*

நூல் குறித்த விபரம் :

நூல் : “பஞ்சவர்ணம்”

ஆசிரியர்: “ஆசு”

வகைமை : நாவல்

முதல் பதிப்பு : 2024

வெளியீடு: “எழுத்து – கவிதா”

தொடர்பு எண்: 044-28270931

வாட்ஸ் அப் : 7402222787

பக்கங்கள்: 240 / விலை :ரூ 250 /-

கிராமிய மண்ணின் முரண் நிலை வாழ்வியல்

 

‘எழுத்து’ இலக்கிய அமைப்பின் 2023-ஆம் ஆண்டுக்கான சிறந்த நாவலுக்கான இரண்டு லட்சம் ரூபாய் பரிசினை வென்ற ஆசுவின் கிராமிய மண்ணின் முரண் நிலை வாழ்வியலைப் பேசும் நாவல் ‘பஞ்சவர்ணம்’. இந்தியா சுதந்திரம் அடைந்த காலகட்டத்திலிருந்து அதற்குப்பின்னான இருபதாண்டு கால விவசாய வாழ்வை கிளை விரித்து பேசி நிற்கிறது நாவல். நாவலின் நாயகி பஞ்சவர்ணம். வாணியர் வீதி, குயவர் வீதி, மேட்டுத் தெரு, பள்ளர் தெரு, மந்தைவெளி, நாவிதர்கள், வண்ணார்கள், ஆசாரிகள் என ஐநூறு பேர்களின் வாழ்விடம் நாவலின் கதைக்களமான தாழைமடலூர். 

நாவலில் காட்சிபெறும் விவசாய மக்களின் வாழ்வு அசலானது; தனித்துவமிக்கது. கரிசல் மண்ணுக்கு கி.ராஜநாராயணன் போல் விழுப்புரம் மாவட்டத்து மண்ணின் சீவனுள்ள எழுத்தாளராக இந்நாவலில் மிளிகிறார் ஆசு. இவரது எழுத்து நாட்டார் வழக்காற்றினை மெய்ப்படுத்துகிறது. நவீன இனவரைவியல்  காரணமாகவும், அரசியல் வரலாற்றின் காரணமாகவும் “பஞ்சவர்ணம்” நாவல் தமிழ்ச் சூழலில் மிக முக்கியமான ஆவணப் பொக்கிஷமாகியுள்ளது. நிலத்தை வைத்து வட்டார மொழியில் விரியும் கதை சொல்லல், பாத்திரப்படைப்பு, மொழிநடை போன்றவைகள் அழுத்தமாக நாவலில் இடம்பெற்றுள்ளன.

நாவலின் வெளியெங்கும் கிராமிய சொல் நயங்கள் அயிரை மீன் குஞ்சுகளாக முகம் காட்டி வாசிப்பனுபவத்தை நிறைவுள்ளதாக்குகின்றன; எழுத்தில் கலை அழகையும், மிடுக்கையும் சேர்க்கின்றன. பெரியார், அண்ணா, காமராசர் ஆகியோர்களின் காலப் பின்னணி கதை நகர்கிறது.

பஞ்சவர்ணத்தின் குடும்ப வரலாற்றோடு அரசியல், பண்பாடு, விவசாய வரலாறுகளும் பின்னிப்பிணைந்து உயிர் பெற்று நிற்கின்றன நாவலில். நவீனத் தமிழில் உள்ள மிகச்சிறந்த சில இயற்கைச் சித்தரிப்புகளை ஆசுவின் இந்த நாவலில் காண முடிகிறது.

“பொழுதின் தணல் ஒவ்வொன்றாக உதிர்ந்து, மஞ்சள் வெளிறி சாம்பலாக மாறிக் கொண்டிருந்தது.”

“தாழைமடலூர், ஒரு குட்டி மலைப்பாம்பின் தோற்றத்தில் நெளிந்து சுருண்டு கிடப்பது போலவும், அதிசயமான காற்றைப் புணர்ந்து சந்தோஷிக்கும் காடாகவும் இருக்கும்.”

போன்றவைகளைச் சில உதாரணங்களாகச் சொல்லலாம்.

ஆசுவின் மொழி செறிவும், உரையாடல் வேகமும் எழுத்தாக மாறுவது தமிழிலின் படைப்பிலக்கியத்தின் முக்கியமான அழகுகளில் ஒன்று என்றே சொல்லலாம். தமிழ் சூழலில் தன் வேர்களுடன் உறவுள்ள எந்த படைப்பாளிக்கும் அவனது மண்ணின் தனித்துவம்மிக்க மொழி அமையப்பெற்றிருக்கும். ஆசுவிடம் இது காணக்கிடைக்கிறது.  வேர்கள் எனும்போது மொழி, நிலப்பகுதி, சாதீயம், மரபிலக்கியமும் கலைகளும் என பல கூறுகள் அதில் உள்ளன.  பஞ்சவர்ணம் நாவல் முழுமையிலும் கூத்துப் பாடல்கள் இடம் பெற்றிருப்பதைப் பார்க்க முடிகிறது.

விவசாய வாழ்க்கை முறையின் அடிப்படை ஓட்டத்தின் மூலம் ஒரு கிராமத்துக்குடும்ப உறவில் ஏற்படும் வளர்சிதை மாற்றம் ஊடுபாவாகி நாவலின் சித்திரம் உருப்பெற்றுள்ளது.

வெள்ளாமைக்காட்டின் நாடித் துடிப்பையும், விவசாய வாழ்வின் வளர்சிதை மாற்றத்தையும் பதிவாக்கிய “பஞ்சவர்ணம்” ஈர நிலத்தில் ஊண்டப்பட்டுள்ளது. ஐம்பது, நூறாண்டுகளுக்குப் பின்வரும் தலைமுறையோடு பேசி நிற்கும், காலத்தின் ஆவணமாக கலாப்பூர்வத்துடன் ஊண்டப்பட்டுள்ள இக்கல்திட்டை.