சாகித்ய அகாதமி யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்

‘நட்சத்திர வாசிகள்’

ஆசிரியர்: கார்த்திக் பாலசுப்ரமணியன்

பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்

கார்த்திக் பாலசுப்ரமணியனின் ‘ நட்சத்திர வாசிகள்’ நாவலை நான் 2022 ல் படித்தேன்; ரசித்தேன். ஏனெனில், சுஜாதாவிற்கு பிறகு கணினி உலகை பற்றி எழுதி சாகித்திய அகாடமி யுவ புரஸ்கார் விருது பெற்ற நாவல்; குறிப்பாக, அதில் முழுநேர பணியில் ஈடுபட்டுள்ள இன்றைய இளைஞர் சமுதாயத்தை பற்றிய நாவல் என்பதாலும், அதை எழுதியவரும் அந்த துறையிலேயே வேலையில் இருப்பவர் என்பதாலும் என் ஆவலும் ஆர்வமும் கூடியது.

கடந்த சில காலங்களாக ‘கணினி துறை’ ஓர் மனிதனின் வாழ்வின் எல்லா நடவடிக்கைகளிலும் மிக அதிகமாகவே நுழைந்தது மட்டுமன்றி கிட்டத்தட்ட இன்றியமையாததாகவும் ஆகி விட்டதால் எனக்கு எதிர்பார்ப்பு அதிகமாகவே இருந்தது.

முதலிலேயே சொல்லிவிடுகிறேன். இது சுஜாதாவின் நாவலோ அல்லது கதைகள் போன்றோ இல்லை. கிட்டத்தட்ட நேர்கோட்டு விரிவாக்கம். இன்றைய இளைய தலை முறையின் கவர்ச்சிகரமான, பல சலுகைகள் உள்ள அந்த தொழில்துறையின் நுட்பங்களை என்னால் எனக்கு தெரிந்த எந்த இளைஞர் மற்றும் இளைஞியிடம் இருந்து கிரகிக்க முடியவில்லை.

கதையின் பிரதான கதாபாத்திரம் நித்திலன் என்ற இன்றைய சமுதாயத்தின் ஓர் இளைஞன். அவன், அவன் மனைவி, குடும்பம், நண்பர்கள், அதிகாரிகள் போன்றோரே கதையில் வருகின்றனர். பிரச்சினைகள் எப்படி தலை தூக்கும், மேலதிகாரியோ, நண்பர்கள், உடன் வேலை செய்பவர்கள், மனதை வருத்தும் வேலையின் அழுத்தங்களே கதையை நகர்த்திச் செல்கிறது.

கணினி துறையின் சிக்கலான சமாச்சாரங்களை வாசகர் மேல் திணித்து போரடிக்கவில்லை. யதார்த்தமான நடை. சில அத்தியாயங்கள் வந்து அதன் இறுதியில் ஓர் சிறுகதையின் முடிவை போல் முடிந்து விடுவதை நான் மிகவும் ரசித்தேன். அந்த துறை சார்ந்த பல சொற்றொடர்கள் உபயோகப்படுத்த படுகிறது, அதற்கான சிறு விளக்கத்துடன். ஆனால், ஷ, ஸ, ச போன்ற எழுத்துக்கள் பல இடங்களில் மாற்றி உபயோகப்படுத்தப்பட்டிருப்பதை தவிர்த்திருக்கலாம்.

முதுகு ஒடிக்கும் வேலை, வெளி நாட்டு பயணங்கள், ஏராளமான பணம், பணம் வந்தும் நிம்மதியின்மை, வேலையின் சுமை மற்றும் அழுத்தத்தால் மனநிலை பாதிப்பு நிறைய இடங்களில் கோடிட்டு காட்டப்படுகிறது.

பல கதாபாத்திரங்கள் வந்தாலும் ஓர் சிலரை சுற்றியே கதையா சுழல விட்டிருப்பது கார்த்திக்கின் திறமைக்கு சான்று.. உணர்ச்சிகளின் வெளிப்பாடுகள் தேர்ந்த வகையில் முன்னிறுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த கதையின் நாயகன் நித்திலன் என்ற ஓர் தமிழ் இளைஞன். தேனாக தித்திக்கும் அவன் காதல் கல்யாண வாழ்க்கை மிகக் குறைந்த காலப் போக்கிலேயே கரைந்து போகிறது. அவன் மனைவி மீராவின் தனித்துவம், நித்திலனின் ஆண் என்ற அகந்தையும் கொஞ்ச நாட்களிலேயே மோதிக்கொள்கிறது.

பார்கவி என்ற மிக புத்திசாலியான பெண்ணை அவளின் மேலதிகாரிகள் மிகுந்த சோதனைக்கு உள்ளாக்கி மனநோயாளி ஆக்குவதை அதிர்ச்சி தரும் வகையில் நாவல் விளக்குகிறது. மென்பொருள் என்ஜினீயர் ஓர் நிலையில், அழுத்தம் குறைவான ‘ஸ்விக்கி’ வேலைக்கு விரும்பி செல்வது சற்று திடுக்கிட வைக்கிறது. வேணு என்ற நீண்ட நாள் அதிகாரி நொடிப்பொழுதில் இன்று நிர்வாகம் படித்து வேலையில் சேர்ந்த இளைஞன் அவருக்கு மேலதிகாரியாக அமர்ந்து அவரை கணப்பொழுதில் வேலையில் இருந்து தூக்கி எறிவது மிக சிறப்பாக எழுதப்பட்டு இருக்கிறது.

அதே போல் நித்திலவனுக்கும், மீராவுக்கும் ஏற்படும் இந்த காலத்து பிணக்கையும், பிரிவையும் நயமுடனே சொல்லப்பட்டிருக்கிறது.

படிக்கும் வகையில் சுலபமான தமிழ் நடையில், புதியதொரு உலகம் நம் கண்முன் காட்டப்படுகிறது.

படித்துப் பாருங்கள்.