
இராமர் செய்த கோவில்
ஆசிரியர் :டாக்டர் .எஸ் .எம் .கமால்.
வெளியீடு; சாரா பதிப்பகம், இராமநாதபுரம்.
215 பக்கங்கள்.. விலை ரூபாய் 85 ..முதல் பதிப்பு 2004
கண் பார்வை மங்கிய நிலை, உடல் சோர்வு ஆகியன வருத்தியும் கூட நூலாசிரியர் திரு.எஸ்.எம். கமால் அவர்கள் புராணங்கள் தொடங்கி, இலக்கியங்கள் கல்வெட்டுகள், செப்பேடுகள், மற்றும் அரசு காப்பகத்தில் உள்ள கோப்புகளிலிருந்து ஆதாரப்பூர்வமான தகவல்களை சேகரித்து ராமேஸ்வர தளத்தின் சிறப்புகளையும் வரலாற்றையும் இயல்பான எளிய நடையில் எழுதியுள்ளார்.
ராமேஸ்வரம் கடற்கரையில் சீதா பிராட்டியினால் மணலை கொண்டு அமைத்த சிவலிங்கம் ,ஸ்ரீ ராமபிரானால் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது இந்த தளத்தின் ஐதீகமாகும்.
14ஆம் நூற்றாண்டில் சேதுபதி மன்னர்கள் இங்கு கோவில் கட்ட தொடங்கினார்கள்.
ராமேஸ்வரம் பகுதி பாண்டியர்கள், சோழர்கள் ,இலங்கை மன்னர்கள், மதுரை நாயக்கர்கள், சேதுபதிகள்…. பலருடைய கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. பத்தாம் நூற்றாண்டில் (கிபி 932) பராந்தகச் சோழனை வீழ்த்தி பாண்டியன் ராமேஸ்வரம் வந்து பொன்னாள் துலாபாரம் செய்திருக்கிறான். (வேலஞ்சேரி செப்பேடு ஆதாரம்)
ராஷ்ட கூட மன்னன் சோழர்களையும், இலங்கை மன்னனையும் வென்று இங்கு சில காலம் தங்கி, ஜெயஸ்தம்பம் நிறுவியிருக்கிறான்.(ஹோல்காபூர் செப்பேடு)
இலங்கை மன்னன் நிஸ்ஸங்கன் ராமேஸ்வரத்தில் நிஸ்ஸகலேஸ்வரருக்கு கோவில் கட்டினான் .(ஆதாரம் இலங்கை” தம்போல “கல்வெட்டு )
ராமேஸ்வரத்திற்கு விஜயம் செய்த மன்னர்கள், கிருஷ்ணதேவராயர், தஞ்சை சரபோஜி ,சத்ரபதி சிவாஜி………….. அதுபோல விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சரின் துணைவியார் சாரதா தேவி (1911) ……..இது ஒரு நீளமான பட்டியல்.
மூன்றாம் பிரகாரம் கட்டி முடிக்க 170 ஆண்டுகள் ஆனது.. மாலிக்காபூர் மதுரைக் கோவிலில் கொள்ளை அடித்த பிறகு ராமேஸ்வரம் வந்ததாகவும், கோவில் திரு ஆபரணங்களையும் , சிலைகளையும், அர்ச்சகர்களையும் மறைக்காயர்கள் தங்கள் மரக்கலங்களில் ஏற்றி வேறு ஒரு தீவில் பாதுகாத்து ,மாலிக்காபூர் திரும்பி சென்றவுடன் ராமேஸ்வரத்திற்கு வந்துள்ளனர்.
சீக்கிய மதகுரு குருநானக் இலங்கை சென்று திரும்பி வரும்பொழுது ராமேஸ்வரத்தில் தங்கியிருந்த இடத்தில் ஒரு குருத்துவாரா கட்டப்பட்டுள்ளது.இன்றும் ராமேஸ்வரத்தில் அந்தக் குருத்துவாரா இருக்கிறது.
முத்து விஜய ரகுநாத சேதுபதி தனது இரு மகள்களையும் (சீனி நாச்சியார், லட்சுமி நாச்சியார்) தக்கத்தேவர் என்பவருக்கு மணமுடித்து, அவரை பாம்பன் பகுதிக்கு ஆளுநராக நியமித்தார். ராமேஸ்வரத்துக்கு வரும் பக்தர்களுக்கு ஏராளமான வசதிகளை ஏற்பாடு செய்திருந்தார் சேதுபதி. கடலில் சாலைப்பாலம் இல்லாததால் படகில் வரும் பக்தர்களிடம் சாலை கட்டுவதற்காக தக்கத்தேவர் வரி வசூலித்திருக்கிறார். இது மன்னருக்கு தெரியாது. கேள்விப்பட்ட முத்து விஜய ரகுநாத சேதுபதி(1715-1725) இதை ஒரு சிவத்துரோகமாக கருதி தனது மருமகனுக்கு மரண தண்டனை விதித்தார்.எரியும் சடலத்தில் விழுந்து அவரது இரு மகள்களும் உயிரை மாய்த்துக் கொண்டனர்.
ராமேஸ்வரம் கோவில் நிர்வாகத்தையும் ஊர் நிர்வாகத்தையும் கவனிப்பதற்கு பண்டாரம் என்ற நியமனப்பதியை ஏற்படுத்தினார். பிற்காலத்தில் அவர்கள் தீயசெயல்களில் ஈடுபட்டது மட்டுமில்லாமல் சேதுபதி மன்னர்களை கோவில் நிர்வாகத்தில் இருந்து ஒதுக்கி வைக்கும் நிலைமைக்குச் சென்றனர் . ஆங்கில அரசும் சேதுபதி மன்னர்களுக்கு பெரும் தொல்லைகள் கொடுத்து வந்தார்கள். சட்ட ரீதியாக போராடி கோவிலையும் பாதுகாத்து, தங்கள் அறப்பணிகளையும் தொடர்கிறார்கள்.
நிறைய வரலாற்றுச் செய்திகளும் ,ஆன்மீக செய்திகளும், கோவிலின் கட்டிட வடிவமைப்பு பற்றிய நுணுக்கமான செய்திகளும், ஆவணங்களுடனும் ஆதாரத்துடனும் காணக் கிடைக்கின்றன. ராமேஸ்வரத்திற்கு சென்றவர்கள் ,இனி செல்லப் போகிறவர்கள் அனைவர் கைகளிலும் இருக்க வேண்டிய பொக்கிஷம் இந்த நூல்.
