே புகை படர்ந்து இருந்தது. நடுவில் தீபத்தின் ஒளியும் புலப்பட்டது. சிபில் என்ற மூதாட்டியின் குரல் காற்றில் அதிர்ந்தது.
“ ஏனியஸ்! டிராய் நாட்டின் தன்னிகரற்ற மைந்தனே! விதியின் பாதையில் நடப்பவனே! இங்கே என் நாட்டில் என்ன தேடுகிறாய்?” என்று கேட்டாள்.
ஏனீயஸ் அவளிடம் தலைவணங்கி, “ தங்கள் அனுமதியோடு நிழல் உலகத்தில் இருக்கும் என் தந்தையைப் பார்க்க விரும்புகிறேன்.. அவரிடமிருந்து என் விதியை அறிய விரும்புகிறேன்.” என்று கூறினான்.
சிபில் சற்று நேரம் மௌனமாக இருந்தாள். பின்னர் கடுமையான குரலில், “ “ஏனியஸ்! அமர் உலகின் கதவுகள் திறக்கப்படவேண்டுமானால் முதலில் பொன்னிறக் கிளையைத் தேடிக் கொண்டுவர வேண்டும். அது இல்லாமல் நீ அந்த உலகத்தில் புக முடியாது.” என்று கூறினாள்.
அதைக் கேட்டதும் “ இதோ நொடியில் கொண்டுவருகிறேன்” என்று சொல்லி ஏனீயஸ் அங்கிருக்கும் காட்டுக்குள் நுழைந்தான். மரங்கள் அடர்த்தியாக, சூரிய ஒளி கூட தரையை எட்டாதபடி இருந்தது. அவன் மனதில் சிறு குழப்பம். “இந்த இருளில் அந்தக் கிளையை எப்படி காண்பேன்?” என்று அவன் தன்னிடமே சொல்லிக்கொண்டான்.
அந்த சமயம், திடீரென ஆகாயத்தில் இருந்து இரண்டு வெண்மையான புறாக்கள் பறந்து வந்து மரங்களுக்குள் வழி காட்ட முன்வந்தன. “ஆஹா! இந்தப் புறாக்கள் என் வீனஸ் அன்னையின் அடையாளங்கள்…” என்று புரிந்துகொண்டான். அவன் மெதுவாக அந்தப் புறாக்களைத் தொடர்ந்து போனான்.
அந்தப் புறாக்கள் ஒரு மரத்தில் அமர்ந்தன. அந்த மரத்தின் உச்சியில் தங்க நிற இலைகள் மின்னின.! ஏனீயஸ் மெதுவாக மரத்தில் ஏறி அதன் கிளையை உடைத்தான். பொன்னிறக் கிளை அவன் கையில் மின்னியது.
ஏனியஸ் நேராக சிபில் இருக்கும் இடத்திற்கு வந்து, “தாயே! இப்போது நான் தயாராக இருக்கிறேன்,” என்று கூறினான்.
சிபில் மனமகிழ்ந்து அவனை அடித்தள உலகத்தின் வாசலுக்கு அழைத்துச் சென்றாள். சுற்றிச்சுற்றிச் சென்றது அந்த பாதை. அதைச் சுற்றிலும் ஒரே காரிருள். ஒரு கருப்பு நுழைவாயில் அருகே சிபில் நின்றாள். காற்றின் ஓசையும் அவன் இதயத் துடிப்பும் மாறி மாறி அவன் காதில் ஒலித்தன.
சிபில் வாயில் கதவைத் தட்டியதும் பயங்கர தோற்றமுள்ள படகோட்டி அவர்கள் முன் நின்றான். அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது போல் இருந்தது. அவன் பேச ஆரம்பித்தபோது அது கர்ஜனையாக ஒலித்தது.
“ சிபில் கிழவி! உனக்குத் தெரியாதா? . இந்த நதி உயிரற்ற ஆவிகளுக்கே உரியது, உயிருள்ளவன் எவனும் இங்கே வரக் கூடாது என்று. பின் ஏன் இவனை அழைத்து வந்தாய்?” என்று சொல்லிக் கதவை மூட எத்தனித்தான்.
சிபில் ஏனியஸிடம் பொன்னிறக் கிளையை அவனுக்குக் காட்டும்படி உத்தரவிட்டாள். ஏனியஸ் அதனைப் படகோட்டியின் கண்ணில் படும்படி அசைத்தான். அதைக் கண்டவுடன் படகோட்டியின் முகம் மாறியது.

“இந்தக் கிளை இருக்கிறவன் இந்தப் பாதையை கடக்கலாம். கிழவி! நீயும் வா” என்று கூறி படகில் அவர்கள் இருவரையும் ஏற அனுமதித்தான்.
படகோட்டி அந்தப் பயங்கர நதியில் அந்தகார இருளில் படகைச் செலுத்தினான்! படகு மெதுவாக நதியைக் கடந்து சென்றது. நதிக்கரையில் மூன்று தலைகள் கொண்ட நாய் அவர்களைப் பார்த்து அதி பயங்கரமாகக் குரைத்தது. அவர்களை அந்தக் கரையில் இறங்கவிடவில்லை. சிபில் தூக்க மருந்து கலந்த கேக் ஒன்றை அந்த நாயின் முன் வீச அந்தக் கொடூரமான நாய் அதைத் தின்று தூக்கத்தில் மயங்கி விழுந்தது.
மெதுவாக சிபிலும் ஏனியஸும் கரையில் இறங்கினார்கள்.
அங்கே, இருள் சூழ்ந்த அமர் உலகில் எண்ணற்ற ஆவிகள் அலைந்து திரிந்து கொண்டிருந்தன. அழுகை, மெளனம், துயரம் எல்லாம் கலந்து மனதைப் பிழியும் சூழல். ஏனீயஸ் பலரைப் பார்த்தான் — தன்னலம், கொடுமை, கயமை, கொலை செய்தவர்கள் அனைவரும் தங்கள் தண்டனையை அனுபவித்துக்கொண்டிருந்தனர்.
ஏனியஸின் மனம் கனத்தது அந்தப் பரிதாபத்திற்குறிய ஆவிகளைப் பார்த்து அவன் உள்ளம் துடித்தது. “இதுதான் மனித வாழ்க்கையின் முடிவா?” என்று மெதுவாக சிபிலிடம் கேட்டான்.
“இது நீதியின் நிலம். ஒவ்வொருவரும் தங்கள் செய்த நல்லது கெட்டதிற்கு ஏற்ப அதற்கான உரிய இடத்தை அடைகிறார்கள்.” என்றாள் சிபில்.
அந்தச் சமயத்தில் கருப்பு மை போன்ற நிழல் நிறைந்த காட்டில் ஒரு அழகான பெண் தனியாக நிற்பதைக் கண்டான். “ அவள் .. அவள்.. என் டிடோ! நான் உயிருக்கு உயிராக நேசித்த என் அழகுத் தேவதை!” ஏனியஸின் இதயம் துடிதுடித்தது. ஆனால் அவள் அருகில் வந்தும் அவனை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. ஏனீயஸ் கண்களில் கண்ணீருக்குப் பதிலாக இரத்தம் பெருக்கெடுத்தது. “டிடோ! என் இதய ராணி!” அவனது உடைந்த குரலில் சோகம் இழையோடியது.

“கார்த்தேஜ் அரசியே! உன்னை விட்டுவிட்டு வந்த இந்தப் பாவியை மன்னிக்க மாட்டாயா? என் கடமைக்காக என் இதயத்தை அங்கே முறித்துவிட்டு வந்தேன். நான் உன் நினைவாகவே இருக்கிறேன். வா ! என்னுடன் வா!” என்று அவளிடம் கெஞ்சினான்.
டிடோவின் நிழல் அவனைப் பார்த்தும் பார்க்காதது போல மெதுவாக இருளை நோக்கிப் போய்க்கொண்டிருந்தது.
‘டிடோ! டிடோ’ என்று பலமுறை உரக்கக் கத்தினான்.
அவள் ஒரு வார்த்தையும் பேசாமல் பதுமை போல மெல்ல நடந்து இருளுக்குள் புகுந்து மறைந்தாள். ஏனீயஸின் கண்களில் கண்ணீர் பெருகி வழிந்தது.
சிபில் அவனிடம் ”நீ இந்த அமர் உலகத்தை நன்கு புரிந்துகொள்ள வேண்டும்” என்று ஆறுதல் கூறி அவனை அந்தத் தீவின் மற்றொரு பகுதிக்கு அழைத்துச் சென்றாள்.
திடீரென அங்கே சூழல் மாறியது.
ஒளி… பசுமை… மலர்கள்… இனிமையான காற்று.
அங்கே, வெள்ளை ஆடையில் பிரகாசமான முகத்துடன் நின்று கொண்டிருந்தார் ஏனியஸின் தந்தை.
“மகனே!” என்ற அவர் குரல் நடுங்கியது.
“தந்தையே” என்று அழைத்து ஏனீயஸ் அவரைத் தழுவ முயன்றான்; ஆனால் அவனது கைகள் வெறும் காற்றையே பிடித்தன.
“மகனே! உன்னைப் பார்க்கையில் பெருமையாக இருக்கிறது. உன் பயணம் வீணல்ல ! ஒரு மாபெரும் இனத்தின் விதையை நடுவதற்காக நீ அவதரித்திருக்கிறாய்! அதோ பார்! “ என்று சொல்லி ஏனீயஸை ஒரு உயரமான மேட்டுக்கு அழைத்துச் சென்றார்.

அங்கே எண்ணற்ற எதிர்கால ஆன்மாக்கள் தெரிந்தன.
“இவர்கள் தான் உன் சந்ததியர்கள் . இவர்கள் அனைவரும் இணைந்து ரோம் என்ற பேரரசை உருவாக்குவர். உலகம் முழுவதும் நீதி, சட்டம், ஒழுக்கம் பரவச் செய்வார்கள். சென்று வா! மகனே! வென்று வா!” என்று கூறி ஆசி வழங்கி ஒரு ஒளி மயமான மலையின் உச்சிக்குச் சென்று பின்னர் மறைந்து போனார்.
ஏனீயஸின் மார்பு பெருமையால் நிரம்பியது.
“என் வாழ்க்கை இப்போது அர்த்தமடைந்தது,” என்று அவன் மெதுவாகச் சிபிலிடம் சொன்னான்.
“வா! போகலாம்! நீ வந்த காரியம் முடிந்துவிட்டது. உன் தந்தையின் ஆசி உனக்குக் கிடைத்துவிட்டது: என்று சொல்லி சிபில் அவனை அழைத்துச் சென்றாள். வெளியே வருவதற்கு இரு கதவுகள் இருந்தன. “இவற்றில் ஒன்று நிஜத்தின் வழி, மற்றது கனவுகளின் வழி,” இதில் எதில் செல்ல விரும்புகிறாய் என்று சிபில் கேட்டாள்.
நிஜத்தின் வழியே செல்ல விரும்புகிறேன் என்று அவன் கூறியதும் யானைத் தந்தப் பிடியைத் திறந்து அவனை வெளியே அழைத்து வந்தாள்.
ஏனியஸ் மீண்டும் பூமியின் வெளிச்சத்தைக் கண்டான். காற்று அவன் முகத்தைத் தழுவியது. சிபில் அங்கு இல்லை.
தன் பயணத்தைத் தொடர்வதற்காக கடற்கரையில் நின்ற ஏனீயஸ் வானத்தை நோக்கிப் பார்த்தான்.
“தந்தையே! நீங்கள் சொன்ன வழியை நான் பின்பற்றுவேன். என் வாழ்க்கை இனி எனக்காக அல்ல எதிர்காலத்திற்காக.” என்று தன் வாளை உயர்த்தி சூளுரைத்தான்.
கப்பல்கள் தயாராக இருந்தன.
மாலுமிகளும் வீரர்களும் தயாரானார்கள். .
“இத்தாலி நோக்கி நம்பயணம் தொடர்கிறது!” என்று பூமி அதிர ஏனீயஸ் உரக்கக் கத்தினான்:
அவன் குரலைக் கடல் அலைகள் எதிரொலித்தன. வானத்தில் சூரியன் மின்னியது.
விதி அவனை அழைத்துச் சென்று கொண்டிருந்தது.

சுவாரஸ்யம்.
ஸ்ரீராம்.
LikeLike