குடும்பத்தில் கணவன், மனைவி எப்படி இருக்கவேண்டும்? | Om Tamil calendar

பெற்றோர்களுக்காக நான் நடத்தும் ஒவ்வொரு பயிலரங்கிலும் அதிகபட்சமாகக் கேட்கப்படும் கேள்வி, கணவன்-மனைவி உறவைப் பலப்படுத்தச் செய்ய வேண்டியவை என்னென்ன என்றுதான். அறிய விரும்பினார்கள்! தொடர்ந்து பல வாரங்களுக்கு இதை மையமாக வைத்து பயிலரங்கம் நடத்தி வந்தேன்.‌

பலர் பங்கேற்க, கருத்துகளை முழுமையாகப் புரிந்து கொள்வதற்காகப் பங்களிப்பாளர்களைப் பலச் சிறு குழுக்களாகப் பிரித்தேன். குழு ஆராய்ச்சிகள் வலியுறுத்திய படியே குழுவில் ஆறு அல்லது எட்டு பேர் என நியமித்தேன். இவ்வாறு செய்தால் பங்களிப்பும் செயல்பாடும் நன்றாக இருக்கும். ஒவ்வொரு குழுவும் வாரத்தில் ஒரு மணிநேரத்திற்குச் சந்திக்கும்படி அமைத்துக்‌ கொண்டேன்.‌

அனைவரும் ஆர்வத்துடன் வந்ததால், முதன்முதலாகத் தம்பதிகளைத் தம்மிடையே பந்தத்தை மேம்படுத்திய அம்சங்களைப் பகிரும் படி பரிந்துரைத்தேன். அது சொல்லாக அல்லது செய்கையாகக் கூட இருக்கலாம் என்றேன்.

குழுவில் பகிரப் பகிரக் குழுவினர்கள் தம் வாழ்க்கையிலும் உறவிலும் நேர்ந்த அனுபவங்களைத் தயக்கமின்றிப் பகிர்ந்தார்கள்.

பகிர்ந்து கொண்டதில் சில விஷயங்கள் தெளிவானது. தங்களது உறவு நெருங்கிய விதங்களை எண்ணிப் பார்த்ததில் நெருக்கம் ஏற்படும் வழி ஒன்றல்ல, பல வழிகள் உள்ளன என்று. குழுவினர் பகிர்ந்ததிலிருந்து தங்களது வாழ்விலும் அவற்றைத் தாம் பிரயோகம் செய்ததை, செய்வதை உணர்ந்தார்கள். இவற்றால் உறவுகளில் நேர்ந்த நேர்மறைத் தாக்கத்தைக் கவனிக்கச் செய்தேன். இன்றுவரை எவை நீடித்தன என்றதை எண்ணிப் பார்க்கச் செய்தேன். பின்னோட்ட நினைவலைகள் சந்தோஷத்தைக் கூட்டியது!

ஆரம்பக் கட்டம் உற்சாகத்துடன் சென்றதால் குழுவினர் மேலும் முனைந்து ஈடுபட்டனர்! குழுக்களில் இதற்கு முக்கிய பங்குண்டு. அதிலிருந்து புரிதல் அதிகரிக்கும்.

இவர்களிடையே பிணைப்பு மேலோங்கியதால் சலனமில்லாமல் மனஸ்தாபங்களைப் பற்றிப் பேச முன் வந்தார்கள். பகிர எதைத் தேர்வு செய்ய எனக் குழுவில் முடிவு செய்ததில், கருத்து வேறுபாடுகளை மையமாக வைத்துப் பகிர விரும்பினார்கள். அவ்வாறே நடத்தினேன்.

பல கோணங்களில் வேறுபாடு சம்பந்தப்பட்ட குறும்படங்களை, ஆராய்ச்சிக் கட்டுரைகளை, கதை, கட்டுரைகளைக் குழுவாகப் படித்து, புரிதலைக் குழுவில் பகிரும்படிச் செய்தேன். இதன் தொடர்ச்சியாக, அதில் சொல்லப்பட்டவற்றைத் தங்கள் உறவிலும் அடையாளம் காணச் செய்தேன். அனுபவங்களைப் பகிரும் போது சில புரிதல்கள் நேர்ந்தன.‌

ஒட்டுமொத்தமாகக் கவனித்த ஒன்றை விவரித்தார்கள். தம்பதியனரிடையே வேறுபாடு நேரும் போதெல்லாம் கணவன் மனைவியைப் பற்றியும், மனைவி கணவரைப் பற்றியும் தகாத‌ வார்த்தை உபயோகிக்காமல் கருத்தைத் தெரிவிக்கும் சூழலில் மட்டுமே அவர்களின் நெருக்கம் தொடர்ந்தது என.

உளவியல் ரீதியாக இதை எடுத்துச் சொல்வதென்றால், கவனமும் சர்ச்சையும் குறிப்பிட்ட அந்தச் சூழல், நடந்த சம்பவத்தைப் பற்றி மட்டுமே இருக்கையில். நபர்கள் மேல் அல்ல. அவதூறாகப் பேசாததால். முக்கியமாகப் பழிவாங்க நோக்கம் இல்லாமல் இருக்கையில்.

இந்த வழிமுறை சிறுவர்கள் மற்றும் பெரியவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்!

பயிலரங்கத்தில் பகிர்வது தொடர்ந்தது. தம்பதியர் உறவை மேம்படுத்தும் இன்னொரு விவரத்தை அடையாளம் கண்டார்கள். அவர்களுக்குள் கருத்து வேறுபாடு, வித்தியாசங்கள் நேர்ந்த பின்னர், வெகுநேரம் தாமதிக்காமல் மீண்டும் பேசிக் கொண்ட சமயங்களில் பரஸ்பர பந்தம் வலுவடைந்தது என! இதன் நன்மையையும் பகிர்ந்தார்கள், கொஞ்ச நேரத்திலேயே வேறுபாட்டுக் கருத்துகளைப் பகிர்ந்து தெளிவு பெற முடிந்தது என!

அவர்களின் உறவின் பலத்தைக் கணவன்-மனைவி சேர்ந்து கவிதை வடிவமாக அமைக்கப் பரிந்துரைத்தேன். படித்தும், நடித்தும் உற்சாகத்துடன் குழுவில் பகிர்ந்தார்கள்.

உறவுகள் மேம்படுத்தும் அம்சங்களில் மீண்டும் மீண்டும் முன்வந்தது நம்பிக்கைக்கு முக்கியமான பங்குண்டு என! இதன் தோற்றம் மன பேதங்கள் நேரும் சூழலிலும் “கருத்து வேறுபாடு விஷயத்தில்தான், உறவில் அல்ல” எனத் தென்பட்டது! இவற்றால் தம்பதியர் பாசமும் அன்பும் மேம்படுகிறது!

தினசரி வாழ்வில் நிதர்சனமான சூழலில் சொல்லப்படும் விதவிதமான சொற்கள், வாக்கியங்களைத் தயாரித்தேன். இந்தப் பட்டியலை வாக்குவாதம் போல அமைத்தேன். அவரவர் வாழ்வில் தோன்றும் சூழலும், அவை நேரும்போது பின்னர் நிகழ்ந்தது என்னவென்று கவனிக்கச் சொன்னேன். தொடர்ந்து செய்ததில் விளைவு தெரிந்தது. பயிலரங்கத்தில் அபிப்பிராயங்களைப் பகிரும் போது, மதித்துப் பேசினார்கள். உறவுகளில் இதுதான் சேமிப்பு!‌ வீட்டிலும் இவ்வாறே இருக்கிறார்களா என்றதைக் கவனித்து வரும்படிச் சொன்னேன்.

இந்தக் கவனம் செலுத்தும் செயல்பாட்டைச் செய்தபிறகு விளைவைப் பகிர்ந்து கொண்டார்கள். ஒருசிலவற்றை இங்குப் பகிர்கிறேன். உதாரணத்திற்கு, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முயல, நான்-நீ என்ற சுயநலம் மாற்றி “நாம்” என்று எண்ணம் மேலோங்க, மகிழ்ந்தார்கள்!

ஒருசிலருக்கு இதெல்லாம் செய்தும் போதிய பலனில்லை. இதைச் சுதாரிக்கப் பட்டியல் தயாரித்தோம். உதாரணத்திற்கு, கணவனோ மனைவியோ வீட்டில் வேலை செய்யும் போது சலித்துக் கொண்டால் உதவி செய்யப் போவீர்களா? எரிச்சல் படுவதைப் பார்த்தால், என்ன ஏது என்று அவர்களைக் கேட்பீர்களா?” ஒவ்வொன்றையும் ஆராய்ந்து, வாழ்வில் இடம் பெறுவதை, செயல்பாட்டையும் பகிரச் செய்தேன். இவ்வேளைகளில் நிலைமையைப் புரிந்துகொண்டு கைகொடுக்க முடியும் என்பதை மெதுவாகப் புரிந்து கொண்டதும், அவ்வாறு செயல்பட ஆரம்பித்தார்கள். உறவு மேம்பட்டது!

குழுவினர் இன்னொரு அதிருப்தியைப் பகிர்ந்தார்கள். கணவரோ மனைவியோ மற்றவர் பரிந்துரையைக் கேட்டுச் செயல்படும் போதெல்லாம் பெரும்பாலும் தமக்குள் கோபம், சந்தேகம், சண்டை வருவதாக. பயிலரங்கில் பங்கேற்ற பின்னர் இதை ஒருவருக்கொருவர் பேசிச் சரி செய்வதாகக் கூறினார்கள். நம்பிக்கைக் களவு போவதைச் சுதாரித்துக் கொண்டதையும் தெரிவித்தார்கள்.‌

பெரியவர்களின் சாயல் குழந்தை வளர்ப்பில் தென்படும் என்ற பொருளை எடுத்துக் கொண்டோம். குழுவில் ஒப்புக்கொண்டார்கள், குழந்தை எந்தவித தவிப்பும் படக்கூடாது எனக் கருதிக் கண்ணும் கருத்துமாகக் கவனித்து கீழே விழாமல் பார்த்துக் கொள்வது, அல்ல பிள்ளைகளிடையே சண்டை வந்தால் பெற்றோர்கள் ஓடிப்போய் சரி செய்துவிடுவது, இப்படிப்பட்ட நடத்தைகள் குழந்தையைப் பாதிக்கிறது என. குழந்தை எப்போதும் பெற்றோர் நிழலில் வளர, வாழ்நாள் முழுவதும் அவ்வாறே இருக்க நேரிடும்.

இந்த குறையை மறைக்கக் குழந்தை வளர்ந்தபின்னும் பெற்றோர் எல்லாம் செய்து கொடுப்பார்கள். இவர்கள் உன்னிப்பாக மணவாழ்க்கையிலும் நுண் மேலாண்மை (“மைக்ரோ மேனேஜ்மென்ட்” “micro management”) செய்வதால் அந்த தம்பதியினர் உறவில் இன்னல்கள் நிலவுமே தவிர உறவு மலராது. பெரும்பாலும் விவாகரத்து ஏற்படும் அல்ல பிரிந்து வாழ்வார்கள்.

பல தம்பதியர் மற்றவர்களுடன் சேர்ந்து துணைவரும் தம்மைக் கேலி செய்வதைப் பற்றிப் பகிர்ந்து கொண்டார்கள். தங்கள் குறையை மட்டுமே கவனித்து கேலியாக மற்றவர்கள் முன்னே சொல்வதால் தனக்கு மனத்தளர்ச்சி ஏற்படுவதாகக் கூறினார்கள். விரிவாக இதைப் பற்றி ஆராய்ந்ததும், இதனால் “எப்பவுமே இப்படி” என்ற ஒட்டுமொத்தமான கணிப்பும், மரியாதை, பாசம், பற்று குறைய வாய்ப்புள்ளதையும் உணர்ந்தார்கள். இப்படிக் குறைகளைக் கேலியாகச் சொல்லும் பழக்கத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் எனப் புரிந்து கொண்டார்கள்.

திருமணத்திற்குப் பிறகும் மற்றவரிடம் ஈர்ப்பு, அவர்களின் நடை, உடை, பாவனை இவற்றை ரசித்துப் புகழ்வது மற்றொன்று. அவர்களுடன் நேரத்தை அதிகம் கழிப்பதும். வீட்டில் இதுபோல் இல்லை என்ற ஏக்கம். இந்த நிலைகள் திருமணப் பந்தத்தை மீறிய உறவான extramarital relationship ஏற்படுத்தலாம்! ஈர்ப்பை அடையாளம் காணப் பட்டியலைச் செய்தோம். கூடவே காரணிகளைப் புரிய வைத்தேன்.

கடைசிக் கட்டத்தில் குழுவினரை தம்முடைய நிலைப்பாட்டை உணரப் பரிந்துரைத்தேன்.

ஒன்றாக நேரம் கழிப்பதுண்டா?
உணர்வைப் பகிர்வதுண்டா? சிந்தனையை அறிவீர்களா?
அவரைப் பாராட்டுவீர்களா?
ஒருவருக்கு ஒருவர்
பக்க பலமா?

அல்ல துளிகூட ஆதரவு இல்லையா?
**********************************