இந்த வாரம் நாம் பார்க்கப் போவது ஒரு மேடை நாடகம்.
பெயர் … “இவர்களும் இந்தியரே”
இந்த நாடகம் பற்றிய ஒரு முக்கிய விஷயம் கடைசியில் சொல்கிறேன்.
லைட்ஸ் ஆன்…. மேடையில் சிலர் அங்கும் இங்கும் குந்தி அமர்ந்திருந்து கொண்டு மண்ணை / நிலத்தை.., கையாலும், சின்ன குச்சினாலும் ஆயுயத்தாலும் நோண்டி கிடைத்ததை எடுத்து அழுக்குச் சட்டை அல்லது வேட்டியில் துடைத்து வேக வேகமாக சாப்பிடுகிறார்கள். எதுவும் கிடைக்காதவன் பாய்ந்து பக்கத்து மனிதனின் கையில் இருப்பதை பிடுங்க… சண்டையாகிறது. பின்னணியில் நாய்கள் உறுமி குலைத்து சண்டை போடும் சத்தம்….
லைட்ஸ் ஆஃப் & ஆன்
ஒரு குடிசை
கட்டிலில் ஒரு கிழவன் படுத்திருக்கிறார். ஒருவன் ஒரு மூலையில் நின்று கொண்டு வேப்பங்குச்சியால் பல் தேய்த்துக் கொண்டு இருப்பான். “டேய் பெரிசை பின்னால கூட்டிக்கிட்டு போகலியா?” என்று கேட்ட வண்ணம் மூத்த பையன் வருவான். பல் தேய்ப்பவன் “தம்பி வரட்டும்” என்பான்.
தம்பி வருவான் இருவரும் அந்த கிழவரை, அவர் கைகளை இருவர் தோளில் போடவைத்து, தூக்கிச் செல்வார்கள். பெரிய பையன் ஒரு மரக்கட்டையை ஒரு அறுவாளால் வெட்டுவான். இருவரும் அந்த கிழவரை மீண்டும் கயற்றுக் கட்டிலில் படுக்க வைப்பார்கள்.
“அப்பா என்ன சாப்பிட்டார்”.
“ஹூம் என்ன இருக்கு சாப்பிட? நாங்களே சாப்பிட்டு 2 நாள் ஆச்சு”
அப்போது ஒரு மனிதன் கையில் பையுடன் வந்து “பெரியவர் எப்படி இருக்காரு” என்று கேட்டபடி, பதில் எதிர்பார்க்காமல், கட்டிலுக்கு அருகில் போய். “ஜயா நாங்க ஊரை விட்டுப் போறோம்”
கிழவர், திடுக்கிட்டவர் போல. “என்னது இந்த ஊர விட்டு போரீகளா? ஏன் ஏன் ஏன்”
இங்க இருந்து என்ன செய்ய ? மழையும் இல்லை, விவசாயமும் இல்லை, எத்த திங்கறது? “
“இதோ இப்பதான் புரட்டாசி, ஜப்பசி கார்த்திகை வந்தா மழை வந்துடப் போகுது….”
“7, 8 ஐப்பசி, கார்த்திகை வந்துட்டுப் போயிடுச்சு, மழைதான் வரல்ல.”
“என்ன இருந்தாலும் இது நம்ம மண்ணு இல்லயா?
இங்கேயே இருந்தா மண்ணைத்தான் திங்கணும். நாங்க கிளம்பலாம் தாத்தா”
“நான் இங்கதான், பொறந்தேன், இங்கதான் வளந்தேன், இங்கதான் சாவேன். நீங்க போங்க” என்று திரும்பிப் படுக்கிறார். அவர் போய்விடுகிறார். சிறிது நேரத்தில் இரண்டு மூன்றுபேர் ஒரு ஆளை தூக்கிவந்து கீழே வைக்கிறார்கள்.
“ஐயா உங்க தம்பி பசிதாங்காம மரத்துல தூக்குப் போட்டுக்கிட்டாய்யா. நல்ல வேளை நாங்க பாத்தோம். இப்ப மயக்கமாத்தான் இருக்கான், கொஞ்ச நேரத்துல எழுந்துடுவான். பாய்துக்குங்க ” என்று கூறிவிட்டு போய்விடுவார்கள்.
“அண்ணே நாமளும் வேற எங்கயாவது போயிடலாம். இவன் வேற பசி தாங்காம தூக்குப் போட்டுக்கிட்டான் “
அண்ணன் கட்டில் அருகே போய். “அப்பா, நாம, வேற எங்யாவது போய் பொழச்சுக்கலாம். என்ன சொல்றே”
“என்னது இந்த ஊரை, மண்ணை விட்டுப் போறதா? என்ன கேள்வி இது ? நான் எங்கயும் வரமாட்டேன். இங்கதான் பொறந்தேன் இங்கதான் சாவேன்” சத்தமா கத்திவிட்டு முகத்தைத் திருப்பிக் கொள்வார்.
அண்ணன் நேரே கீழே படுத்திருக்கும் தம்பியின் கையை பிடித்துக் கொண்டு “டேய் ஏண்டா தூக்கு போட்டுக்கிட்ட, நான் என்ன செய்ய முடியும். ஊரை விட்டு எங்கணயாவது போய் பஞ்சம் பிழைக்கலாம்னா இவரு கேக்க மாட்றாரு. நான் இளம் கன்றான உன்னை பாக்கறதா இந்த கிழவனை பாக்கறதா ? இவர விட்டுட்டு போகலாம்னா தண்ணிகூட இல்லாம தவிச்சு சாகும். அப்பாவை அப்படி விட்டுட்டு போகமுடியுமா? வெள்ளம்னா சாப்பாடு பொட்டளம் போடறவங்க, பஞ்சம்னா ஒண்ணும் கொடுக்கிறதில்லை, ஒண்ணும் செய்யறதில்லை. கொஞ்சம் பொருத்துக்க ஏதாவது ஏற்பாடு செய்யறேன்” என்று சொல்லிவிட்டு வெளியே போவான்.
லைட்ஸ் ஆஃப். ஆன்
மீண்டும் அதே இடம். மூத்த பையன் நடுவில் உட்கார்ந்து இருக்கிறான் ஒவ்வொரு மூலையிலும் ஒவ்வொரு தம்பி படுத்திரைக்கிறார்கள். கிழவன் கட்டிலில் தூங்குகிறார். எல்லா லைட்டும் மூத்த பையன் மேலே. அவன் யோசிக்கிறான். அதற்க்கு ஏற்ப பின்னணி இசை. நாடகத்தின் முக்கிய காட்சி. வாழவேண்டிய தம்பிகள், சாக நினைக்கிறாங்க, வாழ்ந்து முடித்த அப்பா பிடிவாதமாக இருக்கிறார். இந்த ஊரில் வாழ வழியே இல்லை. உணவோ, தண்ணீரோ இல்லை. அப்பாவை விட்டு வி்ட்டு போகவும் முடியாது. குடிகுக தண்ணிகூட இல்லாம, பாத்துக்க ஆள் இல்லாம தவித்து சாவார். என்ன செய்வது ?
அவன் இத்தனை யோசிப்பதை உட்கார்ந்த இடத்திலேயே ஒரு வசனம்கூட இல்லாமல் முகத்தில், வெறும் பிண்ணனி இசையை மட்டும் கொண்டு காட்டினான் அந்த நடிகன். பார்வையாளர் அத்தனை பேருக்கும் புரிந்தது. பின்னர் தீர்மானமாக மெல்ல எழுந்து அழுது கொண்டே ஒரு தலகாணியை எடுத்து கிழவனின் முகத்தில் வைத்து அழுத்துவான். கொஞ்ச நேரம் கை, கால்களை உதறிவிட்டு பின் அமைதியாக இறந்து விடுவார் கிழவர். மூத்த பையன் முகத்தை மூடிக்கிட்டு அழுவான். லைட்ஸ் ஆஃப்.
இந்த முழு காட்சியிலும் பிண்ணனி இவைதவிர வேறு ஓசையே கிடையாது. அவனுடைய முக பாவம், உடல் அசைவு மட்டுமே.
லைட்ஸ் ஆஃப் ஆனவுடன் முழு ஆடிடோரியமும் கை தட்டியது.
லைட்ஸ் ஆன்
அந்த குடிசை சின்னா பின்னமாகக் கிடக்கிறது. கட்டில் தலைகீழாக உடைந்து கிடக்கிறது. ஒருசில மண்பாண்டங்கள் உடைந்து கிடக்கின்றன. பிண்ணனியில் ரேடியோவில் செய்தி வாசிக்கப்படுகிறது. “அத்திப்பட்டு கிராமத்தில் பசி, பஞ்சம், சாவு என்று எதிர் கட்சிகள் பொய் சொல்கின்றன. அங்கே இருக்கும் ஒருவர் செல்வதைக் கேளுங்கள். “எங்கள் ஊருக்கு அரசு எல்லா வசதியும் செய்து கொடுத்துள்ளது. வாய்க்காலில் தண்ணீர் விட்டு விவசாயத்துக்கும் உதவுகிறது. நாளைய தினம் முதல்வர் வெளிநாடு…… என்று ஓசை குறைந்து சோகமான இசையோடு திரை விழும். எழுந்து நின்று கை தட்டினார்கள்.
நியூஸ் மட்டும் ஆங்கிலத்தில் வாசிக்கப் பட்டது
இந்த நாடகம் பாங்க் ஆப் பரோடா சென்னை குழுவால், அகமதாபாத்தில் நடந்த மண்டலங்களுக்கு இடையிலான நாடகப் போட்டியில் நடிக்கப் பட்டது.
கதை வசனம் அமரனாகிவிட்ட எங்கள் நண்பன் ம வே சிவகுமார்.
நடிப்பு, இயக்கம், சிறந்த கதை வசனம், சிறந்த நாடகம் என்று எல்லா பரிசையும் வாங்கியது.
பின் குறிப்பு:
ஒரு குஜராத்திக்காரர் வந்து. “எனக்கு சுத்தமா தமிழ் தெரியாது. ஒரு வார்த்தைகூட தெரியாது. ஆனால் இந்த நாடகத்தில் ஒவ்வொரு வார்த்தையும் புரிந்தது என்று சொல்லிவிட்டு..உதாரணமாக சில இடங்களை, வசனத்தை.. சொன்னார். Proud moments.
இதில் வயதானவராக நடித்தது இந்தக் கட்டுரை எழுதும் சுவாமிநாதன்தான் !
