
நன்றிக் கடன்செய் நயந்து!
—————————————
நன்றி மறப்பது என்றுமே நன்றன்று!
நன்றி நவிலுதல் நன்றுதான் – என்றாலும்
நன்றி செயலிலே காட்டுவதே நன்றாகும்!
நன்றிக் கடன்செய் நயந்து! (1)
கன்றெனப் பேணி வளர்த்தவுன் பெற்றவர்
என்றுமுன் நன்றிக் குரித்தாவர் – வென்றியொடு
குன்றின் விளக்காய் விளங்கிட ஈன்றவர்க்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (2)
ஒன்றறியாப் பிள்ளையை மாணவனாய் ஏற்றுநல்
மன்றத்தில் முன்னமரச் செய்தவர் – என்றுமுன்
வென்றியை எண்ணிநற் கல்விகற் பித்தவர்க்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (3)
நன்றிது நன்றிலை என்றுன் துணையாக
என்றென்றும் நின்றிடு நண்பர்கள் – முன்னேநீ
சென்றாலும் பின்தங்கி நின்றாலும் தாங்குவர்க்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (4)
என்றுமே நானுன் துணையாய் திகழுவேன்
என்றுநின் கைபிடித்த நல்லவள்! – குன்றாத
பொன்னாக நின்புகழ் மேலாக்கும் மாதிற்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (5)
என்றோ மலையேறு வேளையில் மெய்குளிரத்
தென்றலாய் வந்தருள் தேவனுக்கு; – அன்றறிய
இன்பம் அடைந்தொரு புத்துணர்வு பெற்றதற்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (6)
என்றோ ஒருநாள் உடம்பை விடுமாவி
அன்றுடல் நால்வர் எடுப்பார்கள்! – என்றுமவர்
உன்னுடைய நன்றிக் குரியவர்; நீயவர்க்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (7)
குன்றுமணி யேனும் கொடுக்கப் பழகிடு
ஒன்றுமிலை என்ற வறியோர்க்கு! – முன்னவர்
சொன்ன வழியிது; வேண்டுவர்க் கீந்துனது
நன்றிக் கடன்செய் நயந்து! (8)
இன்சொல் கனிவாகச் பேசியுன் நெஞ்சாற
அன்பு சொரியும் உகந்தவர் – என்றுமே
தன்னலம் எண்ணாது உன்னலம் பேணுவார்க்கு
நன்றிக் கடன்செய் நயந்து! (9)
வந்தக் கணமுதல் போகும் கணம்வரை
உன்தனது வாழ்விலே எண்ணிலர்! – உந்நலம்
முன்னேற தம்பணி செய்கிறார்! எல்லோர்க்கும்
நன்றிக் கடன்செய் நயந்து! (10)
