நூல் விமர்சனம்
பெயர் : மர்ம வீரன்
ஆசிரியர் : அப்பு சிவா
பதிப்பகம் : வானதி பதிப்பகம்
பக்கங்கள் : 166
விலை : ரூ 170
புத்தக தேவைக்கு : 044 – 24342810/ 24310769
பதிப்பிக்கப்பட்ட ஆண்டு : 2024
எழுத்தாளர் திரு. அப்பு சிவா அவர்களின் சரித்திர புதினம் “மர்மவீரன்” புத்தகத்தை சில மாதங்களுக்கு முன் வாங்கினாலும், நேற்று தான் படித்து முடித்தேன்.. எடுத்தால்
கீழே வைக்க முடியாத அளவு விறுவிறுப்பான சரித்திர நாவல்.
சரித்திர நாவல்களில் சற்று வித்தியாசமானதும் கூட. அதிக வர்ணனைகள் இல்லை.. ஒரே சீரான நடையில் கதையை கொண்டு சென்றிருக்கிறார் அப்பு சிவா.
களப்பிரர்கள் வரலாற்றை கூறுகிறது இந்நூல். அதிகம் அறியப்படவில்லை என்றாலும் சுமார் 300 ஆண்டுகள் அவர்கள் ஆண்டதை நாம் ஆசிரியர் மூலம் அறியும்போது வியப்பாக இருக்கிறது. “இருண்ட காலம்” என்று அழைக்கப்பட்ட களப்பிரர் ஆட்சி காலத்தை பற்றிய ஆதாரங்கள் குறைவு என்றாலும், இருக்கும் ஆதாரத்தை வைத்து இந்த நாவலை படைத்திருக்கிறார் என்பது பெரும் சிறப்பு.. சில நிகழ்வுகளையும், பெயர்களையும் மட்டும் உண்மை தொடர்பாக வைத்துக் கொண்டு முற்றிலும் கற்பனையில் ஒரு விறுவிறுப்பாக சரித்திர நாவலை படைத்திருக்கிறார்.
மதுரை மாநகரை ஆளும் களப்பிரர் வம்சத்தை சேர்ந்த மன்னன் அச்சுதனை ஆட்சியில் இருந்து இறக்கி, மதுரையை மீட்டு, அதன் உண்மை வாரிசை அரசன் ஆக்க முயலும் புரட்சி கூட்டம் ஒரு பக்கம்.. திடீர் திடீர் என்று அரண்மனையின் பலத்த பாதுகாப்பையும் மீறி, தோன்றும் மர்ம மனிதன்.. மன்னனை பயமுறுத்துவதுடன் அரண்மனையையும் கலக்குகிறான். ஒரு புறம் மன்னன் அச்சுத கலிராயன் அவருடைய மந்திரி தேவநாயனார்,மந்திரி மகள் கயல்விழி, தளபதி செங்கண்ணன் இவர்களைப் பற்றி விறுவிறுப்பாக கதை நகர்கிறது.
மறுபுறம் ஊரின் ஒதுக்குப்புறத்தில், மறைவான இடத்தில் காட்டின் நடுவே அமைந்துள்ள ஒரு கிராமம். அங்கே வெளியுலக தொடர்பில்லாமல் வசிக்கும் மக்கள். அவர்கள் தலைவர் இறையனார்.. பேரன் மாறன்.. என கதை வேறொரு தடத்தில் நகர்கிறது. இறுதியில் வெல்வது யார்? மன்னனின் நிலை என்ன? புரட்சிக்காரர்கள் வென்றார்களா? மதுரை பாண்டியர் வசம் வந்ததா? மர்மம் முடிச்சுகள் இறுதி அத்தியாயத்தில் விறுவிறுப்புடன் அவிழ்கிறது.
அப்பாவியான மாறன்..தன் நண்பன் மேதாவியுடன் மதுரை நகரை பார்க்க பொய் சொல்லி விட்டு கிளம்பும்போது.. நாயகி கயல்விழியை சந்திப்பது.. அதேபோல மதுரையில் மாறன் சந்திக்கும் அனுபவங்கள் என சுவாரசியத்திற்கு பஞ்சமில்லாத நிகழ்வுகள் .
மன்னன் அச்சுதன் புரட்சிக்காரர்களை அடையாளம் கண்டு கொள்ள மாறுவேடத்தில் செல்லும் காட்சிகளும் அருமை.. பல சுவாரசியமான திருப்பங்களுடன் கதை செல்கிறது. மதுரைக்கும் மாறனுக்கும் உள்ள சம்பந்தம் என்ன?
தாதுசேனருடைய பொக்கிஷத்தை தேடி இலங்கைக்கு செல்லும் பயணங்கள் சாகசங்களுடன் பல திருப்பங்கள் நிறைந்ததாக இருக்கிறது. மேதாவியின் மரணத்தை இன்னும் சற்று அழுத்தத்துடன் சொல்லி இருக்கலாம் என்றே தோன்றியது.. அந்த அளவு அது துணை கதாபாத்திரம் என்றாலும் மனதை கவர்ந்தது.
மர்மக்கதை போலவே நிறைய திருப்பங்களையும், யூகிக்க முடியாத நிறைய மர்ம முடிச்சுகளையும், உள்ளடக்கியதாக இருக்கும் இந்த சரித்திர நாவல் ஒரு வித்தியாசமான வாசிப்பனுபவத்தை தரும் என்பதில் ஐயமில்லை.. மிக அருமையாக சரித்திர நாவலின் நடை சற்றும் பிறழாமல் முதல் பக்கம் முதல் இறுதி பக்கம் வரை விறுவிறுப்பாக கதையை கொண்டு சென்றதில் ஆசிரியருக்கு வெற்றியே ..
ஆசிரியர் அப்புசிவா இதுபோல மேலும் பல படைப்புகளை தர வேண்டும். இப் புத்தகம் மாபெரும் வெற்றி பெற ஆசிரியருக்கு என் வாழ்த்துக்கள்.

