2.12.1924 முதல் 2.12.2024 வரை

எடிட்டர் எஸ்.ஏ.பி. – அந்த அரசு பதில்கள்! - Wow தமிழா!

எஸ் ஏ பி அவர்களின் நூற்றாண்டு 

2.12.1924. எடிட்டர் எஸ் ஏ பி பிறந்த தேதி.

அனைத்துத் தெய்வங்கள் மீதும் சஹஸ்ரநாமம் (ஆயிரத்திஎட்டு நாமங்கள்) இயற்றப்பட்டிருந்தாலும், வெறுமனே சஹஸ்ரநாமம் என்று சொன்னால் அது விஷ்ணு சஹஸ்ரநாமத்தையே குறிக்கும்.

File:சப்.pngஎத்தனையோ பத்திரிகை எடிட்டர்கள் இருந்தாலும், எடிட்டர் என்று சொன்னாலே என்னைப் பொருத்தவரை,  எஸ் ஏ பி ஐயாதான்.

ஏழாம் வகுப்புப் படிக்கும்போதே அவருடைய கதைகளைப் படித்தவள் நான் என்பது பெருமிதம்.

பள்ளி மாணவியாய் இருக்கும்போதே முதல் முதலாய் அவருடைய ‘இன்றிரவு’ தொடர்கதையைப் படித்தேன்.

மிகப் புதுமையான முறையில் ‘இன்று காலை, இன்று பகல். இன்றிரவு’ என்று அத்தியாயங்களைப் பிரித்து எழுதியிருந்தார். அந்தக் காலகட்டத்தில் நம்மவர்கள் நினைத்துக்கூடப் பார்க்காத இதய மாற்று அறுவை சிகிச்சை(heart transplation) பற்றி எழுதியிருந்தார். ஆவென்று வாயைப் பிளந்து, புதிய விஷயம் ஒன்றை அறிந்துகொள்ளும் ஆர்வத்துடன் படிக்க வைத்த அந்த தொடரின் எளிமை ரசிக்கவும் பிரமிக்கவும் வைத்தது.

பிறகு அவர் பெயரைத் தேடித் தேடிப் படிக்க வைத்துவிட்டார்.

ஆனால் அந்தப் பத்திரிகையிலேயே 13 வருடங்கள் அவருக்குக் கீழே வேலை பார்ப்பேன் என்று நினைத்தும் பார்த்ததில்லை.

ஒரு நாள் என் கணவர் பரபரப்புடன் வீட்டுக்கு வந்து “இன்றைக்கு எடிட்டர் என்னை ரூமுக்கு வரச் சொல்லிப் பேசினார்” என்றார். சொன்னது இவர் என்பதால் நம்பினேன். மற்றபடி இணை, துணை ஆசிரியர்கள் தவிர மற்றவர்கள் அவரைச் சந்திப்பது அபூர்வம். குமுதத்துக்காக ஃப்ரீலான்ஸாக வேலை பார்த்தவர்களில் ஓரிருவர் மட்டுமே அவரைச் சந்தித்திருக்கிறார்கள்.

அப்படிப்பட்டவர் பாமாஜியை அழைத்து ஐந்து நிமிடம் பேசினாராம்.

ஆஹா.

“ஃப்ரீலான்ஸ்ஸராவே இருந்துக்கிட்டிருக்கீங்களே? ஜாயின் பண்ணிடுங்களேன்.. ” என்று சொல்லியிருக்கிறார் எடிட்டர்.

ஃப்ரீலான்ஸ் என்றால் நினைத்த நேரத்துக்கு ஆபீசுக்கு வரலாம். குரோம்பேட்டையிலிருந்த ரயிலிலும் பஸ்ஸிலும் வருவதற்கே ஒரு மணி நேரம் ஆகிவிடும் என்பதை இவர் பணிவுடன் சொல்லியிருக்கிறார்.

“இங்கே ஆபீஸ்  பக்கத்துலயே வீடு பாருங்களேன். பிரியா கல்யாணராமன் இருக்கற தாணா ஸ்ட்ரீட்ல கெடைக்குமே” என்று சொன்னாராம்.

“பையன் குரோம்பேட்டைல படிக்கறான். பள்ளிக்கூடத்தை மாற்றுவது கஷ்டம்” என்று பாமாஜி சொல்லியிருக்கிறார். அதற்கும் பதில் சொல்லலாம். ஆனால் எடிட்டர் வற்புறுத்தவில்லை.

“சரி.. யோசிங்க.. சீக்கிரத்தில் ஜாயின் செய்துடுங்க” என்று சொல்லியிருக்கிறார்.

என் வயதான மாமனாருக்குச் சொந்தவீடு சென்ட்டிமென்ட் இருந்தது அவரை விட்டுவிட்டு நாங்கள் தனியாக வருவது பற்றி நினைத்தும் பார்ப்பதாக இல்லை என்பதால் இவர் கடைசி வரை ஃப்ரீலான்ஸராகவே இருந்தார்.

ரண்டாவது முறை அவர் பேசியது இவர் மேல் உள்ள அன்பினால்.

 பொதுவாக ஃப்ரீலான்ஸ் செய்பவர்களுக்கு, சன்மானத் தொகையை சப் எடிட்டர் நிர்ணயிப்பார். அதன்படியே செக் தருவார்கள். ஆனால் பணிபுரியத் தொடங்கி ஆறு வருடங்களான நிலையில் ஒரு நாள் என் கணவரை அழைத்து “நீங்க நிறைய அலைஞ்சு திரிஞ்சு பேட்டிகள் வாங்கிட்டு வறீங்க. எனவே இனி பிரசுரமானாலும் ஆகலைன்னாலும் உங்களுடைய அலைச்சல்.. பஸ், ஆட்டோ சார்ஜ், சர்வீஸ், எல்லாத்துக்கும் நீங்களே பில் குடுத்துடுங்க” என்று சொன்னதோடு, என்னையும் இவரையும் மாற்றி மாற்றி ஒவ்வொரு மாதமும் மாலைமதி நாவல் கொடுக்கும்படியும் சொன்னார்.

அடுத்த வாரம் பயந்து பயந்து பில் போட்டுக் கொடுத்தபோது ரா கி ரங்கராஜன் என் கணவரிடம் “எடிட்டர் உங்க பில்லில் கையெழுத்துப் போட மாட்டேன்னு சொல்லிட்டார். தொகை குறைவாய்ப் போட்டிருக்கீங்களாம். இன்னும் அதிகமாப் போடச் சொன்னார்” என்றார். இவர் மீண்டும் திருத்திக் கொடுத்தபோது தொகையை சாங்ஷன் செய்ததோடு “அடுத்த முறை இன்னும் நல்லாப் போடலாம்னு சொல்லுங்க” என்றாராம்.

துணிமணி, குழந்தையின் படிப்புச் செலவு, கல்லூரிப்படிப்புக்கான சேமிப்பு மற்றும் நாங்கள் சாப்பிட்ட சாப்பாடே எடிட்டர்  போட்டதுதான்.

வ்வொரு முறையும் ஆபீஸ் ஆயுத பூஜையின்போது இவர் எடிட்டரை அங்கு பார்ப்பது வழக்கம்தான் என்றாலும் மரியாதைக்காக வணக்கம் தெரிவிப்பதோடு சரி. 

ஒரு முறை பேட்டி ஒன்றை முடித்துவிட்டு இவர் போகும்போது சரியாக சாப்பாட்டு நேரம். எடிட்டர் எல்லாப் பணியாளர்களுடனும் உட்கார்ந்து சாப்பிடும் தினம்.

எடிட்டருக்குப் பக்கத்து இலை மட்டும் காலியாக இருக்க, இவர் கூச்சத்துடன் வேறு இடம் தேடியிருக்கிறார். ”இப்பிடி வந்து உட்காருங்க” என்று அழைத்துத் தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டதோடு “இன்னும் கொஞ்சம் சாப்பாடு வச்சுக்குங்க. என்ன இவ்ளோ கம்மியா சாப்பிடறீங்க.. இவருக்குப் பாயசம் இன்னும் கொஞ்சம் வைங்கப்பா” என்றெல்லாம் சொன்னாராம்.

வயிறும் மனசும் நிரம்பிவிட்டது என்றார் பாமாஜி. (இதெல்லாம் கேட்கும்போது, இந்தச் சின்ன விஷயத்துக்கு ஏன் சிலுப்பிக்கொள்கிறாய்” என்று கேட்பீர்களோ என்னவோ? ஆனால் எடிட்டர் என்ற இமயத்தின் அண்மை லேசுப்பட்ட விஷயம் இல்லை என்பதை உணர்ந்தவள் நான்.)

டிட்டர் வாங்கிய புத்தகங்களை வைப்பதற்காக ஒரு பங்களா வாங்கியதையும் அதை லைப்ரரியாக்கியதும் ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். அந்த லைப்ரரி ஹாலில் ஒவ்வொரு மாதமும் கடைசி சனிக்கிழமை ஒரு பிரபலத்தை அழைத்து ஒரு மணி நேரம் அவர்களின் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளச் சொல்வார்கள். சுஜாதா உள்படப் பிரமுகர்கள் பலர் பேசியிருக்கிறார்கள் என்பதும் உங்களுக்கெல்லாம் தெரியும். (என் முன் எடிட்டோரியல் ஸ்டாஃப் மட்டுமே அமர்ந்திருந்தாலும், முழுத் தமிழ்நாடும் என்முன் அமர்ந்திருப்பதற்குச் சமம் என்று சொன்னார் சுஜாதா).

“இந்த மாசம் பாமாகோபாலன் தன் அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளட்டுமே” என்று சொல்லிவிட்டார் எடிட்டர்.

பொதுவாக அலுவலகத்தில் பெண்களுக்கு அனுமதி இல்லை. அனுராதா ரமணன் உள்பட யார் வந்தாலும் ரிசப்ஷனில் அமர்வார்கள். யாராவது ஒரு சப் எடிட்டர் வந்து பார்த்துவிட்டுப் போவார். எடிட்டரைச் சந்திக்கவே முடியவே முடியாது.

இந்த லைப்ரரி மீட்டிங்கில் என் கணவர் பேசுகிறார் என்ற நப்பாசையில் நானும் போக விரும்பினேன். எனவே, பாமாஜி நேரடியாகவே எடிட்டரிடம் அனுமதி கேட்டுவிட்டார். (அது பொது மக்களுக்கான லைப்ரரி அல்ல என்றபோதும்), ஒரு நிமிடம் யோசித்தவர் “சரி.. லைப்ரரிதானே.. வரட்டும்” என்றாராம்.

கணவரோடு சென்றேன்.

மொத்தமே எட்டுப் பேரோ என்னவோதான் வந்திருந்தார்கள் என்றாலும் எடிட்டர் வந்தது.. ஒன்றரை மணி நேரம் உட்கார்ந்து என் கணவர் பேசியதைக் கேட்டது.. இரண்டு வரிசை தள்ளி நான் பவ்யமாக உட்கார்ந்து கேட்டது எல்லாம் கனவில் போல் உள்ளது.

மீட்டிங் முடிந்து போட்டோ எடுத்தார்கள். “இன்றைய கதாநாயகன் பாமா கோபாலன்தானே.. அவர் என் பக்கத்தில் நிற்கட்டும்” என்று போட்டேவில் நிற்க வைத்துக் கொண்டார்.

“தம்பதிகள் சேர்ந்துதான் நிக்கணும். அவங்களையும் வரச் சொல்லுங்க” என்று என்னையும் நிற்க வைத்துக் கொண்டார்.

இப்படியொரு பொக்கிஷப் புகைப்படம் வாழ்வில் சாத்தியமே இல்லை. தமிழகத்தின் பிரபலத் துறைகளில் உள்ளவர்கள் மற்றும் எழுத்தாளர்கள் என்று எத்தனையோ பேர் அவரோடு போட்டோ எடுத்துக்கொள்ளத் துடித்து, அது நடக்காமல் போயிருக்கிறது. ஆனால் எந்த ஜென்மத்துக் கொடுப்பினையோ எங்களுக்கு வாய்த்தது.

ணிமேகலை பிரசுரத்தில் அவருடைய சின்னம்மா தொடரை முழு நூலாகப் பிரசுரித்தார்கள். அலுவலகத்தில் ஆளுக்கொரு பிரதி கொடுத்தார். என் கணவர் கொண்டு வந்தவுடனேயே அந்தக் கதையைப் ஒரே இரவில் படித்து முடித்துவிட்டேன்(ஏற்கனவே பல முறை படித்திருந்தாலும்).

உடனேயே நாலைந்து பக்கங்களுக்கு நான் ரசித்தவற்றைக் கடிதமாக எழுதி என் கணவரிடம் கொடுத்தனுப்பிவிட்டேன்.

அலுவலகத்தில் யாருமே படித்திருக்கவில்லையாம். நான் மட்டுமே படித்ததோடு பாராட்டுக் கடிதம் வேறு எழுதியிருந்தேன் என்பதை அவர் எடிட்டோரியல் மீட்டிங்கிலேயே குறிப்பிட்டுப் பாராட்டியதை ஒவ்வொருவரும் எனக்குத் தனித்தனியாக போனில் சொன்னார்கள்.

அதோடு… கைப்பட டைப் செய்த பதில் கடிதம் ஒன்றை என் வீட்டு விலாசத்துக்கு அனுப்பினார். எறும்பு சைஸில் எஸ் ஏ பி என்று கையெழுத்திட்டிருந்தார்.

நான் கதையில் சிலாகித்த ஒரு சம்பவம் தனக்கு ரயிலில் நிகழ்ந்த ஒன்று என்றும், அதில் ஸ்கூட்டரில் வரும் பெண்மணி தன் வீட்டுக்கு வந்து இன்ஷூரன்ஸ் எடுக்கும்படி வற்புறுத்தும் பெண்ணின் இன்ஸ்பிரேஷன் என்றும் எழுதியிருந்தார்.

நான் பெற்ற குழந்தையை மடியில் வைத்துப் பாராட்டிச் சீராட்டியமைக்கு நன்றி” என முடித்திருந்தார்.

தற்கப்புறம் அமெரிக்காவிலிருந்து வந்த …செவ்வகப் பெட்டியில் எம்பார்மிங் செய்து வைத்திருந்த எடிட்டரைத்தான் பார்த்தேன்.

எந்த மரண நிகழ்வுக்குப் போனாலும் எடிட்டரும், ரா கி ர,   ஜ ரா சு ஆகியோரும் ஒரு பக்கமாய் உட்கார்ந்து பகவத் கீதை படிப்பது வழக்கமாம்.

கடுகு தாளிப்பு: எஸ். ஏ. பி. யும் (நன்றியுடன்) நானும் - கடுகுஅன்றும் படித்தார்கள் அவரைத் தவிர மற்றவர்கள். அவர் ஆன்மா அதில் திளைத்திருக்கும்.

நகரின் வி ஐ பிக்கள் அனைவரும் வரிசையாய் அமைதியாய் வந்து தரிசிக்க.. நான் போய் நமஸ்கரித்தபோது என் குரல் மட்டும் கதறி ஒலிக்க.. சட்டென்று கட்டுப்படுத்திக்கொண்டு வெளியே ஓடி வந்தேன்.

இந்த ஆண்டு அவருக்கு 100வது வயது. (அதெப்படி 24 ல் பிறந்தவருக்கு 25 இல் 100 வயது என்று கேட்க மாட்டீர்கள் என்று தெரியும் 1925 ல்தானே முதலாம் ஆண்டு நிறைவு கொண்டாடியிருப்பார்கள்)
         

குமுதம் என்பது மி….க ஜனரஞ்சகமான பத்திரிகைதான். உப்பு மிளகு எனக் கார சார மசாலாக்கள்  தூக்கலாகத் தருவார்தான். ஆனால் உள்ளே உள்ளவர்கள் அனைவரும் நேர் எதிரானவர்கள். வாரா வாரம் வெள்ளிக்கிழமை பகவத்கீதை படிப்பவர்கள். ஸ்வாமி சின்மயானந்தாவுடன் இமய மலை யாத்திரை செல்பவர்கள்.

Editor S. A. P. (Tamil Edition) by Ra. Ki. Rangarajan | Goodreadsஎது செய்வதானாலும் இறைவனிடம் கண்மூடி அனுமதி கேட்டபிறகே செய்பவர்கள்.

எடிட்டரின் ஆன்மிக.. தெய்வீக அனுபவங்களை அவர் நேரடியாக வெளி மனிதர்களிடம் பகிராவிட்டாலும் அவரைச் சுற்றியுள்ளவர்கள் மூலம் வெளியே கசிந்திருக்கின்றன.

எடிட்டர் மகன் டாக்டர் ஜவஹர் பழனியப்பன் அமெரிக்காவில் பிரபல இதய அறுவை சிகிச்சை நிபுணர். அவர் தன் அப்பாவின் நூற்றாண்டை நல்ல முறையில் கொண்டாடத் திட்டமிட்டிருக்கிறார்.

மலர் ஒன்று தயாராகிக்கொண்டிருக்கிறது

எடிட்டருடன் பழகியவர்களின் அனுபவங்களை அதில் பகிர்ந்திருக்கிறார்கள். அடியேனுக்கும் அந்த பாக்கியம் கிடைத்திருப்பது பாக்கியமே.

என் குமுத நாட்கள் தொடரும்…