குழந்தைகளுக்கு மட்டுமா?
ஜனவரி 2026 பிறக்கப்போகிறது. புது வருடம் என்றாலே எல்லாவற்றையும் தாண்டி, சென்னையில் புத்தக கண்காட்சி வரப்போகிறது என்கிற குஷியான எண்ணமும் மனதில் முதலில் தோன்றுகிறது. அதே நேரம் புத்தக அலமாரியின் அருகில் செல்லும் போது வாங்கிய புத்தகங்கள் பல ‘என்னைப் படித்து விட்டாயா என்ன” என்று என்னை கேலி செய்வது போல் இருந்தது.
புத்தக அலமாரியில் வைத்திருந்த புத்தகங்களை நோட்டம் விட்டேன்.வகைகளை வரிசைப் படுத்திப் பார்த்தேன்.பக்திப் புத்தகங்களில் பல வகைகள், திருக்குறள்,ஔவையார்,பாரதி இந்த ரகங்களில் நிறைய, சுய சரிதைப் புத்தகங்கள் அதுவும் வெற்றி பெற்றவர்களின் உண்மைக் கதைகள் ஆங்கிலத்திலும் தமிழிலுமாய் என்று பல வருடங்களாய் வாங்கிச் சேர்த்திருந்த புத்தகங்கள். இவை தவிர செய்யுள் வரிசைகள், இந்து மத விளக்கங்கள், பொது அறிவு,குட்டிக் கதைகள்,ஆலய வரலாறுகள்,சுய முன்னேற்ரம், பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள்,நண்பர்களின் வெளியீடுகள் என்று கலந்து கட்டிப் புத்தகங்கள்.
இவற்றில் தன்னம்பிக்கை புத்தகங்கள் எப்போதுமே எனக்கு ரொம்பப் பிடிக்கும். அப்படிப்பட்ட தலைப்பு இருந்தாலே வாங்கிவிடுவேன். புத்தகம் படிக்க எளிமையாகவும் சிறியதாகவும் இருக்க வேண்டும். அப்படி ஒரு புத்தகம் கண்ணில் பட்டது. சில வருடங்களுக்கு முன்பு வாங்கி இருக்கிறேன். அப்போது படித்திருக்கிறேனா என்று ஞாபகமில்லை. இப்போது எடுத்து புரட்டினேன்.
ரஞ்சன் எழுதிய “உங்கள் பிள்ளைகள் ஜெயிக்க 55 விதிகள்” என்ற சுவாரசியமான தலைப்பு. குமுதம் வெளியீடு. 2009ம் வருடப் பதிப்பு.படித்துப் பார்த்தேன். பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் நிஜமாகவே உபயோகமான விஷயங்கள், அறிவுரைகள் நிரம்பி உள்ளன.
ரஞ்சன் சொல்லியிருக்கும் இந்த 55 விதிகளும் பிள்ளைகளுக்காக. ஆனால் என்னை சுவாரசியப் படுத்தியது என்ன தெரியுமா? இவற்றில் உள்ள சில விதிகள் பெரியவர்களுக்கும் பொருந்தும் என்பதுதான்.
“பரிசுப் பொருட்களை நன்றியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். கிண்டல் செய்யாதீர்கள்” என்று ஒரு விதி சொல்லி இருக்கிறார். நவராத்திரிக்கு வெற்றிலை பாக்க்கோடு பரிசாக ஒரு பூக்கூடை தருகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதை வாங்கிக் கொள்ளும் போது, “ஐயோ இதெல்லாம் எதுக்கு? இந்த மாதிரி என்கிட்ட நிறைய இருக்கு. நீங்க இத வேற யாருக்காவது கொடுத்திடுங்க”, என்று முகத்தில் அடித்தாற்போல் சொல்லும் ஐம்பது வயதுக்கு மேற்பட்ட பெண்களைப் பார்த்திருக்கிறேன்.
ஆசையாய்ப் புடவை வாங்கிக் கொடுத்தால் “போப்பா….. இருக்குற புடவையே கட்டிக்காம, புதுசாவே 10 புடவை இருக்கு. வைக்கவே இடம் இல்ல. எதுக்கு புடவை எல்லாம் வாங்கித் தர”, என்று மரியாதையே இல்லாமல் மறுக்கும் உறவுப் பெண்களையும் சந்தித்திருக்கிறேன். ரஞ்சன் சொல்வது போல் பரிசுப் பொருளை நன்றியுடன் ஏற்றுக்கொள்ள குழந்தைகளுக்கு சின்ன வயதிலேயே சொல்லிக் கொடுத்து விடுவதுதான் சரி.
இதேபோல் இந்தப் புத்தகத்தில் குழந்தைகளுக்காக இன்னொரு விதி சொல்லி இருக்கிறார். “நன்றி சொல்லுங்கள்.உடனே சொல்லுங்கள்”. என்கிறது ஒரு விதி. சமீபத்தில் தேஜஸ் ஃபவுண்டேஷன் சார்பில் கலைமகள் ஆசிரியர் கீழாம்பூர் சங்கரசுப்ரமணியம் அவர்கள் மதுரை பற்றி உரையாற்றிய ஒரு கூட்டம் நடந்தது. அன்பாக அழைத்திருந்தார். சென்றிருந்தேன். உரை சிறப்பாக இருந்தது. மறுநாள் காலை போன் செய்து, “கூட்டத்திற்கு நீங்கள் வந்து இருந்ததற்கு ரொம்ப நன்றி” என்றார். வேறு எதுவும் விஷயம் இல்லை. வெறும் நன்றிக்காக ஒரு போன், அதுவும் உடனேயே! அவர் மேல் வைத்திருந்த மதிப்பு இன்னும் உயர்ந்தது எனக்கு.. இதே போல் நன்றி சொல்ல லேனா மற்றும் ரவி தமிழ்வாணன் சகோதரர்கள் கைப்படக் கடிதமே எழுதி விடுவார்கள்.
அதே நேரம் இன்னொரு விஷயமும் மனதில் ஓடியது. வாட்ஸ் அப்பில் வந்த அழைப்பை மதித்து, ஊருக்கு வெளியில் எந்தக் கோடியிலோ நடக்கும் ரிசப்ஷனுக்கு டிராஃபிக்கில் ஊர்ந்து சென்று கலந்து கொண்டிருப்போம். அங்கேயே நம்மைப் பெரிதும் கண்டுக்கொள்ளாத அதோடு அடுத்த தடவை நேரில் பார்த்தால் கூட அதைப் பற்றி பேசாத மனிதர்களும் உண்டு.
இந்த நன்றி பாராட்டும் விஷயத்தையும் குழந்தைப் பருவத்திலேயே சொல்லித் தரவேண்டும் என்று ரஞ்சன் சொல்வது ரொம்ப சரி.
“மற்றவர்களின் பெயர்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டு பேசுங்கள்”. “சிந்தாமல் சாப்பிடுங்கள்”. “மொட்டையாகப் பேசாதீர்கள்”, என்று புத்தகம் முழுவதும் ரஞ்சன் சொல்லியிருக்கும் விதிகள் எல்லாம் பெரியவர்களுக்கும் பொருந்துகிறது என்ற நினைப்பு மட்டுமல்ல, நான் இவற்றையெல்லாம் பின்பற்றுகிறேனா என்றும் என்னை ஒருமுறை சரிபார்த்துக்கொண்டேன்.
