மதுரை சோமுவுக்கு நடிகர்திலகம் தந்த கெளரவம்

 

 

 

 

 

 

 

 

 

 

 

சம்பூர்ண ராமாயணம் திரைப்படத்தில் வீணைக் கொடியுடைய வேந்தனே என்ற பாடல் திரு கே வி மகாதேவன் இசையில் முதலில் மதுரை சோமு அவர்களால் பாடப்பட்டது. காலையில் பாடும் ராகம் எது மாலையில் பாடும் ராகம் எது என்றெல்லாம் பல்வேறு ராகங்கள் வரக்கூடிய அற்புதமான இந்தப்பாடல் பதிவு முடிந்தபின், ராவணனாக நடித்த திரு டி கே பகவதி அவர்கள் மதுரை சோமுவின் குரலுக்குத் தன்னால் நடிக்க முடியவில்லை என்றாராம். அப்புறம், திரு சி எஸ் ஜெயராமன் அவர்களை வைத்து அந்தப் பாடல் மீண்டும் பதிவு செய்யப்பட்டது.

அடுத்த சில நாட்களில் இதைக் கேள்விப்பட்ட மதுரை சோமு அவர்கள் மிகவும் மனம் வருந்தி ஸ்டூடியோவில் உட்கார்ந்து இருந்தார். அந்த நேரம் அங்கு வந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவரைப் பார்த்து ‘என்ன அண்ணே சோகமாக இருக்கீங்க’ என்று கேட்டதற்கு, சோமு அவர்கள் இந்த விஷயத்தைச் சொல்ல, சிவாஜி கணேசன் ,உங்கள் குரலுக்கு இணை இருக்கின்றதா இங்கு? நீங்கள் பாடுங்கள்,நான் கேட்கிறேன் என்று சொல்லி அவரைப் பாடவைத்து அவருடன் ஸ்டுடியோவில் இருந்த பலர் சேர்ந்து கொண்டு ஒரு முழுக்கச்சேரியை கேட்டார்கள். முடித்தவுடன், நடிகர் திலகம் தனது கழுத்தில் இருந்த எட்டு பவுன் தங்க சங்கிலியை அப்படியே அவருக்கு அணிவித்தார் . சோமு அவர்களின் கண்களில் ஆனந்தக் கண்ணீர் பெருகியது.

அதற்குப் பின் நடந்த அத்தனை கச்சேரி மேடைகளிலும் இந்த சம்பவத்தைச் சொல்லியதுடன், சங்கிலியையும் ரசிகர்களிடம் காட்டி நடிகர் திலகத்தை நன்றியுடன் நினைவு கூர்ந்தார் சோமு.