தில்லைவேந்தன் (நடராஜன்) என்னும் அருமையான நண்பர் திடீரென்று (டிசம்பர் 7, 2025) மறைந்துவிட்டார் என்பதை எண்ணும்போது நெஞ்சம் துடிக்கிறது!

பரோடா வங்கியில் எங்களுடன் பணியாற்றியவர்! அவரது துணைவியார் லலிதா நடராஜனும் எங்கள் வங்கியில் பணிபுரிந்தவர்!

நிறையக் கவிதைகள்- மேடைப்பேச்சு நடராஜனின்  வங்கிகாலப் பொழுதுபோக்கு!

மிகச் சிறந்த பண்பாளர்! இனிமையாகப் பேசும் நண்பர்!

அவர் மகள் சானோசேயில் இருக்கிறார்! அவர்கள் இல்லத்திற்கு குடும்பத்துடன் சென்று பார்த்து பழகியிருக்கிறோம்!

அப்போதுதான் அவரிமிருந்து கவிதைகள் பெற்று குவிகத்தில் வெளியிட ஆரம்பித்தேன்.

அவரிடம் நூற்றுக் கணக்கான  கவிதைகள் இருந்தன.  அவற்றைப் புத்தகமாக வெளியிடவேண்டும் என்று அவர் கூறினார். அப்போதுதான் குவிகம்பதிப்பகம் ஆரம்பித்த நேரம்.  கிருபாவும் நானும் அவற்றை வாங்கி புத்தகமாகக் கொண்டுவந்தோம்.  வைகறைக் காற்று என்ற அழகான தலைப்பிட்டிருந்தார். .அதன் வெளியீட்டு விழாவையும் குவிகத்தில் ஏற்பாடு செய்தோம்.  அவருக்கு அதில் கொள்ளை மகிழ்ச்சி. ஒவ்வொரு முறை எங்களை பார்க்கும் போது மகிழ்ச்சியுடன் நெகிழ்ச்சியையும் புலப்படுத்துவார்.  

அந்தப் புத்தகம் ஏர்வாடி அவர்கள் நடத்தும் கவிதை உறவில் மரபுக் கவிதைப் போட்டியில் இரண்டாவது பரிசு பெற்று 5000 ரூபாய் அவருக்குக் கிடைத்தது. அதன் பரிசளிப்பு விழாவில் அவருடன்  நாங்களும் கலந்து பெருமையடைந்தோம்.  

குவிகத்தில் அவர் எழுதிய மரபுக் கவிதைகள் ஏராளம்! குண்டலகேசி, கண்ணன் அமுது , நாயன்மார் வெண்பா என்று ஆன்மிகக் கதைகளைக் மரபுக் கவிதையில் தோய்த்து எழுதியவர்!

கவிதைகளில் அவரது சொல்லாட்சி மிகவும் சிறப்பாக இருக்கும்!

அவரது கவிதைகள் சந்த வசந்தம் போன்ற இலக்கிய அமைப்புகளில் பெரிதும் பாராட்டப்பட்டன. பல இலக்கிய அமைப்பு மரபுக் கவிதைப் போட்டியில் பரிசுகள் பெற்றுள்ளார். குறிப்பாக வானவில் பண்பாட்டு கழகம் நடத்தும் பாரதி கவிதைப் போட்டியில் பல வருடங்களாக அவரது கவிதைகள் தேர்ந்தெடுக்கப்படும். ஒரு முறை அவர் நேரடியாக வர முடியாமல் போனபோது  அவரது வேண்டுகோளுக்கிணங்க அவரது கவிதையை வானவில் அவையில்  படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. 

மதிப்பிற்குரிய கனடா பசுபதி அவர்கள், இலந்தையார்  , ஏ கே வரதராஜன் அவர்கள் போன்ற  கவிஞர் திலகங்களிடம் பாராட்டைப் பெற்றவர்.

எதையும் கவிதையாக அதுவும் வெண்பாவாக அதையும் நிமிடத்தில் எழுதும் ஆற்றல் பெற்றவர். 

நான் வெளியிட்ட தினவழிபாடு புத்தகத்தில் குருவைப்பற்றியும் , அன்னையைப் பற்றியும் அழகு தமிழில் எழுதிய கவிஞர் அவர்!

அவரது மற்ற கவிதைகள் அனைத்தும் குவிகம் பதிப்பகத்தின் மூலம் புத்தகங்களாக வெளிவந்துள்ளன.  

1. வைகறைக் காற்று
2. தில்லைத் தென்றல்
3. பாதை தேடும் மேகம்
4. அசைக்குள் பொருள்
5. குண்டலகேசியின் கதை
6. கடவுள் எழுதும் வரலாறு
7. மழையில் நனைந்த வானம்
8. கண்ணன் அமுது
9. எது தலைப்பு?
10. சென்றறியாப் பாதை
11. அடியார்கள் அறுபத்து மூவர்

தற்போது ஆண்டாள் கதையை குவிகம் இதழில் மூன்று மாதமாகத் தொடர்ந்து எழுதி வருகிறார்!

ஆண்டாளைப் பற்றி கடைசியாக அவர் எழுதி தன் இல்லத்து மேஜையில் வைத்துவிட்டு  ஆண்டாளைப் போல அரங்கனுடன்  கலந்துவிட்டார். அந்தக்  கவிதை இது! 

இதுவும் குவிகத்திற்காகவே எழுதப்பட்டிருக்கும்! 

குவிகம் பதிப்பித்த அவரது அனைத்து புத்தகங்களும் பரிசு/ விருது பெற்றிருக்கின்றன!

அவரது துயரால் வாடும் அனைத்து நண்பர்களுக்கும்  அவரது குடும்பத்தினர் அனைவருக்கும் ஆழ்ந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்!

அவரது இனிமையான நினைவுகள் நம் மனதில் மரபுக் கவிதைபோல் என்றென்றும் நிலைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை!

அவர் மறைவிற்காக வந்த இரங்கல் செய்திகள் நம் நெஞ்சை உருக்குகின்றன.  அவற்றை இங்கே வெளியிட்டு மரபுக் கவிதை மைந்தனுக்கு நமது இதய பூர்வமான அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கிறோம். 

-குவிகம் சுந்தரராஜன் 

 

புனை பெயர் தில்லை வேந்தன்
இயற்பெயர் நடராஜன் ராமசேஷன்
படிப்பு ஆங்கில இலக்கியத்தில் MA மற்றும் M Phil

குவிகம் மின்னிதழில் தொடர்ந்து எழுதிவருகிறார். மரபுக் கவிஞர்களின் ‘சந்த வசந்தம்’ வாட்ஸ் அப் குழுவில் எண்ணற்ற கவிதைகளைப் பதிவேற்றுள்ளார். குழுவின் கவியரங்களில் தொடர்ந்து பங்கேற்றுள்ளார். வானவில் பண்பாட்டு மையம் கவிதைப் போட்டிகளில் பலமுறை பரிசுகள் வென்றுள்ளார். இவரது புத்தகங்களுக்கு ‘கவிதை உறவு’ உள்ளிட்ட பல அமைப்புகள் விருதுகளும் பரிசுகளும் வழங்கி கௌரவித்துள்ளன.

சந்தவசந்தக் குழுவினர் “தில்லைவேந்தன் – ஆர். நடராஜன்” அவரை நினைவுகூர்ந்து எழுதியவை.

தினமும் பல்வேறு கருத்துகளில் அழகிய பாடல்கள் புனைந்து சந்தவசந்தத்தில் இட்ட அவர் மறைவு நம் குழுவிற்குப் பேரிழப்பே.

–  வி. சுப்பிரமணியன், சிவசூரி, குமார் (சிங்கை), இமயவரம்பன், சுதா வேதம், N. Ganesan, சோதரி புட்பா கிறிட்டி, Niranjan Bharathi, சங்கர தாஸ் நாகோஜி,

முல்லைமணம் வீச, முழுநிலவுச் சோதியுடன்
தில்லைவேந் தன்தந்தார் தேனாம்பா- ஒல்லையதை
மாந்திக் களிக்க மனம்கொண்ட வானவரும்
காந்தியிதைச் செய்தாரே காண்

– அ. கி. வரதராஜன்.

சரிந்து விழுந்தது ஏனம்மா
சந்த வசந்தத் தூணொன்று
சரிந்து விழுந்த(து) ஏனம்மா
சொந்தம் எல்லாம் அழுதழுது
சோர்ந்து போனோம் பாரம்மா
எந்த நாட்டை அடைந்தாரோ
என்ன நினைத்துப் போனாரோ
அந்தம் வந்த அப்பொழுதில்

அரனே அழைத்துச் சென்றானோ!
வெண்பா வேந்தர் எனும்படியாய்
வெல்லுஞ் சொல்லைப் பெய்வதையே
பண்பா டாகக் கொண்டவரைப்
பாரில் எங்கும் கண்டதில்லை
ஒண்பா என்றே உலகத்தார்
ஓங்கி உரைப்பார் எந்நாளும்
வேந்தர் திரும்பி வாராரோ!

திருத்த மாக எண்ணியதைத்
தேனில் குழைத்த சொல்லெடுத்து
விருத்தம் எழுதும் வித்தையினை
வேந்தர் எங்கே கற்றாரோ
பொருத்த மாகக் கதைப்பாடல்
போகும் போக்கில் எழுதியதை
வருத்தம் மேவ நினைக்கின்றோம்
வழியும் கண்ணீர் மிகப்பெரிதே!

ஒன்றும் இல்லாக் கவிதையினை
ஒன்றா வண்ணம் இட்டாலும்
நன்று நன்று நன்றென்று
நல்ல சொல்லால் பாராட்டும்
குன்றின் அன்ன புகழுடையார்
குய்யோ முறையோ என்றழவே
இன்று மறைந்தார் என்பதனை
ஏற்க உள்ளம் மறுக்கிறதே!

என்று வருவான் எனவறியா
எளியர் தம்மை ஓர்நொடியில்
கொன்று போடும் காலனைநாம்
கொன்று போடும் நாள்வருமோ
சென்று வருக எனச்சொல்லி
என்றும் தில்லை புகழ்பாட
ஏற்போம் உறுதி இப்போதே!

– கண்ணீரில் மிதக்கும் கருவூர் இனியன்)

அன்னையவள் மீனாட்சி அடிகள் சரண்புகவே
இன்றெழுது வெண்பாவே இறுதிப்பா ஆனதுவோ?
யானிட்ட பின்னூட்டம் அவர்கண்டு மனமகிழ்ந்து
தான்நன்றி சொன்னதுவே தன்கடைசிப் பதிவாமோ?

நாளும் ஒருபாடல் நம்குழுவில் இட்டவரும்
ஆளும் அரனார் அடிகள் அடைந்தாரோ?
பார்த்தும் களித்தும் பழகி இருந்தோமே!
நேர்த்தித் தமிழாலே நெஞ்சமொன்று சேர்ந்தோமே!

மன்னி கையால் சாப்பாடு வயிறார உண்டோமே?
அந்நாளை நினைத்தாலே ஆற்றாமை வருகிறதே!
கண்ணீர் செலவாச்சே! கவிதை வரவாச்சே!
உண்ணவும் முடியலியே! ஓடி வந்து பார்க்கவொணா

என்னிலைமை யாலே இதயம் கனக்கிறதே!
மன்னி புலம்புவதை மக்கள் கதறுவதை
உன்னி எனதுநெஞ்சம்
உருகிக்கண் வழிகிறதே!
பாயில் படுக்காமல், படுதுன்பம் தருகின்ற
நோயிலவர் வீழாமல் நொடியில் மறைந்தாரே!
கூத்தாடிப் பெம்மானும் கூற்றுவனை நிறுத்தலியே!
ஆத்தா சிவகாமி அருகிருந்து காக்கலியே!

“பாடல் எழுதிவிட்டோம், பரிசுகளும் பெற்றுவிட்டோம்
வாடல் இனிஎதற்கு? மறைவோம் எனநினைத்துக்
கண்மூடி விட்டாரோ?
தன்முடிவு கொண்டு தான்மறைந்து, எம்முடைய
மன்னியினைக் கைம்மையிலே வைத்ததுவும் முறைதானா?
தமிழ்நெஞ்சிற் பொங்குகையில் தடைவந்த(து) எவ்வாறோ?
உமிழ்நீரில் தமிழிருந்தும் உயிர்பிரிந்த(து) எவ்வாறோ?
கண்மூடி விட்டவரைக் கடவுளர்கள் ஒருங்கிணைந்து
பண்பாட வேண்டிப் பரலோகம் கொண்டாரோ?
பூஸ்தானம் அவர்நல்கப் பூவுலகை நீத்தாரோ?
ஆஸ்தான கவியாகி அங்கே நிலைப்பாரோ?
இறைவன் தருகின்ற ஈற்றடிக்குப் பாடிநெஞ்சம்
நிறைவாரோ? கடவுளர்தம் நெஞ்சில் நிறைவாரோ?
இரமணிஅண்ணாவுடன் இணைந்து, எண்ணற்ற கவிபாடிப்
பரலோகம் எல்லாம் பாட்டால் நிறைப்பாரோ?
தட்டச்சுச் செய்து தமிழாண்ட கையெங்கே?
பொட்டுப் பொலிந்தமுகம் போன இடமெங்கே?
வேட்டியினில், ஜிப்பாவில் விழிகளுக்குக் கண்ணாடி
மாட்டி உலவுகிற மாமனிதர் போனதெங்கே?
அழுது புரண்டாலும் அண்ணா வருவாரா?
தொழுது புலம்பிடினும் துயரம் மறைந்திடுமா?
காலம் மருந்தாகும் ; கவிஞரவர் படைத்தகவி
காலம் கடந்தும் கருத்துக்கு விருந்தாகும்
பெற்ற மக்கள் தாயாரைப் பேணிநிதம் காப்பார்கள்
நற்றமிழும் தில்லை நடராஜர் திருவருளும்
மென்மேலும் காக்கும்; விண்ணடைந்த வேந்தரவர்
ஆன்மா அமைதியுறு மாம்!

(கண்ணீர் அஞ்சலி செலுத்தும் அரசி. பழனியப்பன்)

நண்பர் சிவசிவாவின் வாட்ஸப் குறுஞ்செய்தியால் கவிஞர் தில்லைவேந்தன் மறைவு குறித்தறிந்து மிகவும் வருந்தினேன்.. சென்ற வருடம்தான் அவரை சான்ஹோஸேயில் அவருடைய மகளுடன் ஒரு சாயிபாபா கோவில் நிகழ்ச்சியில் பார்த்து பேசிக்கொண்டிருந்தேன்..அதுதான் இறுதி சந்திப்பாக இருக்குமென்று சிறிதும் நினைக்கவில்லை.. அமைதியான ஆசு கவிஞர்! அவருடைய கவிதைகளில் அழகு நடையுண்டு, ஆழ்ந்த பொருளுண்டு! அன்னாரின் இழப்பு நம் குழுவுக்கு மட்டுமல்லாமல், தமிழன்னைக்கு பேரிழப்பே!

 

கல்லும் கனியக் கவிதை இசைத்த கவிப்பெருமான்

தில்லை இழப்பினால் தீராத் துயரில் திளைத்திடுவள்

முல்லைத் தமிழன்னை! மூகமாய் வாயும் முடங்கலுற்றுச்

சொல்லின் சுகத்தை தொலைத்துத் தவித்துளஞ் சோர்ந்தனளே

 

அசோக் ====

 

*என்ன அவசரமோ எமனுக்கு? இறைவாகேள்!*

~~~~~~~~~~~~

அடடா இடியொன்று தலையில் விழுந்ததைப்போல்

விடையோன் பாதமதிற் சேர்ந்தார் தில்லையண்ணா

என்ற வச்செய்தி கண்டுமனம் வாடியதே!

தொன்று மரபெல்லாம் தொகையாக்கித் தந்தமனம்

சென்றதுகாண்! என்சொல்ல! செவிகுளிர சுரேஜமீ

என்றழைக்கும் குரல்தனை இனிக்கேளா தென்செவிகள்!

அருந்தமிழ் யாப்பெல்லாம் அழகாய் விளக்குகின்ற

பெருமை படைத்த அண்ணல் நடராஜன்

இவ்வளவு அவசரமாய்ப் போனதென்ன? இறைவா!

அவ்வியம் கொள்ளார்; அன்பு மிக்கார்

செந்தண்மை கொண்டு சிவனாரைப் போற்றிவந்தார்!

விந்தை உலகைவிட்டார்! விண்ணெழுந்தார்! விம்முகிறோம்!

எத்தனை பாடல்கள் எழுதிக் குவித்தோமே!

அத்தனையும் முத்தாக அணிவகுக்கக் காரணமாய்

இருந்த அண்ணல் தில்லைவேந்தர் இன்றில்லை!

நிரந்தர இடம்தேடி நிமலனைச் சென்றடைந்தார்!

என்ன சொல்ல மன்னிக்கு? வார்த்தையிலை!

மின்னலாய் மறைந்தகதை சொன்னாள்! வேறென்செய்?

என்ன அவசரமோ எமனுக்கு? இறைவாகேள்!

 

அண்ணா! மனம் குமுறுகிறது!

 

சுரேஜமீ

====

 

Shocking news. Heartfelt condolences. Prayers for திரு தில்லை வேந்தன்.

 

I enjoyed his poems immensely. I have written to him a few times, appreciating his poems and also cleared my doubts for better understanding. He would always respond back promptly with kind words.

 

Painful to realize we will not see his posts anymore here.

 

Easwar I

====

 

அன்னை பதமே அரண்!

(நேரிசை வெண்பா)

மீன்விழியாள்,மாமதுரை மேவி அரசாள்வாள்,

தேன்பொழி பேரருள் செய்திடுவாள்,- ஏன்கவலை?

முன்னை வினைகள் முழுதும் அழிப்பாளென்

அன்னை பதமே அரண்!

—தில்லைவேந்தன்.

 

இந்த வெண்பாவை நேற்றிரவு இட்டிருந்தார். இன்று அரணாய் இருக்கும் அன்னை பதத்தை அடைந்தார் என்ற‌ செய்தியைப் பார்க்கும் போது என்ன சொல்வதென்று தெரியவில்லை.

 

“மீனலோசனி பாச மோசனி” என்று‌ ஸ்ரீ முத்துஸ்வாமி தீக்ஷிதர் பாடி அவளோடு கலந்தது நினைவுக்கு வருகிறது.

 

Saranya

====

 

Shocking news. During this time last year, I visited him at his daughter’s place in Milpitas CA. He and his family welcomed me with affection and we spent more than an hour discussing on how we got introduced to Santhavasantham.

 

May His soul rest at the Holy Feet of Thillai Nataraja peruman.

 

Soundar

====

 

தில்லை வேந்தன் நடராஜன் தில்லை வேந்தன் நடராஜனுடன் ஐக்யமானார். கவிதை உலகிற்குப் பேரிழப்பு இது.

—அனந்த்

 

தமிழ் உலகம் ஒரு மிக, மிக நல்ல கவிஞரை, அறிஞரை இழந்துவிட்டது.

பற்பல கருத்துக்களையும், விஷயங்களையும் பற்றி மிக அருமையான

கவிதைகளை நமக்குத் தந்து அருளினார்.அவர் குடும்பத்தார்க்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்

 

சங்கரன்

====

 

மிகுந்த வருத்தம் அளிக்கிறது இச்செய்தி. என் அஞ்சலிகள்.. வேறு என்ன செய்ய..

 

யோகியார்

====

 

தில்லை வேந்தன் மறைந்தாரா?

தில்லை வேந்தன் மறைந்தாரா?

சிறிதும் நம்ப இயலவில்லை

நல்ல தமிழில் கவிதைகளின்

நாநா வகையும் படைத்தாரே

அல்லும் பகலும் கவியெழுதி

அவற்றை இங்கே அளித்தாரே

சொல்லை ஆளும் வகையறிந்த

தோன்றல் மறைந்து போனாரே!

 

இலக்கி யத்தில் புதுப்புதிதாய்

எழுதிக் குவித்தார் இத்தளத்தில்

நிலைத்தி ருந்து படைத்தளித்து

நித்தம் காப்பார் எனநினைத்தோம்

கலக லத்துப் போனோமே

காண்ப தெப்போ இனிமேலே

விலைமதிக்க ஒண்ணாத

வேந்தர் நாமம் வாழியவே!

 

விருது பலவும் அவர் கவிதை

விழைந்து தேடி வந்தனவே

அரிதோ எளிதோ எவ்வகையும்

அவரின் கருத்தில் விளையாடும்

பரிவு மிக்கார், அன்புடயார்

பண்பிற சிறந்த பாவாணர்

கருதிக் கருதி வியந்தோமே

காணா தின்று போனாரே!

 

குண்ட லகேசிக் காவியத்தைக்

கோதில் லாமல் படைத்தளித்தார்

தண்ட மிழ்க்குப் புதுவரவாய்

தரமாய் புத்தம் புது நால்கள்

கொண்டு கொடுத்தார் அவரைப் போய்க்

கொண்டு போனா னேகாலன்

தொண்டு மனத்தர், என்செய்வோம்

தொலைத்து விட்டோம் கவிவேந்தை!

 

இன்னும் கூட என்றன்மனம்

ஏற்க மறுத்துப் பார்க்கிறது?

என்ன செய்ய?விதியின் கை

எடுத்துப் போன தென்கின்றார்

உன்ன தங்கொள் அவர்கவிதை

உயிரோ டிருந்து பெயர்சொல்லும்

என்றும் இறைவன் திருவடியில்

இருப்பார் நிலைப்பார், சிறப்பாரே!

 

ஆறு தல்கள் சொல முடியா

அவதி யில்நான் தவிக்கின்றேன்

வீறு கொண்ட அவர்கவிதை

விளைச்சல் காண அவர் மனைவி

கூறும் உயிர்ப்பாய் இருந்துவந்தார்

குடும்பம் இன்று தவிக்கிறதே

ஏறும் தெம்பை இறையளித்தே

என்றும் காத்தே அருள்புரிக!

 

இலந்தை

====

 

அன்பு நண்பர், கவிஞர் தில்லைவேந்தன் அவர்களின் ஆத்மா சாந்தி பெற வேண்டுகிறேன்

ஓம் சாந்தி சாந்தி சாந்தி:

மரபினை நன்கறிந்து மானிடம் வாழ
இரவும் பகலும் கவிதைச் சரம்தொடுத்த
நல்லுயிர் ஒன்றினை நான்கண்டேன் அவ்வுயிரே
தில்லைவேந் தன்திருப் பேர்.
மீ. விசுவநாதன்