&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
‘ஆபரேஷன் பகத்சிங்’ என்ற சிறுகதை இம்மாத சிறப்புக்கதையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது
இதழ்: அம்ருதா (amruthal202511)
&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&
நவம்பர் மாதம். பல வாரந்திர இதழ்கள். நூறு சிறுகதைகள். ஒவ்வொன்றும் பல கதைக்களங்களுடனும் நம்மைச் சந்திக்கின்றன. சிறுகதைகள் இப்படித்தான் இருக்கவேண்டும் என்று நாம் நிர்ணயித்து, அவ்வாறு அவற்றைப் படிக்காமல், அந்தக் கதையின் போக்கை அப்படியே அனுபவித்துப் படிக்கவேண்டும். பல கதைகள் திடீரென்று, முடிவொன்றுமில்லாமல், முடிவடையும். அதில் அழகிருந்தால், அதையும் ரசிப்போம். பல கதைகள் விஸ்தாரமான வர்ணனைகளுடன் இருந்தன. அந்த வர்ணனைச் சாரலில் கதையை நகர்த்திச் செல்லும் சிறுகதைகளே சிறப்பானவை. வெறும் வர்ணனைகள் மட்டுமே சிறுகதையாகிவிடாது.
எனது பார்வையில், சிறந்த கதைதென்பது:
ஒரு சுவாரசியம் இருக்கவேண்டும்.
நம்மைத் தாக்கம் செய்திடவேண்டும்.
நம்மை உறங்கவிடாத கதைகள்.
நம்மால் மறக்கமுடியாத கதைகள்.
இந்த கோணத்தில் தேர்ந்தெடுத்த 5 கதைகள் பின்வருமாறு.
(அதில் ‘ஆபரேஷன் பகத்சிங்’ என்ற சிறுகதை இம்மாத சிறப்புக்கதையாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது)
1. இதழ்: அம்ருதா (amruthal202511)
ஆபரேஷன் பகத்சிங் – ஆயிஷா நடராசன்
சைபர் க்ரைம் பற்றிய கதை. எதிர்காலத்தில் நடக்கும் கதை. பணக்காரக் கம்பெனிகளிடமிருந்து பணம் களவாடப்படுகிறது. ராபின் ஹூட் போல ஏழைகளுக்கும், தேவைப்பட்டவர்களுக்கும் அந்தப்பணம் சென்றடைகிறது. துப்புத்துலக்குகிறார் காவல் அதிகாரி. சஸ்பென்ஸ் கடைசி வரியில்.
2. இதழ்: குமுதம் (kumudham251105)
லவ் யூ சோபிகா – ஆயிஷா நடராசன்
எதிர்காலத்தில் நடக்கும் கதை. மனோதத்துவ மருத்துவர், கல்லூரி நாள் தோழியை மனதில் வைத்து, மணமாகாமல் தவிப்பவர். அவருக்கு எந்திரப்பெண் உதவியாளர் இந்தப் பிரச்சினையைத் தீர்க்க முயலும் கதை. கற்பனை வளத்துடன், சுவாரசியமாக எழுதப்பட்ட கதை.
3. இதழ்: அம்ருதா (amruthal202511a)
வெள்ளையாக இருக்கிறவர்கள் – வண்ணதாசன்
ஒரு சாதாரண கிராமிய வாழ்க்கை படம் பிடித்துக் காண்பிக்கப்படுகிறது. அந்த விவரணைகள் நம்மை அந்த சூழலுக்கு அழைத்துச் செல்கின்றது. இரு பெண்களின் வாழ்க்கை, அவர்கள் சந்திப்பு, பேச்சு, செயல்கள் நம்மை அவர்கள் உலகத்திற்குக் கொண்டு செல்கின்றது. வெயிலின் வாசம், ‘கடும் டீ’ இவற்றை நாமும் அனுபவிப்பது போல எழுதப்பட்டது, கதை சொல்லப்பட்ட சிறப்பு.
4. இதழ்: உயிர் எழுத்து (uyirezh202511a)
தேர்வு – அபிமானி
கிராமியக்கதை.– கல்யாண வயதாகாத இளம் பெண், தகுதியற்ற ஒரு ஒருவனைக் காதலிப்பதை தடுக்கும் தந்தையின் கதை.. கதை முடியும் போது, தந்தையின் முடிவு எப்படிச் செல்கிறது என்பது கதை.
5. இதழ்: வாசகசாலை (vasagasalai202511b)
இங்கே கூண்டுகள் உடைக்கப்படும் – ச.ஆனந்தகுமார்
கணவனால் பட்ட துன்பங்களை, ஒரு பெண், எப்படி திருத்துவது என்பது கேள்வி. எந்த மார்க்கத்தை அவள் தேர்ந்த்தெடுத்தாள் என்பது கதையின் கரு. மேலும் அலுவலகத்தில் நடக்கும் பாலினக் கொடுமைகளை முறியடிப்பதும் இக்கதையின் சிறப்பு.
