நாவல்: அகதியின் பேர்ளின் வாசல்
படைப்பாசிரியர் :ஆசி கந்தராஜா
இலங்கைப் பதிப்பு :
எங்கட புத்தகங்கள் பதிப்பகம் ,
May 2023
பக்கங்கள்: 33(முன்இணைப்பு)+ 148
விலை: இலங்கை ரூபா 950 /=

தமிழகப் பதிப்பு:
காலச்சுவடு பதிப்பக வெளியீடு , டிசம்பர் 2023
பக்கங்கள்:159
விலை: இந்திய ரூபாய் 200 /=

 

ஒரு புனைவிலக்கியத்தின் இலக்கியப் பெறுமதி என்பது அழகியலும் அறிவியலும் வரலாறும் இணையும் போது உச்சம் பெறுகிறது. இறுக்கமான மொழியமைப்பு, அளவான வர்ணனைக் கலப்பு, காலத்துடன் இயைந்த சிறப்பான கருப்பொருள், விறுவிறுப்பான ஆரம்பம், ஆர்வத்தைத் தூண்டும் முடிவு என்பன வாசகரின் ரசனையைத் தூண்டும் வண்ணம் அமைந்த வரலாறு கலந்த புனைவே ஆசி கந்தராஜாவின் ‘அகதியின் பேர்ளின் வாசல்’.

ஆசி கந்தராஜா பூங்கனியியல் தொழில்நுட்ப பேராசிரியர். இவர் ஜேர்மனியில் தனது புலமைக்கல்வி நிமித்தம் 13 ஆண்டுகள் வாழ்ந்து, அந்நாட்டின் வாழ்க்கை முறை, வரலாறு என்பவற்றை தீர்க்கமாக அறிந்தவர். இவர் இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர். இலங்கைத் தமிழருக்கெதிரான அரச இனவன்முறையில் ஆரம்ப காலங்களில் அதாவது 1974 இல் ஜேர்மனிக்குச் சென்றவர்.

இந்நாவலும் இலங்கையின் இனப்பிரச்சனையின் முக்கிய காலகட்டங்களில் நகர்ந்து 1989 ம் ஆண்டளவில் ஜேர்மனியில் நிறைவடைகிறது.

ஒழுங்கின்மைக் கோட்பாட்டின் தந்தையான எட்வேர்ட் லோறன்ஸின் பட்டாம் பூச்சி விளைவுக்கு ஒப்பான ஓர் சரித்திர நிகழ்வு தான், இலங்கையில் இருந்து ஜேர்மனி நோக்கிய தமிழ் அகதிகளின் புலம்பெயர்வு.

தாய்நாட்டில் இலங்கைத் தமிழருக்கு எதிரான யுத்த சூழ்நிலையில் , மக்களின் வாழ்வியல் கல்வி பொருளாதாரம் போக்குவரத்து என பல வாசல்கள் மூடப்பட்ட நிலையில், ஜேர்மனியில் இரண்டாம் உலகப்போரின் விளைவாக என்றோ திறந்திருந்த ஒரு வாசல், அகதிகளின் புலம்பெயர்விற்கான மறைமுக வழியாகியது வரலாறு தந்த அதிசயம் .

சர்வாதிகாரி ஹிட்லரின் ஆட்சியின் கீழிருந்த ஜேர்மனி தோல்வியடைய, அதனை வெற்றி கொண்ட நான்கு நாடுகளும் பங்கு போட்டன. ரஷ்ய மேலாதிக்கத்தில் சோசலிச ஆட்சி கொண்ட கிழக்கு ஜேர்மனி, அமெரிக்கா பிரித்தானியா பிரான்ஸ் கூட்டணியில் முதலாளித்துவ ஆட்சி கொண்ட மேற்கு ஜேர்மனி என இரு கூறானது. தொடர்ந்த வருடங்களில் இடையில் பேர்ளின் சுவர் உருவாக்கப்படுகிறது.

இந்நாடுகளுக்கு இடையிலானது பொட்ஸ்சம் உடன்படிக்கை. ரஷ்ய விமானங்களில் கிழக்கு ஜேர்மனியில் வந்திறங்கிய இலங்கைத் தமிழ் அகதிகள், முதலாளித்துவ ஆட்சிக்கு தொல்லை கொடுப்பதற்காகவே, ஒரேயொரு நிலக்கீழ் தொடர்பான சுரங்க ரயில் பாதையினூடாக மேற்கு ஜேர்மனிக்கு மடைமாற்றப் பட்டனர். இதற்கான அழகியல் ஒப்பீடு யாழ்ப்பாண பங்குக் கிணறும் வழிவாய்க்கால் பாதையும் போன்றது.

இப்பின்புலத்தில் 1970 களில் ஜேர்மனியில் கல்விபயிலச் செல்லும் பாலமுருகன் , அந்தஸ்தில் உயர்ந்த அவன் காதலி சித்திரலேகா, சட்டவிரோத குடிபெயர்வின் போது போதைவஸ்து கடத்தலில் ஈடுபட்டதான சர்தேகத்தில் பேரில் ஜேர்மனிய சிறையில் வாடும் நண்பன் தவராசா, மணம்முடிப்பதற்காக ஜேர்மனி செல்லும் வளர்மதி ஆகியோர் நாவலின் முக்கிய கதைமாந்தர்.

இவர்களால் பின்னப்பட்ட கதையில் யாழ் வாழ்வியலும், சாதிய வர்க்க வேற்றுமைகளும், யுத்தத்தின் பேரிழப்புகளும் பயண இடர்களும், ஆதிக்க நாடுகளின் அன்றைய பனிப்போருடன் இணைத்து சுவைபடக் கூறப்படுகின்றன.

சட்ட விரோத புலம்பெயர்வின் இடைத்தங்கல்களான மும்பாய் நகரின் தாராவி, மாத்துங்கா மற்றும் சிவப்பு விளக்குப் பகுதியான காமாத்திபுரா ஆகிய இடங்களும் , பயண முகவர்களால் ஏமாற்றி சீரழிக்கப்பட்ட வளர்மதி முதலான பெண்களும் நாவலில் உள்ளடக்கம்.

இனப்பிரச்சனையால் உருவான இலங்கைத் தமிழர்களின் புலம்பெயர்வானது, தந்த நன்மைகளும் தீமைகளும் கலாசார மாற்றங்களும் ஏராளம். உலக அரசியலின் வஞ்சனை மிகுந்த சதுரங்க ஆட்டத்தின் ஒரு விளைவு இது. எனினும், எத்தகைய இடர் வரினும் , சாபங்களை வரமாக மாற்றும் தமிழர்களின் நெஞ்சுறுதி படைப்பில் வெளிப்படுகிறது.

ஈற்றில் ,
1989 நவம்பர் மாதம் பேர்ளின் சுவர் உடைக்கப்படுகிறது எனும் சம்பவத்துடன் இணைந்து , தவராசா மூலமான அன்றைய கலாசார அதிர்ச்சி ஒன்றுடன் நாவல் நிறைவு பெறுகிறது.

புனைவு சேர்ந்ததாயினும் ஆவணப்பெறுமதி கொண்ட நாவல்