புத்தம் வீடு – ஹெப்சிபா ஜேசுதாசன்
திரு. சுந்தர ராமசாமியின் கூற்றோடு இந்தக் கட்டுரையை எழுதத் தொடங்குகிறேன். ‘புத்தம் வீடு வெளிவந்து நாற்பது ஆண்டுகளுக்கு மேலாகியும் அது தமிழிலக்கியத்தில் பிடித்துக் கொண்டிருக்கும் இடம் ஒரு மாற்றமும் இல்லாமல் இன்றுவரை அப்படியே இருக்கிறது. ஒரு எளிமையான ஆரவாரமற்ற படைப்பு தன்னகத்தே கொண்டிருக்கும் உயிர்ப்பின் காரணமாகக் காலத்தையும் மாறிவரும் வாசகர்களின் வாசிப்பையும் தாண்டிவந்து கொண்டிருப்பதற்கு புத்தம் வீடு சிறந்த உதாரணம்.’
இத்தனை நாட்களாக இந்தப் புத்தகத்தைப் பற்றி அறிந்து கொள்ளாததற்கு வருந்துகிறேன். எப்படி இதனைப் படிப்பது விட்டுப்போனது என்று திகைக்கிறேன். கட்டாயமாக அலட்சியமல்ல; கிடைத்ததை எல்லாம் படிக்கும் ஆர்வத்திலும், பயனற்ற சிலவற்றைப் படித்துவிட்டு, “ஐயையோ! எத்தனை உருப்படியான மணிப்பொழுதுகளை வீணாக்கினோம்” என எழும் எண்ணங்களிலும், விட்டுப்போனவை ஏராளம். நண்பர்கள் சிபாரிசுசெய்து படித்தவை சில; நானே தேடிக் கண்டுபிடித்த முத்துக்கள் பல. அவற்றைப் பற்றித்தான் இத்தொடரில் எழுதிக் கொண்டிருக்கிறேன். எதையோ தேடப்போக, இப்புத்தகம் என் பார்வையில் பட்டது. ஹெப்சிபா ஜேசுதாசன் அவர்களைப் பற்றி திரு லா. ச. ரா. தமது சில கட்டுரைகளில் குறிப்பிட்டிருப்பார். அப்போது அவர் இவ்வளவு அருமையான எழுத்தாளர் என அறியேன். இந்நூல் வாசகர்களுக்கு ஒரு பொக்கிஷம்.
அம்பையின் அருமையான முன்னுரை நூலைப்பற்றிய கருவை அழகாகக் கூறிவிடுகிறது: ‘பனைமரங்களின் சலசலப்பு, அதனுடன் ஒட்டிய வாழ்க்கைமுறை, அதில் ஊடுருவியிருக்கும் சாதி மற்றும் உயர்மட்டக் குடும்பங்களின் திமிர், இவற்றைக் களமாக்கி எழுதியிருக்கும் நாவல் புத்தம் வீடு.’ நாவல் வெளிவந்து மூன்று ஆண்டுகள் தாமதமாக இதைப் படிக்கிறோமே எனும் குற்ற உணர்வு ஏற்பட்டது என்கிறார். இத்தனே ஆண்டுகளுக்குப்பின்பு படித்த என்னைப்பற்றி நான் என்ன கூறிக்கொள்வது?
கதாநாயகி லிஸி பற்றிய அறிமுகத்துடன் நாவல் ஆரம்பம். அதற்கும் முன்பு பனைவிளை எனும் பிரதேசத்தைப் பற்றி அறிமுகப்படுத்துகிறாரே ஆசிரியை, இதைவிட நுணுக்கமாக மண்ணையும் மக்களையும் எழுத்தினால் படம் பிடிக்க முடியுமா என்பதே முதல் பிரமிப்பு. பனைமரங்கள், கூழைப்பலா, அரணை, பேய் பிசாசுகள், பெரிய்ய புத்தம் வீடு, அதன் அடிச்சுக்கூட்டு, பேத்தி லிஸா, கண்ணப்பச்சி – ஆகா, நாமும் பனைவிளைக்குள் ஒருவராகி விடுகிறோம். ஆனால் அவ்வாறு சுலபமாக எல்லாம் பொருந்திவிட முடியாது. அருகில், அறியாமலிருந்து அவர்கள் கதையைக் காண வேண்டும். இங்குதான் ஆசிரியையின் எழுத்துவன்மை பளிச்சிடுகிறது.
நாவலில் பனிரெண்டு அத்தியாங்கள். ஒவ்வொன்றுக்கும் பொருத்தமான பெயர்.
- புத்தம் வீடு – வீட்டின் அமைப்பு, இருப்பவர்களின் வாழ்க்கை, குணாதிசயங்கள் விளக்கப்பட்டுள்ளன;
- இரு சகோதரர்கள் – அப்பா, சித்தப்பா, ஒரே கூரையின்கீழ் வாழும் இவர்களின் குடும்பங்கள், தாத்தா, பாட்டி;
- சிட்டுக்குருவி – லிஸியின் சிறுமிப்பருவம், பள்ளிப்பருவம்: இதில் தங்கராஜ் எனும் பதினாலு வயதுச் சிறுவனும் அவளும் ஒரே வகுப்பு. விஷமக்காரனான அவனுக்கு ஒருநாள் டீச்சரிடம் சொல்லி அடிவாங்கி வைத்து விடுகிறாள். பின் பரிதவித்து அவனுக்கு ஒரு மயிலிறகை அளிக்கிறாள். தங்கராஜ் பனையேறி குடும்பத்தைச் சேர்ந்த பையன். புத்தம் வீட்டாருக்கு சமதையல்ல!
- மிஷன் வீட்டார் – கிறிஸ்தவக் கோயிலின் அமைப்பு, வழக்கங்கள், இன்னபிற அருமையாக யதார்த்தமாகக் கூறப்படுகின்றன.
- சிறைவாசம் – லிஸி வளர்ந்து பெரிய பெண்ணாகிவிட்டதனால் பள்ளியிலிருந்து நிறுத்தப்படுகிறாள். அவள் பெரியவீட்டுப் பிள்ளை (பிள்ளை என்றால் பெண்பிள்ளை). பனைவிளையின் புத்தம் வீட்டுக் குலவிளக்கு. அவளுடைய இந்த வீட்டுச் சிறைவாசத்தை சங்ககாலத்து ‘இற்செறிப்புடன்’ ஒற்றுமை காட்டுகிறார் ஆசிரியை! ‘புத்தம் வீட்டாருக்கு சங்ககால வழக்கங்களும் தெரியாது; அதற்குள்ள தமிழ் ஞானமும் அவர்களுக்குக் கிடையாது’ என்று நகைச்சுவையெழ யதார்த்தமாகக் கூறுகிறார். இதனால் ஊர் நடப்புகளைத் தெரிந்துகொள்ள அவர்கள் மற்றவர்கள் வருகையை எதிபார்க்க வேண்டி உள்ளது.
- பனையேற்றுக் காலம் – பனையேறுபவர்களின் வாழ்க்கைமுறை, அந்த வாழ்க்கையின் ஆபத்துக்கள், எழுபதடி உயரத்தில் கரணம் தப்பினால் மரணம், புத்தம் வீட்டுக்காரர்களுக்கு அவர்கள் தரும் மரியாதை எல்லாம் அழுத்தமாக நெஞ்சில் பதிகின்றன.
- ஒரு முழம் கயிறு – பனையேறி அன்பையன் புத்தம் வீட்டுக்கருகிலேயே நிலம் வாங்கி வீடு கட்டிக் கொள்கிறான். இது பனைவிளைப் புத்தம் வீட்டின் கௌரவத்திற்குக் குறைவு. இதுவும், குடும்பத்து மூத்த ஆண்பிள்ளையின் கையாலாகாத்தனமும், லிஸியின் நடக்கவேண்டிய திருமணமும் குடும்பத்தில் பல சச்சரவுகளை தினம் உண்டாக்கின. ஒருநாள் அன்பையன் மகன் (வளர்ந்த) தங்கராஜைத் தன் வீட்டு வாசலில் கண்டதும் லிஸிக்கு பள்ளிப்பருவ நினைவுகள் மேலெழும்புகின்றன. அவள் ‘அப்பன்’ அவளுடைய புன்சிரிப்பைக் கண்டு அவளிடம் பல நிர்த்தாட்சண்யப் பேச்சுகளைப் பேசுகிறான். லிஸிக்கு அவமானமாக இருக்கிறது. தற்கொலைக்கு முயல்பவளின் முயற்சிகள் அனைத்தும் நிறைவேறாமல் போகின்றன.
- பட்டணத்து உறவு – லிஸிக்குத் திருமண் ஏற்பாடுகளைச் செய்ய, தமது நிலங்களில் ஐந்து ஏக்கரை விற்க முனைகிறார்கள் புத்தம் வீட்டார். சித்தியின் வீட்டார் எமாற்றிக் குறைந்த விலைக்கு வாங்க முயலும்போது, அப்பேச்சைக் கேட்டுக்கொண்ட தங்கராஜ், அந்த நிலத்தின் விலை இன்னும் பல மடங்காகும் எனக் கூறுகிறான். வேண்டாவெறுப்பாக அதனைக் கேட்டுக் கொண்டாலும், உண்மையை உணர்ந்தனர் புத்தம் வீட்டார். திருமணப் பேச்சு நின்று போகிறது. லிஸி பெருமூச்சு விடுகிறாள்.
- லிஸி – லில்லி – ‘காசில்லாத காரணத்தால் ஒரு பெண்ணின் கலியாணம் நின்றுவிட்டால், காலச்சக்கரம் சுழல்வது நிற்கவா போகிறது’ என்கிறார் கதாசிரியை. படிக்க வசதியில்லாததனால் லில்லியையும் எஸ்.எஸ்.எல். ஸி.யுடன் நிறுத்தியாயிற்று. ஆனால் லிஸிக்கு உண்டான தடைகள் அவள்மேல் செலுத்தப்படவில்லை. ஆறேழு வருடங்களாகத் திருமணப் பேச்சு எழும்போதெல்லாம் லிஸிக்குத் தங்கராஜின் நினவு உள்ளத்தின் எங்கோ ஒரு மூலையில் தோன்றும். தங்கராஜுக்கும் அவ்வாறே. எங்கோ ஒரு மூலையில் அவள் நினைவு அவ்வப்போது தோன்றி மறையும். அன்பையனுக்கு ஒருமுறை உடல்நிலை சரியில்லாமல் போகவே, தங்கராஜ் தான் இரண்டு வாரங்கள் பனையேற வேண்டிவந்தது. ஒருநாள் லிஸியைச் சந்தித்தபோது, “நல்ல கீரைவிதை இருக்கு, வேணுமா?” என ஒரு பொட்டலத்தை நீட்டுகிறான். அவளும் வாங்கிக் கொள்கிறாள். அவள் முகத்தை நோக்கியவனுக்கு, அவள் தன் மனைவியாக மறுக்க மாட்டாள் என்ற எண்ணம் வலுப்பட்டது. அடுத்தநாள் அவளையே கேட்கத் துணிகிறான். அவள் பதறுவது அவனுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. லிஸியின் தந்தை எவ்வாறோ இதை அறிந்து கொள்கிறார். தங்கராஜ் உபதேசியாரிடம் போய், தனக்காகப் பெண் கேட்குமாறு வேண்டுகிறான். பெரும்புயலே வீசுகிறது.
- நோயும் வைத்தியமும் – கண்ணப்பச்சி நோய்வாய்ப்படுகிறார். வைத்தியம் பார்க்க வைத்தியர் தேவமாணிக்கம் வருகிறார். அவர் திருமணமாகாதவர். வீட்டில் திருமணத்திற்கு நிற்கும் பெண்ணைக் கண்டதும் தடுமாறுகிறார். முதலில் அவர் விரும்புவது லிஸியை என எண்ணியவர்கள் பின் அது லில்லி என அறிந்து, அவள் பெற்றோர் மகிழ, லிஸியின் உலகம் தட்டாமாலை சுற்ற, திருமணமும் நடந்து முடிகிறது.
- பழ வினை – மழைக்காலத்திற்கு முன்பு பனையேற்றம் முடிய வேண்டும். அன்பையன் பனையேறித் தடுமாறுகிறான். ஒரு இரவில் சிற்றப்பனைக் கொலைசெிய்து தலைவேறு உடல்வேறாகப் போட்டிருக்கிறது; தங்கராஜ் மீது சந்தேகம் வந்து அரெஸ்ட் செய்து சிறையில் வைக்கிறார்கள். வீட்டில் பற்பல சச்சரவுகள்; இன்னபிற; ஒருநாள் தங்கராஜ் தம்பி வந்து லிஸியைப் பார்த்து தங்கராஜ் சிறையிலிருந்து சொன்ன சேதியைக் கூறிவிட்டுப் போகிறான். அவளுடைய அப்பனுக்குக் கோபம் வருகிறது. லில்லி தன் தந்தையைக் கொன்றது தங்கராஜே என்றும் அவனைத் தூக்குக்கு அனுப்ப வேண்டுமென்பதிலும் உறுதியாக இருக்கிறாள். நாட்கள் சண்டையிலும் கூச்சலிலும் நிறைந்து நகர்கின்றன. லிஸியின் தந்தைஒருநாள் இரவு நோய்வாய்ப்படுகிறார். கண்டபடி பிதற்றுகிறார். தானே கொலைகாரன் என்றும், தங்கராஜைத் தூக்குக்கு அனுப்ப வேண்டும் என்றும் கூறுகிறார். தந்தைக்கும் மகள் லிஸிக்குமான புரிதல்கள் மிக அதிகம் எனக் கதாசிரியை தனது யதார்த்தமான எழுத்தினால் நன்கு விளக்கி விடுகிறார். தகப்பனார் இறந்து விடுகிறார். நல்லடக்கம் நடக்கிறது. லிஸி தன் எதிர்காலத்தை எண்ணிக் கலங்குகிறாள்.
- தீர்ப்பு – இறந்து போனவரின் பிதற்றல்களிலிருந்து வெளிப்பட்ட சில சமாச்சாரங்கள் தங்கராஜ் மீதான கொலைவழக்கைத் திசை திருப்பிவிட்டன. அன்பையனுக்கு சிறுது நம்பிக்கை பிறந்தாலும், பணபலம் இல்லை. லிஸியின் மன உளைச்சல்கள் துல்லியமாக வெளிப்படுத்தப்படுகின்றன. (பெண் ஒருத்தி, தன் வாழ்வில் உறவினர்களை அறவே எதிர்பார்க்காமல் எதைச் செய்ய முடிகிறது?) ஒருவழியாக தங்கராஜ் சிறையிலிருந்து விடுதலையாகி வருகிறான். அவனும் லிஸியும் மீண்டும் சந்திக்கும் தருணங்களைப் பேச்சின் யதார்த்தங்களால் உணர்ச்சிக் குவியல்களாக வடித்துள்ளார் கதாசிரியை. அனுபவிக்க வேண்டிய எழுத்துவன்மை: தங்கராஜும் லிஸியும் பேசிக்கொண்டிருக்கும்போது தாய் அங்கு வருகிறாள்; மகளைத் தூஷணைகள் கூறி உள்ளே அழைக்கிறாள். இருந்த இடத்தை விட்டு அசையாத லிஸி தாயிடம், “அம்மா, எங்களை ஆசிர்வதி!” என்கிறாள். தங்கராஜின் முகம் பெருமிதத்தில் ஒளிர்கிறது. பின் சில பல இயைவான திருப்பங்களுடன் தங்கராஜும் லிஸியும் திருமணத்தில் இணைகிறார்கள். இவற்றையெல்லாம் படித்துத்தான் ரசிக்க வேண்டும்.
அற்புதமான எழுத்து. அலங்காரச் சொற்களும் உவமங்களும் இல்லாமல் இயல்பாக உள்ளத்திலிருந்து எழும் எண்ணங்களின், சொற்களின் தொகுப்பு. இதனை, இந்த ஒன்றுக்காகவே திரும்பத் திரும்பப் படித்தேன். தோட்டத்தின் எங்கோ ஒரு மூலையில் மலர்ந்து மிதமானதொரு வாசத்தால் நம்மைக் கவரும் மருதோன்றிப்பூ போன்ற எழுத்து. ஹெப்சிபா ஜேசுதாசன் எனும் எழுத்தாளுமையின் மற்ற நூல்களையும் தேடிப் படிக்க வேண்டும். இதனை, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளது.
‘இது வெறும் காதல்கதை இல்லை. ஒரு யுகமாற்றத்தின் குறியீடு’ என்கிறார் அம்பை. இதற்கு மறுபேச்சு உண்டோ?

நல்லதொரு அறிமுகம். எழுத்தாளர் பற்றி லா ச ரா சொல்லியிருப்பதைப் படித்தேன். உங்கள் கருத்தையும் அறிந்தேன். மனதில் வைத்திருப்பேன். நன்றி.
ஸ்ரீராம்
LikeLike