கிருஷ்ண ஜகன்நாதன் எழுதிய குவிகம் வெளியீடான “மறக்க முடியுமா? ” என்ற நூல் நாங்கள்  MCC  நண்பர்கள் கேட்டு மகிழ்ந்த அவரது அனுபவங்களின் தொகுப்பு! 

இவர் திரைகடல் ஓடித்  திரவியம் தேட குவைத்  சென்ற சமயத்தில்தான்  சதாம் ஹுசைன் குவைத்தை  ஆக்கிரமித்த சமயம். அங்கே இவருக்கு ஏற்பட்ட அனுபங்களும் ஜீவ மரணப்  போராட்டங்களும், அதிலிருந்து தப்பிய அனுபவங்களும்  அத்தனையும் இன்றைக்குப் படிக்கும்போதும் திகில் தான்.  

ஒரு மாபெரும் திரில்லருக்கான சம்பவங்களும் அதற்கேற்ற காட்சிகளும் இந்தப் புத்தகத்தில் மிகச் சிறப்பாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன.

திரைப்படமாக வந்தால் BLOCK BUSTER   ஆகத்  திகழும் என்பதில் சந்தேகமில்லை. 

கடைசியில் கொடுக்கப்பட்ட புத்தகத்தின் பொருளடக்கத்தைப் படித்தாலே உடனே புத்தகத்தைப் படிக்கவேண்டும் என்று தோன்றும். 

இதற்கு தினமணியில் வந்த மதிப்புரை சமீபத்தில் நான் படித்த மதிப்புரைகளுக்குள் மிகச் சிறப்பானது.

அதனைப் படிக்க கீழே கொடுக்கப்பட்ட இணைப்பைச் சொடுக்கவும்! 

தினமணியில் மறக்க முடியுமா மதிப்புரை 

 

தனது  அனுபவங்கள் பற்றி ஆசிரியர் ஜகந்நாதன் என்ன கூறுகிறார்? 

இந்தப் புத்தகம் என் சுயசரிதை அல்ல. அறுபது வருடங்களில் நான் கடந்து வந்த பாதைகள், நான் பெற்ற அனுபவங்கள், கற்ற பாடங்கள் ஆகியவற்றை கட்டுரைகள் வடிவில் எழுத, கடந்த ஆறு மாதங்களாக எடுத்த முயற்சியின் வெளிப்பாடுதான் இந்தப் புத்தகம்.

மேலும் இந்தக் கட்டுரைகளில் என்னைத் தாண்டி, நான் வாழ்ந்த சமகால சமூக, பொருளாதார சூழல்களை நான் பார்த்த பார்வையில் விவரிக்க முற்பட்டிருக்கிறேன்.

இந்தப் புத்தகத்தில் நான் கண்ட, அனுபவித்த சமூக பொருளாதார சூழல்கள், விவரித்துள்ள பல நிகழ்வுகள், சம்பவங்கள் என் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினர்க்கும், என் நண்பர்கள் பலருக்கும், இந்தப் புத்தகத்தை வாசிக்கும்வரை தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

ஒரு வகையில் இது என் அறுபது ஆண்டு கால வாழ்க்கையின் சுருக்கி எழுதப்பட்ட டைரி புத்தகம் என்றும் சொல்லலாம்.

மேலும் என் வாழ்க்கையில் எனக்கு வழிகாட்டிகளாவும், நண்பர்களாகவும், நலம் விரும்பிகளாகவும் இருந்த நண்பர்களை நினைவு கூர்வதர்க்கும், நன்றி தெரிவிப்பதற்கும் இதை ஒரு வாய்ப்பாக அமைத்துக்கொண்டேன்.

என்னை எழுதுவதற்கு தொடர்ந்து ஊக்கம் அளித்த MCC நண்பர்கள் பேராசிரியர் சிந்தாமணி, சுந்தரராஜன், சந்திரா, மோகன், நடராஜன், மாரியப்பன், தனசேகரன், பாலா அவர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. அதேபோல என் முயற்சிக்கு ஊக்கமளித்த DAR நண்பர்கள் குழவிற்கும், குறிப்பாக HR, ராகவன், சந்தானம் ரவிநாராயணன் அவர்களுக்கும் நன்றி.

எனது இந்த முயற்சிக்கு ஊக்கமளித்து உறுதுணையாக இருந்த என் குடும்பத்தர் அனைவருக்கும் நன்றி.

நான் எழுதியதில் திருத்தங்கள் பல செய்த HR அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்தப் புத்தகத்தை வடிவமைத்து, திருத்தங்கள் பல செய்து வெளியிடும் குவிகம் பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றி. 

சாதாரன மத்திய வகுப்பில் பிறந்து வளர்ந்த நான் படித்து, பட்டம் பெற்று, பல்வேறு நாடுகளில் பணி புரிந்து, அனுபவங்கள் பல பெற்று, சமூக ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் ஓரளவு முன்னேற்றமடைந்து வாழ்ந்து கொண்டிருப்பது, இறையருளினால் மட்டுமே. அந்த இறைவனுக்கு என் நன்றி கலந்த வணக்கம்.

 நான் எழுதிய கதை.

என்னுடைய நீண்ட கால ஆசை! நாமும் புத்தகங்கள் எழுத வேண்டும். அந்தப் புத்தகங்களை மற்றவர்கள் வாசிக்க வேண்டும், ஓரிருவராவது பாராட்ட வேண்டும் என்பதெல்லாம் கூடுதல் ஆசைகள். பணியிலிருந்த காலம்வரை, பொருள் ஈட்டுவதிலும், அலுவலக பணிகளிலும், குடும்ப பொறுப்புகளை ஏற்று செய்வதிலும் முழு நேரமும் கவனமும் சென்றுவிட்டன. புத்தகம் எழுதும் ஆசை வெறும் ஆசையாகவே இருந்தது. ஆனால் நேரமின்மை மட்டும் காரணமில்லை. புத்தகம் எழுத. நிறைய புத்தகங்கள் வாசிக்க வேண்டும் . முப்பது வயதுவரை கையில் கிடைத்த புத்தகங்களை வாசித்து முடித்த எனக்கு, பணியிலிருந்த காலங்களில் வாசிக்கும் பழக்கமும் வெகுவாகக் குறைந்துவிட்டது. பணியிலிருந்த காலங்களில் பெரும்பாலும்  பணி சம்பந்தப்பட்ட புத்தகங்களை மட்டும்தான் படித்தேன். எனவே எழுதும் ஆவலும் ஆசையும் படிப்படியாகக் குறைந்து கொண்டு வந்தன.

ஆண்டுகள் உருண்டோடிவிட்டன. பணி ஓய்வு பெற்று, குடும்ப பொறுப்புகளும் ஒரளவு முடிந்துவிட்டன. பிள்ளைகளின் குடும்ப வாழ்க்கையையும் அன்றாட பிரச்னைகளையும் அவர்களே பார்த்துக்கொள்வார்கள், சமாளித்துக் கொள்வார்கள் என்ற மன நிலையை ஏற்றுக்கொண்டேன். அறுபது வயதுவரை, என் தோள்தான் எல்லா குடும்ப, அலுவலக பாரங்களையும் தாங்கிக் கொண்டிருக்கின்றது, நம்மைச் சுற்றித்தான் எல்லாம் நடக்கிறது என்ற நினைப்பி்லிருந்த எனக்கு, இப்போது மட்டும் அல்ல, எப்போதுமே அது அப்படி இல்லை; நாம் குறுக்கிடாமல் இருந்தால் நடக்க வேண்டியவைகள் நன்றாகவே நடக்கின்றன, அவைகளை பார்த்துச் செவ்வனே செய்ய மற்றவர்கள் இருக்கின்றார்கள் என்ற யதார்த்தம் புரிந்துவிட்டது. இந்தப் புரிதல் சற்று கால தாமதமாகத்தான் வந்தது. இப்போதாவது வந்ததே என்று நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன்.

ஆகவே பணியிலிருந்து முழு ஓய்வு பெற்ற பிறகு நேரமின்மை என்ற காலம் போய், நேரமிகுதி என்றாகிவிட்டது. இந்தப் புத்தகம் எழுதும் ஆசை மீண்டும் தலை தூக்க ஆரம்பித்தது. எதைப்பற்றி, எந்த மொழியில் எழுதலாம் என்று யோசிக்கவேயில்லை. முப்பத்தைந்து வருட காலம்,  வெளி நாடுகளில், தமிழிலிருந்து விலகி இருந்துவிட்டேன். ஆங்கிலம் தான் என் மொழி என்று நினைத்துக்கொண்டு ஆங்கி்லத்தில் ஒரு கதை எழுதலாம் என்று ஆரம்பித்தேன். கதையும் உருவாகவில்லை, ஆங்கிலமும் வரவில்லை, கைகொடுக்கவில்லை.

இந்தக் காலக்கட்டத்தில்தான் என் வாழ்நாள் நண்பன் சந்திரா மூலம் அவருடைய MCC நண்பர்கள் குழுவுடன்  பரிச்சயம் ஏற்பட்டது. எல்லோருமே மெத்த படித்தவர்கள், பண்பாளர்கள், இனிமையானவர்கள். அவர்கள் என்னுள் இருந்த தமிழை தட்டி எழுப்பினார்கள். அவர்கள்தான் என்னுடைய வாழ்க்கை அனுபவங்களை என்னைத் தமிழில் பேசவைத்து கேட்டார்கள். தமிழில் எழுத ஊக்குவித்தார்கள். அவற்றையெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடலாம் என்ற யோசனையையும் தைரியத்தையும் கொடுத்தார்கள். இது நல்ல யோசனைதானே.? அனுபவங்களைப்பற்றி எழுதப் புத்தகங்கள் படிக்க வேண்டிய அவசியமில்லை.

இருந்தாலும் எனக்குள் ஒரு தயக்கம். நம் எழுத்தில் சாரம், நடை, தரம் என்று எதுவுமே இல்லையே. இதையெல்லம் புத்தகமாக வெளியிடலாமா என்று சுய சந்தேகம்.

நான் வாழ்க்கையில் கற்ற பல பாடங்களில் ஒன்று, நாம் வாழ்க்கையில் செய்யும் செயல்களில், தரத்தையும், முழுமையையும, நிறைவையும் (perfection) மட்டுமே குறிக்கோளாக வைத்துக்கொண்டால், நாம் செய்ய விரும்பும் பல செயல்கள் கால தாமதமாகிவிடக்கூடும். நம் காலமே கூடக் கடந்துவிடக்கூடும். நம்முடைய பல ஆசைகள் நிறைவேறாமலேயே நம் காலம் போய்விடும்.

ஆகவே இதையெல்லாம் பொருட்படுத்தாமல், புத்தகம் எழுத வேண்டும் என்ற என் நீண்ட கால ஆசையைப் பூர்த்தி செய்வதற்கென்றே இந்தப் புத்தகத்தை எழுதிவிட்டேன். மற்றவர்கள் படிக்க வேண்டும், ஓரிறுவதாவது பாராட்ட வேண்டும் என்ற ஆசைகளெல்லாம் இரண்டாம் பஷமாகி விட்டன. என் வாழ்க்கைப் பயணத்தை ஓரளவாவது ஆவணப் படுத்திவிட்டேன் என்ற மன நிறைவு, மகிழ்ச்சியை கொடுக்கிறது.

இந்தப் புத்தகத்தை என் குடும்ப உறுப்பினர்களும், நெருங்கிய நண்பர்களும் இப்போதோ இல்லை எப்போதோ படித்துப் பார்ப்பார்கள் என்று நினைக்கிறேன். மற்றவர்கள் கையில் இந்தப் புத்தகம் கிடைத்தால், அவர்கள் பார்க்கலாம் என்பதற்காகச் சில புகைப்படங்களைச் சேர்த்திருக்கிறேன்.`

 

புத்தகத்தில் உள்ள பொருளடக்கம்: 

சென்னை பட்டிணமும் ஆரம்ப கால நினைவுகளும் 1
சென்னை பட்டிண ஒலிகளும் ஒளிகளும் 6
வாடகை வீடும் சொந்த வீடும் – 12
ஆரம்ப கால கல்வி முறையும் வயது குளறுபடிகளும் 16
என் 1960 வருட சலூன் கடைக்காரரும் தினத்தந்தியும் 20
எங்கள் குடும்ப மருத்துவரும் கம்பவுன்டரும் 24
அண்ணாச்சி மளிகை கடையும் நானும் 29
எங்கள் வீட்டு வண்ணானும் அவரின் கழுதையும் 32
மாட்டுக்கார கிருஷ்ணன் பாலும் ஆவின் பாலும் 36
பள்ளி ஆசிரியர்கள் – கண்திறந்த – கண்கண்ட தெய்வங்கள் 41
பள்ளி ஆசிரியர்கள் 45
போர்க்கால(கள) அனுபவங்கள் சிலிர்ப்பூட்டக்கூடியவையா? 50
அமானுஷ்யத்தில் நம்பிக்கை? 56
கல்லூரி நாட்களும் ஆங்கில மோகமும். 60
கல்லூரி நாட்களும் ஆங்கில மோகமும் (2) 64
பிஏ. படிப்பும் வேலை வாய்ப்புகளும் 69
சென்னை சங்கீத சபாக்களும் நானும் – நினைவலைகள்.- 74
கிராமத்திலிருந்து நகரம் வரை – வாழ்க்கை பயணம். 79
வங்கிப் பணி – பின்னணி 82
வங்கி பணி – ஆரம்ப நாட்கள் 86
சின்டிகேட்வங்கி பணி – ஊர் ஊராக -மைல்ஸ் ஃபிரான்சிஸ் என் வழிகாட்டி 90
வெளி நாட்டை நோக்கி- திரைகடல் ஓடியும்….. 95
வளைகுடா வாசம்- போர்க்கால சூழல் 100
வளைகுடா பணிக்காலங்கள் -௦ Dr மேனேசிஸ் 105
போர்க்கால(கள) அனுபவங்கள் ஆபத்தானவைகள்தான் 1 110
குவைத் அனுபவம் தொடர்கிறது -. 178
குவைத் அனுபவம் முடிகிறது- 2 183
ஆப்பிரிக்கா சாகசங்கள் – 1 189
ஆப்பிரிக்க சாகசங்கள்- முடிவடைகிறது. 15- 249
வளைகுடா வாழ்க்கை திரும்புகிறது- 1 நண்பர் பாரீஜா என் நலம்விரும்பி 253
வளைகுடா வாழ்க்கை திரும்புகிறது- 2 உடன்பிறவா சகோதரன் சந்திரா 258
வளைகுடா அனுபவம் தொடர்கிறது -3 ஹுமாயூன் கபீர்- பாக்கர்-ஷான் சுல்தான் – பண்பாளர்கள். 263
ஆப்பிரிக்கா – எதிர்பாராத அழைப்பு – மீண்டும் தார்ஸ்லாம் அனுபவம் 268  

பணி ஒய்வுக்கு பிறகு…. 275

&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&

இந்தப் புத்தகம் வேண்டுவோர் நண்பர்  ஜகன்நாதனை அணுகலாம். (Phone: 9940563462)