காந்தியடிகளும்: வழிபாட்டுத் தலங்களும்- Gandhi Ji: Places of Worship (Tamil) | Exotic India Art

 காந்தியடிகளும் வழிபாட்டுத் தலங்களும்

 நூலாசிரியர்: ம. நித்தியானந்தம்

 வெளியீடு :பூங்கொடி பதிப்பகம் –

முதல் பதிப்பு மே 2016 .பக்கம் 256 ,விலை ரூபாய் 120

மிகச் சிறந்த வரலாற்று ஆவணமாக இந்த நூலை படைத்துள்ளார் எழுத்தாளர் ம.நித்யானந்தம் . (சைதாப்பேட்டையில் எழுபது ஆண்டுகளுக்கும் மேலாக இவரது தந்தையார் நடத்தி வந்த காந்தி  நூலகத்தை மேம்படுத்தித் தொடர்ந்து நடத்தி வருபவர் )

 சர்வோதயா இதழில் ஆகஸ்ட் 2012 முதல் மே 2015 வரை 16 வரை இவர்  எழுதிய 39 கட்டுரைகளின் தொகுப்பு தான் இந்த நூல்.  வரலாற்று ஆய்வாளர்  மதிப்பிற்குரிய பெ.சு. மணி அவர்களின்  அணிந்துரையுடனும் , டெல்லி தேசிய காந்தி அருங்காட்சியகத்தின் இயக்குனர் திரு .அண்ணாமலை அவர்களின் வாழ்த்துரையுடனும் இந்த நூல் வந்துள்ளது.

காந்தியடிகள் சென்று வந்து வழிபாட்டுத் தலங்கள் , இலங்கையிலும். கல்கத்தாவிலும் நடந்த புத்தத் துறவிகள் மாநாட்டில் இவர் ஆற்றிய மிகச் சிறப்பான உரை, ( புத்த துறவிகளின் செயல்பாடுகளை விமர்சித்தார்)

 .அகிம்சை வழியில் நடத்திய ஹரிஜன ஆலயப் பிரவேச இயக்கம் . தேசப்பிரிவினை காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களை அவர்களது வழிபாட்டுத் தலங்களில் சந்தித்தது..  இப்படி  பல வரலாற்று நிகழ்வுகளை பதிவு செய்திருக்கிறார் ஆசிரியர்.

உதாரணமாக  வைக்கம் போராட்டம்  வழிகாட்டுதலின்படி நடந்தது.  கோவில்களில் மட்டுமல்ல தெருக்களிலுமே மற்ற ஜாதியினர் (ஹரிஜன்.. ஈழவர்…..) செல்வதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. அஹிம்சை வழியில் சத்தியாகிரக போராட்டத்தை நடத்த வேண்டும் என்றும்  மற்ற மதத்தினர் இந்தப் போராட்டத்தில் கலந்து கொள்ளக்கூடாது என்று நிபந்தனையும் விதித்தார்.  திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் ராணி எல்லோரும்  வீதிகளில்  செல்லலாம்  என்று உத்தரவு பிறப்பித்தார்.  அதை நடைமுறைப்படுத்த மேல் ஜாதியினரின் அணுகுமுறை மிக அவசியம் என்பதை உணர்ந்த காந்தியடிகள்,மேல் ஜாதியினரின் பிரதிநிதியான நீலகண்டன் நம்பூதிரி என்பவரை அவரது இல்லத்தில் சென்று சந்திக்கிறார்.  நீலகண்டன் அவர்களோ காந்தியைப் பார்த்து,” நீங்கள் தாழ்த்தப்பட்டவர்களுடன் சேர்ந்து இருந்தது மட்டுமில்லாமல் அவர்களுடன்  உணவருந்திருக்கிறீர்கள். எனவே நீங்கள்  வீட்டிற்கு உள்ளே வரக்கூடாது ”   என்று சொல்லி வீட்டு வாயிலில் நிற்க வைத்தே காந்தியோடு  உரையாடி இருக்கிறார். காந்திஜி அவர்களும் வருத்தப்படாமல்  வாசலில் நின்றபடி அவரிடம் தனது நிலைப்பாட்டை எடுத்துச் சொல்லி அவர் மனம் மாறும்படி கேட்டு இருக்கிறார்.  நீலகண்டன் நம்பூதிரி ஒத்துக் கொள்ளாமல் காந்தியைத் திருப்பி அனுப்பி விட்டார் .

காந்தியடிகள் தனக்கு ஏற்பட்ட அவமானமாக இதை கருதவில்லை.

இது 1924லில் நடந்தது.

தொடர் அஹிம்சா போராட்டத்தின் மூலமாக பல மாற்றங்கள் ஏற்பட்டு, கேரளாவில் எல்லாக் கோயில்களிலும் அனைத்து ஜாதியினரும் அனுமதிக்கப்பட்டனர் .1937ல் கேரளாவில்  கோவிலில் நடந்த ஒரு  கூட்டத்தில்  நீலகண்டன் நம்பூதிரி தலைமை தாங்க காந்திஜி அவர்கள் உரையாற்றினார். 

நீலகண்டனைப் பார்த்து, காந்திஜி,”எனக்கும் என் நண்பர் நீலகண்டனுக்கும் சிறிது கருத்து வேறுபாடு இருந்தது. ஆனாலும் அன்றும் இன்றும் அவர் எனது நண்பர்தான். அதை அவரும் ஒத்துக் கொள்வார் என்று நம்புகிறேன்” என்று சொன்னதும்,   நீலகண்டன் நம்பூதிரி காந்தியடிகளுடன் கைகுலுக்கி ,வணங்கி தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொள்கிறார் .

 12 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த மனநிலையிலிருந்து  வெறுப்பு ,நிரந்தர பகைமை  இல்லாமல் மனதை வென்றிருக்கிறார். .இது போல இன்னும் ஏராளமான பல சுவையான தகவல் நிரம்பிய மிக அருமையான நூல் .

கட்டாயம் படிக்க வேண்டிய நூல்.