அத்தியாயம் பன்னிரண்டு

பகவத் கீதை சொல்லும் வாழ்க்கைப் பாடம் அத்தியாயம் பத்து – முனைவர்  சீதாலக்‌ஷ்மி – குவிகம் மின்னிதழ் (மாத இதழ்)நான்காவது அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் அர்ஜுனனுக்கு ஞானத்தின் முக்கியத்துவதை உணர்த்தும் விதமாக செயல் மற்றும் செயலின்மையைப் பற்றி ஒரு ஆழ்ந்த படிப்பினையைத் தருகிறார். அவர் ஆராயும் கேள்விகள் கீழ்க்கண்டவாறு:

  • செயல் என்றால் என்ன?
  • செயலின் தன்மை என்ன/
  • செயல் எங்கு தோன்றுகிறது?
  • செயல் யாருக்கு சொந்தம்?

நம் அனைவருக்கும் இருக்கும் ஒரு பெரிய தவறான சிந்தனை, நான்தான் இந்தச் செயலைச் செய்தேன் என்பதாம். மேற்கூறிய கேள்விகளை ஆராயும்போது அவை புத்திக்கு மட்டும் விடை தராமல் நம் யதார்த்த வாழ்க்கைக்கும் மிகவும் உதவி செய்யும் வகையில் உள்ளன. செயலைப் பற்றி நாம் தெரிந்து கொள்ளும்பொழுது செயலின்மையைப் பற்றியும், தவறான செயல்களைப் பற்றியும் நாம் அறிய வேண்டும். கிருஷ்ணர் முதலில் நம் முன் வைப்பது செயலின் தன்மையைப் பற்றிய விவரங்களை; செயல் என்பது மிகவும் நுட்பமானது. புறநோக்கில் தெரியும் செயல் என்பது புறத்தோற்றமே; அதன் உண்மையான தன்மையை நாம் உணர வேண்டுமானால், ஒரு குருவிடம் உபதேசம் பெற்று இதை அறிந்து கொள்ள வேண்டும். குரு உபதேசம் தரும் ஞானம் செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் பார்க்கச் செய்யும்.

இந்தக் கூற்றைப் புரிந்து கொள்ள முயற்சி செய்வோம். ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் இரண்டு நிலைகள் இருக்கின்றன. ஒன்று, தேகம் அல்லது உடல் என்று நாம் சொல்லும் இயற்பொருளான உடல், மனம் மற்றும் அறிவு என நாம் உணரும் புத்தி. இதனை வேதாந்தத்தில் அனாத்மா அல்லது அகங்காரம் என்பர். மற்றொன்று இந்த உடலை இயக்கும் உயிராக இருக்கும் ஆத்மா. இந்த ஆத்மா உடல், மனம் மற்றும் புத்தி என்ற மூன்றினோடும் இணைந்து உடலை உயிர்ப்பித்து மனிதன் என்ற அடையாளத்தைத் தருகிறது. இந்தப் பிணைப்பு என்று அறுந்து போகிறதோ, அந்தக் கணத்திலிருந்து உடலுக்கு உண்டான மதிப்பு போய் விடும். அப்புறம் அந்த உடலைச் சீராட்டி பாராட்டி யாரும் வைத்திருக்க மாட்டார். இந்த உடலை மண்ணுடன் சேர்க்கும் பொறுப்பு அதனைச் சுற்றி இருப்போரின் கடமையாகி விடும்.  இந்த ஆத்மாவுடன் ஆன அந்த இணைப்பு அறுந்து போன பின்பும், இந்த உடல் மண்ணை அடைந்த பின்பும் ஆத்மா என்பது அழிவில்லாமல் தொடரும். இதனை வேதாந்தத்தில் ஒரு உதாரணம் மூலம் விளக்குவர். மின் சக்தியால் இயங்கும் விளக்குகள் பல. ஆனால் அந்த மின்சக்தியை அணைத்து இரண்டுக்கும் இடையே உள்ள இணைப்பைத் துண்டித்தால், விளக்கு எரியாது. மின்சக்தி என்பது ஆத்மா; விளக்குகள் நமது உடல்கள்.

இந்த ஆத்ம தத்துவம் விண்வெளியைப் போன்று எந்தச் செயலையும் செய்யாது; ஏனெனில், செயலுக்கு அசைவு அல்லது இயக்கம் அவசியம். எல்லா இடத்திலும் வியாபித்திருக்கும் விண்வெளிக்கும் ஆத்மாவுக்கும் அசைவு அல்லது இயக்கம் கிடையாது. புதியதாக ஒரு இடத்திற்குச் செல்வதே இயக்கம் ஆகும். அதனால் ஆத்மாவும் விண்வெளியும் செயலற்ற நிலையில் இருப்பன. ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு கொடுக்கும் முதல் பாடம் இங்கு ஆத்மா என்பது செயலற்ற தன்மையுடன் செயலுக்கு அப்பாற்பட்டு இருப்பது என்பதே ஆகும்.

உடல் மனம் புத்தி என்ற அனாத்ம தத்துவமான அகங்காரம் என்பது எப்பொழுதுமே செயல் பட்டுக்கொண்டு இருப்பது; தூங்கும் நிலையிலும் இருதயம், நுரையீரல் போன்றவை செயல்பட்டுக் கொண்டிருக்கும். மனம் செயல்படாத நிலை தூக்கம் ஒன்றில் தான். அப்பொழுது மனம் காரண உடல் என்று அழைக்கப்படும் உடலுக்குள் அமிழ்ந்து விடும் மறுபடியும் துயிலிலிருந்து எழுந்து கொள்ளும் பொழுது மீண்டும் தூல உலகுடன் தொடர்பு கொள்ளும். காரண உடல் என்பது ஆன்மாவின் விதைகளைத் தாங்கி பிறப்பு இறப்பு சுழற்சியில் ஆன்மாவுடன் இணைந்திருக்கும் அடிப்படை விதிக்கூறு ஆகும். இதன் மூலமே ஆன்மாவின் சாரம் மறு பிறவிக்குச் செல்லும். இதனால், அனாத்மாவானது, செயலிலிருந்து ஒரு நாளும் விடுபடாது.

ஸ்ரீகிருஷ்ணர் இதன் மூலம் நமக்குத் தெரிவிப்பது என்னவென்றால், ஒரு மனிதன் தன் உண்மை நிலையை உணராது அனாத்மாவுடன் இணைந்து  செயல்படும்போது அவனால் செயல்படாமல் இருக்க முடியாது. ஆனால் ஆன்ம நிலையில் இருக்கும் ஒரு ஞானிக்கு செயலினைத் துறக்க வேண்டிய அவசியம் கிடையாது; ஏனெனில் ஆத்மா செயலற்ற நிலையிலேயே எப்பொழுதும் இருக்கும். இந்த ஞானத்தையே ஞான கர்ம சந்யாசம் என்பர்.

कर्मर्ण्यकर्म यः पश्येदकर्मणि च कर्म यः ।

स बुद्धिमान्मनुष्येषु स युक्तुः कृत्स्नकर्मकृत् ॥४-१८॥

செயலில் செயலின்மையையும், செயலின்மையில் செயலையும் காண்பவனே மனிதர்களில் ஞானியென அறியப்படுவர்.. நிறைவு பெற்ற ஒரு மனிதராய் அவர் யோக வாழ்க்கை வாழ்பவர்; அடைய வேண்டிய அனைத்தையும் அடைந்து சாதித்தவராய இருப்பினும் செயலற்று பற்றற்று வாழ்பவர்..

செயலுக்கு ஆதாரமாக இருப்பது மனதில் தோன்றும் ஆசைகள். இந்த ஆசைகளே எவ்விதச் செயலுக்கும் ஆதாரமாய் இருக்கும். பூரணத்துவத்தை உணர்ந்து தன்னில் நிறைவுடன் இருக்கும் ஒரு ஞானிக்கு ஆசைகள் இல்லை. அப்பொழுது எது அவருக்கு செயல் செய்ய உந்துதலாக இருக்கும்?

ஸ்ரீகிருஷ்ணர் நிறைவிலிருந்து ஏற்படும் செயலே உண்மையான செயல் என்கிறார். சேவை மனப்பான்மையுடன் செய்யப்படும் செயல் பூரண மனநிறைவிலிருந்து  ஏற்படுகிறது. இந்தச் செயலுக்குத் தூண்டுகோலாய் இருப்பது ஆத்ம அனுபவத்தினால் ஏற்படும் கருணை மனோபாவம்.

ஒரு சாதாரண மனிதன் தான் தன் குடும்பம் என்ற சின்ன வட்டத்திற்குள்ளேயே இருப்பான். ஆனால் தன்னிறைவு பெற்ற ஞானியோ உலகத்தையே கருணையுடன் பார்ப்பான். ஞானமின்றி அறியாமையில் இருக்கும் ஒரு மனிதனுக்கு சுயநலமும் தன்னைப் பற்றிய உணர்வுமே மேலோங்கி இருக்கும். ஆனால் தன்னை உணர்ந்த ஒரு ஞானிக்கோ சுயலமற்ற சிந்தனையும் அளவற்ற கருணையுமே அவனது இயல்பாக இருக்கும். எவ்வாறு நெருப்பிலிருந்து சூட்டையும், சூரியனிடமிருந்து ஒளியையும் பிரிக்க முடியாதோ, அதே போல் ஒரு ஞானியிடமிருந்து கருணையையும் பிரிக்க முடியாது. இந்தக் கருணையே செயல் வடிவம் பெறுகிறது. ஒரு ஞானியின் செயல்பாடுகள் இதனால் வறுபட்ட விதையைப் போலாகி கர்ம வினைகளைச் சேர்க்காது. ஞானம் என்ற அக்னி, சுயநலம் என்ற அகங்காரத்தை எரித்து, சம்சாரம் என்ற கடலைக் கடக்க வழி செய்யும். ஒரு ஞானி ஆசைகள், சங்கல்பம் மற்றும் துக்கம் அனுபவிப்பதைக் கடந்து விடுகிறான். அஞ்ஞானியோ சூழ்நிலைக் கைதியாகி வாழ்க்கையில் ஏற்படும் பிரச்னைகளுக்கு அடிமையாகிறான். ஞானியோ எந்த நேரத்திலும் எந்தப் பிரச்னையையும் எதிர்கொண்டு வெல்லும் வல்லமை படைத்தவனாகிறான்.  

இறைவனாக வந்த ஸ்ரீகிருஷ்ணர் இரண்டு விதமான ஞானிகளைப் பற்றிக் கூறுகிறார். இல்லறத்தில் இருந்துகொண்டே பற்றற்ற நிலையில் செயல்படும் இல்லறத்தானும் ஒரு ஞானிதான்.  இல்வாழ்க்கையைத் துறந்து சுயநலமற்ற செயல்களை இந்த உலகத்தைக் காக்கும் பொருட்டு செய்யும் ஞானி சன்யாச ஞானி ஆவான்.

இதனால் ஸ்ரீகிருஷ்ணர் இல்லறத்தில் இருப்பவனும் ஞானம் பெற்று தன்னலமற்ற வாழ்வில் விருப்பு வெறுப்பு அற்று பிறருக்காகவே செயல் புரிந்து ஆனந்தத்துடன் இருக்க முடியும் என்கிறார். அர்ஜுனன் யுத்தத்திலிருந்தும் விதிக்கப்பட்ட கர்மவினையிலிருந்தும்  தப்பிக்க ஞான மார்க்கத்தை நாடி துறவறம் கொண்டு மோட்சம் பெற விழைகிறான். இதற்கு ஒரு விடை கூறும் வகையில், கிருஷ்ணர் இல்லறத்தில் ஈடுபட்டிருந்தாலும் மனத்தில் பற்றற்ற பாவத்துடன் வாழ்க்கையையே ஒரு யஞமாக வாழ முடியும் என்பதை உணர்த்துகிறார்.

ब्रह्मार्पणं ब्रह्म हविर्ब्रह्माग्नौ ब्रह्मणा हुतम् ।

 ब्रह्मैव तेन गन्तव्यं ब्रह्म कर्म समाधिना ॥४-२४॥  .

காணிக்கை செலுத்துவதற்கான வழிமுறை பிரம்மம். காணிக்கையும்  பிரம்மம், பிரம்மனால் நெருப்பில் அர்ப்பணிக்கப்பட்டது, அதுவும் பிரம்மம். எல்லாவற்றையும் பிரம்மமாகப் பார்ப்பவன் உண்மையில் பிரம்மத்தை அடைவான்..

இந்த சுலோகம் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் ஒரு முக்கியமான உண்மையை நம் முன் வைக்கிறார். வேதாந்தத்தில் ஒரு ஆன்மீகவாதி எதிர்கொள்ளும் முதல் நிலை, ‘என் உண்மை சொரூபம் ஆத்மாவே என்றுணர்தல்’. உட,ல் மனம் போன்ற அனைத்துமே என் உண்மையான சொரூபம் இல்லை. இவை அனைத்துமே ஆத்மா இல்லை என்ற புரிதல் வந்தவுடன், இப்பூவுலகில் உண்மையாக இருப்பது ஆத்மா மட்டுமே; அனாத்மா அல்ல என்பதும் புரியும்.  அதாவது இறைவன் படைப்பில் பிரும்ம தத்துவமாக எல்லா இடத்திலும் வியாபித்து, முக்காலத்திலும் இருக்கக் கூடியது ஒன்று என்றால், அது ஒவ்வொருவருக்குள்ளும் உயிர்த்து நிற்கும் ஆத்மா தான். இது மட்டுமே விண்வெளியையும் காலத்தையும் வென்று இப்பூவுலகின் அத்தனை செயல்பாடுகளையும் ஒரு பார்வையாளராக ஒரு சாட்சியாக நோக்கிக் கொண்டிருக்கிறது. இதுவே ஒரு வேதாந்தியின் வாழ்க்கைப் பாடத்தின் இரண்டாவது நிலை. இந்தப் புரிதல் வரும்பொழுது இந்தப் பார்வையாளனைத் தவிர, இந்த சாட்சியைத் தவிர வேறு ஒன்றுமே இல்லை என்பதும் புரியும்.

ஒரு கனவில் நாம் காணும் அந்த உலகம், அனுபவம், மனிதர்கள் அனைத்துமே கனவு எனக்குள் கலைந்ததும் போய் விடும். ஆனால் கனவில் இருக்கும்போது நானும் என்னைச் சுற்றி இருப்பவர்களும் மெய்யானவர்கள் தாம். விழித்தபின்னரோ என் கனவில் நான் கொண்ட பயம், மகிழ்ச்சி, துயரம், கோபம் எல்லாம் மறைந்து போய் விடும். இதைப் போலவே ஒரு ஞானிக்கு இந்த உலகம் மற்றும் உலகாயத விஷயங்கள் அனைத்துமே ஒரு கனவு. எவ்வாறு ஒரு கனவு என்னுள்ளே இருந்து எழுந்து, சிறிது நேரம் என்னை ஆட்டிப்படைத்து, பின்பு என்னுள்ளேயே மறைந்து விடுகிறதோ, அது போலவே இந்த உலகமும் ஒரு கனவே என்று வேதாந்தம் சொல்லுகிறது. கனவில் இருக்கும்பொழுது எனக்கு ஏற்படும் அனுபவம் இருமையை உணர்த்தும். ஆனால் விழித்தவுடன் இவை அனைத்துமே நானே என்ற புரிதல் ஒருமை அதாவது அத்வைதத்தை உணர்த்தும். மேற்கூறிய சுலோகம் மூலம் ஸ்ரீகிருஷ்ணர் நமக்கு உணர்த்துவது ஆத்மா என்ற பிருமத்தைத் தவிர வேறு ஒன்றுமே இந்தப் பிரபஞ்சத்தில் இல்லை என்பதாம். இந்த ஞானத்தைப் பெற நமது பார்வையில், அணுகுமுறையில் மாற்றம் வர வேண்டும். இந்த மாற்றத்தையே கிருஷ்ணர் யஞம் என்கிறார். அடுத்த அத்தியாயத்தில் ஸ்ரீகிருஷ்ணர் கூறும் யஞங்களைப் பற்றியும் அதன் செயல் முறைகளைப் பற்றியும் இவை எவ்வாறு செயலைப் பற்றிய நுண்ணறிவை நமக்குத் தரும் என்பதையும் பார்க்கலாம்.

 

***********.